வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஏப்ரல் 01-15

பாக்கியம்

இது வடசொல் அன்று! வடசொல் அன்று!! பயன் கொழிக்கும் நெய்தனிலத்தூரையும், பயன் கொழிக்கும் மருதநிலத்தூரையும் பாக்கம் என்னும் தமிழ்நூல். பாக்கம் என்பது அங்கு தோன்றும் செல்வத்துக்கு ஆனது இடவாகு பெயர். பாக்கம், பாக்கியம் ஆனது. திரிதல் -_ ஓவம். ஓவியம் என்பதைப் போல. இனிப் பாக்கம் இடையில் இகரச்சாரியை பெற்றது ஆகு பெயர்க்குறி எனவும் ஆம். செல்வம், பேறு முதலியவற்றைக் குறிக்கும் பாக்கியம் என்பது தூய தமிழ்க் காரணப்பெயர் என்று நினைவிற் கொள்க!
(குயில்: குரல்: 1, இசை: 29, 16-12-58)

கோட்டி

இதைக் கோஷ்டி என்ற வடசொற் சிதைவென்று தமிழர் பலர் எண்ணுவதாய்த் தெரிகின்றது. இது நேர்மாறான எண்ணம். கோட்டி என்ற தூய தமிழ்க் காரணப் பெயரை, வடசொற்காரர் கோஷ்டி என்று சொல்லி வருகின்றார்கள். வேட்டி, முட்டி என்ற தமிழ்ச் சொற்களை வேஷ்டி, முஷ்டி என்று சொல்லிக் கொள்வதுபோல.

கோள்_-கொள்கை: த் எழுத்து பேறும் இ வினை முதற்பொருள் இறுதி நிலையும் பெற்றுக் கோட்டி என முடிந்தது. கொள்கை உடையது, என்பதால் காரணப் பெயர். ஒரு கோட்பாட்டைக் கொண்ட கூட்டத்தைக் குறிப்பது. நாளடைவில் பொதுவாகக் கூட்டத்தையும் குறிப்பதாயிற்று.

கருப்பம்

இது கர்ப்பம் என்ற வட சொல்லின் சிதைவென்பார் வடசொல் வெறியர். கரு, கருப்பம், கார் என்பன கருமை எனப் பண்புப் பெயரடியாய் வருவதை காரணம் என்பது பொருள் கருப்பம் என்பது மை ஒழிந்த கரு, பம் என்ற பண்புப்  பெயர் இறுதிநிலை பெற்றது. நன்மை என்பது நலம் ஆனது காண்க. கார் என்பது தனியாய் நின்று காரணப் பொருள் தருவதில்லை. காரணம் என்பதில் முதனிலையாய் நின்று அப்பொருளைத் தரும்.
(குயில்: குரல்: 1, இசை: 30, 23-12-58)

கூகை

இது கூகம் என்ற வடசொல்லின் சிதைவு என்று கூறி வருகின்றார் வடவர். இது பொருந்தாப் புளுகாகும். கூ கூ என்று கத்தலால் கூகை என்றும், கூகம் என்றும் சொல்லப்படும். தூய தமிழ்க் காரணப் பெயர். இது போலவே காகா என்று கத்தலால் காகா, காக்கா, காக்கை, காகம் என்றெல்லாம் காரணப் பெயராக வழங்குவதையும் நோக்க வேண்டும்.

பேது

இது பேதம் என்ற வடசொற் சிதைவென்று வை. மு. கோ. கம்பராமாயண உரையில் கூறியுள்ளார். பேதைமை என்பதன் அடியாக அமைந்த பெயர்ச்சொல் வேற்றுமையைக் குறிக்கும் போதும் என்க. இது பேதை என்றும் பேதைமை உடைய அய்ம்பாற் பொருளைக் குறிக்க வரும். வடமொழயில் பேதம் என்பது தமிழினின்று அவர்கள் எடுத்துக் கொண்டதேயாகும்.

மாணவன்

மாண் பெருமை. அகரச் சாரியையும் அன் ஆண்பால் இறுதிநிலையும் பெற்று மாணவன் ஆயிற்று இதுவே மாணாக்கன் என்றும் மான்+ஆக்கு+அன் பெருமையை உண்டாக்கிக் கொள்பவன் என்று விரித்தும் பொருள் கொள்க! மாணவகன் என்றது வடமொழி என்றும், அதன் சிதைவுதான் மாணவன் என்றும் தமுக்கடிக்கின்றதாம் ஆகாஷ்வாணிக் கூட்டம்.
(குயில்: குரல்: 1, இசை: 31, 30-12-58)

தறை

இது தரா என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு வை. மு. கோ. சடாயு உயிர் நீத்த படலம் 73ஆம் செய்யுள் உரையில் கூறினார். இதில் வியக்கத்தக்கது தாரா என்பதை வடசொல் என்று இயம்பியதேயாகும். தரை என்பது தருதல் (ஈனுதல்) என்று பொருள்படும் தொழிற்பெயர். தா என்ற முதனிலை தரு என வேறுபாடுற்றது. வா என்ற முதனிலை வரு என வேறுபாடுற்றது போல, தரு என்ற முதனிலை ஐ என்ற தொழிற்பெயர் இறுதிநிலை பெற்றுத் தரை ஆயிற்று. தருதல் என்பது தல் இறுதிநிலை பெற்றது.

தரை உயிர்த் தொகுதியை ஈனுவது தருவது ஆகிய நிலத்துக்கு ஆனது _ தொழிலாகுபெயர்.

எனவே, தரை தூய தமிழ்க் காரணப்பெயர். தறை என்ற சொல்லுக்கும் தரை என்ற சொல்லுக்கும் தொடர்பே இல்லை. தறை (தறா+ஐ) உறுதி பெறுதல் என்ற பொருளுடைய தொழிற் பெயரே. அத்தொழில் பொருளுக் காவதால் தறை தொழிலாகுபெயர் என அறிதல் வேண்டும்.

தரை என்ற தமிழ்ச் சொல்லையே வடவர் தரா என்று திரித்தார்.

(குயில்: குரல்: 1, இசை: 32, 6-11-1959)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *