அடுத்து மலைப்பாங்கான ச்காக்வே எனும் இடத்தில் இறங்கினோம் . எங்கு பார்த்தாலும் அழகிய மலைகள் .பூக்கள் பூத்துக் குலுங்கியுள்ளன. ஆனால் இங்கு ஏன் யாரும் வருவார்கள்?
எல்லாம் தங்கம் செய்த கோளாறினால் தான். தங்கம் கிடைக்கிறது என்றதும் குளிர், மலை மற்றெல்லா தொந்தரவுகளும் பெரிதாகத் தெரியவில்லை. சூலை 17, 1897 சியாட்டில் நகரப் பத்திரிக்கையிலே “தங்கம்! தங்கம்!! தங்கம்!!!” என்று முதல் பக்கத்திலே பெரிய செய்தி! அவ்வளவுதான் ஆயிரக்கணக்கில் மக்கள் கிளம்பி விட்டனர். 600 மைல்கள் கடுமையான பாதையே இல்லாத மலைகள், குளிர் தாங்க முடியாது! மிகவும் மலைப்பாங்கான இடம். தோண்டிய கல்லையும் மண்ணையும் சலித்து எடுத்து, தங்கத் துகள்களையும், சிறு கட்டிகளையும், அவ்வப்போது பெரிய கட்டிகளையும் எடுக்க வேண்டுமே, என்ன செய்வது?
இங்கே மலை மேலேயிருந்து கீழே எடுத்து வர ரயில் பாதை போடுவது என்று தீர்மானித்தார்கள். இந்த பெரிய மலைகளின் மீது ரயில் பாதையா? முடியவே முடியாது என்றனர். மனிதன் நினைத்தால் முடியாதது உண்டா? என்றனர் சிலர்.
ஆகவே வளைந்து வளைந்து, பாறைகளைக் குடைந்து ரயில் பாதை போட்டு விட்டனர். தோண்டிய கற்களையும் பாதைகள் வழியே கீழே கொண்டு வந்து தங்கம் எடுத்தனர். உழைப்பு வீணாகவில்லை! 1898லும், 1900லும் மட்டும் 48 மில்லியன் டாலர் பெறுமான தங்கம் உலகின் மிகப் பெரிய தங்க வேட்டை என்ற அளவில் சேர்த்தனர்! பல ஆண்டுகள் கழித்து தங்கம் குறைந்து விட்டது. ஆனால் ஈயமும், செம்பும் இருப்பதைக் கண்டனர் . அதுவும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நிறைய தேவைப்பட்டது. ஆகவே மக்கள் தங்கத்தை மறந்தனர். ஈயமும், செம்பும் மிகப் பெரிய அளவில் தோண்டி எடுத்தனர். போர் முடிந்தவுடன் ரயில் போக்குவரத்துக் குறைந்து மூடி விடலாமா என்று பார்த்தனர். அப்போது தான் உல்லாசக் கப்பல்கள் வந்து மக்கள் நிறைய வரத் தொடங்கினர். உடனே இந்த ரயில் பாதையை முழுதும் பயணிகள் மகிழ்வதற்காகவே என்று மாற்றி விட்டனர். கீழேயிருந்து மேலே அல்லது மேலேயிருந்து கீழே ரயிலிலும் மற்ற தூரத்தைப் பேருந்தில் அழகான சாலையிலும் செல்லலாம். ரயில் பயணம் அழகிய மலைச் சாரல். வண்ணப் பூக்கள், மரங்கள், பாறைகள் தாம் நிறைந்திருந்தன.
மலையைக் குடைந்து குகைக்குள்ளே ரயில் சென்றது. நடுவே அமெரிக்காவிலிருந்து கனடா வழியே செல்லும். அப்போது கனடிய அதிகாரிகள் ரயிலிலேயே வந்து பயணக் கடவு அட்டையைப் பரிசோதிப்பார்கள், சிரித்த முகத்துடன்! குறுகிய பாலங்களின் மேல் போகும் போது கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது! பின் திரும்பும் போது நல்ல சாலைகளில் பேருந்தில் வந்த போது அந்தப் பாலங்கள் இன்னும் அச்சமூட்டுவதாகத் தெரிந்தன. அதன் மீது ரயில் போகும் போது ஏதோ மலை மேலே ரயில் பறப்பது போலவே தோன்றியது! இந்த மலைப் பயணம் நமது ஊட்டி ரயில் பயணத்தை நினைவூட்டியது! ஆனால், அதைவிட மிகவும் உயரம் நிறைந்தது. 3000 அடிகள் உயரம்! உலகில் பனமா கால்வாய், பாரிசின் ஈபிள் கோபுரம் போன்ற உன்னதங்களில் இதுவும் ஒன்றாக அறிவிக்கப் பட்டுள்ளது! 550 கல் தொலைவில் நாங்கள் சிறிது தொலைவே சென்றோம். எலிசபெத் அரசியும் இதில் சென்றுள்ளார்! 40 ஆண்டுகள் அதில் பணி புரிந்த ஓட்டுநர் ட்ரூ அவர்கள் இரண்டு நூலகள் எழுதியுள்ளார். ரயிலை எதிர்த்து வந்த மிருகங்கள், ரயில் பெட்டிகளை விட உயரமாக இருந்த பனிக் குவியல்கள் என்று பல்வேறு நினைவுகளை எழுதியுள்ளார்.
இந்த ரயில் பயணத்தில் பல சிறப்புப் பகுதிகள் உள்ளன. அவரவர் விருப்பப் படி நேரத்திற்குத் தகுந்தபடி செல்ல முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அலாஸ்கா செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று என்று ஆகிவிட்டதால் இதைச் சிறப்பாக நடத்துகின்றனர். பயணிகளின் மகிழ்வுக்குப் பஞ்சமே இல்லை! பேருந்தில் திரும்பும் போது ஆங்காங்கே அழகான இடங்களில் நிறுத்துவார்கள். புகைப்படங்கள் எடுத்துத் தள்ளிவிடுவார்கள் அனைவரும். ஆறு, நீர் வீழ்ச்சி, மலைகளின் அழகு கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன.
அலைந்து திரிந்து அசதியுடன் கப்பலை வந்து சேர்ந்தோம். அங்கே நீச்சல் குளத்திலும் சுடுநீர்த் தொட்டியிலும், விழுந்து எழுந்ததும் புத்துணர்ச்சி பெற்றோம். உணவு உண்டதும் அன்றைய இரவு நிகழ்ச்சிகள் கப்பலில் மகிழ்ச்சியூட்டும். அடுத்த நாள் பயணத்திற்குத் தயாராக என்னென்ன நிகழ்வுகள் என்பதைக் கொடுத்து விடுவார்கள். அதைப் படித்து அடுத்த நாளைத் திட்டமிட்டு விடுவோம்! அடுத்து பார்ப்போம்!