கேள்வி : அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்காதது அங்கு கற்பிப்பது சரியில்லை யென்று அவர்களே ஒப்புக்கொள்வதாகாதா? இதற்குத் தீர்வு என்ன?
-சீத்தாபதி, சென்னை-45
பதில் : நம்முடைய அமைச்சர்கள், தங்கள் உடல்நிலை பற்றி கவனிக்க தனியார் மருத்துவமனைக்குத்தானே செல்லுகிறார்கள், அவர்களைப் பின்பற்றியே அரசுப் பள்ளி ஆசிரியர் பிள்ளைகளை இப்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் போலும்! அரசு எவ்வழி மக்கள் அவ்வழி!
கேள்வி : திருச்சி சிறுகனூர் மாநாடு வெற்றியை ஊடகப் பார்ப்பனர்கள் ஒத்துக் கொண்டதாக எண்ணுகிறேன். சரியா?
– அறிவொளி, அறந்தாங்கி
பதில் : புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்! புரளி கிளப்பத் தீனி கிட்டாத ஏமாற்றத்திற்கு உள்ளாகிய அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை!
கேள்வி : சென்னை அய்.அய்.டி. மாணவரும், ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக மாணவரும் சிறுகனூர் மாநாட்டில் ஆற்றிய ஆழமான உணர்ச்சியுரை இந்துத்துவவாதிகளை நிலைகுலையச் செய்திருக்குமல்லவா?
– நுண்மதி, சென்னை-18
பதில் : நிச்சயமாக, அதைவிட அவர்களை அரவணைத்த கழகம் பற்றிய அச்சம் அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கக் கூடும்!
கேள்வி : அறிஞர் அண்ணா, கலைஞர் இருவரும் ஆற்றிய அரிய சாதனைகளை ஒன்றுவிடாமல் மணிமணியாய்த் தொகுத்து விரைந்து ஒரு நூலைத் திராவிடர் கழகம் வெளியிட்டு அது இலட்சக்கணக்கில் மக்களைச் சென்றடைந்தால், இளைஞர் சமுதாயம் தெரிந்துகொள்ள, தி.மு.க.விற்கு மக்கள் அதிக அளவில் வாக்களிக்க நிச்சயம் உதவும். செய்வீர்களா?
– இல.சங்கத்தமிழன், செங்கை
பதில் : வழக்கமான பணிதான் அது! நிச்சயம் தேர்தலில் மக்களை விழிப்படையச் செய்யும் அத்தகைய நூல் வெளியிடக் கூடும்!
கேள்வி : பார்ப்பன மல்லையா பல்லாயிரங்-கோடி ஊழல் செய்தும் பாதுகாப்பாக இருப்பதும், மக்கள் நலனுக்கு 2ஜியை பயன்படுத்திய ஆ.இராசாவை சிறையில் வைத்ததும் மனுநீதி செயல்பாட்டைத்தானே காட்டுகிறது?
– வெற்றிமணி, சீர்காழி
பதில் : பேச நா இரண்டுடையாய் போற்றி! மனுவாதி ஒரு குலத்திற்கொரு நீதி!
கேள்வி : அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி மின் வெட்டில்லை யென்பது அ.தி.மு.க. அரசின் மோசடியல்லவா?
– சா.கோ., பெரம்பலூர்.
பதில் : அதிக விலைக்கு வாங்கியது தனியாரிடம், அதிலும் குறைத்துக் கொடுக்க முன்வந்தவர்களிடம் வாங்காமல், அதிக விலை கூறியவர்களிடமே வாங்கினார்கள் மின்சாரம்! காரணம் மக்களுக்குத் தெரிந்ததே!
கேள்வி : – இயக்கத்தில் உள்ள பயிற்சி பெறாத அனைவருக்கும் கொள்கைப் பயிற்சி வட்ட அளவிலான பயிற்சி முகாமில் அப்பகுதியிலுள்ள வல்லுநர்களைக் கொண்டு அளித்தால் என்ன? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : நல்ல யோசனை _ தலைமைச் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டு, செயல்படுத்தப்படும். நன்றி!
கேள்வி : எதற்கெடுத்தாலும் நாமெல்லாம் ஹிந்துக்கள், ஹிந்து ராஷ்டிரம், ஹிந்து மதம் என்று கூச்சல்போடும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரக் கூட்டம், காதல் திருமணம் செய்து-கொண்டவர்களை ஜாதிவெறியால் கொல்-வதைக் கண்டிக்காதது ஏன்?
– திராவிடன், காஞ்சி
பதில் : அட்டைகள் ரத்ததானம் செய்யுமா? ஒருபோதும் ஆகாது!
கேள்வி : “வைத்தியநாத அய்யர் தினமணி ஆசிரியராய் இருக்கும்வரை என்னுடைய எழுத்துக்கள் அதில் வர விரும்பவில்லை, அவ்வாறு வருவதை இழிவாகக் கருதுகிறேன்’’ என்று தன்னைத் தொடர்பு கொண்ட தினமணி அலுவலகத்திற்கு சுப.வீரபாண்டியன் அளித்துள்ள கண்டிப்பான பதில் பற்றி தங்கள் கருத்து?
– கி.மாசிலாமணி, மதுராந்தகம்
பதில் : வெட்டு ஒன்று; துண்டு இரண்டு.
பல தமிழ் உணர்வாளர்களுக்கு இம்மாதிரி உறுதி இல்லை. ஆரிய மாயையில் சிக்கி விளம்பர சடகோபம் தேடுகிறார்களே!