தமிழில் பேரா.முனைவர்.ப.காளிமுத்து எம்.ஏ.பி.எச்டி
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன்
எழுதிய “India Three Thousand Years Ago”என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது.
மேலும் அவர்கள் (இந்தியர்கள்) வானியல் பற்றிய கணிப்புகளையும் தெரிந்து வைத்திருந்தனர் என்பது உறுதி. பேராசிரியர் வில்சன் குறிப்பிடுவது போல் அவர்கள் வேத காலத்திலேயே சூரிய ஆண்டையும், நிலா ஆண்டையும் இணைத்துச் சரிப்படுத்திக் கொள்வதற்கு இடைச் சேர்ப்பாக ஒரு மாதத்தையும் வைத்திருந்தார்கள். கிரேக்கர்-களுக்கு முன் இவர்கள் நாணயங்களைப் புழக்கத்தில் விட்டிருந்தார்கள் என்று நான் கருதவில்லை. வேதங்களின் காலத்திலேயே இவர்கள், பொன்னையும், விலைஉயர்ந்த கனிமங்களையும் அவற்றின் எடைக் கனத்தைக் கொண்டு பயன்படுத்தினர். மனுவின் காலத்தில் சிறுசிறு தங்கத் துண்டுகளும், வெள்ளித் துண்டுகளும் மக்கள் நடப்பியலில் இருந்தன. மற்ற நாடுகளில் அப்போது நடப்பிலிருந்த நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்த முத்திரைகளைப் போல இத்துண்டுகளின் மீதும் அவற்றின் எடை அளவை அறிந்து கொள்வதற்காக முத்திரை பதித்திருந்தனர்.
வேதங்கள் செய்யுள் வடிவில் அமைந்-துள்ளன என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். அவை பல்வேறு ‘சந்தாக்கள்’ அல்லது அளவுகளைக் கொண்டுள்ளன. இந்த ‘அளவுகள்’ எல்லாம் சமஸ்கிருத மொழிக்குத் தக்கவாறு செய்யுள்களாக மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க வகையிலும் ஓதுவதற்கேற்றவாறும் அமைக்கப்-பட்டிருக்கின்றன. இந்த அளவுகளில் ‘ஏழு அளவைகள்’, சில நேரங்களில், ‘அக்னி’ என்ற கடவுளின் ஏழு வாய்களைப் போல, ஒன்றாக இணைத்துக் கூறப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சில நேரங்களில் அந்தத் தொகுப்பிலேயே திரும்பவும் எடுத்துக் காட்டப்படுகின்றன. இவற்றில் முதன்மை-யானவை “காயத்ரி’, ‘திருஷ்டப், ‘ஜகாதி’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் அவற்றின் தனித்தன்மைகளை விளக்கிப் பேசுவது தேவையற்றது என்று நான் கருதுகிறேன்.
வேதங்களின் இசைப் பாடல்கள் ‘சுக்தா’ அல்லது ‘லாதேஷன்’ என அழைக்கப்படுகின்றன. இவற்றில் குறிக்கப்படுகின்ற கடவுளர்கள், அவர்கள் பெற்றிருப்பதாகக் கருதப்படுகின்ற திறன்களின் அடிப்படையில் அவர்கள் வேண்டிக் கொள்ளப்படவில்லை; மாறாக வழிபடுவோரின் விருப்பங்களையும் நன்மை-களையும் அவர்களிடமிருந்து (கடவுளிடமிருந்து) பெற்றுக் கொள்வதற்காகவே அந்தக் கடவுளர்கள் புகழ்ந்து பாடப்படுகிறார்கள். இவர்களை வழிபடுவோர் இவர்களிடம் வேண்டுவனயாவும் பொருளியல் சார்ந்தவை-யாகவே இருக்கின்றன. மழையை வேண்டும்பொழுது,
தங்கள் வயல்களை வளப்படுத்த வேண்டும் என்றும், செல்வத்தை வேண்டும் பொழுது, கால்நடைச் செல்வத்தை (ஆடு மாடுகளை) வழங்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர். ஆனால், குழந்தைகளைப் பற்றி வேண்டுகிறபோது, ‘சிரார்த்தம்’, ஈமச் சடங்குகள்’ முதலானவற்றைச் செய்வதற்குக் குழந்தைகள் வேண்டும் என வேண்டிக் கொள்வதைப் பற்றிய குறிப்பே இல்லை. பிற்காலத்தில் இந்துக்களின் வேண்டுதல்களில் இது முகாமையான இடம் பெற்றிருந்தது. உடல் நலத்தைப் பற்றி வேண்டுகையில் வலிமை, ஆற்றல், திறன் ஆகியவற்றையும், வெற்றியைப் பற்றி வேண்டுகையில் தங்கள் எதிரிகளை அடிமைப்படுத்துவதற்குத் துணைபுரிய வேண்டும் என்றும் அவர்கள் வழிபட்டு வேண்டிக் கொண்டனர். ‘மாயை’யின் அழிவைப் பற்றிய சூத்திரங்களுக்கு (சுக்தா)ச் சில சிறப்புத் தன்மைகளைக் கொடுத்து அதனுடன் இணைத்திருக்கிறார்கள். இவற்றில் ஒன்று ரிக் வேதத்தின் இறுதி ‘அஷ்டகா’விற்குக் கடைசியில் வருகிறது. அது உடலின் அனைத்து உறுப்புக்களிலுமுள்ள நோய்களை நீக்குமாறு வேண்டி ஓதப்படும் மந்திரமாகும்.
இந்த வேத இசைப் பாடல்களின் ஒரு சிறிதளவு மேற்பார்வை பட்டால்கூட, இந்த நாட்டு மக்களின் உற்பத்திக்கு (குழந்தைகள் உட்பட) அது புனிதமானதொரு தன்மையைக் கொடுக்கும் என்று பிற்காலத்து ‘இந்து’ ஆசிரியர்கள் கூறினார்கள். பிரம்மா அல்லது வேறு எந்தக் கடவுளின் வாயிலிருந்தும் வேதங்கள் வெளிப்பட்டதாக அவர்கள் கூறினால் அது முழுவதும் தவறானதாகிவிடும். (என்று கருதப்பட்டது). அவற்றின் சூத்திரங்கள், பொதுவாக அவற்றை உருவாக்கிய மனிதர்களின் _ ஆசிரியர்களின் பெயர்களைப் பெற்றிருக்-கின்றன. அவற்றின் தொகுப்பிலும் இப்பெயர்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. தத்துவ ஆய்வு நூல்கள் சிலவற்றிலும் வேறு சில நூல்களிலும், இப்பெயர்கள், இவற்றை ஓதக்கூடாத வாய்மொழிப் பாடகர்களின் பெயர்கள் என்னும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. ஆனால், வேத இசைப் பாடல்களின் உள்ளடக்கப் பொருளை உற்று நோக்கும்போது இக்குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
ஆனால், வேத இசைப் பாடல்களின் உள்ளடக்கப் பொருளை உற்று நோக்கும்போது இக்குற்றச்சாட்டு ஏற்கத் தக்கதாக இல்லை. கிரேக்கக் கவிஞர்கள், தங்கள் பாடல்கள் நன்முறையில் உருவாக வேண்டி உதவிக்கு வருமாறு அவர்தம் கலைத் தெய்வத்தை வேண்டி வணங்குவதைப் போலவே, இங்கும், முனிவர்கள் (சாதுக்கள்) தங்கள் இசைப்பாடல்கள் நல்ல வண்ணம் அமை-வதற்குக் கடவுளரின் துணையை வேண்டி வணங்குகின்றனர். இத்தகைய பகுதிகள் _ பின் வருவனவற்றைப் போல வேதங்களில் அமைந்து கிடக்கின்றன. “செல்வத்தில் விருப்பமுள்ள ஓ! அக்கினியே! இந்திரனே! உங்களை என் மனத்தில் வைத்து சிந்தனை செய்கிறேன். உற்றார் உறவினராகவும் சுற்றத்தாராகவும் உங்களை நான் கருதுகிறேன். நீங்கள் எமக்கு அளித்துள்ள, வேறு எவரும் தராத _ தெளிந்த புரிதல்களின் அடிப்படையில், நான் இந்தப் பாடலை உங்களுக்காக இயற்றி உள்ளேன்.
எம்முடைய உடல் நலத்தையும் வாழ்வாதாரத்தையும் பேணி உதவுமாறு எம் விருப்பங்களை அதில் தெரிவித்துள்ளோம். இந்தப் புகழ்ச்சி _ ‘மாருட்ஸ்’ _ அவருடைய இசைப்பாடல்களின் வழியாக மதிப்பிற்குரிய ஓர் ஆசிரியர் உமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார். உம்முடன் இருப்போரின் நன்மைக்காக இந்தப் புகழ்மாலை உம்மை வந்தடையட்டும்! அதனால் உணவும், வலிமையும், நீண்ட வாழ்க்கையும் எங்களை வந்தடைவதாகுக! இதே இசைப்பாடல் சொல் மாற்றமின்றி வேறோர் இடத்திலும் அப்படியே திருப்பிக் கூறப்படுகிறது. “இந்த வழிபாட்டுப் பாடலை ‘கிரிட்சாமதாஸ்’ இயற்றினார்; இந்தப் புகழ்ச்சிகள் ‘அஷ்வின்ஸ்’ _ உங்களின் பெருமகிழ்ச்சிக்காக! சினம் தணிந்து இவற்றால் அமைதி அடைவீராக! சடங்குகளின் தலைவர்களே! இங்கே வாருங்கள்! பின்வரு-வோரால், திறன்மிக்க அவர்களால் வாழ்த்தப் பெறுவீர்கள்! இந்த உயிர்ப் பலியின்போது உங்களைச் சிறப்பான முறையில் நாங்கள் பெருமைப்படுத்துகிறோம்.’’ இதைப் போன்ற பல பகுதிகள் மாற்றம் ஏதுமின்றி வேதங்களில் பல இடங்களில் காணப்படுகின்றன. புத்துணர்ச்சியுடன் அதுவும் மனிதநிலைக்கு மேம்பட்ட ஒருவரிடமிருந்து, பிழையில்லாத தவறில்லாத வழிகாட்டுதல், வேத இசைப்பாடல்களில் வேண்டப்படுவதைக் காண முடியவில்லை.
ஆரியர்களும் நாமும் ஒரே மூல இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ரிக் வேதத்தின் பதிப்பாசிரியராகிய டாக்டர் மாக்சு முல்லர், இதனை உறுதியுடன் உண்மையென வெளிப்படுத்துகிறார். “இந்தோ_டியூடோனிக் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளுக்கு இடையே உள்ள நெருங்கிய உறவுகளை உணர்ந்து கொள்ளாமல், சேகரிக்கப்பட்ட சான்றுகளை மட்டும் நோக்குவது சரியானதன்று; இந்தச் சொற்கள் எல்லாம் ஓர் உண்மையான மொழியின் எச்சங்கள், ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த ஓர் இனம் பேசிய மொழி அது, அந்த மொழியின் எச்சங்களைப் பிற்காலத்தில் வரலாற்றாசிரியர் உணர்ந்து கொள்வது மிகக் கடினமான பணியாகப் போய்விட்டது; யூதர்களின் புனித நூல்களைப் படைத்தோரைப் புரிந்து கொள்வது அவர்களுக்குக் கடினமாக இருக்கவில்லை. இருந்தபோதிலும், தொன்மை சான்ற அந்தக் காலத்தின் பழம் பொருள்களான நினைவுச் சின்னங்கள் இப்போது நம் கைகளில் இருக்கின்றன.
அறிஞர் ‘பாப்’ அவர்களால் எடுத்து விளக்கிக் கூறப்பட்டுள்ள சொற்களின் வேற்றுமைப் பாகுபாடு, ஒப்பீடு, ஒன்றிணைவு முதலான வற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, நூற்றுக்கணக்கான சொற்கள் புராணக் கதைச் சிறு தெய்வங்களைப் பற்றியனவாகவும், வானியல் கோள்களைப் பற்றியனவாகவும், புவியியல் பெயர் சார்ந்தனவாகவும் இருப்பதை நாம் காணமுடிகிறது. பருப்பொருள் கூறுகளில், நாள்கள், மாதங்கள், பருவங்கள், ஆண்டுகள் இவற்றில் ஏற்படும் மாறுதல்களில்; நம் உடல் உறுப்புக்களில், அறிவுசார் உழைப்பில், உடல்சார்ந்த உழைப்பில், நம் குடும்ப அமைப்புகளில், நம் உறவினர்களின் தகுதிப் பாடுகளில், நம்முடைய சமூகச் சார்பு நிலையில், விலங்குகளின் _ தாவரங்களின் பெயர்களில், அவற்றின் பாகங்களில், நம் வீடுகளில், தட்டுமுட்டுப் பொருள்களில், கருவிகளில், மதச் சடங்குகளில், வழிபாடுகளில்; அவர்களின் செயற்பாடுகளில், இயக்கங்களில், நோக்கங்களில், அவற்றின் விளைவுகளில், முடிவுகளில் இவை அனைத்திலும் தோற்றத்திலும், இவற்றின் வெளிப்பாடுகளிலும் இவை ஒன்று போலவே இருக்கின்றன. இன்றுவரை இந்த ஒற்றுமை நிலவுகிறது. “ஆகவே ஆரியர்களும் நாமும் (வெள்ளையரும்) உடன் பிறந்தாரின் பிள்ளைகள்; மனிதக் குடும்பத்தில் நாம் இருவரும் நெருங்கிய உறவினர்கள்’’ என்பது வெளிப்படை.
இந்த மக்களில் ஒரு பிரிவினர் தெற்கு நோக்கிப் பயணமானவர்கள், மலைக் கணவாய்களைக் கடந்து இண்டஸ் ஆற்றை நோக்கி இந்தியாவிற்குள் வந்தார்கள். தங்கள் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பின்தொடர்ந்து (மேய்ச்சலை நோக்கி) அவர்கள் சென்றார்கள்; அங்கு வாழ்ந்த துரேனிய, தஸ்யூ மக்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கு அவர்கள் ஆட்பட்டு வந்தமையால், அவர்களின் தோலில் கருநிறம் ஏற்படத் தொடங்கியது. இவர்களில் இன்னொரு பிரிவினர் மேற்கில் நீண்ட தொலைவு அலைந்து திரிந்து, அங்கேயே தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், தங்கள் கப்பல்களோடும், பொருட்களோடும் இந்தியாவுக்குள் வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் ஏற்கனவே இங்கு வந்து குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த ஆரியர்களையும், தஸ்யூக்களையும் அடக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கம், பிரிந்துபோன ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்ததைக் குறிக்கும்படியாக அமைந்துவிட்டது.
பிரிந்தவர் இணைந்த அந்த நிகழ்வுகூட, மிக நெருக்கமானதாக இல்லை. அதற்கு முதன்மையான காரணம் ‘ஜாதி’தான்! இந்தக் கூட்டத்தின் மய்யப் பொருளைவிட்டு அதற்கு அப்பால் அது அய்ரோப்பிய அல்லது இந்தியக் கால்வழி மரபின் பெருமை சிறுமையோ அதற்கு அப்பால் செல்ல நான் விரும்பவில்லை. இன்னும் இந்த நிலத்தில் இருள்சூழ்ந்து கிடக்கிறது! அய்யகோ! மாபெரும் இந்த நிலத்தில் வெறுப்பு, பிரிவு, மனமுறிவு, பிணக்கு, கொடுங்கோன்மை ஆகியவை ‘மூலவிசையாக’ இருக்கின்றன. பல தலைமுறைகளுக்கு இது இந்தியாவின் சாபக்கேடாக விளங்கப் போகிறது! அறிவுக்குப் பொருந்தாத வெறிபிடித்த (சாதிய) நிறுவனங்கள் தவறான பாதையைச் சார்ந்து நின்று ஏமாற்றுகின்றன. இந்தியாவில் உள்ள பிரிட்டானிய அரசாங்கம் பொறுமையுடன் இதனை எதிர்கொண்டு வருகிறது. கிறித்துவத் தேவாலயம் நேர்மையான முறையில், வெளிப்படையான _ அமைதியான முறையில் மதத்தைப் பரப்பிவருகிறது. கடவுளின் கருத்தைப் பரப்புவதற்காக மட்டுமே _ அதனை நம்பியே தன் பதாகைகளை அது விரித்துள்ளதாக மனமார ஒப்புக்கொள்கிறது. தற்போது ரத்தத்தாலும் புழுதியினாலும் மூடப்பட்டுக் கிடக்கும் அருவருப்பான மக்கள் நடமாட்டமில்லாத பாழ்பட்ட நிலமாகக் கிடக்கும் இந்த நாடு கடவுளின் பார்வையில் _ மனிதரின் கருணை மிகுந்த பார்வையில் இது சிறந்து விளங்குவதாகுக!
இந்தச் சொற்பொழிவில் ஒரு சுவையான உண்மையை எடுத்து மொழிவதற்கு என்னை இக்கருத்து அழைத்துச் செல்கிறது. முறையாகச் சொல்வதென்றால் வேத காலத்தில், தொல்பழங்காலத்து இந்தியர்களிடம் ஜாதி ஒரு நிறுவனமாக இயங்கியதில்லை; அதனைக் காண்பது அரிதாகவே இருந்தது. ரிக் வேதத்தின் ‘அஷ்டகா’ வில்வரும் கடைசிப் பகுதியில் வரும் ‘புருஷ சுக்தா’வில் முதன்முதலில் ஒரு ஜாதிய முறை குறிப்பிடப்படுகிறது. அதுவும்கூட தெளிவில்லாத முறையில், வளர்ச்சியற்ற முறையில் காணப்படுகிறது. அதன் சொல்லாட்சி முறையும் ‘பல தெய்வ’ வழிபாட்டுணர்ச்சியும் இதனை உறுதிப்படுத்துகின்றன. தொன்மைமிக்க இந்த வேதங்களின் _ கலப்படமில்லாத எந்தப் பகுதியிலும் இதுபற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மனு (தருமத்தின்)வின் காலத்திலேயே ஜாதிய அமைப்பு நிலவியிருந்ததாகவும், இந்த அமைப்பு உருவாக்கம் அவரைச் சேர்ந்தது என்றும் வழிவழியாகக் கூறப்பட்டு வருகின்றது. அய்ரோப்பாவைச் சேர்ந்த கீழைப்புல ஆராய்ச்சியாளர்கள், இந்த முறை வேதங்களில்இணைப்பாகப் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கு வருகிறார்கள். ஜாதிய அமைப்பு முறைக்குக் கொடுக்கப்படும் சான்றாதாரம் கூட ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. மேற்கண்ட கருத்திற்கு, அதாவது ஜாதி அமைப்புக்குப் பெரிதும் ஒத்திருக்கும் பகுதி வருமாறு:-_
“அவர்கள் புருஷரை உண்டுபண்ணியபோது அவனை
எத்தனைப் பகுதிகளாகப் பிரித்தார்கள்? அவனுடைய
வாய் என்ன? அவனுடைய கைகள் எவை?
அவனுடைய தொடைகளும் காலின் கீழ்ப்பகுதிகளும் என்ன? என்று அறிவிக்கப்பட்டன?
பார்ப்பான் அவனுடைய வாயாகவும், இளவரசர் (போர்வீரர்) அவனுடைய கைகளாகவும், வைசியன் தொடைகளாகவும், சூத்திரன் அவனது காலடிகளாகவும் அதாவது கால்களில் தோன்றியவனாகவும்’’
குறிப்பிடப்படுகிறது. இது அத்தொகுப்பில் நுண்பொருளாகவும், வெளிப்படையாக இல்லாமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகின்ற வகையிலும் அமைந்துள்ளது. இது முதன்மையாகக் கீழ்வரும் கருத்துப் பண்பை வெளிப்படுத்துகிறது; “பிராமணன், கடவுளின் விருப்பங்களை நமக்கு விளக்கியுரைப்பவர்; மிகப் பெரிய மனிதராகக் கருதப்படுபவர்; மேலும் கடவுளர்க்குப் படைக்கப்படும் கொடைப் பொருள்களையும் படையல்களையும் பெற்றுக் கொள்பவர்; இவரே அந்த (ஆண்) புருஷரின் வாயாகத் திகழ்பவர்; இளவரசர் அல்லது போர்வீரர், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பாதுகாப்பிற்கும் உரிய கருவியாக விளங்குபவர், இவரே அந்த புருஷரின் தோள்களாகத் திகழ்பவர்; வைசியர் வேளாண் தொழில் செய்பவர்; அதன் செல்வம் அனைத்தையும் பெற்றிருப்பவர்; இவரே அந்த புருஷரின் தொடைகளாக விளங்குபவர்; ‘சூத்திரன் அல்லது அடிமை, அவர் உடம்பின் கீழ்ப்பகுதியில் கடைநிலையில் உள்ள உறுப்பினர், இவரே அவருடைய (பாதங்கள்) காலடிகள் ஆவார். இவையெல்லாமே நுண் பொருளாகவும், உருவகப் பொருளாகவும் மட்டுமே கூறப்பட்டுள்ளன; பிற்காலத்தில் இவை வரலாறாகவும் கோட்பாடுகளாகவும் பார்க்கப்படலாயின.
(தொடரும்)