கி.வீரமணி
திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி பகுதியில் உள்ள காவலக்குடி, கண்கொடுத்த வனிதம், பருத்தியூர், விடயபுரம், எருக்காட்டூர் போன்ற பல கிராமங்களும் கழகம் சிறப்பாக வளர்ந்தோங்கி உள்ள பகுதிகள் ஆகும்!
இப்போது கூறப்படும் கடவுள் மறுப்பு வாசகங்களை, தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலாக பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்த ஊர் விடயபுரம் என்ற ஊராகும்.
ஏராளமான தோழர்கள், கருஞ்சட்டை வீரர்கள் அநேகர் அங்கே கழக பணி செய்து மறையாமல் நம் நெஞ்சங்களில் உள்ளவர்கள் ஆவார்கள்
1. கண்கொடுத்தவனிதம் மாரிமுத்து
2. பருத்தியூர் வீ.எம்.ஆர்.பதி
3. பருத்தியூர் அய்யாசாமி
இப்படி எண்ணற்ற வீரர்கள், வீராங்கனைகள் திராவிடர் விவசாயத் தொழிற்சங்கத்தில் செயல்பட்டவர்கள் (அங்கே உள்ள கட்டிட பணிகள் விரைவில் முடித்து தருவோம்).
அங்கே தற்போதுள்ள எண்ணற்ற கழக தோழர்களில் ஒருவர் கண் கொடுத்த வனிதம் மானமிகு பிச்சையன் அவர்கள்! இவருக்கு வயது 55. இவர் பார்வையை பிறவியிலேயே இழந்த கருஞ்சட்டை வீரர். இவரது தந்தையார் மானமிகு ரெங்கன் அவர்கள் இயக்க வீரர். தாயார் காசியம்மாள். இவர் கருஞ்சட்டை அணிந்து கொண்டு, எங்கே மாநாடுகள் சிறப்பான கூட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றாலும் கையில் உள்ள ஊன்றுகோல் மூலமும், கழகத் தோழர்களின் அரிய உதவி, ஒத்துழைப்பினாலும் தவறாது அவற்றில் கலந்துக்கொள்வார். நான் கலந்து கொண்ட, கொள்ளும் நிகழ்ச்சிகளில் பிச்சையன் எங்கு இருந்தாலும் அவரிடம் பேசி விட்டுதான் பிறகு வேனில் ஏறுவேன். அவப்போது சிறு உதவிகள் கழகத் தோழர்கள் அவருக்குச் செய்வார்கள். அவர் வாய்த்திறந்து எந்த உதவியும் கேட்க மாட்டார். ! என்னே அரிய கொள்கை உணர்வு இந்தச் சுயமரியாதை வீரரிடம்! அவருடைய தம்பி சங்கர் அல்லது மற்ற உறவினர்களை வைத்து விடுதலை நாளேட்டை நாளும் படிக்கச் சொல்லி கேட்டு, கருத்தில் ஈர்த்து நிலை நிறுத்தி கொள்வார். நிகழ்ச்சிகளுக்கு வரும்போது ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து, ரயில் ஏற்றிவிடச்செய்து கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தயங்காத கடமை வீரர் அவர்.
கண் பார்வை இழந்தாலும் கருத்துப் பார்வை கொள்கை பார்வையில் மகிழ்வுடன் வாழும் கருஞ்சிறுத்தை அவர். இவர்கள்தான் நம் இயக்கத்தின் இரத்தநாளங்கள்! வாழ்க பிச்சையன்! வளர்க அவர் பணி! பார்வை உள்ளவர்கள் இழந்தவைகள் ஏராளம்! இவர் பெற்றதோ பெரியாரின் கொள்கை உணர்வுகள் _ குறைவில்லாதவை.!