அரிய செய்தி
வானில் பறக்க, கப்பலில் செல்ல ஏழைகளுக்கு எளிய வாய்ப்பு
ஊரைச் சுற்றிப் பார்ப்பது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது… அதுவும் வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது விமானப் பயணம் செய்ய விரும்பும் மக்களுக்கு வெறும் 3,750 ரூபாயில் விமானப் பயணம். கப்பல் பயணம், ரயில் பயணம், சொகுசுப் பேருந்தில் பயணம் என்றால் மகிழ்ச்சிக்கும், நிறைவுக்கும் குறைவேது?
இந்த வான்வழி, கடல்வழி, தரைவழிச் சுற்றுலாவை கேரள அரசு அறிமுகப்படுத்த, சுற்றுலா விரும்பிகளுக்கு பெரும் மகிழ்ச்சி.
காலையில் ஆரம்பித்து நாலுவித பயணமும் இரவுக்குள் முடிந்து விடுவதால் இதற்கு ஏகப்பட்ட வரவேற்பு.
விமான நிலையத்திற்கு எல்லோரும் வந்து விட்டனர். அவர்களைப்போல் வந்திருந்த அனைவருக்கும் விமான நிலைய அதிகாரிகள் அனுமதிச் சீட்டும் கொடுத்தனர்.
விமான நிலைய சோதனைகள் முடிந்து எல்லோரும் விமானத்தில் ஏறினர். சரியாக ஆறு மணிக்கு விமானம் பறக்கத் துவங்கியது. ஏரியல் வியூவில் ஒளிரும் திருவனந்தபுரத்தைப் பார்த்து அனைவரும் உற்சாகமாயினர்.
கட்டடங்கள் புள்ளிகளாய் மறையும் வரை உயரப் பறந்த விமானம் ஒரு சில நிமிடங்கள் மேகத்தினூடே வட்டமடித்தது. பறக்கும் இடம் பற்றி ஒலிபெருக்கியில் அறிவித்த விமானி பின்னர் சில நிமிடங்கள் கழித்து விமானம் கொச்சியில் தரையிறங்குவதற்கான அறிவிப்பையும் சொன்னார். மெல்ல மெல்ல மீண்டும் பச்சை வயல்வெளிகள், கட்டடங்கள் மேகங்களை விலக்கித் தென்பட, பறந்த மனங்களின் பரவசம். இன்னும் பல மணி நேரம் பறந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஏக்கம் எல்லோருக்கும்!
விமானத்திலிருந்து இறங்கியதும் அவர்களை அழைத்துச் செல்ல சூப்பர் டீலக்ஸ் ஏசி பஸ் வந்தது. அனைவரையும் ஏற்றிக்கொண்டு எர்ணாகுளம் ஹைகோர்ட் அருகில் உள்ள ரெஸ்ட்டாரண்டில் நின்றது. எல்லோரையும் காலை உணவுக்குப்பின் போட்ஜெட்டிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அரபிக்கடலில் அழகான சுற்றுலாக் கப்பல்.
வழிகாட்டி ஒலிபெருக்கியில், “இது பெரியாறும் வேம்பநாடும் சங்கமிக்கும் இடம். 19 சிறிய தீவுகள் இங்கே உள்ளன. அங்கே பாருங்க ஒரு அரண்மனை தெரியுது இல்லையா… அது டச்சு நாட்டவர்கள் கொச்சி ராஜாவுக்கு கொடுத்தது….’’ இப்படி சரித்திரத்தைச் சொல்லிக்கொண்டே போனார். கப்பல் கடலில் நீந்தத் துவங்கியது.
சவுண்ட் சிஸ்டத்தில் பாடல் ஒலிக்க, பாட்டுக்கேற்ப அனைவரும் நடனமாட, மகிழ்ச்சியில் திளைத்தனர். பாடல்கள் முடியும் நேரம். கப்பல் நிற்கிறது. அருகில் கிறிஸ்துவ சர்ச். நம்பிக்கையுள்ளவர்கள் அங்கே சென்றார்கள். கொஞ்சம் பேர் மழவில் பாலத்திற்குச் சென்றார்கள். மதியம் 12 மணிக்கு கேரளா மீன்கறியுடன் சுவையான சாப்பாடு. ஒரு மணிக்கு மீண்டும் கப்பல் பயணமானது. வாஸ்கோடகாமாவை அடக்கம் செய்த சர்ச், மட்டாஞ்சேரி யூத தெரு, அரண்மனை மற்றும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அனைத்தையும் பார்த்தபின் திரும்பி எல்லோரும் எர்ணாகுளம் ரயில்வே ஸ்டேஷனில் 5.25 மணிக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸில் திருவனந்தபுரத்திற்கு செல்லத் தயாராகிறார்கள். பகலில் ஊர் சுற்றிய களைப்பைக் கடந்து அனைவரது முகத்திலும் அப்படியொரு உற்சாகம் பொங்கியது. ஒன்பது மணிக்கு திருவனந்தபுரத்திற்கு ரயில் வந்தது. “எப்படி இருந்தது பயணம்?’’ என பயணம் செய்தவர்களிடம் கேட்டபோது, “ஆகா! ஒரே நாள்ல விமானம், கப்பல், பஸ், ரயில் பயணம் உண்மையிலேயே வித்தியாசமான சுற்றுலாதான்!’’ என எல்லோரும் உற்சாகமாக முழங்கினர். தமிழகத்திலும் இந்த வாய்ப்பை ஏழை எளியோருக்கு அரசு தர வேண்டும்!