போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லும் பாசறை மாநாடுகள்! அனைவருக்கும் நன்றி! நன்றி!!

ஏப்ரல் 01-15

கழகக் கொள்கைக் குடும்ப உறவுகளே! திராவிட இன உணர்வாளர்களே! பகுத்தறிவாளர் கழகத் தோழர்களே! எம்அரும் தாய்மார்களே, நல்லிளம் சிங்கங்காள்!

உங்களை மார்ச் 19, 20 இல் சிறுகனூர் பெரியார் உலகத் திடலில் நடைபெறும் மாநாடுகளுக்கு அன்போடு அழைத்தோம்.

குடும்பம் குடும்பமாக, முதியவர்கள்முதல் பெரியார் பிஞ்சுகள் வரை அனைவருடன் வருகை தந்தீர்கள்!

கண்டறியாதன கண்டோம்!
கேட்டறியாதன கேட்டோம்!

கற்றறியாதவைகளைக் கற்றோம்!
செயற்கரிய செயலில் ஜாதி_தீண்டாமை ஒழிப்புப் போரில்
நாம் அனைவரும் ஈடுபட்டு சிறையேக சூளுரைத்தோம்!
சுயமரியாதைப் பாசறையில் சொக்குண்டோம்!
மேடு பள்ளங்கள் நிறைந்த காடாக முன்பு இருந்த பூமி,
பெரியார் தொண்டர்களின் கடும் உழைப்பால்,
பேராதரவால், பெரிய திருப்பணியால் சிறுகனூர்
பெருகனூராகி, பெரியார் உலகத்தில் அணிவகுத்தது!
பொலிவு எல்லா வகையிலும் காட்சியளித்தது!
வலிவுள்ள உலகம் அமைக்கவல்லது பெரியார் உலகம் என்பதை
வையகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது!

‘கூடினோம் _- கலைந்தோம்’ என்ற மாநாடுகள் அல்ல அவை _- தேடினோம் விடையை, பாடினோம் போர்ப்பாட்டை என்ற புத்தொளிப் போராட்டத்தை அறிவித்து, கொள்கைப் பயணத்தைப் புதுமுறுக்குடன் பீடுநடை போட வைத்த ஈடுஇல்லா மாநாடுகள்!

கேடு களையும் மாமருந்து பெரியாரியமே என்பதை ‘பாடு, பாடு’ என்று பணித்த மாநாடு!

மகிழ்ச்சிக் கண்ணீர் வெள்ளத்தில் எங்கள் கண்களைப் பனிக்கச் செய்த மாநாடுகள்!

எமக்கு மட்டுமா? ஏன் உங்களுக்கும்தானே!

தடைகளும், தடங்கல்களும் மாநாடு முடியும் நேரம்வரை இடை இடையே ஏராளம்! ஏராளம்!!

தாங்கி அதனைத் தோற்கடித்த துணிவோ தாராளம்! தாராளம்!!

காரணம், இராணுவக் கட்டுப்பாடு!

தந்தை பெரியார்தம் பாசறையின் ஒப்புவமையில்லா கட்டுப்பாடு!

இது வெறும் தற்புகழ்ச்சித் தம்பட்டம் அல்ல தோழர்களே!

தன்னம்பிக்கையின் உச்சம்; தளராப் போர்ப்பரணி
காரணம், நமது எரிமலைத் தலைவரின் எச்சம் நாம்!
எனவேதான், எதிர்ப்பும், ஏளனமும் நமக்குத் துச்சம்!
நம் மாநாட்டிற்கு வர உளப்பூர்வமாக இசைவு தந்த தலைவர்
மானமிகு சுயமரியாதைக்காரரான நமது தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல் பலருக்கு உடல்நலம் இடந்தரா நிலை!

வேறு வடபுலத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர், மதவெறி சக்திகளுக்கு இடியோசையாக இருக்கும் ராகுல்காந்தி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், சரத்யாதவ், தியாகி போன்ற அனைத்திந்திய சமூகநீதி சரித்திரப் புகழ் வாய்ந்தவர்களும் நேரில் வர இயலாத – தவிர்க்க முடியாத சூழல்.

எனவே, வகையான வாழ்த்துச் செய்திகள் மூலம் நம் மாநாட்டை வெற்றியடைய விழைந்தார்கள்! அவர்களுக்கு நமது உளங்கனிந்த நன்றி!

நமது கலைஞர் தமது  அரசியல் வாரிசான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை அனுப்பி வைத்து நம்மை ஆற்றுப்படுத்தினார்கள், நன்றி!

தி.க.,வும் _- தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்பதை தளபதியின் சங்கநாதம் உலகுக்கு உணர்த்தியது _- உறுதிபடுத்தியது.

காங்கிரசில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அணியத்தின் தலைவரும், சமூகநீதிக்காக என்றென்றும் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் போர்க் குரலை கொடுத்துக் கொண்டிருக்கும் போராளியான ஆந்திரச் சிங்கம் அனுமந்த்ராவ்,

சமூகநீதியை 19 ஆம் நூற்றாண்டில் விதைத்த சமூகநீதி முன்னோடி, மகாத்மா என்ற முதல் பட்டத்தைப் பெற்று விழிப் புணர்வை – பலத்த எதிர்ப்பினைப் புறந்தள்ளி – நிலைநிறுத்திய சமூகப் புரட்சி முன்னோடி மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்திரிபா பூலேவின் அய்ந்தாம் வழி பேத்தியான திருமதி நீதாதாய் ஹோலே பூலே அவர்கள் புனேயிலிருந்து வருகை தந்து, மராத்தியில் செய்த முழக்கம், அதை சுவை குன்றாத வகையில் தமிழில் தந்தார் தமிழ்லெமூரியாவின் ஆசிரியர் தோழர் குமணராசன்.

நமது அன்பான அழைப்பை ஏற்று, நமது இயக்க வரலாற்றுக் கண்காட்சியைத் திறந்து வைத்த குஜராத் உயர்நீதி மன்ற மேனாள் தலைமை நீதிபதியும், திராவிட இயக்கத்தின் கனிகளில் ஒன்றான மூத்த முன்னோடியுமான பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்த உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற பதவிகளுக்கான இட ஒதுக்கீடு சட்டப்படி உள்ள உரிமை, அது சலுகையோ, பிச்சையோ போடும் தன்மையோ அல்ல என்பதை ஆணித்தரமாக முழங்கிய ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் அவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்று கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. அவர்கள் நமது நன்றிக்குரியவர்கள்!

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கடமைகளைச் செய்துவரும் ஆழமும், உள்ளக் கருத்துகளை அமைதியாகக் கூறிடும் பேராசிரியர் காதர் மொய்தீன், அறிஞர் அண்ணா படத்தைத் திறந்து வைத்த அருமைச் சகோதரர் மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, சமூகநீதிக் குரலாக எங்கும் எப்போதும் ஏற்றத்துடன் முழங்கும் எமது இணைபிரியா போர்க்கள நாயகர் பேராயர் எஸ்றா.சற்குணம் அவர்களும், நம் வீட்டுப் பிள்ளை பேராசிரியர் சுப.வீ., அண்மையில் அ.தி.மு.க.விலிருந்து விடுதலை பெற்ற இலக்கியச் செம்மல் பழ.கருப்பையா, ஆதிதமிழர் பேரவையின் தலைவர் ஆற்றல்மிகு கொள்கைத் தோழர்  – அய்யா படத்தைத் திறந்து வைத்த இரா.அதியமான், ஜெர்மனியிலிருந்து சிறப்பு வருகை தந்து விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழில் உரையாற்றிய கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் உல்ரிக் நிக்கோலஸ், மேனாள் அமைச்சரும், எந்நாளும் இனமானக் கொள்கைக்கு உரியவருமான வி.வி.சாமிநாதன், பொறியாளர் சைவத்திரு மு.பெ.சத்தியவேல் முருகனார், நம் அழைப்பை ஏற்று வந்து கர்ஜித்த பல்கலைக் கழக மாணவச் சிங்கங்கள், கொள்கைத் தங்கங்களான நமது தோழர்கள் புனிதபாண்டியன், மதிமாறன், ஓவியா, மாற்றுத் திறனாளிகள் சார்பாக டாக்டர் தா.மீ.நா.தீபக், திருநங்கைகள் சார்பில் சங்கரி, மீனவர்கள் பிரச்சினைக்காக நாகை ஜீவா போன்ற பலதரப்பினருக்கும் (இயக்கத் தோழர்களைக் குறிப்பிட்டு நன்றி கூறுவது செயற்கையாக அமையும் அல்லவா? அதைத் தவிர்த்து) எல்லோருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

அழைப்பை ஏற்று இரு நாள்களும் குடும்பம் குடும்பமாக வருகை தந்து மாநாடுகளைக் கண்டு, கருத்தை உண்டு திரும்பிய (எந்த அசம்பாவிதமும் நிகழாமல்) அனைத்துத் தோழர்களுக்கும், கொள்கைக் குடும்ப உறவுகளுக்கும், வெளிமாநிலங்களிலிருந்தும், (கருநாடகம், மும்பை) குடும்பத்தோடு வந்து கலந்துகொண்ட நமது குடும்பத்தார்களுக்கும், நிதியளித்தும், போராட்டப் பட்டியல் அளித்தும், கடமை உணர்வை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி! நன்றி!!

நடைபெற்றது வெறும் மாநாடு மட்டுமல்ல; போர்ச் சங்கு முழங்கிட்ட அலை ஓசை!

ஜாதி _- தீண்டாமை ஒழிப்பு, மதவாத எதிர்ப்புக்காக கூடியவர்கள், சமூகநீதிக்காகக் கூடியவர்கள் பெரும்பாலும், வெறும் பார்வையாளர்கள் மட்டுமல்ல;  போராட்டத்துக்கு அணிவகுத்த மாநாடுகள்!!

போராட்டத்திற்கு ஆயத்தப்படும் பெரும்படை நாம் என்பதை அகிலத்திற்கு அறிவித்து, பெரியார் என்றும் வாழ்கிறார் என்று காட்டிய எனதருந்தோழர்களாகிய உங்களுக்கு கைகுலுக்கி நன்றி கூறுகிறோம்!

நேரில் பார்க்க இயலாத நிலையில், எமது அகத்தில் உங்கள் முகம் பார்த்தோம்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

ஆசிரியர்
கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *