மஞ்சை வசந்தன்
29.04.1891இல் பிறந்து கனகசுப்புரத்தினமாய் வளர்ந்து, பாரதியார் தொடர்பிற்குப் பின் பாரதிதாசனாகி, பெரியார் கொள்கையால் கவரப்பட்ட பின் புரட்சிக்கவிகள் புனைந்து புரட்சிக்கவிஞராகி திராவிடர் வரலாற்றில் நிலைத்தவர்; திராவிட இயக்கத்தைப் பாடியதால் தமிழ் உள்ளவரை திராவிடர் இயக்கத்தையும் இலக்கியமாய் நிலைக்கச் செய்தவர்.
பிறந்த குடும்பச் சூழலாலும், வாழ்ந்த சமுதாயச் சூழலாலும் 1928 வரை பக்தியுடையவராய் வாழ்ந்து பக்திப் பாக்களை இயற்றினார்.
1. “ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு’’
2. “ஸ்ரீ சிவசண்முகன் கடவுள் பஞ்சரத்தினம்’’
3. “ஸ்ரீமயிலம் சுப்பிரமணியர் துதியமுது’’
ஆகிய மூன்றும் நமக்குக் கிடைத்துள்ள அவரது பக்திப் படைப்புகள்.
27.06.1909 முதல் காரைக்கால் அருகிலுள்ள நிரவியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். 1911இல் பாரதியாருடன் தொடர்புகொண்டு 1921இல் பாரதியார் மறையும் வரை அவரைப் பின்பற்றினார்.
அரசியல் சார்பு என்ற வகையில் 1911 முதல் 1927 வரை காங்கிரஸில் இருந்தார்.
1928இல் ‘குடிஅரசு’ இதழ் இவருக்கு அறிமுகமானது. அதே ஆண்டு பெரியாரின் பேச்சை மயிலாடுதுறையில் கேட்டார். இவை இரண்டும் இவரது நோக்கையும், போக்கையும் புரட்டிப் போட்டன.
“நான் பாரதிதாசன் என்று புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குக் காரணம், அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான்.
ஜாதிக் கொள்கையை உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்தாம்! அவருக்கு முன் அவ்வாறு எதிர்த்தவரை நான் கண்டதில்லை.
பாரதியார் இறந்த பின் _ ஜாதியை எதிர்த்த, சீர்திருத்தங்களை ஆதரித்த _ பெரியாரை ஆதரிக்கத் தொடங்கினேன். இன்றுவரை ஆதரித்து வருகின்றேன். இனியும் அந்தக் கொள்கையைத்தான் ஆதரிப்பேன்.’’
-குயில் (20.09.1960)
வாத்தியார் சுப்புரத்தினம்:
21.01.1929இல் புதுச்சேரியில் சுயமரியாதை மாநாடு. மாநாட்டுச் செய்தி 27.01.1929 குடிஅரசு ஏட்டில் கீழ்க்கண்டவாறு வந்திருந்தது.
“21.01.1929இல் புதுச்சேரியில் சுயமரியாதை மாநாடு. தாவீது கெப்ளே, செல்லநாயக்கர், வாத்தியார் சுப்புரத்தினம்.’’
வாத்தியார் சுப்புரத்தினம் என்றே பாரதிதாசன் அப்போது திராவிடர் இயக்கத்தவரால் அழைக்கப்பட்டார்.
பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளை எழுதுவதோடு நில்லாமல், பரப்புரைகளும் செய்தார்.
“உள்ளத்திற்குச் சரியென்று பட்டதை உலகிற்கு அறிவிக்க வேண்டும்’’ என்ற கொள்கை வழி உறுதியாய் நடந்தார்.
“கடவுள், மதம், அரசு, அதிகாரம் என எது வந்து ஆசைகாட்டினாலும், அச்சமூட்டினாலும் அவற்றைத் தூசியாய் நினைக்க வேண்டும்; துணிந்து எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்பவன் மட்டுமே மனிதன்’’ என்று அறிவுறுத்தினார்.
புரட்சிக் கொள்கை வழி அவர் செயல்பட்டதால், அரசு முதல் சுற்றியுள்ளவர்கள் வரை இவருடன் தொடர்பைத் துண்டித்தனர்.
புதுவை மாநிலம் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் இவர் பணியாற்றியபோது இவர் மனைவிக்கு குழந்தை பிறந்து இரண்டு நாளில் இறந்துவிட்டது. அதன் உடலை அடக்கம் செய்யக்கூட ஒருவரும் உதவிக்கு வரவில்லை. இவரே தனிமையில் சென்று புதைத்தார்.
(தரவு: கருப்புக்குயிலின் நெருப்புக் குரல்)
அரசு அவரை அடிக்கடி பணியிட மாற்றம் செய்து அலைகழித்தது. அவருக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
கடவுள் மறுப்பு, மதவெறுப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றில் இவர் அதிகம் ஈடுபட்டதால் அரசின் வெறுப்புக்குள்ளாகி பல இன்னல்களை ஏற்றார். என்றாலும் அவர் கொள்கை உறுதி குலையாது நின்றார்.
சென்னை, எழும்பூர் ஒயிட்சு மெமோரியல் மண்டபத்தில் 31.12.1933இல் நடந்த ‘நாத்திகர் மாநாட்’டில் நாத்திகர் பதிவேடு ஒன்று வைக்கப்பட்டது. அதில் முதலாவது நாத்திகராக ம.வெ.சிங்காரவேலர் பதிவு செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, பாரதிதாசன், ப.சீவானந்தம், சாமி சிதம்பரனார், வை.பொன்னம்பலனார், செ.தெ.நாயகம், கே.டி.கே.தங்கமணி, கே.எம்.பாலசுப்பிரமணியம், மாயவரம் சி.நடராசன் முதலான பலரும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
பாரதிதாசன் கையெழுத்திடும்போது ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்’ என எழுதிக் கையெழுத்திட்டார்.(43)
“காசைப் பிடுங்கிடு தற்கே – பலர்
கடவுளென் பார்! இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி – கெட்ட
கோயிலென் றால் ஒரு காதத்தில் ஓடு’’ (44)
பிறருக்குக் கூறிய இந்த அறிவுரையை, தாமும் இறுதி வரை பின்பற்றி நின்றார் புரட்சிக்கவிஞர்.
மரணப் படுக்கையில் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பாரதிதாசன் படுத்திருந்தபோது, அனுசூயா என்பவர் “அப்பா’’ என்று அழைத்தபடி அன்பு மிகுதியால் வடபழனி கோவில் திருநீற்றை அவர் நெற்றியில் பூச முனைந்தார். ‘என்ன மந்திரமா?’ எனச் சினந்து பேசியபடித் திருநீற்றைத் தட்டி விட்டார் பாரதிதாசன். (45)
“மூடத் தனத்தை முடுக்கும் மதத்தை நிர்
மூலப் படுத்தக்கை ஓங்குவீர் – பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் – செல்வ
நாடு நமக்கென்று வாங்குவீர்!’’ (46)
என்ற பாரதிதாசன், மத எதிர்ப்பு மாறாதவராகவே இறுதிவரை இருந்துள்ளார்.
முதலாளி, மதவாதி இருவரையும் ஆதிக்கச் சக்திகளாக அடையாளங் காட்டினார்.
“கடவுளை மதங்களைக் காப்பவர் என்போர்
கருணை யிலாநிலம் பொருள்நனி கொண்டோர்
உடைமை பறித்தஇக் கொடியரிற் கொடியோர்
ஒழிந்தபின் பே – நலம் உறுவர்இவ் வுலகோர்’’ (47)
‘தனியுடைமை, மதக்கொடுமை’ இரண்டின் வேராகவும், விளைவாகவும் இருக்கின்ற சீரழிவுகள் அனைத்தையும் பாரதிதாசன் கவிதைகள் குத்திக்கிழித்தன.
ஜாதி – வருணம்
உலகின் பொதுச் சிக்கலான மதமும், இந்த மண்ணுக்கே உரிய தனிச்சிக்கலான ஜாதியும், பாரதிதாசனதால் கடுமையாக எதிர்க்கப்பட்டன.
“ஜாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்! பின்னர்
ஒழித்திடுவோம் புதியதோர் உலகம் செய்வோம்’’ (48)
வருணங்களை நியாயப்படுத்தியப் புனை கதை மீது வெறுப்பை நெருப்பாகக் கக்கினார்.
“முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?
தோளில் பிறப்பார் உண்டோ தொழும்பனே?
இடையில் பிறப்பார் உண்டோ எருமையே?
காலில் பிறப்பார் உண்டோ கழுதையே?
நான்முகன் என்பான் உளனோ நாயே?
புளுகடா புகன்றவை’’ – என (49)
என்று சீறினார்.
“சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல
தமிழ்வளர்த் தல்மற் றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்ற
பாதி துலங்குவ தில்லை’’ (50)
ஜாதியைத் தவிர்த்து, தமிழர் என்னும் உணர்வால் ஒன்றிணைய வேண்டும் -தமிழர் ஒற்றுமைக்கு வழிகாட்டினார்.
‘ஜாதி மறுப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கூறி, ஜாதி மறுப்புத் திருமணங்களே ஜாதியுணர்வை வலுவிழக்கச் செய்யும் எனத் தீர்வின் திசையையும் அவர் சுட்டிக் காட்டினார்.
புராண, இதிகாசங்கள்
கடவுள் நம்பிக்கை, ‘மதம்’ ஆதிக்க நிறுவனம் என்று அடையாளம் காட்டினார்.
“மடைமையை நாட்டில் மலிவு செய்தால்
உடைமையை லேசாய் உறிஞ்சலாம்’’
என்று ஆதிக்கவாதிகளின் திட்டத்தை அனைவரும் அறியச் செய்தார்.
“மூடப் பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்
ஓடுவ தென்றோ? உயர்வது என்றோ?’’
என வருந்தினார்.
“மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா?
வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா?’’
என்று மக்களை வினவினார்.
“நெஞ்சினில் ஏசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி? – தினம்
நேர்மையில் கோவில் வியாபாரம் செய்வது தோழா!’’
என மதவாதிகளின் பக்தி வணிகத்தைத் பலரும் உணரச் செய்தார்.
“ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி தோழி? – மக்கள்
அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா’’
என்றும்,
“முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில்
மூளிசெயல் தாங்காத நல்ல தங்கை
தன்னெழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட
சரிதத்தைக் காட்டுகின்றார்’’ (53)
என்று பாடி விழிப்பூட்டினார்.
“புனைசுருட் டுக்குப்பை அன்றோ – பழம்
புராண வழக்கங்கள் யாவும்!
இனிமேலும் விட்டுவைக் காதே!
எடுதுடைப் பத்தை இப் போதே!’’
என்று புராணக் குப்பைகளைக் கொளுத்தச் செய்தார்.
மதச் சின்னங்களை அணிந்து திரிவோரை ‘மூளையற்றவர்கள்’ எனக் கடிந்து கொண்டார்.
“நெற்றியில் மார்பில் தோளில்
நெடுங்கழுத் திற்சுண் ணாம்பு
பற்றிடப் பூசிக் செம்மண்
கோடுகள் பாய்ச்சி மூளை
அற்றான்போல் வான்ப ருந்தை
அரிகரி என்றண் ணாந்து
மற்றுமோர் பேதை நானும்
மனிதன்தான் என்று வந்தான்’’ (55)
சாணியையும் சாமியாக்கிய அறியாமைச் செயலை குழந்தையும் உணர,
“சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார் செய்கைக்கு
நாணி உறங்கு நகைத்துநீ கண்ணுறங்கு’’
என்று பாடினார்.
பெண்ணடிமை தீர பல வகையில் எழுச்சிக் கவிதைகளை எழுதிக்குவித்து விழிப்பூட்டினார்.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே’’
என உறுதியுடன் பேசியவர் பாவேந்தர்.
“மாண்டவன் மாண்ட பின்னர் – அவனின்
மனைவி யின்உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை – ஐயகோ
அடிமைப் பெண்கதியே!
என வருந்தினார்.
“காதல் சுரக்கின்ற நெஞ்சத்தி லேகெட்ட
கைம்மையைத் தூர்க்காதீர் – ஒரு
கட்டழ கன்திருத் தோளினைச் சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்காதீர்!’’
என்று விதவை மறுமணத்தை வலியுறுத்தினார்.
“அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்!’’ (56)
என்று பெண்களுக்குப் புது இலக்கணம் வகுத்தார்.
பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழிக்க பச்சைப் பச்சையாய் உணர்வுகளைக் கொட்டினார்.
“பார்ப்பானின் கையை எதிர்
பார்ப்பானை யேபார்ப்பான்
தின்னப் பார்ப்பான்’’
எனப் பார்ப்பனிய மனப்பான்மையைச் சித்தரித்தார் பாரதிதாசன்.
“ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் – தீர்ப்பான
நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்பும் மணம்
செய்வாயா?’’
என்று பார்ப்பான் நடத்திவைக்கும் திருமணத்தை அகற்றக் கோரினார்.
“நானிலம் ஆண்டான் திராவிடன் அந்நாள்!
நான்மேல் என்றான் பார்ப்பான் இந்நாள்!
ஏனவன் காலில் வீழ்தல் வேண்டும்?’’
என வினா எழுப்பினார்.
“பொங்கிவரும் ஆரியத்தின்
பொய்க்கதைகள் ஒப்பாதீர்!’’
என்று அறிவூட்டினார்.
“பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம் பெற்றால்
அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ’’
என எச்சரித்தார்.
முதலாளி இருக்கு மட்டும்
தொழிலாளிக் கேற்படுமோ முன்னேற்றமே!
முதலெல்லாம் பொதுவானால்
தொழிலாளிக் கேற்படுமோ ஏமாற்றமே! (58)
என்று ‘முதலாளியத்தின் அழிவிலேயே தொழிலாளரின் வாழ்வு அடங்கியுள்ளது’ என்று தீர்வு சொன்னார்.
“பொதுவுடைமைக் கொள்கை
திசையெட்டும் சேர்ப்போம்’’
என, புதியதோர் உலகைப் படைப்பதற்குப் பொதுவுடைமைக் கொள்கையே சரி, தேவை என்றார்.
தன் தலைவரும், வழிகாட்டியும், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளருமான பெரியாரை,
“அவர்தம் பெரியார் – பார்
அவர்தாம் பெரியார்!
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில் (அவர்தாம்)
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்ச கர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப் பெரும்படையின் தொகுப்பு (அவர்தாம்)
சுரண்டு கின்ற வடவருக்குச்
சூள்அ றுக்கும் பனங்கருக்கு!
மருண்டு வாழும் தமிழருக்கு
வாழ வைக்கும் அருட்பெருக்கு! (அவர்தாம்)
தொண்டு செய்து பழுத்தபழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் (அவர்தாம்)
என்று கணித்துப் போற்றினார்.
திராவிடர் இயக்கம் குறித்து,
“சூழும் நற் பேதம் தொடர்வது வாழ்வோ?
சுயமரி யாதையால் உயர்வது வாழ்வோ?’’
என வினவிய பாவேந்தர், சுயமரியாதை இயக்கச் சிறப்புகளை எழுத்து வாகனத்திலேற்றி மக்கள் மனங்களில் உலவ விட்டார்.
தி.க.விற்குப் புதிய வரவாகும் தோழர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் பணியை,
“தி.க.வில் சேர்ந்த திருவாளர்க்கு வாழ்த்துப்பா’’
“மீண்ட செல்வங்கட்கு வரவேற்பும் வாழ்த்தும்’’
என்ற தலைப்புகளுடன் குயில் இதழில் வெளியிட்டார்.
“தமிழை மீட்க மனமிருந்தால் இங்கு வாரீர் – தமிழ்த்
தாயைக் கொல்ல மனமிருந்தால் அங்குப் போவீர்!’’
எனப் பெரியார் இயக்கத்திற்கும் பிற இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டினார்.
“திராவிடர் கழகம் என்பது தமிழினத்தின்
உள்ளப் பாங்கின் மறுபெயர்… பெரியார்
செயற்கரியது செய்தார் என்றால் அவர்
திராவிடர் கழகத்தைச் செய்தருளினார் என்பதுதான்’’
என, 24.2.1958 குயில் இதழில் “தொண்டுக்கு ஏற்ற இடம் திராவிடர் கழகம்தான்’’ என்ற தலைப்பிட்டு எழுதினார்.
திராவிட இனமக்களின் இழிவைக் குறிக்கக் கருப்பு நிறமும், இழிவை மாற்றும் புரட்சியின் வருகையைக் குறிக்கச் சிவப்பு நிறமும் திராவிடர் கழகக் கொடியில் அமைக்கப்பட்ட செய்தியை,
“வைகறை இருட்டையும், செங்கதிர் நகைப்பையும்
திராவிடர் மணிக்கொடி குறிக்கும்
வாழ்விருள் தவிர்ப்போர் தனிப்பெரும் புரட்சியை
வரவேற்றல் கொடியின் நோக்கம்’’ (69)
என்று பாடலில் விளக்கினார்.
புரட்சிக்கவிஞர் எனும் இத்திராவிடக் கவியின் 125ஆம் பிறந்த நாளில், அவரின் உணர்வுகளை உள்வாங்கி, தந்தை பெரியாரின் வழியில் சமதர்ம, சுயமரியாதை சமுதாயம் சமைப்போம் வாரீர்!