– தந்தை பெரியார்:
நீண்ட நாட்களாக நம் நாட்டில் நம் மக்களிடையே நடைபெற்று வந்த முறையை மாற்றி ஏன் புதிய முறையினைத் தொடக்கினோ மென்றால், இந்த முறையானது நமக்குரியதுஅல்ல என்பதோடு, பார்ப்பனர்கள் நம் நாட்டிற்கு வந்த பின் அவர்களுக்காக ஏற்பாடு செய்து கொண்ட முறை என்பதோடு, இம்முறை பெண்ணடிமை -_ மூடநம்பிக்கை _- ஜாதி இழிவு ஆகியவற்றை நிலை நிறுத்தக் கூடியதாய் அமைக்கப்பட்டிருப்பதால், இதனை மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று.
தமிழனுக்கென்று ஒரு முறை கிடையாதா என்றால், கிடையாது என்பதோடு, இந்நிகழ்ச்சியினைக் குறிப்பிடக் கூடிய சொல் தமிழ் மொழியில் ஒன்று கூட இல்லை. பின் தமிழர்கள் எப்படி வாழ்க்கை நடத்தினார்கள் என்றால், ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலில் முதிர்ந்து, காதலர்களாக _- நண்பர்களாகக் கூடி வாழ்ந்திருக்கின்றனர்.
நமக்கு இலக்கியம் என்று சொல்வதெல்லாம் பார்ப்பான் இட்ட பிச்சை. அவன் கடித்து – சுவைத்துத் துப்பியதைப் பொறுக்கி எடுத்துத் தான் நம் புலவர்கள் இலக்கியமாக்கி விட்டார்கள். தமிழன் வாழ்விற்கென்று தமிழனால் எழுதப்பட்ட இலக்கியம் ஒன்று கூட நமக்கில்லை. எல்லோராலும் சிறந்த அறிவாளி என்று ஒப்புக் கொள்ளப்படும் வள்ளுவன் என்ன சொல்லியிருக்கிறான். “தற்கொண்டான் பேணி’’, தன்னை அடிமையாக, வேலைக்காரி யாகக் கொண்டவனைக் காப்பாற்றி, என்று சொன்னானே தவிர, தற்கொண்டான் தன்னைக் கொண்டவளைக் காப்பாற்ற வேண்டுமென்று ஆணுக்கு நீதி சொல்லவில்லை.
பெண்கள் என்றாலே அவர்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை உடையவளாக இருக்க வேண்டும். இதுதான் கற்பு என்று வள்ளுவன் முதற்கொண்டு தமிழ்ப்புலவன் அத்தனை பேரும் சொல்கிறான். பெண்கள் ஆண்களுக்குப் பயந்தவர்களாக, மடமை நிரம்பியவர்களாக, வெட்கப்படுபவர்களாக, மற்றவர் கண்களுக்கு அசிங்கமாகத் தோன்றக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். எதற்காகப் பெண் இப்படி இருக்க வேண்டும்? பெண் ஆணைப் போன்ற ஒரு ஜீவன் தானே! ஆண் மட்டும் என்ன உயர்வு உடைய ஜீவன்? எதற்காக ஆணுக்கு அடிமையாக வாழ வேண்டும்? இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் அந்தச் சமுதாயத்தை அழுத்தி அழுத்தி வைத்ததால், அவர்கள் (பெண்கள்) முன்னேற்றமடைய முடியாமலே போய் விட்டது. அதனால் சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மைகளில் பாதி ஏற்பட முடியாமலே போய்விட்டது என்பதோடு, பெண்கள் சமுதாயம் மிக இழிவாகக் கருதப்பட்டு _- மதிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் காலமானது பெண்களுக்குப் பாதுகாப்புக் காலமாகும். இப்போதே பத்திரிகையில் பார்த்தால் தினம் ஆண்களால் பெண்கள் கொல்லப்படுவதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் கூட ஆணைக் கொன்றாள் என்கிற செய்தி வருவதில்லை. பெண் ஒருவனோடு வாழ்வது தான் கற்பு என்கின்றான். ஆண் எத்தனை பெண்களோடு வேண்டுமானாலும் வாழலாம். அதைப் பற்றிக் கவலையில்லை. ஒழுக்கம் கெடுவதில்லை. பெண் இன்னொருத்தனைப் பார்த்தாலே கற்பு கெட்டுவிடுகிறது என்கின்றான். ஆண் தவற பல வழிகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நேர்மாறாகத் தங்கள் சுயநலத்தை முன்னிட்டு பெண்களை அடிமையாக்கி வைத் திருக்கின்றனர். இலக்கியங்கள் ஆண்களுக்கு நீதி போதிப்பதாக _- ஆண்கள் இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று கூறுவதாக இல்லை.
நம் இலக்கியங்கள் எதுவும் நம் சூத்திரத் தன்மையைப் போக்கக் கூடியதாக இல்லை. அவற்றில் ஒழுக்கம் என்பது மேல் ஜாதி -_ கீழ் ஜாதி, ஏழை _- பணக்காரன் என்பதற்கேற்ற வகையில் பேதமுற்றிருக்கின்றது. மனிதனுக்கு மனிதன் பேதம் இருக்கக் கூடாது. எல்லாத் துறைகளிலும் சம உரிமை கேட்பது போலப் பெண்களுக்கும் கேட்கின்றோம். அதை வலியுறுத்துவதே இம்முறையாகும். நம் இலக்கியங்கள் அரிசியிலிருந்து கல் பொறுக்குவது போன்றில்லை. கல்லிலிருந்து அரிசி பொறுக்குவது போன்றதாகவே இருக்கின்றன. ஆபாசங்கள், ஒழுக்கக் கேடுகள் நிறைந்தவையாகவே அமைக்கப்-பட்டிருக்கின்றன.
மணமக்களுக்கு அறிவுரை சொல்லும்போது ஒரு நண்பர் அறிவுள்ள குழந்தைகளைப் பெற வேண்டும் என்று சொன்னார். குழந்தை பெறுவதற்கு முன் எப்படி அறிவுள்ள குழந்தை பெறுவதற்கென்று என்ன டிகிரி இருக்கிறது? எந்தக் கடையில் போய் சாமான் வாங்கி வந்து காரியத்தைத் தொடக்குவது? எதற்காகக் குழந்தை பெற வேண்டும்?
இந்த வம்பிலே போய் ஏன் மாட்டிக் கொள்ள வேண்டும்? குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு இன்னொருத்தனிடம் போய் “அய்யா எனக்கு ஆறு குழந்தை இருக்கு. சம்பளம் அதிகம் கொடு’’ என்பதும், அரசாங்க உத்தியோகத்தில் பதவி உயர்வு கேட்பதும், மாற்றலைத் தவிர்க்கச் சொல்வதும் இந்தக் குழந்தைகளால் தானே ஏற்படுகின்றன. இல்லாமலிருந்தால் என்ன குறை ஏற்பட்டு விடும்?
நம் புலவனை எடுத்துக் கொண்டால், ஊரான் எச்சில் இலையில் உட்கார்ந்து சாப்பிடுவானே தவிர, தனி இலை போட்டுச் சாப்பிடக் கூடியவனாக இல்லை. அவன் சொன்னான், இவன் சொன்னான், அந்தப் புலவர் சொல்லி இருக்கிறார் என்று சொல்கிறானே தவிர, இவன் கருத்து என்ன என்பதைப் பற்றி இருக்காது. நம் சமுதாய முன்னேற்றத்திற்கான கருத்துகளோ, நம் மக்கள் இழிவு, மானமற்றத் தன்மை, முட்டாள்தனம், மூட நம்பிக்கை இவற்றைப் போக்கக் கூடியதாகவோ, வாழ்விற்கு வழிகாட்டியதாகவோ உள்ளவை ஒன்று கூட இல்லை. எல்லாம் பழைய குப்பைகளைக் கிளறுவதாகவே இருக்கின்றன.
மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்குள் செலவிட வேண்டும். ஆடம்பரமாக இருக்கக் கூடாது. எளிய வாழ்வு வாழ வேண்டும். சமுதாயத்திற்குத் தங்களால் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும். கோயில் _- திருவிழா _- சினிமா ஆகிய இவற்றிற்குக் கண்டிப்பாய்ப் போகக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் போய் உதவி கேட்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
30.6.1968 அன்று நடைபெற்ற ராமசாமி – கமலம் திருமணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை (விடுதலை 30.7.1968)