கேள்வி : நீதிபதி கர்ணனின் கூற்றுப்படி நடப்பது மக்களாட்சியா? மனுவின் ஆட்சியா? என்ற அய்யப்பாடு ஏற்படுகிறதே?
– நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக்-கருப்பூர்
பதில் : நீதிபதியிடம் போகவேண்டாம்; மத்திய பல்கலைக்கழக மாணவர்களிடம் கேளுங்கள். ஒடுக்கப்பட்டவர்களின் குமுறல் மூலம் இந்த இடியோசை கேட்கும்!
கேள்வி : நாட்டுக்கு எதிரான முழக்கங்களை இந்துத்துவாவாதிகளே எழுப்பிவிட்டு மாணவர்கள் மீது பழிபோட்டு தேசவிரோத வழக்கு தொடர்வது அராஜகமா? அயோக்கியத்தனமா? காட்டாட்சியா? நீதிமன்றம், தானே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
– இல.சங்கத்தமிழன், செங்கை.
பதில் : இதுபற்றி ‘ஜீ’.டி.வி. செய்தி ஆசிரியர் பேட்டியை ‘விடுதலை’ நாளேட்டில் படித்துப் பாருங்கள். எப்படி ஜோடனை வழக்கு ஏற்பாடு ஆகியிருக்கிறது, மாணவர்கள் முழங்கியதாக பிறகு அந்த வீடியோவில் இணைக்கப்-பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை அவர் கூறியுள்ளார்!
கேள்வி : திருச்சி மாநாடு தேர்தலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பலாமா?
– நாத்திகர் சா.கோ., பெரம்பலூர்
பதில் : நம்முடைய மாநாடுகளின் தாக்கமும் விளைவுகளும் பல்வேறு சமுதாய நல வாழ்வுரிமைக்கான வழிமுறைகளை வகுத்த பழைய வரலாற்றை சற்று அசைபோட்டுச் சிந்தியுங்கள் புரியும்.
கேள்வி : தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்வதைத் தவிர்த்து விஜயகாந்த் எந்த முடிவு எடுத்தாலும் அது தற்கொலைக்குச் சமம்; தமிழ்நாட்டு நலனுக்கும் ஏற்றதல்ல என நினைக்கிறேன். தங்கள் கருத்து?
– கே.மணிமாறன், சேலம்
பதில் : பகுத்தறிவுடன் யோசிக்கும் எவரும் தங்கள் கருத்தை மறுக்கவே முடியாது!
கேள்வி : மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா? தமிழக மக்கள் -ஓட்டுக்களை வீணடித்து வழக்கமில்லையே!
– அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி
பதில் : பொது எதிரி என்று அரசியலில் குறிவைக்க வேண்டியது ஒரு இலக்கு நோக்கி மட்டுமே இருந்தால்தான் வெற்றி பெற முடியும். அவர்கள் ஆசை விழலுக்கு இறைத்த நீராக முடியும்; நினைத்ததற்கு நேர் எதிராக முடியும் வாய்ப்பே தற்போதுள்ள யதார்த்தம்!
கேள்வி : தேர்வில் வெற்றிபெற மாட்டார்கள் என்று யூகிக்கும் மாணவர்களை தேர்வுக்கு அனுப்பாமல் பள்ளியை விட்டு அனுப்பும் பள்ளிகளின் செயல்பாடுகள்பற்றி தங்கள் கருத்து, தீர்வு என்ன?
– பதி.சீத்தா, சென்னை – 45
பதில் : துவக்கம் முதலே இந்த செலக்ஷன் _ பன்னாடை _ வடிகட்டல் முறையை நம் இயக்கமும், ‘விடுதலை’யும் எதிர்த்தே வந்துள்ளன. இன்றும் அது கூடாது என்பதே நமது உறுதியான கருத்து ஆகும்!
கேள்வி : பத்து நாள் நடக்கும் மகாமகத்திற்கு தமிழக அரசின் செலவு 135.5 கோடி ரூபாய். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ஓராண்டுக்கு 32 கோடி ரூபாய்! இது எதைக் காட்டுகிறது?
– மா.செங்குட்டுவன், மதுரை
பதில் : “அண்ணா(வுக்குப் போட்ட) நாமம்’’ வாழ்க _ என்பதன் பொருள் புரிகிறதா?
கேள்வி : தேவராஜ் அர்ஸ் நூற்றாண்டு விழாவை தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் விழாவாக அமைத்தால் அதற்கான அழுத்தம் கூடுவதோடு அவருக்கும் கூடுதல் சிறப்பல்லவா?
– மா.வேலு, பரமக்குடி
பதில் : தங்கள் கருத்தை நடைபெறவிருக்கும் கருத்தரங்கத்தில் வலியுறுத்துவோம்!
கேள்வி : பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது முதல் பாடத்திட்டங்களில் இந்துத்வா, கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் என்று கல்வித் துறையிலேயே அவர்கள் குறியாக இருக்கும் நிலையில் அது பற்றிய எதிர் நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே உள்ளதே; ஏன்?
– க.தென்றல், அரியலூர்
பதில் : ஒத்தக் கருத்துடைய மாணவர் அமைப்புகளும், சமூக நல ஆர்வலர் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!