பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் “பெரியார்_மணியம்மை இலவச மருத்துவமனை’’ திறப்பு விழா 30.5.1979 புதன் மாலை சென்னை பெரியார் திடலில் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
விழா நடைபெற்ற பெரியார் திடல் விழாக்கோலம் பூண்டு திளைத்தது. பெரியார் சிலையிலிருந்து இருமருங்கிலும் வண்ண வண்ணக் கொடிகள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மேற்கொள்ளும் அறப்பணிக்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பது போல் பறந்தன.
மாலை 5 மணியிலிருந்தே பொதுமக்கள் பெரியார் திடலை நோக்கிவர ஆரம்பித்தனர். ஆரம்பிக்கப்பட இருந்த மருத்துவமனையைப் பொதுமக்கள் பார்வையிட்ட வண்ணம் இருந்தனர்.
மாலை 5.30 மணிக்கெல்லாம் ஏராளமான அளவில் விருந்தினர் பெருமக்கள் குழுமிவிட்டனர்.
வருகை தந்த அத்தனைப் பேரையும் சென்னை மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
ஏராளமான மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்ற பெரிய அலுவலர்கள், பிரமுகர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். குறிப்பாக மருத்துவர்கள் சின்னசாமி, மருத்துவர் அய்.எஸ்.சண்முகம், மருத்துவர் ஜெயவேலு, மருத்துவர் தெய்வநாயகம், மருத்துவர் ராஜசேகரன், மருத்துவர் சம்பூர்ணம், மருத்துவர் கமலா சம்பூர்ணம், லட்சுமி, மருத்துவர் சரோஜா, பேராசிரியர் அய்யலுசாமி, மருத்துவர் பி.கே.தர்மலிங்கம், மருத்துவர் கே.காந்தராஜ், ஓய்வுபெற்ற பிரதம பொறியாளர்கள் சி.வி.பத்மநாபன், எஸ்.பி.நமசிவாயம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காதர் ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.
தணிக்கையாளர் சுரேந்திரா, ஓய்வுபெற்ற முன்னாள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.பண்டரிநாதன், பேராசிரியர் மா.நன்னன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஏராளமான அளவில் வந்திருந்தனர்.
கழகத் தோழர்கள் குடும்பங்குடும்பமாக விழாவில் கலந்து கொண்டனர். கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, ஈரோடு எஸ்.ஆர்.சாமி, செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.பி.இராஜமாணிக்கம், சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.பி.தெட்சிணாமூர்த்தி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் விழாவில் பங்கு கொண்டனர்.
கழகக் குடும்பங்களோடு பொதுமக்களும் ஏராளமான அளவில் விழாவிற்கு வந்திருந்தனர். மன்றமே வழியுமளவுக்கு மக்கள் கூடி இருந்தனர்.
விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த பெருமக்கள் அனைவரும் 6.15 மணிக்கெல்லாம் வருகை தந்துவிட்டனர். அனைவரையும் நான் அன்புடன் வரவேற்று உபசரித்தேன்.
தமிழக உயர்நீதிமன்ற தலைமைப் பொறுப்பு நீதிபதி மாண்புமிகு எம்.எம்.இஸ்மாயில், செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர்.முத்தையா செட்டியார், உயர்நீதிமன்ற நீதிபதிகள்: மாண்புமிகு பி.வேணுகோபால், மாண்புமிகு இரத்தினவேல் பாண்டியன், பிரபல வழக்குரைஞர் உத்தம ரெட்டியார், மருத்துவர்கள்: எச்.எஸ்.பட், கே.இராமச்சந்திரா ஆகியோர் அய்யா_அம்மா ஆகியோர் வழக்கமாகத் தங்கும் இல்லத்திற்குச் வந்தனர். அவர்களை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்களும், நானும் அன்புடன் வரவேற்று அமரவைத்து, தேநீர் வழங்கி உபசரித்தோம்.
பெரியார் _ மணியம்மை இலவச மருத்துவமனையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு ஜஸ்டிஸ் திரு.எம்.எம்.இஸ்மாயில் மாலையில் திறந்து வைத்தார்கள்.
உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜஸ்டிஸ் திரு. பி.வேணுகோபால் அவர்கள் மருத்துவமனையில் தந்தை பெரியார்_அன்னை மணியம்மையார் ஆகியோர் ஒருசேரக் காட்சி அளித்த உருவப் படத்தினைத் திறந்து வைத்தார்கள்.
பொதுமக்கள் பலத்த கரஒலி எழுப்பியும், “தந்தை பெரியார் வாழ்க! அன்னை மணியம்மையார் வாழ்க!’’ என்ற ஒலிகளை எழுப்பியும் தங்களது அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
மாண்புமிகு நீதிபதிகளும், செட்டி நாட்டரசர் அவர்களும் மருத்துவமனையின் உள்பக்கம் சென்று பார்வையிட்டனர்.
அதன்பின் மன்றத்தில் துவக்கவிழா நடைபெற்றது. நான் அனைவரையும் வரவேற்று உரையாற்றினேன்.
நான் எனது உரையில், “தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் மூன்று பேர். அன்னை மணியம்மையார், டாக்டர் கே.இராமச்சந்திரா, டாக்டர் பட் ஆகியோர்களாவார்கள். இந்த மூவருக்கும் நாம் என்றென்றும் நன்றிக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
டாக்டர் இராமச்சந்திரா அவர்களும், டாக்டர் பட் அவர்களும் இங்கே வருகை தந்திருப்பது பெருமை அளிக்கக்கூடிய ஒன்றாகும். அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
நீதிபதிகள், நிர்வாகத்துறை பெருமக்கள் கழகத் தோழர்கள், தாய்மார்கள், பலதரப்-பட்டவர்களும் இவ்விழாவுக்கு வருகை தந்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இந்த நிகழ்ச்சியினைப் பார்க்க அய்யா அவர்களும் அம்மா அவர்களும் இல்லை என்பது நமக்கு வருத்தத்தை தருகிறது என்றாலும் உங்களையெல்லாம் பார்க்கும் பொழுது ஓரளவு எங்களுக்கு ஆறுதல் ஏற்படுகிறது.
சூரியன் இருந்த இடத்தில் அகல் விளக்காக இருக்கும் எங்களுக்கு உங்களது ஆதரவால் துணிவு பிறக்கிறது.
எளிய முறையில் இம்மருத்துவமனையை எளிய முயற்சியாகத் துவக்குகிறோம். அறியாமை நோயைப் போக்குவதற்காக தன் வாழ்நாளையே ஒப்படைத்த அய்யா அவர்கள் சாதாரண எளிய மக்களின் உடல் நோயைப் போக்க வேண்டும் என்று விரும்பினார்கள்; அம்மா அவர்களும் அதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் இருவருடைய விருப்பமும் இன்று நிறைவேறுகிறது.
இந்த விழா ஒரு குடும்ப விழா நமது மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் நமது நிகழ்ச்சிக்கு முதன்முதலாக வருகை தந்துள்ளார்கள். அவர்களது வருகை பெருமை சேர்ப்பதாகும்.
நமது தலைமை நீதிபதி அவர்கள் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வது பற்றி சிலர் ஆச்சரியம் தெரிவித்தார்கள்.
ஏதோ கருத்து மாறுபாடு இருக்குமோ என்று பலர் நினைக்கக்கூடும்.
அப்படிக் கருதுபவர்கள் வெறும் மேலோட்டமான பார்வையோடு பிரச்சினையை அணுகுபவர்களாவார்கள். ஆழ்ந்து நோக்கினால் அத்தகைய அய்யப்பாடுகளுக்கு இடம் இருக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்கள் தனது கொள்கை என்ன என்பதை ‘குடிஅரசு’ ஏட்டின் முதல் தலையங்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.
“மக்களுக்கு சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும். உயர்வு தாழ்வு என்று இருக்கக்கூடிய உணர்ச்சியினை ஒழித்து அனைத்துயிரும் ஒன்றென்ற உண்மை அறிவு மக்களிடம் பரவ வேண்டும். சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி, இவர் எமக்கு இனியர், இவர் நமக்கு மாற்றார் என்ற விருப்பு வெறுப்பு இன்றி நண்பனேயா-யினும் ஆகுக. “அவரது சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாமல் கண்டித்து ஒதுக்கப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த மேடையிலே வீற்றிருக்கக் கூடிய அனைவர்க்குமே இந்த மனிதாபிமானக் கொள்கையிலே கருத்து வேறுபாடு கொண்டு இருக்க முடியாது.
ஒரு சிறந்த நீதிபதி யார் என்று கேட்டால், அதற்கு இலக்கணமாக, விடையாக இருக்கக் கூடியவர்கள் நமது மாண்புமிகு தலைமை நீதிபதி ஆவார்கள்.
அவருடைய எந்தத் தீர்ப்பும் இன்னார் _ இனியார் என்ற கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்ட தீர்ப்பாகவே எப்பொழுதும் இருக்கும்.
தந்தை பெரியார் அவர்களது சிலையின்கீழ் செதுக்கப்பட்டு இருக்கும் கடவுள் மறுப்பு வாசகம் மதவாதிகளின் மனம் புண்படுகிறது என்ற அடிப்படையிலே உயர்நீதிமன்றம் சென்றது. அதற்குத் தீர்ப்புச் சொல்லும் இடத்திலே இவர்கள் நீதிபதியாக அமர்ந்து இருந்தார்கள்.
யாருக்குச் சிலை எழுப்பப்படுகிறதோ, அவருடைய கருத்துக்கள் அச்சிலையின் கீழ்வடிப்பதுதான் நியாயம். இதில் மனம் புண்படுகிறது என்ற பிரச்சினைக்கு இடமில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.
இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது பற்றி தந்தை பெரியார் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். தீர்ப்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்; இதுதான் தீர்ப்பு; ஆசாபாசத்திற்கு அப்பால் நின்று இத்தீர்ப்பை வழங்கி இருக்கின்றார் என்று குறிப்பிட்டார்கள்.
அத்தகையவர்கள் அய்யா_அம்மா பெயராலே நிறுவப்பட்டு இருக்கும் மருத்துவமனையைத் திறந்து வைத்திருப்பது நமக்கு பல மடங்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது. அவர்களைப் பெருமகிழ்ச்சியுடன் வருக வருக என வரவேற்கின்றேன்.
நான் இரண்டு பல்கலைக்கழகங்களிலே படித்தவன். ஒன்று நமது ராஜா அவர்கள் இணைவேந்தராக இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம். இன்னொன்று இணையில்லா வேந்தர் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பல்கலைக்கழகம்.
நமது ராஜா அவர்களின் தந்தையார் அண்ணாமலையார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்காவிட்டால் தமிழினத்திலே பிறந்தவர்கள் இவ்வளவு தூரம் பட்டதாரிகளாகப் பவனிவர முடியாது. செட்டி நாட்டார்கள் அதுவரை கோயில்தான் கட்டிப் பழக்கப்பட்டவர்கள். ராஜா அவர்களின் குடும்பம்தான் கல்வி வளர்ச்சிக்காக ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்கியது.
செட்டி நாட்டரசர் அவர்களின் குடும்பம் அய்யா அவர்களுக்கு மிகவும் நெருங்கிய குடும்பம். அத்தகையவர்கள் இந்த விழாவுக்குத் தலைமையேற்று இருப்பது மிகவும் பொருத்தமானது. பெருமையானது.
அய்யா_அம்மா ஆகியோர் படத்தைத் திறந்து வைத்து இங்கு நம் முன்னால் அமர்ந்திருக்கும் மாண்புமிகு நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் அய்யாவிடம் நெருக்கமாகப் பழகியவர்கள். மிகுந்த ஆழமானவர்கள், அவர்கள் இந்த விழாவுக்கு வந்திருப்பது மிகப் பொருத்தமானது.
நமது அன்பு அழைப்பை ஏற்று இங்கு வீற்றிருக்கும் நமது மாண்புமிகு நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் இந்தக் குடும்பத்துப் பிள்ளை.
டாக்டர் பட் அவர்கள் உலகம் அறிந்த டாக்டராவார். அய்யா, அம்மா ஆகியோர்களை மிகவும் அறிந்தவர்கள்.
அய்யா அவர்களுக்கு ஓய்வு என்பதே பிடிக்காத ஒன்று. அதைப்பற்றி அருமை டாக்டர் பட் அவர்கள் அழகாகக் குறிப்பிடுவார்கள். இந்த பேட்டரி இருக்கிறதே சதா இயங்கிக் கொண்டு இருந்தால்தான் ‘சார்ஜ் ஏறும். இல்லையென்றால் துருப்பிடித்துவிடும் என்பார்கள். அந்த அளவுக்கு அய்யாவைப் பற்றி அறிந்தவர்கள்.
டாக்டர் கே.ஆர்.அவர்களோ (இராமச்சந்திரா) டாக்டர்களுக்கெல்லாம் டாக்டராவார்.
அய்யா அவர்களின் அன்புக்குரியவர். அய்யா அவர்களது ஆயுள் நீட்சிக்குக் காரணமாக இருந்த டாக்டர்கள் இருவரும் இங்கு வந்து இருப்பது நம்மையெல்லாம் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது.
தந்தை பெரியார் அவர்கள் இயக்கத்திற்காக உருவாக்கித் தந்த சொத்துக்களை, தந்தை பெரியார் அவர்களிடம் பயிற்சி பெற்று இருக்கிற அடிப்படையிலே சிக்கனமாக, பொறுப்பாக இருந்து தேவையான பணிகளுக்குச் செலவு செய்வோம்.
பகுத்தறிவாக, கல்வியாக, மருத்துவ மனைகளாக, பொது மருத்துவமனைகளாக பொது மக்களுக்குப் பயன்படக் கூடிய வகையிலே அந்தப் பணி நிச்சயம் இருக்கும். எந்தப் பெருச்சாளிகளும் உள்ளே நுழைந்துவிட நாங்கள் கண்டிப்பாக இடம் தரமாட்டோம்.
‘விடுதலை’ அச்சகத்துக்கு ஒரு புது அச்சு இயந்திரம் வாங்கப்பட்டு அதன் திறப்பு விழா இங்கு நடைபெற்றது.
அதனையொட்டி ஒருசிறு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன். முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களும் மற்ற அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். அந்த விருந்திலே கலந்து கொண்ட தந்தை பெரியார் அவர்கள் ‘என் வாழ்நாளிலே நான் யாருக்கும் டீ பார்ட்டி கொடுத்ததே கிடையாது. நமது ஆசிரியர் இப்பொழுது ஒரு டீபார்ட்டி கொடுத்து விட்டார்’ என்று குறிப்பிட்டார்கள்.
விருந்து எல்லாம் முடிந்து அய்யா அவர்கள் ஊருக்குப் புறப்படும் சமயம், அப்பொழுது ஒருவருக்கொருவர் ஏதோ பேசிக் கொண்டு இருப்பதை தந்தை பெரியார் அவர்கள் கவனித்தார்கள். அய்யா ‘என்ன என்ன?’ என்று கேட்டார்கள்; அம்மா அவர்கள் சிரித்தார்கள்.
‘என்ன விஷயம்?’ என்று அய்யா அவர்கள் திரும்பவும் கேட்டார்கள். அப்பொழுது அம்மா அவர்கள் சொன்னார்கள்.
வீரமணி டீ பார்ட்டிக் கொடுத்தது பற்றி சொன்னீர்களே. அதன் ரகசியம் தெரியுமா உங்களுக்கு என்று அம்மா அவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள்.
‘நேற்று நமது நண்பர் ஒருவர் அவர்களின் பையனின் பிறந்தநாள் விழா உங்கள் தலைமையில்தானே நடைபெற்றது. அதற்கு செய்திருந்த ஸ்வீட்டுகள் ஏராளம் மீதமாக இருந்தன. அதை வீணாக்காமல்தான் இந்த விருந்தை நம்ம வீரமணி ஏற்பாடு செய்திருந்தார்’ என்று அம்மா அவர்கள் சொன்னார்கள். அய்யா அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை! ‘நம்மிடம் தயாரானவர்கள் ஒழுங்காகத்தான் தயாராகி இருக்கிறார்கள்! என்று குறிப்பிட்டார்கள்.’’ என்பதை கூற எனது உரையை முடித்தேன்.
விழாவிற்குத் தலைமையேற்ற செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர்.முத்தையா செட்டியார் அவர்கள், “பெரியார்_மணியம்மை ஆகியோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்த வீரமணி நமது பாராட்டுக்கும் அன்புக்கும் பாத்திரமானவர் என்றும், பார்ப்பனரல்லாத மக்கள் கல்வி உத்தியோகத் துறைகளில் மேலும், மேலும் முன்னேற்றமடைய தொடர்ந்து பெரியார் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்’’ என்றும் கேட்டுக்கொண்டார்.
(நினைவுகள் நீளும்)