மனிதக் கழிவை மனிதரேஅள்ளும் கொடுமையான நடைமுறையைக் குறித்துக் கூறும் நூல்கள் பலவற்றை கண்டிருக்கிறேன்; வாசித்துமிருக்கிறேன். அந்நடைமுறை மனிதத்தன்மையற்ற செயல் என்பதால் அதன் குரூரங்கள் பற்றி எழுதும் வேட்கை பலருக்கு உள்ளது. அத்தகைய நூல்களில் பெரும்பாலானவற்றில், உலர் கழிப்பிடங்களை எவ்வாறு நவீனப்படுத்தலாம் என்பது பற்றி அதிக அக்கறை செலுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் UNSEEN: THE TRUTH ABOUT INDIA’S MANUAL SCAVENGERS என்ற இந்நூல், மனித மலம் அள்ளும் மக்களைப் பற்றி அதாவது நீசத்தனமான இந்த நடைமுறை வழக்கத்தை கடைப்பிடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு அதன்படி பல நூற்றாண்டு காலமாக செய்து வரும் இம்மக்களைப் பற்றி _ முக்கியமாக எடுத்துரைப்பதால், மற்ற நூல்களில் இருந்து வேறுபட்டிருக்கிறது. இந்நூல் எங்களின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
எங்கள் வாழ்நிலையின் முதன்மையான இரு அம்சங்களை, இந்நூல் விவரிக்கிறது. அதில் முதலாவதாக, சாதிய அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்நடைமுறை வழக்கமானது, எவ்வாறெல்லாம் எங்கள் வாழ்க்கை முறையிலும், சிந்தனையிலும் ஆதிக்கமும், அதிகாரமும் செலுத்துகின்றது என்பதையும்; இரண்டாவதாக, அதிலிருந்து எங்களை நாங்களே விடுவித்துக் கொள்ள விழையும் எங்களின் தீவிரமான வேட்கையையும், சளைக்காத போராட்டத்தையும் எடுத்துரைக்கின்றது. அதிலும் குறிப்பாக, அந்நரகல் நரகத்தில் இருந்து விடுதலை பெற எங்கள் சமுதாயப் பெண்கள் எவ்வாறெல்லாம் முயன்று வருகின்றனர்; உலர் கழிப்பிடங்களை தங்களின் கைகளாலேயே அழித்தொழிக்க அவர்கள் எவ்வாறு முன்னெடுத்து வருகின்றனர்; மலம் நிரம்பிய கூடைகளை எவ்வாறு அவர்கள் எரிக்கின்றனர்; அவர்களுக்கு அவர்களின் ஆண் சகாக்கள் எவ்வாறு ஒத்தாசையாகவும் உதவியாகவும் இருந்து வருகின்றனர் என்பனவற்றை யெல்லாம் அடிக்கோடிட்டு காண்பிக்கின்றது இந்நூல்.
இந்தக் கொடிய நடைமுறை வழக்கமானது, எங்கள் சமுதாயம் முழுவதையுமே எவ்வாறெல்லாம் பாதுகாப்பின்மை என்ற பாதாளத்தில் விலங்கைப் பூட்டி அடைத்து வைத்திருக்கிறது என்பதையும்; அதனாலேயே எங்களில் பலர், தாங்கள் தினமும் செய்தே தீர வேண்டிய இந்த அருவருப்பான வேலை _ அதாவது அடுத்தவன் கழிந்து போடும் மலத்தை தாங்கள் அள்ளி சுத்தம் செய்யும் இவ்வேலை _ என்பது உண்மையிலேயே நிலப்பிரபுத்துவ அடக்குமுறையின் ஒரு குறியீடு என உணராமலேயே உள்ளனர் என்பதையும் இந்நூல் விளக்குகின்றது.
அதற்கு எடுத்துக்காட்டாக, இச்சமுதாயத்தில் மருமகளாக வீட்டுக்குள் காலடி வைக்கும் புது மணப்பெண்ணுக்கு அவளின் மாமியார் முதல் காரியமாக, தான் பாரம்பரியமாகச் செய்து வரும் அடிமை ஊழியத்தின் (Jajmani) ஒரு பங்கை பரிசாக அளிக்கும் வழக்கத்தைச் சொல்லலாம். அதாவது, மாமியார்தான் சுத்தம் செய்து வரும் உலர் கழிப்பிடங்களில் ஒரு பகுதியை தனது மருமகளுக்கு ‘மரபுரிமை’யாகத் தாரை வார்த்துக் கொடுத்து விடுகிறாள் என்பதே இதன் பொருள். மருமகள் கையில் ஒரு மலக் கூடையையும், துடைப்பத்தையும் முதற் பரிசாகக் கொடுத்து தனது பாரம்பரிய வழக்கத்தை நிலைநாட்டுவதில் மாமியாருக்கு அப்படியொரு பெருமிதம்!
இதுபோன்று எண்ணிலடங்கா உதாரணங்களை, நான் கண்கூடாகவே கண்டிருக்கிறேன். சாதாரணமாக ஒரு குடும்பத்தில், திருமணமாகி வீட்டுக்கு வரும் புது மருமகளிடம் அந்த வீட்டின் நிர்வாகப் பொறுப்புகளை மாமியார் எவ்வாறு ஒப்படைப்பாளோ அதைப் போலவே இதுவும்.
மனிதக் கழிவகற்றும் இம்மக்களின் குடும்பங்களில் இந்த ஒடுக்குமுறையானது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து அச்சமுதாயம் முழுவதையுமே பலிகடாவாக ஆக்கி வைத்திருக்கிறது. சாதிய அடிப்படையிலமைந்த வன்மத்தையும் மேலாதிக்கச் செருக்கையும் உள்ளடக்கிய கட்டமைப்பே, திட்டமிட்டு தங்களை இந்தப் புதைகுழியில் பிடித்துத் தள்ளியுள்ளது என்ற நிதர்சனத்தைக் கூட அச்சமுதாயம் அறியாமலேயே உள்ளது. இதுபோன்று, இதுகாறும் தொடப்படாமலிருக்கும் அம்சங்களையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது இந்நூல்.
எங்கள் சமுதாய மக்களிடம் போய் ‘நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று நான் கேட்டால் உடனே அவர்கள் “எங்கள் வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்!’’ என்றே பதிலளிப்பார்கள். திரும்பவும் துருவித் துருவிக் கேட்டால், அவர்கள் வியப்பு மேலிட, “நாங்கள் என்ன வேலை செய்துக் கொண்டிருக்கிறோம் என்று உனக்கு தெரியாதா? மனித மலத்தை அள்ளும் துப்புரவு வேலையை தான் செய்து கொண்டிருக்கிறோம், தெரிந்து கொள்’’ என்று பதிலடி கொடுப்பார்கள்.
இப்படி ஒரு சமுதாயம் முழுமையுமே தங்களின் வேலையே, அடுத்தவர்கள் கழிந்து விட்டு போயிருக்கும் மலத்தை அள்ளிச் சுத்தம் செய்வது மட்டும்தான் என எப்படி மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பது பற்றிச் சிந்தித்து பார்க்கிறேன். அந்த சிந்தனையே கடும் வலியாகத் தானிருக்கிறது. ‘இந்த மக்களை தலைமுறை தலைமுறையாகக் கீழ்மைப்படுத்தி அடிமைகளாக வைத்திருந்தால்தான் அவர்கள், தாங்கள் சுரண்டப்படும் அநீதிக்கு எதிராக வாயைத் திறக்க மாட்டார்கள்’ என்ற காரணத்திற்காக தீட்டப்பட்டச் சதித்திட்டத்தின் விளைவாகவே இச்சமுதாய மக்கள் இத்தகைய துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
மலம் அள்ளும் இத்துப்புரவுத் தொழிலாளர்களை நசுக்கும் இந்த ஒடுக்குமுறை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இச்சதித் திட்டத்தை வடிவமைத்தது ஜாதிய அமைப்பே ஆகும். தாங்கள் கழிந்து போடும் நரகலுக்கு, மலம் அள்ளும் தொழிலாளர் சமுதாயம் (Manual Scavengers Community) தான் பொறுப்பு என்று சமூக கட்டமைப்பு (Society) கை காட்டுகிறது. மலம் அள்ளும் தொழிலாளர்களோ, ‘மற்றவர்களின் மலம் தாங்களை மட்டுமே சார்ந்தது’ என்று தங்களுக்குத் தாங்களே கருதிக் கொள்கிறார்கள். சிக்கலான இச்சூழ்நிலையை எப்படி நாம் புரிந்து கொள்வது? இந்த உட்சிக்கலை அவிழ்ப்பதும், முட்டுக்கட்டையை அகற்றுவதும் யார்?
இவற்றை ‘நமக்காக மற்றவர்கள் செய்து கொடுப்பார்கள்’ என்று அச்சமுதாயத்தினர் (மனிதக் கழிவகற்றும் மக்கள்) நினைத்தால் -_ சமூகக் கட்டமைப்பும் (Society) அரசாங்கமும் ‘இல்லையில்லை அப்பொறுப்பு அச்சமுதாயத்தையே சார்ந்தது. அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கையைக் காட்டி விட்டு நகர்ந்து விடுகின்றன. நாங்களோ, இந்த விஷயத்தில் இரு தரப்பினருமே ஒன்றிணைந்து அச்செயலை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்… இந்த புள்ளியில் இருந்து தான் பாஷாவின் நூல் தொடங்குகிறது.
என் சமுதாய மக்களால் சகித்து கொள்ளப்பட்டு வரும் இந்த கொடூர நிதர்சனத்தை படம் பிடித்து காட்டியுள்ளதன் மூலம் சதித் திட்டத்தின் முகத்திரையை கிழித்திருக்கிறது இந்நூல். UNSEEN: The Truth About India’s Manual Scavengers.
சட்ட விரோதமானதும், மனிதத் தன்மைக்கு புறம்பானதுமான இந்நடைமுறை வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் அடி மட்டத்திலிருந்து மேற்கொண்ட முன்முயற்சிகளை பொருட்படுத்த சமூகக் கட்டமைப்பு விரும்பாவிட்டாலும், இன்றைய சூழ்நிலையில் விடுதலைக்கான எங்களின் போராட்டத்தை அவர்களால் உதாசீனப்படுத்த முடியாது.
கடந்த பல நூற்றாண்டு காலங்களாகவே நாங்கள், மற்றவர்களின் வீடுகளுக்கு அவர்களின் மலத்தை அள்ளிக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்வதற்காக புழக்கடை வழியாகத் தான் சென்று வந்திருக்கிறோம். முன்பக்க வாசலில் எங்களுக்கு அனுமதியே இருந்ததில்லை.
இவ்வாறு, ஆண்டாண்டு காலமாக எங்களை அடைத்து வைத்திருந்த கண்களுக்குப் புலனாகாத அந்த வாழுலகின் சுவர்களை இப்போது நாங்கள் அதிர வைத்திருக்கிறோம். மற்றவர்களின் அனுதாபம் எங்களுக்கு வேண்டியதில்லை. சுயமரியாதைக்கும் கவுரமான வாழ்க்கைக்குமான எங்களின் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அரசாங்கமும், நீதித்துறையும் (Judiciary), சமூகக் கட்டமைப்பும் (Society) எங்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக, எங்கள் பாதையில் தடைக்கற்களைப் போடுகின்றன. மனிதக் கழிவை மனிதரே அகற்றும் அவலமான இந்நடைமுறையை இன்ன கால அளவுக்குள் முற்றிலும் ஒழித்துக் கட்டுவது என்று ஒரு காலக்கெடுவை அரசாங்கமே நிர்ணயித்திருந்தது. ஆனால், தான் வகுத்த அந்த காலக்கெடுவை இதுவரையிலும், அரசாங்கமே தான் உடைத்திருக்கிறது. கடந்த 20 ஆண்டு காலத்தில், குறைந்தபட்சம் ஒன்பது முறையாவது இச்செயலை அரசாங்கம் நிச்சயமாக செய்திருக்கிறது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு (Commonwealth Games) விதிக்கப்பட்டிருந்த கால நிர்ணயத்தில் இதுபோன்று செய்ய அரசாங்கத்தாருக்கு துணிச்சல் இருக்குமா? டெல்லி பெருநகர திட்டத்தை (Delhi Metro Project)ஆண்டுகணக்கில் இழுத்தடிக்க அவர்களால் முடியுமா? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின்போது ஊழல் எக்கச்சக்கமாகத் தலைவிரித்தாடிய போதும், போட்டிக்கான ஆயத்தப் பணிகளில் தாமதம் நிலவியபோதிலும் அவ்விளையாட்டுப் போட்டிக்கான தேதியைத் தள்ளிப் போடவோ அல்லது அந்த விளையாட்டு போட்டியை நடத்த முடியாது என்று அறிவிக்கவோ அரசாங்கத்தால் முடியவில்லை. ஆனால், மனிதக் கழிவை மனிதரே அள்ளும் அநீதியை ஒழித்துக் கட்டுவதற்கானக் காலக்கெடுவுக்கு மட்டும் பல்லாண்டுகளாக ஏனிந்த இழுத்தடிப்பு?
மனிதக் கழிவை மனிதரைக் கொண்டு அகற்றும் அவலத்தை தடை செய்யும் சட்டம் 1983ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த இருபது ஆண்டுகளில், இச்சட்டத்தை மீறியதாக எந்த ஒரு நபர் மீதும் இந்நாட்டிலுள்ள 625 மாவட்ட ஆட்சியர்களில் எந்த ஒரு ஆட்சியரும் வழக்குத் தொடர்ந்ததில்லை. கடந்த 20 ஆண்டுகளாக சஃபாய் கரம்ச்சாரி ஆயோக்கின் (Safai Karamchari Aayog) அறிக்கை, நாடாளுமன்றத்தில் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை? தற்போதுள்ள 750 எம்.பி.,க்களும் இவர்களுக்கு முன்பாக இப்பதவியில் இருந்த நூற்றுக்கணக்கானோரும் இப்பிரச்சினையின் மேல் ஒருமித்த அக்கறையைச் செலுத்தாதது ஏன்? இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரத்தக் குரலெழுப்பி விவகாரத்தை ஏன் கிளப்பவில்லை? காட்டுமிராண்டித்தனமான அந்த ஒடுக்குமுறையை வேரோடு ஒழித்தழிக்க குறிப்பிட்ட காலக் கெடுவுடன் கூடிய செயற்திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டு-மென்று அவர்கள் ஏன் வற்புறுத்தவில்லை? இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படாதது ஏன்?
கடந்த 1993இல் சட்டம் நிறைவேறி, பத்தாண்டுகள் ஆன பிறகும்கூட நாங்கள் அதிகாரிகளின் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருப்பதும்; மனிதத் தன்மைக்கு புறம்பான அந்நடைமுறையை தடுத்து நிறுத்தவும் _ உலர் கழிப்பிடங்களை அழித்தொழிக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.
இவ்வாறு ஆண்டுக்கணக்கில் முயற்சிகளில் ஈடுபட்ட பிறகே நங்கள், பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள், “எந்த ஒரு சட்டமும் அதுவாகவே நடைமுறைக்கு வருவதில்லை. அதனைப் பிடித்துத் தள்ளி நடைமுறைக்கு கொண்டு வர மக்கள் சக்தி தேவைப்படுகிறது’’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்த கருத்தின் உண்மையை உணர்ந்து கொண்டோம்.
எங்களின் ஒருங்கிணைந்த சக்தியின் ஆதரவுடன் கடந்த 2003ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டினோம். ஆனால், அது எங்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக எங்களின் சுமையை தான் அதிகரிக்கச் செய்தது. அரசாங்கங்கள் _ மய்ய அரசு தொடங்கி மாநில அரசுகள் வரை _ கூறியிருந்த பொய்களை பொய்யென்று நிரூபிக்கும் பொறுப்பை எங்கள் மீது சுமத்தியது. தவறான உறுதிமொழிப் பத்திரங்களை (கியீயீவீபீணீஸ்வீts) அளித்திருந்தவர்களைத் தண்டிக்கவில்லை. ஒரு பத்தாண்டு கால வழக்கு விசாரணைகளுக்கு பிறகு, எங்களுக்கு நீதி வழங்க தனக்கு நேரம் எதுவுமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இவ்வகையில், மிகவும் ஒதுக்கப்பட்டதும் மிக நலிந்ததுமான ஒரு சமுதாயப் பிரிவிற்கு உதவிக்கரம் நீட்ட நீதித்துறை முன் வருவதற்கு நீதிபதிகள் அனுமதிக்கவில்லை. இது ஏன்?
மலம் அள்ளும் இச்சமுதாயத்தினர் படும் வேதனையை சமூகக் கட்டமைப்பும் அறிந்திருக்கவில்லை. இன்றைக்கும் கூட மக்கள், ‘மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வேலை என்கிறீர்களே அப்படி என்றால் என்ன? எங்கு அது இருக்கின்றது?’ என்று என்னிடம் கேட்கிறார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! தினமும் சஃபாய் கரம்சாரிகள் (துப்புரவுத் தொழிலாளர்கள்) துப்புரவு செய்வதையும், மனித மலத்தை அள்ளிச் செல்வதையும் மக்கள் பார்க்கவே செய்கிறார்கள். ஆனால், அத்தொழிலாளர்களை கண்டதுமே தங்களின் மூக்கை மூடிக்கொண்டு வேகமாக நடந்து சென்று விடுகிறார்கள். ‘இந்த குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் ஏன் இப்படி பல நூற்றாண்டுகளாக மலச் சுமையின் அடியில் புதைந்து கிடக்கிறது? இச்சமுதாயத்தால் மட்டும் ஏன் சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் உள்ளது?’ என்று அவர்களுக்கு தோன்றவே தோன்றாது. இந்த வினா, அவர்களை ஏன் சங்கடப்படுத்தக் கூடாது.
இன்னுமொரு முரணான விஷயம் என்னவென்றால், இந்த விவகாரத்தில் இதர தலித் சமூகங்களின் மத்தியிலேயே காணப்படும் பாராமுகப் போக்குதான். மலம் அள்ளும் தொழிலாளர்களும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும்கூட இவர்களின் விடுதலைக்கான போராட்டத்தை மற்ற தலித் இயக்கங்கள் முன்னெடுத்துச் சென்றதேயில்லையே, அது ஏன்?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே ஒரு விடைதான். அது: சாதியச் சிந்தனையும் மேலாதிக்க மனோபாவமும்தான்.
எந்தவொரு விசயத்தையும் சாதிய மனப்போக்குடன் நோக்கினால் அதில் புதைந்திருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் கண்களுக்கு தென்படாது. மனிதக் கழிவை மனிதரே அள்ளும் அவலம் எவ்வித தங்குத் தடையுமின்றி தொடர்வதற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும், கண்களுக்குப் புலப்படாத பல தொடர்புகளை அங்குலம் அங்குலமாக தோலுரித்துக் காட்ட இந்நூலின் வாயிலாக பாஷாசிங் முயன்றிருக்கிறார்.
நூலுக்கு அவர் தந்துள்ள தலைப்புக்கு ஏற்றாற்போல் கண்களுக்குப் புலனாகாமல் அருவமாக இருந்துவரும், இந்நாட்டின் ஒரு பகுதி மக்களுடன் தான் நாங்கள் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக,
மலம் அள்ளும் இச்சமுதாய மக்கள், இதர மக்களின் கண்களுக்கு தென்படுவதில்லை என்று இதற்கு பொருளில்லை. மாறாக, அவர்களை (மலம் அள்ளுவோரை) காண இவர்கள் விரும்புவதில்லை என்பது இதன் பொருள்.
இம்மக்களின் வாழ்நிலை இருப்பு எனும் கசப்பான உண்மையை புறக்கணிக்க மதம், ஜாதி, அதிகார வர்க்கம், திட்டங்கள், அரசியல் என்று ஒவ்வொரு மட்டத்திலும் சதி வகுக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே, கண்களுக்குத் தென்படாத அந்த இந்தியாவை வெளிச்சம் போட்டு முன்னிறுத்திக் காண்பிக்க பணியாற்றும் பாஷா போன்றோரை இக்கட்டமைப்பு முறைமை இகழ்ச்சியோடு பார்க்கிறது. இந்த விவகாரத்தை உணர்வுப்பூர்வமான வழியில் வெளிப்படுத்துவோரும், மனிதக் கழிவகற்றும் மக்களின் மீட்சி குறித்து கவலை கொள்வோரும் கூட அதே பிரிவையும் அதே ஜாதியையும் சேர்ந்தவர்களாக முத்திரைக் குத்தப்படும் நிலையும் இங்குள்ளது. தீண்டத்தகாதவனாக கருதப்படும் ஒருவனை நெருங்குபவனும் கூட தீண்டத்தகாதவனாகவே ஆக்கப்படுகிறான். இதுவே, சாதிய அமைப்பு முறையின் காட்டுமிராண்டித்தனமான கொடூரம் ஆகும்.
இவ்வகையான குரூரமான எண்ணத்தின் விளைவாகத் தான், மனிதக் கழிவகற்றும் மனிதர்களைப் பற்றி எழுதும் பத்திரிகையாளர்கள் ஏளனம் செய்யப்படுகின்றனர்; அவர்களின் பிற பணிகளும், எழுத்துக்களும் மட்டம் தட்டப்படுகின்றன; ‘மனிதக் கழிவகற்றும் பத்திரிகையாளர்கள்’ என்று அவர்களுக்கு ‘பட்டப் பெயரும்’ சூட்டப்படுகிறது. நூலாசிரியர் பாஷா, அளவற்ற நிர்ப்பந்தங்களை எதிர்-கொண்டார் என்பதையும் தொழில்ரீதியான சாவல்களால் பலமுறை நெருக்குதலுக்கு அவர் உள்ளானார் என்பதையும் நான் அறிவேன். எனினும், மனித மலத்தை மனிதரைக் கொண்டு சுத்தம் செய்யும் கொடுமையை ஒழித்துக் கட்டும் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள அவர் தயங்கவேயில்லை. ஒப்பியப் பொறுப்பை செய்து முடிக்கும் கடமை உணர்வின் வலிமையால்தான் அவரால், இப்பிரச்சினையின் பரந்துப்பட்ட அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்நூலை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது.