ஒடுக்கபட்டோர் முன்னேற்றத்திலும் மதச்சார்பின்மையிலும் நான் உறுதியாக நிற்பவன்

ஏப்ரல் 16-30

சென்னை பெரியார் திடலில் 07.05.1979 அன்று திராவிடர் கழகம் தலைமை நிலையத்தால் ஒரு வார கால மாணவர் பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. சென்னை பகுத்தறிவாளர் கழக தலைவராக இருந்த பகீரதன் அவர்கள் தலைமையில் துவங்கிய இம்முகாமில் கழக பொதுச் செயலாளர் என்ற முறையில் கலந்துகொண்டேன். அப்போது பயிற்சி முகாம் மாணவர்களிடையே உரையாற்றும்போது, “இந்தப் பயிற்சிக்கு வந்துள்ள உங்களுக்கு முக்கியமாக வேண்டியது ராணுவக் கட்டுப்பாடு ஆகும். அதற்கு மேலும், நமது கழக கட்டுப்பாடு இங்கு இருக்கும். இந்தக் கட்டுப்பாடு இங்கு மட்டுமல்ல உங்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படும்.

அய்யாவின் கருத்துகளை ஊர்தோறும் பட்டிதொட்டிதோறும் எடுத்துரைக்க உங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அய்யாவின் இலட்சியங்களை அம்மாவுக்குப் பிறகு நாம் முடித்தாக வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அதற்கு அளிக்கின்ற பயிற்சியாக இது அமைந்துள்ளது. அய்யா அவர்கள் 1944ஆம் ஆண்டிலிருந்தே இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார்கள். அதைப்பற்றி தலையங்கங்களும், அறிக்கைகளும் ‘குடிஅரசு’ இதழில் எழுதியுள்ளார்கள்.

நான், உங்களுக்காக கூற வேண்டுமென்று கருதிய இரண்டு கருத்துகளை பேராசிரியர் இராமநாதன் அவர்களே கூறிவிட்டார்கள். அதற்குக் காரணம் எல்லோர் சிந்தனையும் ஒரே கருத்தாய் உள்ளதுதான் என்பதாகும்.

 

இந்தப் பயிற்சி மூலம் பேசுவதற்கு மட்டும் நீங்கள் தயார் ஆவீர்கள் என்பதல்ல. எப்படிப் பேச வேண்டும், எதைப்பற்றிப் பேசவேண்டும் என்பது பற்றியெல்லாம் அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் தங்கக் கட்டிகளாக, கட்டுப்பாடுமிக்கவர்களாக மற்றவர்களுக்குத் தொல்லை தராதவர்களாக அனைவரும் பாராட்டக்கூடியவர்களாக விளங்க வேண்டும்.

மாணவர்களுக்கு அவசியம் வேண்டியது அடக்க உணர்ச்சி, அடங்கி இருப்பதென்றால் கோழை என்று பொருளல்ல. தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்குக் கவுரவம் சேர்க்கின்ற வகையில், அடக்கத்தோடு காரியங்களைச் செய்து முடிக்கின்ற திறன் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

அய்யா அவர்கள் இந்தப் பணியைத் துவங்குமுன் யாரையும் நம்பாமல், “என்னையே நம்பி, இப்பணியில் இறங்குகிறேன்’’ என்று கூறியுள்ளார்கள். அதுபோல நீங்களும் செய்கின்ற காரியங்களில் தன்னம்பிக்கை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இங்குள்ள ஒவ்வொருவருக்கும் இனநலனும், பகுத்தறிவுப் பார்வையும் வரவேண்டும். இந்தச் சமுதாயம், எல்லாத் துறைகளிலும் நாற்றமெடுத்துக் கிடக்கிறது. அதைப் போக்க வேண்டும். எனக்கு நாறவில்லை என்று யாரும் கூறமுடியாது. ஒருவருக்கு நாறினாலும் நாற்றம்தான். ஆகவே, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

நமது கழகக் கூட்டங்களில் இரவில் கொள்கை நாடகம் நடத்தலாம். அதற்குத் தகுதியுள்ளவர்கள் பயிற்சி பெற வேண்டும். அதோடு, புதிய பாடல்கள் அமைக்கப்பட்டு கால்நடைப் பிரச்சார பயணத்தில் மற்றும் ஊர்வலங்களில் பாடப்பட வேண்டும். சிறந்த ஒலி முழக்கங்கள் வாயிலாகக் கொள்கை முழக்கம் பரப்பப்படுகிறது என்பதை நாம் உணரவேண்டும்’’ என்று உரையாற்றினேன்.

பின்பு, திராவிட மாணவர்கள் பயிற்சி முகாம்களில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் சைதை தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாணவ, மாணவிகளைப் பாராட்டி பட்டுக்கோட்டை இளவரி, விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் குடந்தை ஏ.எம்.ஜோசப், சென்னை மாவட்டச் செயலாளர் மு.போ.வீரன், பேராசிரியர் அ.இறையன், புவனன், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் ந.இராமநாதன் ஆகியோரும் பேசினார்கள்.

மாணவர்களின் சார்பாக கோ.சுந்தரபாண்டியனும், மாணவிகள் சார்பில் தென்குமரியும் நன்றி உரையாற்றினார்.

விழாவில் மாணவ, மாணவிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு புதிய சிந்தனையுடன் பயிற்சி முகாமை விட்டு கலைந்து சென்றனர். பெற்றோர்கள், பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

சென்னை மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளர் சைதாப்பேட்டை எம்.பி.பாலு அவர்களின் மூத்த மகள் செல்வி செந்தாமரைக்கும், சைதாப்பேட்டை தேவராசு அவர்களது மகன் பழனிக்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் 27.5.1979 ஞாயிறு காலை 9.35 மணிக்கு சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் எனது தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

1950ஆம் ஆண்டு திராவிடமணி பதிப்பக உரிமையாளர் டி.எம்.முத்து அவர்களின் முயற்சியால் பெரியார் ‘பொன்மொழிகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

தந்தை பெரியாரின் அறிவுரைகளை கொண்ட இந்நூல் வகுப்பு துவேஷத்தைத் தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டது.

மேலும், தந்தை பெரியார் அவர்கள் மீதும், திரு.முத்து அவர்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்-பட்டனர்.

இது அன்றைய சென்னை மாகாண அரசின் தூண்டுதல் காரணமாகவும், திருச்சி மாவட்ட கலெக்டரின் முக்கிய முயற்சி காரணமாகவும்  நடைபெற்றது.

29 ஆண்டுகளுக்குப் பிறகு, 1979இல் அ.தி.மு.க. அரசு _ அய்யாவின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் நேரத்தில் இத்தடை நீங்கியது. இதற்கு முக்கிய காரணம் திராவிடர் கழகம் எடுத்த முயற்சியாகும். இதற்கான நி.ளி.வையும், அன்றைய தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தடை நீக்கப்பட்ட அரசாணை இதுதான்.

PUBLIC (LAW & ORDER-B) DEPARTMENT
G.O. Ms. No.1162             Dated: th 15th June – 1979
READ:
1.    G.O.Ms.No.692, Public (General-A)
Department, Dated: 20-2-1950

2.    From the Inspector-General of Police, D.O.
Letter No.C12/61728/C, dated 4-12-1978.
ORDER:-
In the Government Order read above, it was notified under, section 19 of the Indian Press (Emergency Powers) Act, 1931 (Central Act XXIII of 1931) (Since repeated) that every copy of the Tamil book entitled “Pon Mozhigal” by thiru E.V.Ramaswamy Naicker, published by the ‘Dravida Mani Pathippakam’, Tiruchirapalli and printed at the ‘Madras Ripon Press’, Pudukkottai and all other documents containing copies or translations of the said book in as much as it contains matter of the nature described in section 4(1)(d) and (h) of the said Act, be declared to be forfeited to the Government.

2. The Periyar Centenary Committee constituted by the Government in connection with the Periyar Cenntenary Celebration recommended, inter alia, that the ban on books by Periyar E.V.Ramaswamy may be lifted.
3. The Government, after careful consideration of the matter in the altered circumstances since the ban order referred to above, direct that the orders issued in the Government Order read above be cancelled with immediate effect.
(BY ORDER OF THE GOVERNOR)
V.KARTHIKEYAN,
CHIEF SECRETARY TO GOVERNMENT

அந்த அரசு ஆணையில் அய்யா பெயரில் ‘நாயக்கர்’ என்று சேர்த்து இருந்தது. அதனையும் கண்டித்து, தமிழக அரசின் ஆணை இப்படி இருக்கலாமா? இது  குறித்து எச்சரித்து ஒரு சுற்றறிக்கையை அனுப்ப முதல்வர் முயற்சி எடுத்தல் நல்லது என்று 22.06.1979 அன்று ‘விடுதலை’ இதழில் கீழ்க்கண்டவாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

“அய்யாவின் நூலான பொன்மொழிகளுக்கு விதித்த நடையை நீக்கியதற்காக அ.தி.மு.க. அரசுக்கு நமது பாராட்டுதல்கள், நன்றியும் செலுத்துகிறோம்.

அவ்வாணையை எழுதிய அதிகாரிகள் அய்யா பெயரில் ‘நாயக்கர்’ என்று சேர்த்திருப்பது குறித்து மிகவும் வேதனைப்படுகிறோம்.

முதல்வர் அவர்களோ, அமைச்சர்களோ இதற்கு பொறுப்பு என்று கூறமாட்டோம்.

ஆனால், தமிழக அரசின் ஆணை இப்படி இருக்கலாமா? இதுகுறித்து எச்சரித்து ஒரு சுற்றறிக்கையை அனுப்ப முதல்வர் முயற்சி எடுத்தல் நல்லது.’’ என்று கண்டித்து ‘விடுதலை’யில் எழுதினேன்.

24.6.1979 அன்று கோவை மாவட்ட ‘தந்தை பெரியார் நூற்றாண்டு விழா’ பெரியார் மண்டபம் பிரசிடெண்ட் ஹாலில் நடை-பெற்றது. கோவை மாவட்ட தி.க. சார்பில் நடைபெற்ற இவ்விழா தோழியர் குனியமுத்தூர் சதாசிவம் அம்மணி அம்மையார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழியர் ரங்கநாயகி அம்மாள் முன்னிலை வகித்தார்கள்.  ஊர்வலத்தில் இராமாயண பாத்திரங்களின் வேடங்களும் இடம்பெற்று இருந்தன. தொடர்ந்து பெய்த மழையிலும் நடைபெற்ற உற்சாகமிக்க ஊர்வலத்தில் கட்டுப்பாட்டையும், ஒலி முழக்கங்களையும், மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளையும், தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு அலங்கார வண்டிகளையும் பொதுமக்கள் சாலைகளின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கில் கூடி நின்று பார்த்து மகிழ்ந்தனர். கழகப் பொருளார் தஞ்சை கா.மா.குப்புசாமி, மாவட்ட தி.க.தலைவர் கே.இராமச்சந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வழிநடத்தி வந்தனர்.

விழாவில், ‘பெரியார் மலர்கள்’ என்ற நூலை ஜனசக்தி ஆசிரியரும், இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழ் மாநில துணைப் பொதுச்செயலாளருமாகிய தா.பாண்டியன் வெளியிட்டார். முதல் மலரை கோவை மாவட்ட தி.க. துணைச் செயலாளர் வேலுசாமி பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் ஜி.இலட்சுமணன் எம்.பி. தமிழ்நாடு முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அப்துல் லத்தீப் எம்.எல்..ஏ., பட்டுக்கோட்டை இளவரி, திராவிடர் கழக விவசாய தொழிலாளர் பிரிவு செயலாளர் குடந்தை ஏ.எம்.ஜோசப், தமிழ்நாடு ஜனதா கட்சி பொதுச் செயலாளர் ரமணிபாய் உள்ளிட்ட தலைவர்களும், ஏராளமான கழக தோழியர், தோழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ———-

இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சராகவும் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த தேவராஜ் அர்ஸ் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கர்நாடகா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 58 விழுக்காடு இடஒதுக்கீடு முதலில் வழங்கியதையும், மேலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏராளம் உதவுகிறார் என்ற காரணத்தையும் வைத்துக் கொண்டு, தேசிய அளவில் தென்னகத்தில் இருந்து ஒருவர் சமூகநீதி உணர்வுடன் கோலோச்சுவதைப் பொறுக்க-முடியாமல் அவரை கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று பார்ப்பன உயர்ஜாதி வெறியர்கள் கடும் முயற்சிகளை எடுத்தனர். அதன் ஒரு பகுதியாக அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர். இதனை அக்கட்சி தலைவர்களில் ஒருவரும் கர்நாடக அமைச்சருமான பசவலிங்கப்பா வெளிப்-படையாக கண்டித்து தந்தை பெரியார் கொள்கை வடநாட்டில் பரவுவதை தடுக்க முடியாது என்று அறைகூவல் விடுத்து தேவராஜ் அர்சுக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

சமூகநீதிக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் தேவராஜ் அர்ஸ் அவர்கள் பழிவாங்கும் இந்த நடவடிக்கையின் பின்னணியில் இருப்பது உட்கட்சி பூசல் அல்ல என்றும், இது ஒரு இனப்போராட்டம் என்றும் 18.06.1979 திருச்சி செய்தியாளர் சந்திப்பில் விளக்கினேன்.

மேலும், 19.06.1979 அன்று அது குறித்து விரிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அதில் இந்த மோதலுக்குக் காரணமான, இதன் பின்னணியில் உள்ள உயர்ஜாதிப் பார்ப்பனர்களான கமலாபதி திரிபாதி, ஏ.பி.சர்மா, பிரணாப் குமார் முகர்ஜி ஆகியோர் இருப்பதை விளக்கி அவருக்கும் பசவலிங்கப்பாவிற்கும் நமது ஆதரவைத் தெரிவித்தேன்.

அந்த அறிக்கையின் ஒரு பகுதி

“கர்நாடக முதல்வர் திரு.தேவராஜ் அர்ஸ் அவர்களை இப்படிபழிவாங்கி இந்திரா நடந்து கொண்டதே முழுக்க முழுக்க அவர் ஒரு பிற்படுத்தப்பட்டவர்; தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அவர் ஏராளம் உதவுகிறார் என்பதைக் கண்டு எரிச்சலும், இந்த உணர்வு அவருக்கு மேலோங்கி நிற்பதால் தனது பார்ப்பன இனவெறித்தனத்தையும், சுயநலத்தையும் அவர் நல்லவண்ணம் அடையாளம் கண்டு வருவதால் இனி, அவர் தனக்கு (இந்திராவுக்கு) வெறும் ஆமாம் சாமியாக இருக்க மாட்டார் என்பதை உண்ர்ந்தே இப்படி ஒரு வம்பை அவரே விலைக்கு வாங்கிவிட்டார்.

ஏன் அனுமதிக்க வேண்டும்?

கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒருவரே தலைவராக இருக்கக்கூடாது என்று கூறும் இந்திரா ஆரம்பத்தில் ஏன் இரண்டையும் ஒருவரிடத்தில் (அர்ஸ் இடத்தில்) இருக்க அனுமதிக்க வேண்டும்? அவர் நாமினேஷன் மூலம் தானே அது செய்யப்பட்டது? அப்போது ஏற்படாத ஞானோதயம் இப்போது ஏன் திடீரென ஏற்பட வேண்டும் என்று எவர் கொஞ்சம் சிந்தித்தாலும் தெள்ளத் தெளிவாக இது விளங்காமற் போகாது!

அதுமட்டுமல்ல; கர்நாடக மாநில முதல்வர் திரு.அர்ஸ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முக்கிய முடிவுக்கு இந்திரா காங்கிரசின் மூன்று பேர்களே முக்கியமானவர்கள் என்று நம்பகமாகத் தெரிகிறது.
1. கமலாபதி திரிபாதி
2. ஏ.பி.சர்மா
3. பிரணாப்குமார் முகர்ஜி

இம்மூவரும் பச்சைப் பார்ப்பனர்கள். இம்மூவரும் இந்திரா அம்மையாரின் இன்றைய பூசாரிகள் என்பது இந்திரா காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெளிவாகத் தெரியுமே!

கர்நாடகத்தில் இப்போது கிளம்பியுள்ள பொறி, இந்தியா முழுவதும் பரவியே தீரும் என்பதில் சந்தேகமே இல்லை.

‘இந்தியத் துணைக்கண்டத்தில் என்றுமே அரசியலுகாக அரசியல் போராட்டம் நடைபெற்றதில்லை; இனப்போராட்டத்திற்குத் தான் அரசியல் சாயம் பூசிக் காண்பிக்கப்பட்டு வருகிறது’ என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போதும் இன்றும் பொருந்துகிறது பார்த்தீர்களா?

அய்யாவின் நுண்ணறிவும், ஆசாபாசத்திற்கு இரையாகாத எடைபோடும் ஆற்றலும் வியக்கத்தக்க ஒன்று அல்லவா?

இந்தியா முழுவதும் தந்தை பெரியார் அவர்களது உணர்வுகள் பரவுவதை கண்டு வெகுண்டெழுந்து தான் பார்ப்பன மேலாதிக்கக்காரர்கள் இப்படி ஒரு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று கர்நாடக ரெவின் யூ அமைச்சர் திரு.பசவலிங்க்ப்பா போன்றவர்கள் கூறிடுவது மிகவும் அப்பட்டமான உண்மையாகும்.

இந்திரா காங்கிரஸ் பார்ப்பனர்களை எப்படி ஜனதா பார்ப்பனர்களும் கட்சிக் கண்ணோட்டமின்றி காப்பாற்ற முனைகிறார்களோ, அது குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடையும் அது போன்ற ஒரு இன மானம் காக்கும் இனநல உணர்வு தலை தூக்குவது ஒரு சரித்திரக் கட்டாயமாக ஆகிவிட்டது.

அந்த எழுச்சியைக் காணும் புதிய சகாப்தம் உருவாகட்டும்.     எப்படி காவிரி அங்கே உற்பத்தியாகி இங்கேயும் பயன் விளைவிக்கிறதோ, அது போல இவ்வுணர்வும் மாநில எல்லைக்கோடுகளைக் கடந்து பயன் தரும்.

காவிரி ஓட்டத்திற்கு அணை கட்டலாம்!

ஆனால், இந்த உணர்வை தடுத்து நிறுத்திதேக்கி வைக்க எவரும் எங்கும் அணை கட்டவே முடியாது. அது உறுதி! முக்காலும் உறுதி.

போர்க்கொடி உயர்த்திய அர்ஸ்களுக்கும் அவரது அணியின் அங்கமாகத்திகழும் பசவலிங்கப்பாக்களுக்கு நமது பாராட்டுதல்கள்; வாழ்த்துக்கள்’’ என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இது குறித்து தேவராஜ் அர்சுக்கு நான் ஒரு தந்தியும் அனுப்பினேன். அதில், “உங்களது துணிவான முடிவிற்கு உள்ளம் நிறைந்த பாராட்டுதல்கள். நீங்கள் உயர்த்தியிருக்கும் கொடி உயர்ந்து பறக்கட்டும் தென்னகத்தின் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான உங்கள் போராட்டம் தொடரட்டும்’’ என்று தெரிவித்திருந்தேன்.

இதற்கிடையே இந்திரா காங்கிரசில் இருந்து அவர் விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கினார். ஆனால், கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருமளவு அவரை ஆதரித்ததால் முதலமைச்சராக தொடர்ந்தார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கல் 155 பேரில் 131 பேர் அர்சுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் அர்ஸ் பேசும்போது தனிக்கட்சி அதுவும் மாநிலக்கட்சி தொடங்குவது பற்றி சூசகமாகக் குறிப்பிட்டார்.

பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பெரியார் 40 வருடங்களாக போராடினார். அவர் பிறந்த மண்ணில் நாம் பிறந்திருக்கிறோம் என்று கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேச்சைத் தொடங்கினார்.

இனிமேல் தேசிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இருக்காது. மாநில கட்சிகள்தான் செல்வாக்குப் பெறும்.
இனிவரும் தேர்தல்களில் தேசிய கட்சிகளுக்கு எதிர்காலம் இருக்காது. மாநில கட்சிகளுக்குத்தான் மக்கள் ஆதரவு அளிப்பார்கள்.

ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து நாம் சேவை செய்தோம். அந்தப் பணியை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று அர்ஸ் பேசினார்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17 எம்.பிக்கள் தேவராஜ் அர்சை ஆதரித்தார்கள்.
சில நாட்களுக்குப்பின் தேவராஜ் அர்ஸ் அவர்கள் எனக்கு 26.06.1979 அன்று பதில் எழுதினார். அதில் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

“ஜனநாயக நெறிமுறைகளையும் உயர்பண்புகளையும் கட்சியையும் காப்பாற்றுவதற்கு நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு நீங்களாகவே முன்வந்து உங்கள் ஆதரவை தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதசார்பின்மைக் கொள்கையிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்திலும் நான் உறுதியான நம்பிக்கை கொண்டவன்.

இந்த நாட்டை சோசலிசப் பாதையில் கொண்டுச் செல்ல ஒரேவழி முற்போக்குச் சக்திகளும் ஒத்தக் கருத்துள்ளவர்களும் ஒன்றாக இணைந்து இந்த இலட்சியத்துக்காக பாடுபடுவதே இப்போது அவசியத் தேவையாகும். இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் இதய பூர்வமான உண்மையான ஆதரவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

எத்தகைய மாமனிதர் _ சமூகநீதிப் போராளி தேவராஜ் அர்ஸ் என்பது இதன்மூலம் புரிகிறதல்லவா?

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *