தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வாழ்வே சாதனைகளின் சரம்தான்! ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் சிறப்பும் பெறும்; தவறாது நல் விளைவும் தரும்.
பெரியார் தந்த புத்தி போதும்! என்று அவர் அடிக்கடிச் சொல்வது சொந்த புத்தி கூடாது என்பதற்கல்ல, பெரியார் தந்ததே போதும்; அதுவே அன்றும் இன்றும் என்றும் வழிகாட்ட வல்லது; தொலைநோக்கும்; நிலைபேறும் கொண்டது என்பதை வலியுறத்தவே!
ஆக, தந்தை பெரியார் தந்த அடித்தளத்தில் காலூன்றி காலத்திற்கேற்ற வியூகங்கள் அமைத்து, கட்சியையும், அதன் கொள்கைகளையும், கொள்கைசார் நிறுவனங்களையும் வளர்த்து, பெருக்கி சமுதாயம் பயனுறச் செய்து வருகிறார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பல்நோக்குப் பணிகளில் தலையாயப் பணி, பிரச்சாரப் பணியாகும். கொள்கைப் பிரச்சாரம் செய்வதோடு, கொள்கை எதிரிகளின் திரிபுப் பிரச்சாரங்களையும், முறியடித்தாக வேண்டும். கவர்ச்சி முலாம் பூசி கழிசடைச் சரக்குகளை மக்கள் மத்தியில் விற்க முயலும் ஆதிக்கவாதி-களின் சூழ்ச்சிக்கு ஏற்ற எதிர்வினையும் செய்ய வேண்டும்; எல்லோரும் ஏற்கும் வகையில் செய்தாக வேண்டும்.
அந்த அடிப்படையில் மலிவுப் பதிப்பு, பொலிவுப் பதிப்பு, பல்துறைசார் பயன்தரு புத்தக விற்பனை; நகர்வுப் புத்தக நிலையம்; நகரெங்கும் புத்தக நிலையம் என்று புத்தக விற்பனை வியூகங்கள். திருமண நிகழ்வு, பொதுக் கூட்டமேடை, போராட்டக் களம் என்று பலவிடங்களிலும் புத்தக விற்பனையென்று அயராத முயற்சி.
அதன் அடுத்த நகர்வாக புத்தகக் காட்சிகளில் கடை அமைத்து நூல்களை விற்றல். இவை மட்டும் போதாது என்ற தாகத்தில் உலக புத்தக நாளைக் கொண்டாடும் வகையில் மக்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டதே சென்னை புத்தகச் சங்கமம்.
எக்கட்சி சார்பும், அடையாளமும் இன்றி புத்தகம் விற்போரின் சந்தையை விரிவாக்க கூடுதல் செயல்திட்டமாக இது அமைய, பதிப்பாளர்களும், வாசகர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்று ஆதரவு தந்தனர்.
மூன்றாண்டுகள் நடத்தி முடிந்தபின் அதிலும் ஒரு புதிய சாதனை இந்தாண்டு படைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக புத்தக விற்பனைக் காட்சியில் விற்கப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 50% தள்ளுபடி என்ற புதிய சாதனை இந்தாண்டு நிகழ்த்தப்பட்டது.
அதுமட்டுமல்ல கோடை வெய்யிலின் கொடுமை கொஞ்சங்கூட தெரியாது, கண்காட்சி முழுமையும் குளிரூட்டப்பட்ட நிலை இந்தியாவிலேயே எந்தப் புத்தகக் காட்சியிலும் செய்யப்படாத சாதனை! இவை மட்டுமா? திறமையான விவசாயி பயிருக்கு ஊடே ஊடுபயிர் ஒன்று செய்து கூடுதல் பயன் பெறுவது போல, கண்காட்சியிலே குழந்தை-களின் திறனாக்கப் பயிற்சியும் நடத்தப்பட்டு, அவர்களின் திறன் வளர்க்கப்பட்டதோடு, வெளிக்கொணரவும் செய்யப்பட்டது.
22.04.2016 முதல் 24.04.2016 வரை மூன்று நாள்கள், சென்னை பெரியார் திடல் இராதா மன்றத்தில்தான் இவ்வாண்டு இச்சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
ஆண்களும், பெண்களும் பெருமளவில் மாணவர்களாய், இளைஞர்களாய், தம்பதியராய், குடும்பத்தினராய், முதியவராய், படைப்பாளராய், ஆய்வாளராய், அலுவலராய், பணியாளராய், அதிகாரியாய் வருகைதந்து, வரிசையாய்ச் சென்று தெரிவு செய்து வாங்கினர். பாதி விலையில் நூல் கிடைத்ததால், காண வந்தோர் கையெல்லாம் பைப்பையாய் நிறைந்தது. கூடவே அவர்கள் மனங்களும் திருப்தியால் நிறைந்தன.
காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை கண்காட்சி மூன்று நாள்களும் நடைபெற்றது.
பெரியார் புத்தக நிலையம், நியூசெஞ்சுரி, ஹிக்கின்பாதம்ஸ், உயிர்மை, சிக்ஸ்த் சென்ஸ் போன்ற முன்னணி பதிப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டு வாசகர்களுக்கு வாரி வழங்கினர்.
22.04.2016 அன்று சென்னை புத்தகச் சங்கம காட்சியை இரஷ்ய தூதர் செர்கே கோட்டவ், கவிஞர் கண்ணதாசனின் மகனார் காந்தி கண்ணதாசன் விற்பனையைத் தொடங்கி வைத்தார். மாலை 6 மணியளவில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு எமரால்டு பதிப்பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் தலைமையேற்றார். மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவ்வை நடராசன் அவர்கள், “புதுமைக்கு வித்திட்ட புத்தகங்கள்’’ எனும் தலைப்பில் ஆற்றிய தனது சிறப்புரையில் புத்தகங்கள் புத்தாக்க விதைகள் என்பதை தெளிவுபடுத்தினார்.
23.04.2016 அன்று மாலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களின், “புத்தகங்களால் புத்தாக்கம்!’’, “மாணவர்களும் அறிவியல் மனப்பான்மையும்’’ என்ற நூல்களை கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அரிய அறிமுகவுரை-யுடன் வெளியிட, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாசகர்கள் வீசிய கேள்விக் பந்துகளை அற்புதமாய் பிடித்து, அர்த்தத்தோடு பதில் பந்தை அவர்களுக்கு வீச அவர்கள் தவறாது பிடித்துக்கொண்டனர். மட்டைப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடித்தால் ஆடியவர் ‘அவுட்’. ஆனால், இங்கு பதில் எனும் பந்து பிடிபட்டால்தான் வெற்றி! அந்த வெற்றியை ஆசிரியர் பெற்றார், பலனை வாசகர்கள் பெற்றனர்.
24.04.2016 நிறைவு நாள் அன்று நூல் பதிப்பில், விற்பனையில் சாதனை புரிந்தவர்-களுக்கு ‘புத்தகர்’ விருது வழங்கப்பட்டது.
‘சிக்ஸத் சென்ஸ்’ பதிப்பகத்தின் உரிமையாளர் கே.எஸ்.புகழேந்தி தலைமை ஏற்றார். தான் பெரியார் திடலால் வளர்க்கப்பட்டவன் என்று நன்றி கூர்ந்தார்.
சென்னை மூர்மார்க்கெட் பகுதி, தியாகராய நகர்ப் பகுதியில் வாடகை நூல் வழங்கி 45 ஆண்டுகள் தொண்டு தொழில் செய்த ந.ஆறுமுகம் அவர்கள் இந்த ஆண்டுக்கான புத்தகர் விருது பெற்றவர்களுள் ஒருவர்.
திண்டுக்கல் ‘புத்தகத் தாத்தா’
எஸ். கே.முருகேசன் புத்தகர் விருது பெற்ற மற்றொரு பெருந்தகை. தன் குடும்ப நூலகத்திலிருந்து நூல்களை ஆய்வு மாணவர்-களுக்கு வழங்கி, அருந் தொண்டாற்றியவர். இவர் படித்தது இரண்டாம் வகுப்பு என்றாலும், ஆய்வு மாணவர்கள் பலரை உருவாக்கியவர்.
திருச்சி பொறியாளர் பட்டாபிராமன் இவ்வாண்டு புத்தகர் விருதுக்குத் தேர்ந்-தெடுக்கப்பட்ட இன்னொருவர். இவர் நேரில் வர வாய்ப்பின்மையால் விருது நேரில் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. புத்தகர் விருதுகளை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
நிறைவு நாள் நிகழ்ச்சியில், பதிப்பகத்தார் சார்பில் உயிர்மைப் பதிப்பக உரிமையாளர் மனுஷ்யபுத்திரன் நன்றி கூறினார்.
காட்சி ஏற்பாடுகளை கவினுற, கவர்ச்சியுற செய்த சென்னை புத்தகச் சங்கம இயக்குநர் வீ.அன்புராஜ் அவர்கள், பதிப்பகத்தார் அனைவருக்கும் நேரில் சென்று நன்றி தெரிவித்துக்கொண்டார். இதுபோன்ற புதுமைச் சாதனைகள் படைக்க அல்லும் பகலும் சிந்தித்தும், உழைத்தும் செயல்படுத்திவரும் ஆற்றலாளர் அவர் என்பது பலருக்கும் தெரிவிக்கப்படாத உண்மை! விளம்பரமில்லாது வினையாற்றும் விளைவிப்பாளர் அவர்.
மூன்று நாள் நிகழ்வின்போதும் ஒருங்கிணைந்த செயல்பாடாக நடத்தப்பட்ட குழந்தைகள் திறனாக்கப் பயிற்சியில் கலந்துகொண்டு, ஓவியம், கதை கூறல், அறிவியல் செய்திகளை வாங்கல் என்ற தங்களின் ஆற்றலைக் காட்டிய பிஞ்சுகளுக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சான்றுகளை வழங்கிப் பாராட்டி, சிறப்பித்து மகிழ்வித்தார்.
மூன்று நாள் நிகழ்ச்சிகளையும் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்து வழங்கினார்.
இன்னும் சில நாள்கள் நீட்டிக்கக் கூடாதா! என்ற எதிர்பார்ப்பு எழுந்ததே இக்கண்-காட்சியின் வெற்றிக்கும், பயனுக்கும் அடையாளம்.
சென்னை புத்தகச் சங்கமம் இந்த ஆண்டு சிறப்பான சாதனைப் படைத்ததோடு, அடுத்த சங்கமத்திற்கான உந்து சக்தியையும், இதைவிடச் சாதிக்க வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்தது.