கடந்த மார்ச் 19, 20 ஆகிய நாட்களில் திருச்சி – சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு – இரண்டு நாட்களிலும் ஜாதி _ தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி மாநாடு என்ற முக்கிய கொள்கை – லட்சியங்களை முன்னிறுத்திய மாநாடுகளாக நடைபெற்று வரலாறு படைத்தன!
அம்மாநாடுகளில் நாம் நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்களில் ஒன்று, 1953இல் ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்து செயல்படுத்தி, நமது சூத்திர – பஞ்சம மக்களின் பிள்ளைகளின் கல்வியில் மண்ணைப் போட்ட குலக் கல்வித் திட்டத்தை திராவிடர்கழகம் எதிர்த்துப் போராடி ஒழித்த நாளான ஏப்ரல் 18இல், ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் முக்கிய அடையாளமான – மனித உரிமைப் போராட்டமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்; ஏற்கெனவே சிவாலயங்களில் பூசை செய்ய தகுதி படைத்து, ஆகமங்களில் பயிற்சியும் பெற்றுத் தேர்ந்து “தீட்சை’’ பெற்றவர்கள், வைணவக் கோயில்களில் பூசை செய்யத் தகுதி பெற்று, “சம்ரக்சணம்’’ என்ற தகுதியையும் பெற்று தயார் நிலையில் உள்ள 206 பேரையும் உடனடியாக தமிழக அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 36,000 கோயில்களில் பல நூற்றுக் கணக்கான கோயில்கள் ஹிந்து ஆகம விதிகளுக்குட்பட்டுக் கட்டப்படாதவை; அது மட்டுமா?
அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற சென்னை மயிலாப்பூர் – கற்பகாம்பாள் கபாலீசுவரன் கோயிலிலும், வடபழனி முருகன் கோயிலிலும் பூசை செய்யும் அர்ச்சகர்கள், ஆகம விதி தகுதி இல்லாதவர்கள், (மதுரை மீனாட்சிகோயில் உட்பட) என்று ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கையை அரசாங்கத்திற்கு 2006-லேயே கொடுத்துள்ளனர்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு தி.மு.க ஆட்சியில் செய்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்து விட்ட நிலையில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க குறுக்கே நிற்பதற்கு எந்த தடையும் இல்லையே!
மேலும் முதல் அமைச்சர் ஜெயலலிதா 1992இல் சட்டப் பேரவையில் கொடுத்த வாக்குறுதி – இதை நிறைவேற்றுவேன் என்ற உறுதி செயல்படுத்தப்படவில்லை என்பதாலும் நாடு தழுவிய முற்றுகை, மறியல், அறப்போர், திராவிடர் கழகத்தால் (சில தோழமை தமிழ் உணர்வு, சமூக நீதி உணர்வு அமைப்புகளின் ஆதரவுடன்) (18.04.2016) அன்று தமிழ்நாடெங்கும் சுமார் 66 இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பெண்களும், ஆண்களும் குடும்பம் குடும்பமாக, குழந்தை குட்டிகளோடு இந்தப் போராட்டத்தில் குதித்தனர் உற்சாகத்துடன்!
பல்லாயிரவர் திரண்டு சிறைக்குச் செல்ல முன்வந்த அவர்கள் யாரும் அதைக் காட்டி மானியமோ, பதவியோ, புகழோ விளம்பரமோ, லாபமோ தேடக் கூடியவர்களா?
பல ஊடகங்கள் திட்டமிட்டே நமது போராட்டத்திற்கு விளம்பரம் தரவில்லை; பார்ப்பன ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தது நியாயமில்லை செய்திக் கோணத்தில் என்றாலும், குறைந்தபட்சம் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது! ஆனால், இந்த சூத்திர ஏடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள், இதற்குரிய விளம்பரம் தராதது அவர்கள் உண்மையில் இன்னமும் பிறவி சூத்திர இழி மக்களாக இருப்பதிலேயே சுகம் காணும் சொரணையற்றவர்களாகவே இருக்க விருப்பப்படுகிறார்கள் என்பதை இதன்மூலம் பறைசாற்றிக் கொண்டுள்ளன. நட்டம் – நமக்கல்ல! அவர்களுக்கே!
எந்த விளம்பர சடகோபத்தையும் எதிர்பார்ப்பவர்கள் அல்ல நாம். பருவம் பாராது, மானம் பாராது, புகழ் நோக்காது, என் கடன், இன இழிவைத் துடைப்பதே என்னும் நமது எஃகு உள்ள உறுதிக்கு முன்னால் இந்த இருட்டடிப்புகள் பனி போல் கரைந்தோடும், அந்த விளம்பரங்கள் ஒரு பொருட்டா?
நம் அழைப்பை ஏற்று, தமிழ்நாடு முழுவதிலும் திரண்ட கருஞ்சட்டை வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், பெரியார் பிஞ்சுகளுக்கும், முதியவர்கள், இளைஞர்கள் _- நமது தோழமையாளர்கள் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ஆதி தமிழர் பேரவைத் தலைவர் ஜாதி ஒழிப்பு அரிமா அதியமான், தமிழுணர்வின் தகத்தகாய ஒளி பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன், பழங்குடி சமுதாய பெரு மன்றத்தினர் மற்றும் பல்வேறு தோழமையினர் அனைவருக்கும் நமது மகிழ்ச்சி கலந்த நன்றி! நன்றி!! நன்றி!!! குறிப்பாக நாகை மாவட்டம் தனி வரலாறு படைத்தது. அதற்கும் பாராட்டு! சென்னை இந்த முறை அதிர வைத்தது! தஞ்சை மாவட்டம் தான் எப்போதும் நமது கழகத் தராசின் மற்றொரு தட்டு. மாநிலத்தின் மற்ற மாவட்டங்களை விட முந்தும் மாவட்டம். அங்கே ஏப்ரல் 20இல் இந்த மறியல் அறப்போர் நடைபெற்றது.
தஞ்சை, உரத்தநாடு, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலும் பல்லாயிரவர் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டு, தஞ்சையின் பெருமையை, அதன் மூலம் கழகத்தின் கோட்டை என்ற சிறப்பை நிலை நாட்டிய, தோழர், தோழியர் குடும்பங்களுக்கும் நமது வாழ்த்துகள்!
நமது இலட்சியம் நிறைவேறும் வரை நாம் ஓயப் போவதில்லை.
வெற்றி வாகை சூடுவோம்!
வாழ்வு சிறிது! வரலாறு பெரிது – மறவாதீர்!
ஆசிரியர்,
கி.வீரமணி