Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உற்சாக சுற்றுலாத் தொடர் – 27

ஜூனோவில் நாட்டியம்!

– மருத்துவர்கள்  சோம & சரோ இளங்கோவன்


அடுத்து கப்பல் நின்ற இடம் அலாஸ்காவின் தலைநகர் ஜூனோ. முன்னிருந்த பெயரை மாற்றி  இங்கு தங்கம் தேடி வந்தவர் பெயரையே வைத்து விட்டனர்! இங்கு வருவதற்குக் கடல் அல்லது விமானம் மூலந்தான், மற்ற நகரங்களை இணைக்கும் சாலைகள் கிடையாது. இருந்தும் அங்குள்ள பல இடங்களைப் பார்ப்பதற்குச் சாலைகளும், கார்களும், பேருந்துகளும் உள்ளன. ஆனால் விசைப்படகுகள் தான் பெரும்பாலும் பேருந்துகள் போலப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு பார்ப்பதற்குப் பல இடங்கள் இருந்தன. நாங்கள் தேர்ந்தெடுத்தது படகில் சென்று திமிங்கலங்களைப் பார்ப்பதும், தங்கம் எப்படி எடுக்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதும்தான்.

நல்ல வசதியான படகில் ஏறினோம். ஆரம்பத்தில் பார்ப்போமா பார்க்காமல் ஏமாறுவோமா என்று தான் பலரும் எண்ணியிருந்தோம். சிறிது நேரம் வெறும் கடல்தான் பார்த்தோம். பின்னர் இரண்டு, மூன்று படகுகள் நிற்கும் இடம் சேர்ந்தோம். ஒரே மகிழ்ச்சிக் குரல் கேட்டது அவர்களிட-மிருந்து. அப்போதுதான் அருமையான நடன அரங்கேற்றத்தைக் கண்டு களித்தோம். நீண்ட தொலைவில் இருந்து வந்துள்ள எங்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஒன்று, இரண்டு, மூன்று என்று தனித்தனியாகவும், அம்மாவும் குட்டியாகவும் நீந்தி 50 அடிக்கு அருகிலேயே தாண்டிக் குதித்து நடனம் ஆடிய காட்சி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது! முதலில் அது விடும் மூச்சு  அடியில் பம்ப் வைத்து 20 அடி உயரத்திற்கு நீரைப் பாய்ச்சுவது போல இருக்கும். பின்னர் மேலே வந்து நீரின் அடியில் செல்லும் போது முதுகுப் புறமும், பின்னர் அந்த வால் அப்படியே செங்குத்தாகவும் தெரியும். இன்னும் சில எங்களை மிகவும் மகிழ்விப்பதற்காக அப்படியே முழு உடலுடன் நீர் மேல் தாவி, ஒரு சுழல் சுழண்டு நீரில் விழும் போது  30,- 40 அடிக்கு அப்படியே தண்ணீர் மேலே எழும்பிப் பெருஞ் சத்தத்துடன் விழும் காட்சி அருமை! அருமை! அதுவும் 50 அடி தூரத்திலே அது நிகழும் போது மகிழ்ச்சியில் கூவாதவர்களே இருக்க மாட்டார்கள். இதைக் கண்டுகளிக்கப் பல படகுகள் அந்தக் கடல் முழுதும் வந்தும், போயும் கொண்டிருக்கும்.

கரையோரம் பல பறவைகள் இருந்தன. திடீரென்று ஒரு மணல், பாறைகள் நிறைந்த இடத்திலே பார்த்தால் நூற்றுக்கணக்கான ‘சீல்’கள் படுத்தும், புரண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தன. அவைகள் போடும் சத்தம் அங்கு நிறைந்திருந்தது. இயற்கையில் அவை வாழும் அந்த மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தோம். சில அப்படியே பல்வேறு கோணங்களிலே படுத்துக்கிடந்தன.

பிறகு அங்கிருந்து ஒரு அருமையான இடத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு பக்கம் நீர் வீழ்ச்சி, மறு பக்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உறைந்திருக்கும் நீல நிறப் பனிப்பாறைகள் குவிந்த பெரிய மலை! அந்தப் பனிப் பாறைகள் உலக வெப்பமயமாவதில் உருகி கடல்களின் நீர் நிலைகளை உயர்த்திப் பல தீவுகளும், கடற்கரை நகரங்களும் கடலில் மூழ்கப் போகின்றன என்ற அச்சம் உண்டாக்குபவை. இயற்கையின் வண்ண ஓவியமாக அந்த நீலப் பனிமலை ஓங்கி உயர்ந்திருப்பது கொள்ளை அழகு! அது உருகாமல் இருப்பது அழகு மட்டுமல்ல, உலகம் உய்யவும் வேண்டும்.

ஆரம்பத்தில் அங்கு வாழ்ந்த பழங்குடியினர் மீன் பிடிப்பதும், சீல் மிருகங்களைப் பிடித்து அதன் தோல்களை விற்பதுமாக இருந்துள்ளனர். அது பெரிய வணிகமாக இருந்துள்ளது. ஆனால் அங்கு தங்கம் கிடைக்கின்றது என்று தெரிந்தவுடன் தங்கம் எடுக்கச் சென்றோர் நிறைய. அதில் ஒருவர் தான் ஜூனோ என்பவர். அங்குள்ள பழைய தங்கச் சாவடி ஒன்றுக்குச் சென்றோம்.

அதில் பாறைகளைத் தோண்டி அதை எப்படி அறுத்துப் பிரிக்கின்றார்கள். அதை உருளைகளில் உருட்டித் தள்ளும் போது எடை மிகுந்தத் தங்கக் கற்கள் கீழே விழுகின்றன என்பதையெல்லாம் விவரமாகக் காட்டினார்கள். ஒவ்வொருவரிடம் ஒரு சல்லடையைக் கொடுத்து ஒரு சிறு அளவு மண், கற்கள் கலந்ததைக் கொடுத்து அதைத் தண்ணீரில் எப்படி சலித்துக் கற்களை அகற்ற வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கின்றனர். அப்படிச் சலித்துக் கடைசியில் பார்த்தால் சிறு சிறு தங்கத்துகள்கள் மஞ்சளாகத் தெரியும். எங்கள் பங்கிற்கு 20 டாலர் பெறுமானமுள்ள தங்கத் துகள்கள் கிடைத்தன! பரவாயில்லை பத்து மணித்துளி வேலைக்கு இவ்வளவு தங்கமா? இது தேர்ந்தெடுத்த உல்லாசப் பயணிகளுக்காக உள்ளது. அவர்கள் தங்கம் எடுக்கப் பெரிய மலைபோலக் குவிந்துள்ள மணல், பாறைகள், கற்களை அலச வேண்டும்!

மற்ற குழுக்கள் பனியில் நாய்கள் பூட்டிய சறுக்கு வண்டியில் பயணம் செய்யவும், பெரிய பனி மலைகள் மேலே பறந்து அங்கே இறங்கி அந்த அழகை அனுபவிக்கவும் என்று மற்றவற்றிகுச் சென்று திரும்பினர். அங்கிருந்த ஒரே நாளிலே அனைத்தையும் பார்க்க முடியுமா? தலைநகரம் என்பதால் அரசு அலுவலகங்களும், மற்றும் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று பல இருந்தன. இவ்வளவிற்கும் வெளியே இருந்து வருபவர்கள் கடல் வழியாகவோ, பறந்தோ தான் வரவேண்டும் என்பதை நினைத்து வியந்தோம்!

ஆனால் அங்கிருப்பவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தனர், ஒரு வேலை தொல்லைகள் இல்லாமல் வாழ்கின்றனரோ? சில நேரங்களில் வசதிகளே தொல்லைகளாகி விடுகின்றன அல்லவா?