கேள்வி : வந்தாரை வாழவைப்பதும் அவருக்கே அடிமையாவதும்தான் தமிழனுக்குப் பெருமையா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா
பதில் : அவர்களிடம் ஏமாந்து, எழ முடியாமல் அடிமைத்தனத்தை சுமையாகக் கருதாமல், ‘சுகமாக’வே(?) கருதுவதும் தமிழனின் பெருமைகளில் ஒன்று.
கேள்வி : அ.தி.மு.க.வினர் எந்த விதியையும் மதிப்பதில்லை! பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்ற அசைக்க முடியாத துணிச்சலா?
– ச.வைதேகி, ஆலந்தூர்
பதில் : ‘பணம் பாதாளம் வரைச் செல்லும்’ என்பதை முழுமையாக நம்புகின்றனர் போலும்!
கேள்வி : திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொண்டே பஞ்சபாண்டவர் அணி எனும் வைகோ குழப்பத்தின் மொத்த வடிவமா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : பெயரளவுக்கு ‘திராவிட’; செயலளவில் திராவிடக் கட்சிகளின் ஆட்சியை அழித்திடுவது என்ற இரட்டை நிலைப்பாடு! தேர்தல் விநோதக் கூட்டு இது!
கேள்வி : தங்களின் மதவெறிக் கொள்கைக்கு முரண்பட்டோரை கொலை செய்வோம் என்று வெளிப்படையாகவே இராம்தேவ் போன்றவர்கள் பேசும் துணிவின் பின்னணி என்ன?
– வே.சிவராமகிருஷ்ணன், திருச்சி
பதில் : மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். உத்தரவு போடும் பா.ஜ.க. ஆட்சிதான்! முன்பு இது போன்ற பேச்சுத் துணிச்சல் உண்டா?
கேள்வி : அ.தி.மு.க.விற்குச் சாதகமான கருத்துக்கணிப்பை வெளியிட்ட ஊடகங்கள் தி.மு.க.விற்குச் சாதகமான கருத்துக் கணிப்பை வெளியிடாதது ஏன்? ஒருதலைச் சார்பு ஊடக இலக்கணமா?
– பா.தமிழரசன், வந்தவாசி
பதில் : ஊடகங்கள் பல எப்படி ஒரு சார்பாக உள்ளன என்பது புதியதல்ல. அதனால் லாபம் அனுபவிப்பவை அவை!
கேள்வி : வீரமணி விருதுபெறும் நிதீஷ்குமாரை காமராஜரின் மறுபதிப்பாகப் பார்க்கலாமா?
– நீ.அய்யாசாமி, வேலூர்
பதில் : நிதிஷ்குமார் பெரியார் வயப்பட்ட காமராசராக ஆளுவார் என்பது நம் நம்பிக்கை!
கேள்வி : பொதுவுடமைவாதிகள் நடிகர் பின்னே நிற்பதேன்? புரட்சிப் பாதையின் எழுச்சிப் போக்கா?
– ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
பதில் : தமிழ்நாட்டில் இப்படி இங்கே! மேற்குவங்கத்தில் காங்கிரசோடு ஒரே தேர்தல் மேடையில் காட்சி அங்கே! வெட்கமும் வேதனையும்தான் மிச்சம்!
கேள்வி : இளைய தலைமுறைக்கு திராவிடக் கொள்கைகளை, சாதனைகளை கொண்டு சேர்க்காத குற்றத்தாலேதான் தி.மு.க.வை இளைஞர்கள் வெறுக்கிறார்கள் என்ற என் கருத்து சரியா?
– தா.வெற்றிவேல், காஞ்சி
பதில் : நூற்றுக்கு நூறு தங்கள் கருத்து சரி _ ‘தி.மு.க.வை இளைஞர்கள் வெறுக்கிறார்கள்’ என்பதைவிட புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதே சரியானது.
கேள்வி : சட்டமன்றத் தேர்தலில் சமூக நீதித் தத்துவத்தை முன்னிறுத்தாத அரசியல் கட்சிகள் ஊழலை முன்னிறுத்துவது மக்களைத் திசைதிருப்பத்தானே?
– இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : அதில் என்ன சந்தேகம்? முன்பே மென்று அவர்கள் துப்பியதை மீண்டும் எடுத்து மெல்லுகிறார்களே பரிதாபம்!
கேள்வி : ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்த மல்லையாவை விட்டுவிட்டு, விவசாயிகளின் மீது ஜப்தி நடவடிக்கை என்பது மனுதர்ம ஆட்சிதானே?
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
பதில்: அதிலென்ன சந்தேகம்? இது கார்ப்பரேட்டுகள் + உயர்ஜாதி நலம் காக்கும் அரசுதானே!