வரும் (2016) ஏப்ரல் 14 _ புரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி, அதன்மூலம் S.C. & S.T. மக்களை தம் வயப்படுத்திக் கொள்ளும் ஒரு புதிய முயற்சியில் ஆர்.எஸ்.எஸ்ஸும், பா.ஜ.கவும் ஈடுபட்டுள்ளன!
திடீர்க் காதல் அம்பேத்கர் மீது அவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே ஏற்பட்டுள்ளது. எதிர்த்துப் பார்த்து அழிக்க முடியாத தலைவர்களையும், அவர் தம் தத்துவங்களையும் அணைத்தே, புகழ்ந்தே ஊடுருவியே அழிப்பது ஆரியத்தின் கைவந்த கலை _ வரலாற்றுக் காலந்தொட்டே.
அது இப்போது புதிய வடிவத்துடன் வருகிறது _ பிரதமர் மோடியின் அறிவிப்பின் மூலம்!
டெல்லியில் 6.4.2016 அன்று கூறியுள்ளார்.
1. புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மத்திய பிரதேச ‘மாவ்’ (Mhow) என்ற ஊரில் 10 லட்சம் ‘தலித்துகளை’ திரட்டிக் கொண்டாடுவது. அத்துடன் ‘இந்தியா _ எழுந்து நில்’ திட்டத்தின்கீழ் 1 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்கிட வகை செய்தல்; மேலும் 16 கோடி வரை Non-Farm Banners என்று கூறி கடன் வழங்கிடவும் ஒரு திட்டம்.
சமாஜிக் சம்ஸ்ரத்தா திவாஸ்’ என்று சமூகநீதிக்கான சமரசத் திட்டம்’ என்று ஒரு பெயரையும் சூட்டி, ‘குளிப்பாட்டிட’ ஏற்பாடு நடைபெற, அத்துடன் பிரதமர் மோடி _ (மத்தியப் பிரதேசத்தில் 2017இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு) ஒரு புது அறிவிப்பு தருவாராம்!
“அம்பேத்கர் பாஞ்ச் தீர்த்’’ என்ற டாக்டர் அம்பேத்கர் சம்பந்தமான 5 இடங்களுக்கு ‘புனித யாத்திரை’ செல்வராம்.
1. அவர் பிறந்த ‘மாவ்’ (மத்தியப் பிரதேசம்) பகுதி.
2. 26, அலிப்பூர்ரோட், புதுடெல்லி. (அவர் வசித்தது)
3. மும்பை தாதரில் இந்து மில்ஸ் பகுதி. (அங்குதான் அவர் உடலை எரித்தனர்.)
4. அவர் படிக்கும்போது வசித்த லண்டன் இல்லம் (இப்போது மகாராஷ்டிர அரசு வாங்கி நினைவிடமாக்கியுள்ளது. (United Kingdom)
5. நாகபுரியில் புத்த மார்க்கத்தைத் தழுவிய (5 லட்சம் பேருடன்) “தீட்சா பூமி’’.
இவற்றையெல்லாம் இணைத்து யாத்திரையாம்.
உ.பி.யில் செல்வி மாயாவதி அரசு மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கு இப்படி ஒரு வியூகமாம். (தி எக்னாமிக் டைம்ஸ்).
இப்படி அம்பேத்கர் மீதும், தாழ்த்தப்பட்டோர் மீதும் கரிசனம், காதல், பக்தி இவர்களுக்கு ஏற்பட்டிருப்பது உண்மையானால், இவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை _ நிறைவேற்ற வேண்டிய அம்பேத்கரின் விருப்பங்களை அல்லவா செயல்படுத்த முன்வரவேண்டும்?
1. அம்பேத்கர் ‘ஏன் நான் ஹிந்துவாக சாகமாட்டேன்’ என்று கூறி, இந்து வர்ண தர்மத்தை, கடவுளை, ஆத்மாவை, ஜாதியை, பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்த புத்த மார்க்கத்தினைத் தழுவினார் என்று கண்டறிந்து அதற்குக் காரணமான ஜாதி _ தீண்டாமை _ வர்ணாசிரமத்தை ஒழிக்க சட்டம் இயற்றிட முன்வருவார்களா?
2. அம்பேத்கர் புரட்சிவாதி. அவர் தன் மக்கள் விடுதலை பெற, நிவாரணங்கள் என்ற பிச்சைகளோ, சலுகைகளோ ஒருபோதும் உதவாது என்று பிரகடனப்படுத்தியவர். அதைச் செய்யாது அவர் விரும்பியதை, அரசியல் சட்டத்தினைத் திருத்தி ஜாதி ஒழிப்புக்கு வகை செய்யலாமே!
ஹிந்து மதத்தினை விட்டு வெளியேற எது காரணமாக இருந்ததோ. அதனை ஆராய்ந்து செயல்பட்டால் அதுதான் அம்பேத்கர் மீது உண்மை மதிப்புள்ளவர்கள் என்று காட்டிட உதவும்.
“ஹிந்து மதம்’’ பற்றி அம்பேத்கரின் கருத்து _ கடைசிவரை மாறாத கருத்து _ என்ன? இதோ தருகிறோம்:
“Hinduism is a political ideology of the same character as the Fascist or Nazi ideology and is thoroughly anti-democratic. If Hinduism is let loose – which is what Hindu majority means – it prove a menace to the growth of others who are outside Hinduism and are opposed to Hinduism. This is not the point of view of Muslims alone. It is also the point of view of the depressed classes and also of the non-Brahmins.”
– Source Material : Vol-I, page 240-241, B.R.Ambedkar selected works.
இதன் சரியான தமிழாக்கம் இதோ.
“இந்துத்வா என்பது முழுக்க முழுக்க ஜனநாயகத்திற்கு எதிரான, நாஜிஸம் (அ) பாஸிஸத்தை ஒத்த ஓர் அரசியல் சித்தாந்தமாகும். இந்துப் பெரும்பான்மை என்பதான இந்துத்வா கட்டவிழ்த்து விடப்படுமாயின், இந்து மதத்திற்குப் புறத்தேயுள்ள, அதை எதிர்ப்போரின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாய் அமையும். இது முஸ்லீம்களின் கருத்து மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட மற்றும் பார்ப்பனரல்லாதாரின் கருத்துமாகும்.’’
இதனை உணர்ந்து ஏற்றுக்-கொண்டால்தான் அவர்கள் உண்மையில் அம்பேத்கருக்கு விழாக் கொண்டாட உரிமையும், தகுதியும் பெற்றவர்கள் ஆவார்கள். இதனைச் செய்வார்களா? இக்கருத்தினை ஏற்பார்களா? என்பதே நம் கேள்வி.
கி.வீரமணி,
ஆசிரியர்,
உண்மை