ஒரு நாட்டில் ஜனநாயகம் சிறப்பாக செயல்படுகிறதா என்பதற்கு அடையாளம், அந்நாட்டின் அனைத்து குடிமக்களும், போதிய பாதுகாப்புடனும் நிம்மதியுடனும் வாழுகிறார்கள் என்பதே!
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (NDA) ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் அமைந்த பிறகு, இந்துத்துவாவாதிகளின் அராஜகம் தலைவிரிகோலமாய் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பச்சையாக கால் பதித்துள்ளது!
மாட்டுக்கறி உண்டார்கள் என்ற பொய்யை _ புரளியைக் கிளப்பி சிறுபான்மைச் சமூகத்தவராகிய இஸ்லாமியர் அக்லாக் என்பவரைக் கொன்றார்கள் உ.பி.யில். இது திட்டமிட்டே பரப்பிய புரளி என்பது பிறகு பரிசோதனை மூலம் உண்மை வெளிவந்தது.
ஒடிசாவில் பலவிடங்களில் கிறித்துவ கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டுள்ளனர் _ பஜ்ரங்தள் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவினரால்!
பா.ஜ.க. எம்.பி.க்கள், தலைவர்கள் மிகக் கடுமையாக சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், ஆதிவாசிகள் என்ற பழங்குடியினர் மீதும், தாழ்த்தப்பட்டட மாணவர் சமூகத்தினர் மீதும் குறிவைத்து தாக்குவது அன்றாட அவலச் சம்பவங்களாகி வருகின்றன!
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு -(பி.ஜே.பி.) ஆதரவு ஏடுதான். இது 08.03.2016 அன்று எழுதியுள்ள தலையங்கத்தில், மிகுந்த வேதனையுடன் சிறுபான்மைச் சமூக மக்கள், மோடி ஆட்சிக்கு வந்தபின்பு எப்படி குறிவைத்து தாக்கப்படுகின்றனர் என்பதை “Church Attack” ‘சர்ச்சுகளின் மீது தாக்குதல்’ என்றே தலைப்பிட்டு,
“சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைநகருக்கு அருகில் உள்ள ‘கச்னா’ என்ற ஒரு கிராமத்தில், மாதாக் கோயிலில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த மக்களிடையே திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்து நுழைந்தவர்கள், ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டு, அந்த ஆண், பெண் இருபாலரையும், அடித்து விரட்டி, ‘சர்ச்சையும் அடித்து நொறுக்கியுள்ளனர்!
இதற்கெல்லாம் மூலகாரணம் ‘மேலே நடைபெறுவது நம்ம ஆட்சிதான்; என்ன பிரமாதமாக நடவடிக்கை எடுத்துவிடப் போகிறார்கள்?’ என்ற தெம்பும், ஒருவகை அலட்சியப் பார்வையும்தான்!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் சிந்தனையின் செயலாக்கம்தான் இத்தகைய காலித்தனமும், வன்முறை வெறியாட்டங்களும்.
மைனாரிட்டியினருக்கு இந்திய அரசியல் சட்டம் போதிய பாதுகாப்பு தந்துள்ளது என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காயா?
இதனுடைய எதிரொலியாக உலகம் முழுவதிலும் _ இந்தியாவில் மட்டுமல்ல (ஏற்கனவே அமெரிக்க ஒபாமா போன்ற வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள், மனித உரிமைக் காப்பாளர்கள்) கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி அரசுக்கு இவை பெருமை சேர்க்கக்கூடியவையா?
இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டாமா?
சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு என்று தட்டிக் கழிக்க முடியுமா?
இப்போது நடைபெறுவது ஹிந்துத்துவ ஆட்சிதான் என்று கலகக்காரர்கள் பிரகடனப்படுத்துவது போல் அல்லவா இச்சம்பவங்கள் உள்ளன!
மாவோயிஸ்டுகள் இப்படி வன்முறையில் ஈடுபடுகிறார்களே சத்தீஸ்கார் போன்ற மாநிலங்களில் என்று கண்டிக்கும் பா.ஜ.க. இந்த சம்பவங்களை எப்படிப் பார்க்க வேண்டும்?
தீவிரவாதமோ, வன்முறைகளோ, சட்டத்தைக் கையில் எடுத்து, தடியெடுத்தவ-னெல்லாம் தண்டல்காரன் என்று ஆவதே விரும்பத்தக்கதா?
பா.ஜ.க. ஆதரவு ஏடுகள்கூட இதனை ஆதரிக்கவில்லையே!
ஆசிரியர்,
கி.வீரமணி
சிறுபான்மையின மக்கள் மீது வெறுப்பைக் கக்குவதா? முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நபர்கள், முஸ்லீம் மக்களுக்கு எதிராக மிக மோசமாக வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருப்பதற்கு எதிராக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் இதர நீதிபதிகளையும், முன்னாள் நீதிபதிகள், அய்.பி.எஸ் அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.பி.சாவந்த், ராஜிந்தர் சச்சார், பி.ஜி.கோல்சே பாட்டீல், ஹாஸ்பெட் சுரேஷ், அய்பிஎஸ் அதிகாரி ஜூலியோ ரிபெய்ரோ, முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் எஸ்.எம்.முஷ்ரிப், மூத்த வழக்குரைஞர்கள் இக்பால் சாக்ளா, ஜனக்துவா ரகாதாஸ், நவ்ரோஸ் எச் சீர்வை, அனிர்தர்கர், விஞ்ஞானி பிஎம் பார்கவா, ஜகட் பவுண்டேசன் ஆப் இந்தியாவின் தலைவர் டாக்டர் சையது ஜபார் மகமது, பாதிரியார் டாக்டர் பாக்கியம் டி சாமுவேல் முதலானோர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள்
மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களில் சிலர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நாட்டு மக்களில் ஒரு பகுதியினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அச்சுறுத்தும் விதத்தில் வெறுப்பை உமிழும் வண்ணம் பேசி வருகிறார்கள். மத்திய இணை அமைச்சர் ஒருவர் முஸ்லீம்களை எச்சரிக்கிறோம் என்று மிரட்டியும், அவர்களை ராட்சதர்கள் என்றும், ராவணனின் வழித்தோன்றல்கள் என்று கூறியும் இறுதி யுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது அரசமைப்புச் சட்டத்தின் 14, 19, 21,25 பிரிவுகளுக்கு எதி ரானதாகும். எனவே உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதோடு, முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் கத்தரியா, வி.கே.சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி, கிரிராஜ் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகி ஆதித்யநாத், சாக்சி மகாராஜ், அமித்ஷா மற்றும் ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களையும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
– ‘விடுதலை’ 7.3.2016