தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இருக்கும் தென்னமநாடு கிராமத்தில் நுழைந்தால் ஏராளமான கபடி வீரர்கள் ஆண்களைவிட கபடி வீராங்கனைகள்தான் இந்த ஊரின் சிறப்பு. தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன் பவித்ரா. இந்த ஊர்தான்.
“2012 ஆண்டு நடந்த தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டியில், டெல்லி அணியோடு மோதி தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. அதில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தோடு ஊர் திரும்பிய காவ்யாவை, ஒட்டுமொத்த ஊரே தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடியது. உஜ்ஜயினியில் நடந்த போட்டியில், தமிழ்நாடு அணி வெள்ளிக் கோப்பை ஜெயிச்சது. அதில் எங்கள் ஊர்ல இருந்து நானும் பிரகதீஸ்வரியும் விளையாடினோம். கேரளாவில் நடந்த தேசியப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு மூன்றாவது இடம். அதில் விளையாடிய நான், கவுசல்யா, ரதிபாரதி, பிரகதீஸ்வரி நாலு பேரும் தென்னமநாடு பெண்கள். சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில், தமிழ்நாடு அணி மூன்றாம் பரிசு வென்றது. அதில் கலந்துக்கிட்டவங்கள்ல பத்து பேர் எங்க கிராமத்தைச் சேர்ந்தவங்க. ஒவ்வொருத்தருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைச்சது. அடுத்து, ஈரானில் நடக்கவிருக்கிற ஆசிய அளவிலான போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட நானும் பிரகதீஸ்வரியும் தேர்வாகியிருக்கோம்’’ என்றார். பவித்ரா கண்களில் பெருமிதம் பொங்க.
கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், காவல் மற்றும் ரயில்வே துறைகளில் உள்ள கபடி அணிகளிலும், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கபடி அணியிலும் தென்னமநாடு கிராமப் பெண்களின் சாதனை தொடர்கிறது.
கிராமங்களில் வயது வந்த பெண்களை விளையாட அனுமதிப்பதே அதிசயம். அதுவும் கபடி போன்ற, உடல் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட வாய்ப்பு உள்ள ஒரு விளையாட்டுக்கு அனுப்புவது அதைவிட ஆச்சர்யம். திருமண வயதில் ஏதேனும் உடல் பிரச்சினைகள் ஏற்பட்டால் அது வாழ்க்கையைப் பாதித்துவிடுமே எனத் தயங்காமல், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கபடி விளையாட அனுப்பிவைப்பது பாராட்டுக்குரியது.
“அப்போது நான் ப்ளஸ்டூ மாணவி. புதுக்கோட்டையில் நடந்த கபடி போட்டியில், என் கால் மூட்டு ஜவ்வு கிழிஞ்சு, ஆறு மாசம் படுத்த படுக்கையாவும், ஒன்றரை வருஷம் ஓய்விலும் இருந்தேன். அதுக்கெல்லாம் என் அம்மா _ அப்பா கலங்கவே இல்லை. எனக்கு கால் சரியானதும் மறுபடியும் கபடி விளையாட அனுப்பிவெச்சாங்க’’ என்றார் பொறியியல் மாணவி அகல்யா. தற்போது இவர் கபடி போட்டியில் தேசிய வீராங்கனை.
ஒரு போட்டியின்போது இந்த ஊரைச் சேர்ந்த ரதிபாரதிக்கு நெற்றியில் பலத்த காயம். அளவுக்கு அதிகமான ரத்தம் கொட்டி மயக்கம் அடைந்துவிட்டார். ஆனால், அவர் ஒய்ந்து உட்காரமல் இப்போதும் கபடியில் கலக்குகிறார்.
கபடி வீராங்கனையாக இருப்பதன் மூலம் இந்த ஊரின் ஏராளமான பெண்கள், காவல் மற்றும் ரயில்வே துறைகளில் அரசு வேலைகளைப் பெற்றுள்ளனர். கல்வியிலும் பல்வேறு சிறப்பு சலுகைகள் கிடைக்கின்றன. ‘இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் பின்னணியில் இவர்தான் இருக்கிறார்’ என கிராமமே பாராட்டும் பெருமைக்குரியவர், இந்த ஊரில் உள்ள சிறீராமவிலாஸ் உயர்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வரும் தவமணி அவர்கள்.
“எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம எங்க ஊர் ஆண் _ பெண் அத்தனை பேருக்கும் கபடி பயிற்சி தர்றது தவமணி சார்தான். எந்தவிதத்திலும் பயிற்சி தடைப்படக் கூடாதுங்கிறதுக்காக பணிமாற்றம், பணிஉயர்வு எல்லாவற்றையும் வேண்டாம் என்று சொல்லிட்டு எங்க ஊர்லயே வேலை பார்க்கிறார். எங்க பிள்ளைங்க அடையுற ஒவ்வொரு வெற்றிக்கும் தவமணி சார்தான் காரணம்’’ என்கிறார்கள் பொதுமக்கள்.
ஒரு பயிற்சியாளருக்கே உரிய நிதானமும் பக்குவமும் கொண்ட தவமணி, தன்மையாகப் பேசுகிறார். “இந்த ஊர்ப் பெண்கள், கடும் உழைப்பாளிகள்; சுட்டெரிக்கும் வெயில், கடும் மழையில்கூட பயிற்சிக்கு வந்துடுவாங்க. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தாகூட அவங்க முக்கியத்துவம் கொடுப்பது பயிற்சிக்குத்தான். இந்த உர் ஆண்களுக்கும் கபடியில் ஆர்வம் அதிகம். ஆரம்பத்துல அவங்களை முன்மாதிரியா சொல்லித்தான் பெண்களையும் கபடி விளையாட ஊக்கப்படுத்தினேன். இப்போ ஆண்களை விட பெண்கள்தான் அதிக சாதனை படைச்சுட்டிருக்காங்க.
ஆரம்ப காலத்துல பயிற்சிக்கு என் சொந்தப் பணத்தைச் செலவழிச்சேன். நாளடைவில் எங்க பள்ளியில் படிச்சு, வெளிநாடுகள்ல வேலை பார்க்கிறவங்க. அரசாங்க வேலையில் இருக்கிறவங்கனு பலர், பயிற்சிக்கு வேண்டிய பொருளாதார உதவிகளை மனமுவந்து செய்றாங்க. எல்லாத்துக்கும் மேல, இந்த ஊர் பெண்களின் அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, துணிச்சல் இவைதான் இந்த அளவுக்குச் சாதிக்கக் காரணமா இருக்கு. எங்க புள்ளைங்க இன்னும் நிறைய சாதிப்பாங்க’’ என்கிறார் உடற்பயிற்சி ஆசிரியர் உற்சாகமாக.
சாதிக்கும் பெண்களுக்கு நமது பாராட்டுகளும், இவர்களைப் பின்பற்ற மற்ற பெண்களுக்கு நமது வேண்டுகோளும் உரித்தாகட்டும்!