பிள்ளைகளை அச்சுறுத்தி வளர்க்கக் கூடாது:
பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்கிறேன் என்று சொல்லி, அச்சுறுத்தி, அடித்து வளர்ப்பது சரியான வளர்ப்பு முறையல்ல. அன்போடும், பாசத்தோடும், அக்கறையோடும், இனிய சொற்களால் எடுத்துக் கூறினால் பிள்ளைகள் பின்பற்றுவர். பிள்ளைகளின் விருப்பத்திற்கு முழுவதும் தடைவிதிக்காது, அவற்றில் சரியானவற்றை நிறைவேற்றி, நம்மீது அவர்கள் அன்புடையவர்களாய், நம்மை விரும்பக் கூடியவர்களாய் நாம் நடந்து கொண்டால், எல்லாப் பிள்ளைகளும் நம் பேச்சைக் கேட்டு நடக்கும். பிள்ளைகள் சொல்வது சரியென்றால் அதையும் பெரியவர்கள் ஏற்று நடக்க வேண்டும். பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க பெற்றோர் தவறக்கூடாது. வெளியில் பிள்ளைகள் கெட்டுப் போக வாய்ப்பு அதிகம். எனவே, கண்காணித்து ஒழிங்குப்படுத்த வேண்டும்.
பிள்ளைகள் விரும்பும் எல்லாவற்றையும் வாங்கித் தரக்கூடாது:
பிள்ளைகள் மீதுள்ள பாசத்தில், பற்றில், செல்லமாக வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில், குழந்தைகள் விரும்புவதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பிள்ளைகள் கேட்பதையெல்லாம் சில பெற்றோர் வாங்கித் தருவர். இது சரியான செயல் அல்ல. குழந்தைப் பருவம் அறியாப் பருவம். எது நல்லது, எது கெட்டது என்று தெரியாத வயது. கவர்ச்சியை, சுவையை அவர்கள் விரும்புவர், கவர்ச்சியும் சுவையும் உடைய பலதும் கேடு பயப்பனவே.
எனவே, அவர்களுக்குச் சிறுவயதிலே இதைச் சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிடக் கூடாது. அதற்குரிய காரணம், அதனால் வரும் பாதிப்பு இவற்றை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி ஏற்கச் செய்ய வேண்டும். அடித்து, விரட்டி சொல்வதைத் தவிர்த்து அன்புடன் சொல்ல வேண்டும். பயன்படுத்தும் பொருட்களையும் அவ்வாறே தேர்வு செய்ய வேண்டும். ஒன்றை வேண்டாம் என்று சொல்லும்போது, எது ஏற்றதோ அதை வாங்கித் தர வேண்டும்.
ஆண் வேண்டும் என்று அதிகம் பெறக்கூடாது:
ஆண்பிள்ளை வேண்டும் என்ற ஆவல் பொதுவாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இது ஓர் அறியாமையே! ஆணோ பெண்ணோ அளவோடு கட்டுப்படுத்திக் கொண்டு, பெற்றதைச் சிறப்பாக வளர்த்து உயர்நிலைக்குக் கொண்டு வர வேண்டுவதே பெற்றோரின் கடமை.
மாறாக, அடுத்த ஆண்பிள்ளை பிறக்காதா என்ற ஆவலில், அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று அல்லலுறும் அவலத்தை அறவே தடுக்க வேண்டும். நேருவுக்கு பெண்வாரிசாக வந்து சாதிக்கவில்லையா? ஆண்தான் தன் வாரிசு என்று எண்ணுவது அறியாமை. பெண்ணும் வாரிசுதான். பெண் அடுத்த வீட்டிற்குச் செல்வதால் அவர்கள் வாரிசைத்தானே பெறுவர் என்று எண்ணுவது அறியாமை. மகனுக்குத் திருமணம் ஆனாலும் அதில் பிறக்கும் பிள்ளையின் இரத்தத்தில் நம் இரத்தம் 50 சதவீதம்தான். பெண் வீட்டு இரத்தம் 50 சதவீதம். பெண் வேறு இடத்தில் சென்றாலும் அதிலும் நம் இரத்தம் 50 சதவீதம். பிள்ளைகள் இரண்டு வீட்டின் வாரிசுகள் என்பதே உண்மை. ஆண்வீட்டு வாரிசு என்பது அறியாமை.
வரவிற்கு அதிகமாய் செலவு செய்யக்கூடாது
வரவிற்குத் தகுந்த செலவையே செய்ய வேண்டும். தேவைக்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். தேவைக்கு ஏற்ப செலவு செய்வது சரியென்றாலும், செலவுக்கு ஏற்ற வருவாய்க்கு உழைக்க வேண்டும். தப்பான வழியில் செலவை ஈடு செய்ய முயன்றால், அது கேட்டையும், அழிவையும் உண்டாக்கும்.
தேவைக்கு ஏற்ப வருவாயைப் பெற இயலாதபோது, வருவாய்க்கு ஏற்ப செலவைக் குறைக்க வேண்டும். எது முதன்மைச் செலவுகளோ அவற்றைச் செய்து, மற்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆப்பிளில் கிடைக்கும் சத்தை நெல்லிக்காயில் பெற வேண்டும். மாதுளையில் கிடைக்கும் சத்தைப் பொன்னாங்கண்ணிக் கீரையில் பெற வேண்டும், ஹார்லிக்ஸில் கிடைக்கும் சத்தைக் கேழ்வரகு மாவில் பெற வேண்டும். இதுவே வாழ்வின் நுட்பம்.