பொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக் கைகொடுக்கும் மோடி அரசு!

ஏப்ரல் 01-15

எச்சரிக்கை! எச்சரிக்கை!
பொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக்
கைகொடுக்கும் மோடி அரசு!

இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதி மக்கள், வறுமை நிலையிலேயே இருந்து வருகின்றனர். என்னதான் மக்கள் கடுமையாக உழைத்தாலும், நாட்டில் வறுமையும், பற்றாக்குறையுமே மிகுந்து நிற்கின்றன. இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்துப் பார்க்கும்போது, தொழிலாளரிடம் அதிக உழைப்பைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்குவதேயாகும். சுருங்கச் சொன்னால், வேலைக்கேற்ற கூலி கொடுப்பதில்லை. இதனால், நடுத்தர மக்களும் கூடப் பாதிக்கப்படும் சூழ்நிலை பெருமளவில் ஏற்பட்டு வறுமை தலைதூக்கிவிடுகிறது. இதன் காரணமாக சில மாநில அரசுகள் வறுமையைப் போக்கும் நோக்குடன் இலவச அரிசியும், குறைந்த விலையில் உணவகங்களும், அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகிறது. வறுமையினை போக்குகிற ஒரு திட்டமாக இன்றைக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளது.

1996ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற உணவிற்கான உச்சி மாநாடு 2019ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் உணவு வழங்கிடவும் அதனை உறுதிப்படுத்தவும் முடிவெடுத்தது. அதனை அங்கே ஒப்புக்கொண்டு வந்த மத்திய அரசு, அதனை அமுல்படுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், 2001இல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில் உணவிற்கான உரிமையினை அடிப்படை உரிமையாக மாற்றிடக் கோரியது. ஆனால், மத்திய அரசு இது அரசின் கொள்கை முடிவென கூறி தீர்ப்பினை ஏற்க மறுத்துவிட்டனர்.

2004 முதல் 2009 வரை ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த இடதசாரிக் கட்சிகளின் நெருக்குதலால் உணவுப் பாதுகாப்பு என்பது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு 20011ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமுல்படுத்திட வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது.

1996ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற உணவிற்கான உச்சி மாநாடு அறிவித்தபடி உணவுப் பாதுகாப்பிற்கான சட்டம் அர்ஜென்டினா, பிரேசில், குவாதமாலா ஆகிய நாடுகளில் உள்ளது. பிரேசில் நாடு பட்டினி இல்லாத நாடு என சட்டம் இயற்றப்பட்டு, இனி உணவிற்காக எந்தத் தனி நபரும் கையேந்தக் கூடாது என அறிவித்துள்ளது.

மேலும், கிராமங்களில் நாளென்றுக்கு ரூ.20ம் (46% பேர்), நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.25ம் (28% பேர்) சம்பாதிக்கும் மக்களே முன்னுரிமை பெற்றவர்கள் என்றும் இவர்களுக்கு மாதம் 7 கிலோ வீதம் அதிக பட்சம் 35 கிலோ அரிசி ரூ.3க்கும் அல்லது கோதுமை ரூ.2க்கும் வழங்கிடவும், மற்ற பிரிவினருக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறது.

இந்த சட்டம் அமுல்படுத்துவதன் மூலமாக தமிழகத்தில் உள்ள 10.68 கோடி குடும்ப அட்டைகள் 6.5 கோடியாக குறைக்கப்படவும் அரிசிக்கான குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியிலிருந்து 40 லட்சமாக குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இச்சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் எனில் அரசு ஊதியம் பெறுபவர்கள் இப்போது சர்க்கரை, மண்ணெண்ணெய், தானிய வகைகள் பொது விநியோகத் திட்டத்திலே பெறுவது நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

பின்னர் படிப்படியாக நிலம் உள்ளவர்கள் என்றும், வறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்கள் என்றும் சகல பிரிவினருக்கும் பொது விநியோகத் திட்டத்திலிருந்து விலக்களித்து பின்னர் முழுமையாக மூடுவிழா நடத்துவதற்கான ஏற்பாடாகவே உள்ளது இந்த அவசரச் சட்டம்.

“உங்கள் பணம் உங்கள் கையில்’’ என குறைந்த அளவு மக்களுக்கு மான்யத்தினை பணமாக வழங்கி, ஏனைய அனைவரையும் மான்யம் தவிர்த்து வெளிச் சந்தையிலேயே பொருட்கள் வாங்கிட பழக்கப்படுத்தி பெருவாரியாக மக்களை பொதுவினியோக முறையிலிருந்து விலக்கி வைத்துவிட்டு பின்னர் குறைவான பயனாளிகளுடன் இயங்கும் பொது விநியோக முறையினை ஒழித்திடவும் பொதுநிநியோக முறையினை ஒழித்த பின்னர் விலைக் கட்டுப்பாடு என்பது நீக்கப்பட்டு வால்மார்ட்டும், டெக்ஸ்கோவும், மான்சென்-டோவும், கார்கிலும் துவங்கும் பெருவணிகக் கடைகளுக்கு மக்கள் வருமானத்தை மடைமாற்றம் செய்வதற்குமான தொலை-நோக்குத் திட்டமாகவே இத்திட்டம் உள்ளது.

இந்திய தேசத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும், அரிசி, கோதுமை, தவிர ஏனைய உணவுப் பொருட்களை பொது நிநியோகத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வழங்கிடவும், சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சில நல்ல அம்சங்களையும் உள்ளடக்கி, இந்த சட்டத்தினை நாடாளுமன்றத்தில் வெளிப்-படையான விவாதத்திற்கு உட்படுத்தி, சில திருத்தங்களை செய்வதன் மூலமாக, நாடு முழுவதுமான விரிவான பொதுவிநியோக முறையினை மக்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பினரும் போராட வேண்டும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் இந்திய நாட்டின் உணவுகள் தரமானதாக இருப்பதற்கு அரசு உறுதியுடன் செயல்பட-வேண்டும், உறுதியளிக்க வேண்டும். எளிய மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபின் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக ஆட்சி செய்து ஏழைகளை வஞ்சிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையேல் எந்தவொரு மக்கள் விரோத அரசும், மக்களின் வெறுப்பின் விளைவாய் தூக்கியெறியப்படும் என்பது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *