அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் வரும் ஏப்ரல் மாதம் 49ஆவது சர்வதேசத் திரைப்பட விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் நமது தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படத்துக்கான ‘ரெமி’ விருது வழங்கப்பட உள்ளது.
அதே மாதம் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் பேர் போன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவும் நடக்க உள்ளது. அந்த விழாவில், அந்தத் தமிழ்ப் படத்தில் இடம் பெற்ற ‘கல்லா மண்ணா’ என்ற திரைப்பாடல் திரையிடப்பட உள்ளது
. அந்தத் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கிய இளைஞர். படித்ததோ, திரைப்படத்துக்குத் தொடர்பில்லாத தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகவியலில் எம்எஸ். பட்டம். அந்தப் படத்தில் அந்த இளைஞர் நடித்துமிருக்கிறார்.
அவர் சென்னையைச் சேர்ந்த அருண் சிதம்பரம். அவர் எடுத்த திரைப்படத்தின் பெயர் ‘கனவு வாரியம்’. அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தகவல் தொழில்நுட்பத்தில் பி.இ. சென்னையில் படித்துவிட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் எம்எஸ் படிக்கப் போனேன். அங்கேயே வேலையும் கிடைத்தது. பெரிய வங்கியில் பல லட்சம் வருமானம் வரும் வேலை. ஆனாலும் பிறந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வாழ எனக்குப் பிடிக்கவில்லை.
வேலை காரணமாக அமெரிக்காவிலேயே செட்டிலாகி விடுவோமோ என்று பயந்து கொண்டிருந்த நேரத்தில் எனது மகன் எழில் அருண் 2010இல் பிறந்தான். அப்போது முடிவு செய்தேன். தாய்நாட்டுக்குத் திரும்பிவிடுவது என்று.
அமெரிக்காவில் இருக்கும்போது கலைப்புலி தாணு என்னிடம் அவர் எடுத்த ‘தொட்டி ஜெயா’ படத்தை அமெரிக்காவில் விநியோகிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்குப் பின்பு சிவாஜி, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா உள்பட நிறையப் படங்களுக்கு அமெரிக்காவில் விநியோகஸ்தராக இருந்தேன். இதுதான் எனக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு.
ஆனால், இளம் வயதில் இருந்தே தமிழில் எனக்குக் கட்டுக்கடங்காத ஆர்வம் இருந்தது. கவிதைகள் எழுதியிருக்கிறேன். ‘முயற்சியே மூச்சாக்கு’, ‘விழியே விழித்திரு’ என்று இரண்டு கவிதைத் தொகுப்புகளும் வெளியிட்டிருக்-கிறேன். எனவே எழுத்தில் ஆர்வம் இருந்தது. துப்பாக்கி படத்தின் விளம்பரங்களில் ஒன்றான ‘காக்கி காக்கி துப்பாக்கி… வெல்வான் உலகைத் தனதாக்கி… நீதி நியாயத்தை நட்பாக்கி, இவன் நாட்டைக் காக்கும் துப்பாக்கி’ என்பது நான் எழுதியதுதான்.
திரைப்படத் தொடர்பு இந்த அளவுக்குத்-தான் எனக்கு இருந்தது. இன்றைய தமிழ் சினிமா இளைஞர்களுக்காக, குழந்தைகளுக்காக எடுக்கப்-படுகிறது. இளைஞர்களைக் கவர்வதற்கென்று சண்டைக் காட்சிகள், குத்துப்பாட்டுகள், கனவுக் காட்சிகள் என வழக்கமான ஃபார்முலாவுக்கு உட்பட்டு எடுக்கிறார்கள். ஆனால், அதே இளைஞர்கள் அறிவியலில் ஆர்வமாக இருக்கிறார்கள். அறிவியலை முதன்மைப்படுத்தி திரைப்படம் எடுத்தால் என்ன? இளைஞர்களை நிச்சயம். அது கவரும் என்று நினைத்தேன்.
அப்படி உருவானதுதான் எனது ‘கனவு வாரியம்’. நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைதான் கதையின் மையம்.
இதுவரைக்கும் எந்த இயக்குநரிடமும் நான் உதவியாளராக வேலை செய்ததில்லை. கேமரா மேனிடம் வேலை செய்ததில்லை. சினிமாவைப் பற்றி ஏபிசிடி கூடத் தெரியாத நான், திரைப்படம் எடுக்கப் போகிறேன் என்றதுமே எல்லாருமே ஆச்சரியமாகத்தான் என்னைப் பார்த்தார்கள்.
ஆனால், எனக்கு இருந்த அதிகப்படியான ஆர்வத்தினால் நிறைய அதுவும் மிக விரைவில் கற்றுக் கொண்டேன். பல திரைப்படங்களைத் தொடர்ந்து போட்டுப் பார்த்தேன். ஒரு படத்தில் எவற்றை எல்லாம் எடுக்கக் கூடாது? எந்தெந்த தவறுகளைச் செய்யக் கூடாது? என்பதில் நான் தெளிவாக இருந்தேன். ஏன் இந்த ஷாட்டை எடுத்திருக்கிறார்கள்? இதை வேறமாதிரி எடுத்திருந்தால் எப்படி ஆகியிருக்கும்? என்றெல்லாம் பல படங்களைப் பார்த்து யோசித்தேன்.
நல்ல ரசனையும், நம்பிக்கையும், விடாமுயற்சியும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமா எடுக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டேன், உணர்ந்தேன். இவற்றுடன் கூட பொறுமையும், சகிப்புத் தன்மையும் அவசியம் எனத் தெரிந்து கொண்டேன்.
நல்ல ஸ்கிரிப்ட், நல்ல நடிகர்கள், நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள், எதை எடுக்கப் போகிறோம் என்ற தெளிவு இருந்தால் நிச்சயம் நல்ல சினிமாவை எடுக்க முடியும் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகுதான் கதையை உருவாக்கினேன்.
அறிவியலை முதன்மைப்படுத்தி திரைப்படம் எடுத்தால் அது டாக்குமென்டரி படம்போல ஆகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, அதை மனதிற் கொண்டு, படத்தை உருவாக்கினேன்.
படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். இந்தப் படத்தில்நான் நடிக்கும் கதாபாத்திரம் என்னைப் போன்ற ஒருவன் என்பதால், நடிப்பது எனக்குச் சிரமமாக இல்லை. என் இயல்புக்கு மிகவும் பொருந்தி வருகிற கதாபாத்திரம்.
ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வருகிற ரசிகர்கள் நம்பிக்கை உணர்வுடன் திரையரங்கை விட்டு வெளியே வரவேண்டும் என்று நினைப்பவன் நான்.
இதை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் எடுத்தேன். இந்தக் ‘கனவு வாரியத்தில்’ காதல் உண்டு. ஆனால், இது காதல் படமல்ல. காமெடி உண்டு. ஆனால், இது காமமெடி படம் அல்ல. ஆனால், ஒரு யதார்த்தமான சினிமா. அதனால்தான் ரெமி விருதுக்கு இந்தப் படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றவர்கள் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஜுராஸிக் பார்க் எடுத்த ஸ்டீவன் ஸ்பீல் பெர்க், கிளேடியேட்டர் எடுத்த ரிட்லி ஸ்காட், ஸ்டார் வார்ஸ் எடுத்த ஜார்ஜ் லுகாஸ் ஆகியோருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.
இதற்கு முன்பு ஒரு குறும்படம் கூட எடுக்காத எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதில் ஒருபுறம் ஆச்சரியம். இன்னொருபுறம் மகிழ்ச்சி.
இந்தப் படத்துக்கு நமது நாட்டில் நடந்த தேசிய அறிவியல் திரைப்பட விழாவில் சிறப்பு விருது கொடுத்தார்கள். புகழ்பெற்ற இயக்குநர் ஷியாம் பெனகல் எனது படத்தைப் புகழ்ந்து பேசியது நினைவில் நிற்கிறது. எனது தந்தை ஆணழகன் டாக்டர் சிதம்பரம், அண்ணன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் இந்தத் திரைப்படம் எடுக்க உதவினார்கள். அவர்கள் இல்லாவிட்டால் இந்தத் திரைப்படம் இல்லை. இந்தப் பெருமைகள், விருதுகள் எனக்கில்லை’’ என்று நன்றியும் பெருமையும் பொங்கக் கூறினார்! தமிழ் இளைஞர்கள் வாய்ப்பளித்தால் நிறைய சாதிப்பர் என்பதற்கு இவர் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு!