உலகெங்கும் உயர்ந்துவரும்
கடவுள் மறுப்பாளர் எண்ணிக்கை!
டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு தரும் ஆய்வுத் தகவல்கள்
பல்வேறு நாடுகளிலும் அதிகரித்துவரும் நாத்திகர்களின் எண்ணிக்கை:
சீனா மற்றும் ஹாங்காங்:
சீனாவில் 90 விழுக்காட்டினரும், ஹாங்காங்கில் 70 விழுகாட்டினரும் தங்களை மதமற்றவர்களாக அல்லது நாத்திகர்களாக குறிப்பிட்டுள்ளனர்.
செக் குடியரசு:
யு.எஸ்.எஸ்.ஆர் எனும் சோவியத் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்துள்ள நாடான செக் குடியரசு அய்ரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் அதிக விழுக்காட்டளவில் நாத்திகர்களைக் கொண்டுள்ளது.
45 விழுக்காட்டினர் தாங்களாகவே நாத்திகர்களாக இருந்துவந்துள்ளதாகவும், 30 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் தற்போது நாத்திகர்களாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆகமொத்தம் 75% நாத்திகர்கள்.
ஜப்பான்:
பழைமைகள் மற்றும் மதச்சடங்குகளை ஒதுக்கிவிட்டு இருப்பவர்களாக 25 விழுகாட்டினரும், மேலான சக்தி என ஒன்றும் நம்புவதற்கில்லை என்கிற அளவில் 31 விழுக்காட்டினரும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மனி:
ஜெர்மனி நாட்டில் 60 விழுக்காட்டினர் தங்களை நாத்திகர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இசுரேல்:
இசுரேலியர்களில் 57 விழுக்காட்டினர் தங்களை மதமற்றவர்களாகக் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் நம்பிக்கையிலிருந்து நாத்திகர்களாக 8 விழுக்காட்டினர் மாறி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இசுரேல் நாளிதழ் ஹாரெட்ஸ் நாத்திகக் கருத்துகள் இசுரேல் சமூகத்தினரிடையே ஆழமாக வேரூன்றி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கேல்லப் இன்டர்நேஷனல் மற்றும் பியூ ஆய்வு மய்யம் இணைந்து கடவுள்மீதான நம்பிக்கை குறித்த ஆய்வு மேற்கொண்டன. ஆய்வு முடிவுகளின்படி, கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் மற்றும் மதமற்றவர்கள் பன்னாட்டளவில் மக்கள் தொகையில் 33 விழுக்காட்டளவில் உள்ளனர். சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற நாத்திகர்கள் நாடுகளின் வரிசைப்படி,
ஆஸ்திரேலியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, கனடா, அய்ஸ்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பிற நாடுகளில் கடவுள் நம்பிக்கை என்பதில் சுதந்திர அணுகுமுறையுடன் (Liberal Attitude) இருந்து வருவதாக ஆய்வுத்தகவல் சுட்டிக்காட்டி உள்ளது.
நார்வே நாட்டினரிடையே பெருகி வரும் கடவுள் மீதான நம்பிக்கையற்றவர்கள்
ஓஸ்லோ, மார்ச் 22-_ நார்வே நாட்டில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பெருகி வருகிறார்கள் என்கிற ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.
நார்வே நாட்டில் சுமார் நான்காயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 39 விழுக்காட்டினர் முற்றிலும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 37 விழுக்காட்டினர் கடவுள்மீதான நம்பிக்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அதேநேரத்தில், 23 விழுக்காட்டினர் கடவுள் குறித்து எவ்வித கருத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. ஆக 63% நாத்திகர்கள்.
ஏற்கனவே, 1985ஆம் ஆண்டில் முதல்-முறையாக கடவுள் நம்பிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக 50 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். தற்போது அவ்வெண்ணிக்கை பெருமளவில் சரிந்து 37 விழுக்காடாகிவிட்டது. 1985 ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்றவர்-களாக அய்ந்தில் ஒரு பங்கினர் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது அவ்வெண்ணிக்கை 39 விழுக்காட்டளவில் உயர்ந்துள்ளது.
நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் பால் பிரெக்கே தற்போது நார்வேயினரிடையே கடவுள் நம்பிக்கை குறித்த ஆய்வை 4000 பேரிடம் மேற்கொண்டார். அவர் கூறும்போது, 30 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பணியைத் தொடங்கியதிலிருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் பெருமளவிலான மாற்றத்தை காண முடிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் சம அளவிலான எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால், தற்போது கடவுள் நம்பிக்கையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் 29 விழுக்காட்டினர் மட்டுமே கடவுள் மீதான நம்பிக்கை கொண்டிருப்-பவர்களாக உள்ளனர். ஆய்வுத்தகவல்குறித்து பிரெக்கே கூறும்போது, நாடுமுழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், பிறப்பால் அனைத்து மதங்களைச் சேர்தவர்களிடமும் ஆய்வு மேற்கொள்ளப்-பட்டது.
தகவல் : டைம்ஸ் ஆப் இந்தியா, 22.03.2016