சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

மே 01-15

பெரியார் ஈ.வெ.இராமசாமி
சாதிமுறையை ஏற்கும் சட்டத்துக்குத் தீ!
1957 நவம்பர் -3

தஞ்சாவூரில் பெரியார் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு மாபெரும் மாநாடு நடைபெற்றது. அதில் இவர் மிகப்பெரிய துலாக்கோலில் (தராசு) அமர்த்தப்பட்டு, இவரது எடைக்கு இணையான எடையில் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பெற்றார்.

அதே நாளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதி முறைக்கு ஆதரவான விதிகள் இணைக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து அந்த விதிகளின் பகுதிகளைப் படி எடுத்து 26_-11_-1957 அன்று கொளுத்துமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து, மாநாட்டில் தீர்மானம் நிறைவேறச் செய்தார் பெரியார்.

1957 நவம்பர் – 26

பெரியார் விடுத்த அழைப்பை ஏற்று ஏறத்தாழ 10,000 பேர் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சாதி ஆதரவு விதிகளின் படி களைக் (பிரதிகளை) கொளுத்தினர். ஏறத்தாழ 3000 பேர் மட்டுமே அவர் களில் கைது செய்யப்பட்டு, 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டனர். இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது; சாதி முறைக்கு எதிராக அவ்வளவு பெரிய சட்ட எரிப்புப் போராட்டம் தமிழகத்திலேயே – ஏன் இந்தியாவிலேயே – முதன் முறையாக அப்பொழுதுதான் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்களைத் தண்டிக்கத் தனிச்சட்டமே இயற்றப்பட்டது. அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டதால் 15 முதல் 18 போராளிகள் வரை இறந்தே போனார்கள்.

1958

சாதி முறைக்கு எதிராக மற்றொரு மாபெரும் போராட்டத்தைப் பெரியார் தொடங்கினார்.

பார்ப்பனரே உயர்ந்தவர் என்னும் கருத்தை மக்கள் மனத்தில் பதித்துப் பரப்பவே அவர்களில் உணவகம் (ஓட்டல்) நடத்துவோர், தங்கள் கடையின் பெயர்ப் பலகையில் பிராமணாள் ஓட்டல் என்னும் எழுத்துகளைப் பொறிப்பது வழக்கம். அவ்வாறு உணவகப் பெயர்ப் பலகைகளில் காணப்படும் பிராமணாள் என்னும் சாதிப் பெயரை அழித்து விடுமாறு தம் தொண்டர்களுக்கு அறிவித்தார் பெரியார். அதன்படியே தமிழ்நாடு எங்கணும் பார்ப்பனர் உணவகங்களின் பெயர்ப் பலகைகளில் உள்ள பிராமணாள் சொல் அழிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் விளைவாக அந்த உச்சிச் சாதிச் சொல் ஒழிந்தது.

கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம், குளித்தலை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் தாம் ஆற்றிய சொற்பொழிவுகளில், பார்ப்பனர்களைத் தாக்குமாறு பெரியார் தம் தொண்டர்களைத் தூண்டினார் என்று தமிழ்நாடு அரசு பொய் வழக்கு போட்டது. அதனை ஒட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டம் அமர்வு நீதிமன்றம் (District Session’s Court)பெரியாருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்தது.

வட இந்தியாவில் உள்ள சமதருமக் கட்சித் தலைவர் (Socialist Party Leader) திரு. ராம் மனோகர் லோகியா பெரியார் அவர்களை சென்னையில் சந்தித்தார். மக்களுக்குத் தாங்கள் செய்துவரும் சமூகத் தொண்டு மற்றும் அரசியல் பணி குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

1959

பெரியார் வட இந்தியச் சுற்றுப் பயணம் மேற் கொண்டார். கான்பூர், லக்னோ, புதுடில்லி முதலான நகரங்களில் நடைபெற்ற கூட்டங்களில், உரையாற்றினார்.

1960

இந்தியாவின் மைய அரசு என்பது பார்ப்பன அரசே; அதனால் தமிழ் மக்களுக்குப் பலனே இல்லை என்பதை விளக்கி, தமிழ்நாடு நீங்கலான இந்தியாவின் படத்தைப் பெரியார் எரித்தார்.

தமிழ்நாடு நில உச்சவரம்புச் சட்டத்தை செயற்படுத்துவதை முடக்கிப் போடும் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்துத் தமிழகம் முழுதும் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கச் செய்தார் பெரியார். இவரது அறப்போரால், அந்தச் சட்டம் செயலுக்கு வரக்கூடிய திருத்தம் கொண்டுவரப்பட்டது இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்துக்கு.

1967

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைத் திராவிட முன்னேற்றக்கழகம் கைப்பற்றியதால், அதன் தலைவரான பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். பதவி ஏற்பதற்கு முன்னர் திருச்சிராப்பள்ளிக்குச் சென்று தம் ஒரே தலைவரான தந்தை பெரியார் அவர்களின் வாழ்த்தையும், நல்லெண்ணத்தையும், அறிவுரையையும் பெற்றார்.

அதுகாறும் தாம் எதிர்த்துவந்த தி.மு.க.வுக்கு ஆதரவுக் கையை நீட்டும் முடிவை அறிவித்தார் பெரியார். தமது அமைச்சரவையைப் பெரியாருக்கே காணிக்கை ஆக்குவதாகப் பேரறிஞர் அண்ணா மாநிலச் சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.

மதச் சடங்குகளோ, கடவுளின் வழிபாடோ, சமஸ்கிருத மந்திரமோ இல்லாத சுயமரியாதைத் திருமணம் என்னும் புதிய சீர்திருத்தத் திருமண முறையைப் பெரியார் அறிமுகம் செய்தது செல்லத் தக்கது அல்ல என்று உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் முன்னர் தீர்ப்பு அளித்துவிட்டன. அதனால் பெரியாரின் மண முறைப்படி இல்லறம் ஏற்ற இலட்சக் கணக்கானோர் குடும்ப வாழ்வு குலைகின்ற – குறிப்பாக, பெண்மணிகள் சொத்துரிமை இழக்கின்ற  – துயர இருள் சூழ்ந்தது. அவர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றும் வகையில், முதலமைச்சர் அண்ணா சட்டப்பேரவையில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேறச் செய்தார். அது தந்தை பெரியாருக்குக் கொள்கை மகனாகிய தாம் தரும் அன்புப் பரிசு என்றும் அவர் அறிவித்தார்.

தலைவர் பெரியாரின் தளபதியே தாம் என்பதை மெய்ப்பிக்கும் முறையில் பேரறிஞர் அண்ணா – பழைய சென்னை மாநிலம் (Madras State) என்பதற்குத் தமிழ் நாடு என்னும் புதுப்பெயர் சூட்டும் சட்டத்தை நிறைவேற்றினார். தமிழகப் பள்ளிகளில் இந்தி மொழியை ஒழித்துக்கட்டித் தமிழ்நாட்டுக்குத் தாய்மொழித் தமிழும், உலக அறிவியல் மொழி ஆங்கிலமும் போதும் என்று கூறி, இந்திய அரசின் மும்மொழித் திட்டத்துக்கு எதிராக இருமொழித் திட்டம் சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேறச் செய்தார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சட்ட வழிகொண்ட செயல் வெற்றிகளும்
(சாதனைகளும்) அண்ணா ஆட்சியின் மூன்று புரட்சித் திருப்பங்கள் – மூன்று மைல் கற்கள்!

1968

பெரியார் அவர்களின் உண்மையான பகுத்தறிவு மாணவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் _- தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் இடம் பெற்று இருந்த இந்து மதத் தெய்வப் படங்களையெல்லாம் நீக்கி விடுவதற்குப் பார்ப்பனரான தலைமைச் செயலாளர் கையாலேயே அரசு ஆணை பிறப்பிக்கப் படச் செய்தார் முதலமைச்சர் அண்ணா!

தமிழ்நாட்டில் திராவிடத் தமிழ் இனத்தவரின் பொருளியல் வளர்ச்சி நலன்களைப் பாதுகாக்க வேண்டி, ‘வடஇந்திய வணிக முதலாளிகளின் பகற்கொள்ளைகளுக்குக் கண்டனம்’ என்று ஒரு போராட்ட நாளையே தமிழகம் முழுதும் கடைப்பிடிக்கச் செய்தார் பெரியார்.

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற சிறுபான்மை மதத்தவர் மாநாட்டில் சிறப்புரை ஆற்ற பெரியார் அழைக்கப்பெற்றார்.

இராமாயண இதிகாசத்தில் ஆரியர்களால் திராவிடர்களுக்கு இழைக்கப்பட்ட கொடிய செயல் முறைகளை எதிர்ப்பதற்கு அடையாளமாகப் பெரியார் விடுத்த வேண்டுகோளின்படி தமிழ்நாடு முழுவதும் ஆரியரின் இராமாயண இதிகாசம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

1969 பிப்ரவரி – 3

முதலமைச்சர் அண்ணா இயற்கை எய்திவிட்டார். பெரியார் துயரக் கடலில் மூழ்கினார். அண்ணா அவர்களின் மறைவினால் தமிழகம் முழுமைக்குமான எதிர்காலமே இருண்டு போய்விட்டது என்றார் பெரியார்.

1969

தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டாளிகளால் கட்டப்பட்ட கோவில்களில் தமிழைத் துரத்திவிட்டுப் பார்ப் பனர்கள் தங்கள் சமற்கிருத மொழியிலேயே வழிபாடு நடத்துவதையும், பார்ப்பனர் மட்டுமே அருச்சகர் ஆக முடியும் என்னும் சாதி வேறுபாட் டையும் ஒழிப்பதற்காக தெய்வச் சிலை உள்ள கருவறைக்குள்ளும் ஆதி திராவிடர் உள்ளிட்ட தமிழர்கள் செல்கின்ற ஆலய நுழைவுப் போராட்டத் திட்டத்தைப் பெரியார் அறிவித்தார்.

1970

தமிழ் இருவார இதழ் உண்மை பெரியார் அவர்களால் முதலில் திருச்சிராப்பள்ளியில் தொடங்கப் பெற்றது. திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அதன் முதல் இதழை வெளியிட்டார்.

யுனெஸ்கோ (unesco) என்னும் அனைத்துலக அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு

27_-6_-1970 நாளிட்ட விருது வழங்கிச் சிறப்பித்தது. விருதுப் பட்டயத்தில் தீட்டப்பட்ட புகழ் மாலைகள் வருமாறு:
“பெரியார் -_ புது உலகின் தொலை நோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி!’’

இந்த விருதை இந்தியாவின் மய்ய அரசுக் கல்வி அமைச்சர் திரிகுணசென் தலைமையில், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, சென்னை _- இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அளித்தார்.

 

‘பகுத்தறிவாளர் கழகம்’ என்னும் அரசியல் சார்பற்ற ஒரு புதிய சமூக அமைப்பைப் பெரியார் தோற்றுவித்தார். பகுத்தறிவுக் கொள்கைகள் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்களும் பணியாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து செயலாற்ற வழிகோலப்பட்டது.

ஆங்கில அறிவு படைத்தோர் வாழும் உலக நாடுகள் பலவற்றுக்கும் தம்முடைய பகுத்தறிவுச் சிந்தனைகள் பரவும் பொருட்டு, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ (The Modern Rationalist) என்னும் ஆங்கில மாத இதழைப் பெரியார் தொடங்கினார்.

முனைவர் கி வீரமணி

தஞ்சை பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான கிருஷ்ணசாமி வீரமணி 2 டிசம்பர் 1933-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள கடலூர் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் ஜாதி பேதங்களின் கடுமையான எதிரியாவார், திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்து தலித் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறார். நாத்திக அமைப்புகளுடன் இணைந்து நாட்டில் நிலவிவரும் பல்வேறு மூடநம்பிக்கை மற்றும் கடவுள் பெயரால் ஏமாற்றும் அனைத்து மதவாத பிற்போக்குத்தனங்களை கடுமையாக எதிர்த்து வருகிறார். இவர் ஆரம்பக் கல்வியை கடலூரில் முடித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பொருளாதாரம் பயின்று தங்கப்பதக்கம் வென்றார்.

1960-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி கற்று வழக்கறிஞரானார். 1958-ஆம் ஆண்டு இவருக்கும் மோகனா என்பவருக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

1944-ஆம் ஆண்டு நீதிக்கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் இவர் பேசியது நீதிக்கட்சி தலைவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அன்றிலிருந்து பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களின் நட்பையும் பெற்றார். சில ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பணியாற்றியவாரே சமூகநீதிக்கான நீதிகட்சி நடத்தும் பல்வேறு போராட்டங்களில் பங்குபெற்றார். பெரியார் ராமசாமி 1956-ஆம் ஆண்டு திராவிடர் கழக நாளிதழான விடுதலையின் ஆசிரியராக கி.வீரமணியை நியமித்தார். 1976-ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலைக்காலத்தில் சிறையில் இருந்த முக்கியத் தலைவர்களுள் வீரமணியும் ஒருவர் ஆவார். 

பெற்ற பட்டங்களும் அலங்கரித்த பதவிகளும்

1-.    அழகப்பா பல்கலைக்கழகத்தில் டி லிட் 4 ஏப்ரல் 2003

2.    -சமூக நீதிக்கான பாதுகாவலனாக விளங்கிய வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் பெரியார் விருது வழங்கி கவுரவித்தது.

3.    -சி.அய்.டி.ஏ அமைப்பின் சார்பில் சுற்றுப்புரச்சூழல், சுகாதாரம், ஏழ்மை ஒழிப்பு மற்றும் பெண்கள் உரிமை மீட்பு போன்ற செயல்களில் வீரமணி அவர்களின் பங்கை பாராட்டி உத்க்ருஷ்டா விருது

4.    -தேசிய பிராக்ருதிக் மோர்சா சார்பில் பாரத ஜோதி விருது

5.    -சமூகநிதிக்கான பணியைப் பாராட்டி பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) இவரது பெயரில் சமூகநீதிக்கான கி.வீரமணி விருதை அறிவித்தது. முதலாவது விருது மண்டல் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்காக விஷ்வநாத் பிரதாப் சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது

6.    -பட்டுக்கோட்டையில் நடந்த மாநாடு ஒன்றில் இவரின் பணியை கவுரவிக்கும் வகையில் இவரின் எடைக்குச் சமமாக வெள்ளிக்காசுகள் வழங்கப்பட்டன.

7.    -தஞ்சாவூரில் நடந்த விழா ஒன்றில் இவரது எடைக்குச் சமமாக தங்க காசுகள் வழங்கப்பட்டன. இதன் மதிப்பு 2.கோடி அய்ம்பது லட்சமாகும். இந்தப் பணம் அனைத்தும் திராவிடர் கழக அறக்கட்டளையில் சேர்க்கப்பட்டது.

8.    -மலேசிய திராவிடர் கழகம் இவருக்கு சிந்தனைச்சுடர் விருதை வழங்கிக் சிறப்பித்துள்ளது.

9.    -பர்மாவில் உள்ள சுயமரியாதை அமைப்பு 2003-ஆம் ஆண்டு இவருக்கு சிந்தனாவாதி என்ற பட்டம் பெயர் சூட்டி கவுரவித்தது

10.    -சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை இவருக்கு கலைஞர் விருது அளித்து சிறப்பு செய்தது.

11.    -26.9.2009-ஆம் ஆண்டு காஞ்சீபுரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாளன்று திராவிட முன்னேற்றக் கழக அரசு இவருக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்தது.

12.    -24.7.2011-ஆம் ஆண்டு நீதியரசு சுவாமி அவர்களின் நினைவாக அய்தராபாத்தில் நிதியரசர் சுவாமி விருது அளித்து கி.வீரமணி அவர்களை கவுரவித்தார்கள்.

13.    -6.3.12 -ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது

14.    -தமிழ்நாட்டின் முன்னணி அமைப்பும் சமூகநீதி, பெண்ணுரிமை மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக தீவிரமாக களமிறங்கிப் போராடும் திராவிடர் கழகத்தின் தலைவர்.

15.    தமிழக மக்களுக்காக துவங்கப்பட்ட பெரியார் மணியம்மை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர்

16.    -சுயமரியாதை இயக்கத்தின் செயலாளர்

17.    -காப்பாளர் தமிழ்நாடு பகுத்தறிவாளர் அமைப்பு

18.    -வேந்தர் பெரியார் மணியம்மை பல்கலைகழகம், தஞ்சாவூர்.

19.    -பொதுச்செயலாளர், பெரியார் மய்யம் பன்னாட்டு அமைப்பு

இவர் துவக்கி வைத்தவைகள்

1.    -பெரியார் மணியம்மை மருத்துவமனை திருச்சி.சேலம், சென்னை, வல்லம் மற்றும் சோழிங்கநல்லூர்
2.    -பெரியார் பன்னாட்டு மய்யம் சிகாகோ(அமெரிக்கா), லண்டன், சிங்கபூர்.
3.    -சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பு, புதுடில்லி
4-.    பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்
5.    -பெரியார் பெண்களுக்கான மருந்தியல் கல்லூரி
6.    -பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சியகம்
7.    -பெண்களுக்கான பெரியார் தொழில் நுட்பக்கல்லூரி(உலகத்திலேயே பெண்களுக்காக முதல் முதலாக துவங்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரி) வல்லம்
8.    -பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம்.
9.    -பெரியார் இளைஞர்களுக்கான ஆலோசனை மய்யம்
10.    -முதியோர்களுக்கான சுவாமி கைவல்யம் இல்லம், திருச்சி
11.    -பெரியார் கணினி ஆய்வு மய்யம், சென்னை
12.    -பெரியார் கணினிப் பெறியியல் நிறுவனம், திருச்சி
13.    -பெரியார் மய்யம், தில்லி
14.    -பெரியார் உயிர்தொழில் நுட்பம் மற்றும் சூழியல் கல்வி நிறுவனம், வல்லம்
15.    -பெரியார் மீள்எரிசக்தி பயிற்சியகம், வல்லம்
16.    -பெரியார் செண்டர் ஃபார் எனர்ஜி மற்றும் சூழியல் நிறுவனம், வல்லம்.
17.    -பெரியார் புற்றுநோய் கண்டறியும் மய்யம், வல்லம்.
18.    உடல் உறுப்பு தானம் செய்வோருக்காக பெரியார் பெயரில் குழு ஒன்றை நிறுவியுள்ளார்.

இவ்வளவு நிறுவனங்களை நிறுவி அதை நிர்வாகித்து வருகிறார். மேலும் பன்னாட்டு மனித உரிமைகள் குழு மற்றும் இங்கிலாந்தின் மனித உரிமைகள் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். தமிழ் நாளிதழ் விடுதலை, மாதமிருமுறை வெளிவரும் உண்மை, சிறுவர்களுக்காக பெரியார் பிஞ்சு மாத இதழ் போன்ற இதழ்களுக்கும், ஆங்கில மாத இதழான ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ்களுக்கு ஆசிரியராக உள்ளார்.

இன்னும் சமூகத்தில் வாழும் பல்வேறு ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஆயிரக்கணக்கான ஆங்கில, தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *