செய்யக் கூடாதவை

மார்ச் 16-31

பிள்ளைகள் கேள்விகளுக்குப் பெரியவர்கள் பதில் சொல்ல மறுக்கக் கூடாது:

பிள்ளைகள் குழந்தை நிலையிலிருந்து மாறி வரும்போது வினா எழுப்பிக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் அப்பருவம் வினவத் தெரிந்த பருவம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது அவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பொறுமையாக, சரியாக விளக்கம் அளித்தால் பிள்ளைகள் அறிவோடும், விழிப்போடும், விவரம் தெரிந்தவர்களாகவும் வளர்வர். தங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்து வந்து சொல்ல வேண்டும். மாறாக, அவர்கள் அடுத்தடுத்து கேள்விக் கேட்கும்போது, கடுப்பாகி, அவர்கள் ஆர்வத்தைத் தடுக்கக் கூடாது. எந்த அளவிற்குப் பிள்ளைகள் கேள்விகள் எழுப்புகின்றார்களோ, எந்த அளவிற்கு நாம் சரியான பதில் சொல்கிறோமோ அந்த அளவிற்கு அவர்கள் வாழ்வில் உயர்வர், சிறப்பர்.

சாலை விதிகளை மீறக்கூடாது

சாலைவிதிகள் நம் நன்மைக்காக, நம் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை மீறும்போது பாதிக்கப்படுவது நாம் மட்டும் அல்ல, சரியாக நடக்கின்ற மற்றவர்களும்தான். எனவே, சாலைவிதிகளைச் சரியாக, முறையாகப் பின்பற்றினால் விபத்துக்களை, சேதங்களைத் தவிர்க்கலாம். அவசரப்பட்டுச் சாதிப்பது ஒன்றும் இல்லை. 15 நிமிடம் முன்னால் புறப்பட்டால் அவசரப்பட வேண்டியது இல்லை. 5 நிமிடம் நிற்கத் தயங்கினால் 50 வருட வாழ்க்கைப் போய்விடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஷு மற்றும் சாக்ஸ் போடும்போது சோதிக்காமல் போடக்கூடாது

மற்றும் சாக்ஸ் போடும்போது நன்றாகச் சோதித்துப் போட வேண்டும். தேள், சிறுபாம்பு, பூச்சிகள் அதில் அடைய வாய்ப்புண்டு.

கையை விட்டுச் சோதிக்காமல், கவிழ்த்துத் தட்டி, பின் உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று சோதித்து, ஏதும் இல்லையென்பதை உறுதி செய்த பின்னரே அணிய வேண்டும்.

இதில் கவனக் குறைவாக இருந்து, பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாகக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்குச் செல்லும் சிறுவன் ஷுவிற்குள் இருந்த கருந்தேள் கொட்டி உயிரிழந்த நிகழ்வு நடந்துள்ளது. எனவே, இதில் கட்டாயம் கவனம் தேவை.

குழந்தைகள் முன் பொய் சொல்வதோ, பொய் சொல்லச் சொல்வதோ கூடாது

பிள்ளைகள் முன் நாம் பொய் பேசுவதோ அல்லது பிள்ளைகளைப் பொய் சொல்லச் சொல்வதோ அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். பெரியவர்களே சொல்லும்போது, அதைச் சரியென்று எடுத்துக் கொண்டு வழக்கமாகப் பொய் சொல்வார்கள். பிள்ளைகள் வளர்ந்ததும் அப்பழக்கம் மாறாது. பொய் சொல்லும் பிள்ளை திருடவும் செய்யும். திருடச் சென்றால் எல்லா தீயச் செயல்களும் செய்வர். பிள்ளைகளுக்குப் பெற்றோர் முன்மாதிரியாக இருந்து நடந்து காட்டினால்

பிள்ளைகள் தீயனவற்றைச் செய்ய மாட்டார்கள்.
பிள்ளைகளை விளையாட தடை செய்யக்கூடாது

பிள்ளைப் பருவம் என்பதே துள்ளித் திரிந்து விளையாடும் பருவம் ஆகும். எனவே, அவர்களை நன்றாக விருப்பப்படி விளையாட அனுமதித்து, படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கச் செய்ய வேண்டும். விளையாடினால்  படிப்புக் கெடும் என்று எண்ணி அவர்களை முடக்குவது அவர்களின் உடல்நலத்தை, உள நலத்தைப் பாதிக்கும். விளையாடினால் படிப்பு பாதிக்கும் என்பது அறியாமை.
நன்றாக விளையாடுவதால் படிப்பு எவ்வகையிலும் பாதிக்காது. எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பதும் தவறு. எப்பொழுதும் படித்துக் கொண்டிருப்பதும் தவறு. விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்க வேண்டும்; படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கச் செய்ய வேண்டும். சிறு பிள்ளைகளாயின் நம் கண்காணிப்பில் விளையாடச் செய்ய வெண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *