அலாஸ்கா எனும் கனவுலகம்!
– மருத்துவர்கள் சோம&சரோ இளங்கோவன்
அமெரிக்காவில் வாழும் பெரும்பாலோர் காணும் கனவுகளில் ஒன்று ஹவாய் தீவுகளையும், அலாஸ்கா மாநிலத்தையும் பார்க்க வேண்டுமென்பது! ஹவாய் அழகு மிக்க தீவுகள் அமெரிக்காவிலிருந்து 1000 மைல்கள் தாண்டி பசிபிக் பெருங்கடலில் உள்ளன. அலாஸ்கா 500 மைல்கள் தாண்டி வட மேற்கு மூலையில் உள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரிய மாநிலம் அலாஸ்கா! அடுத்த பெரிய மாநிலமான டெக்சாசை விட இரண்டு மடங்கு பெரியது! 1867லே ருசியாவிடமிருந்து ஏக்கர் 2 சென்டுகள் என்று 7 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. அப்போது பயனில்லாத வெற்று குளிரிடமாக இருந்தது! இப்போது அந்த மாநிலத்தின் சேமிப்புப் பணம் மட்டுமே 50 பில்லியன் டாலர்களுக்கு மேலே. அதிலேயியிருந்து வட்டியில் வரும் வருமானத்திலிருந்து ஆண்டு தோறும் அங்கே வாழும் ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்கப்படுகின்றது. 3000-, 4000 டாலர் போல! பணம் பெற ஓராண்டு அங்கே வாழ்ந்திருக்க வேண்டும். மகிழ்ச்சியடைய போவோர் தான் மிகுதி! வாருங்கள் போவோம்!
இயற்கையின் எழில் பொங்கும் மலைகள், காடுகள், ஆறுகள் என்பதுதான் அலாஸ்காவின் பெருமை! 65% நிலம் மய்ய அமெரிக்க அரசிற்கும், 20% போல மாநில அரசிற்கும், 10% போல அங்கு வாழ்ந்த பழங்குடியினர்க்கும் சொந்தமானது. 1% தான் பொது மக்கள் சொந்தம் கொண்டாடும் நிலம்! அலாஸ்கா அண்மையில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்படும் வரையில் இயற்கையாகவே இருந்தது. 1960களில் பெட்ரோல் மிகவும் இருப்பதை அறிந்த பின் மக்கள் அங்கே சென்றனர், வாழத் தொடங்கி இப்போது பல நகரங்கள் அனைத்து வசதிகளுடனும் உள்ளன. மாநிலத்தில் வாழும் பெரும்பான்மையோர் பெரிய நகரங்களான ஆங்கரேஜ், பேஃர்பேங்க்சில் வாழ்கின்றனர்.
அவை அமெரிக்க மற்ற நகரங்களைப் போலவே அனைத்து வசதிகளும் நிறைந்தவை. நகரங்களைத் தாண்டிவிட்டால் எங்கு பார்த்தாலும் இயற்கையின் மாட்சிகள் தான். மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். அவர்களும் குளிர்காலங்களில் அனைத்தையும் மூடிவிட்டு அமெரிக்காவின் மற்ற மாநிலங்களுக்குச் சென்று விடுகின்றனர். கோடையில் உல்லாசப் பயணிகள் தான் பெரிய வணிகம். அப்போது சம்பாதிப்பதை வைத்துத்தான் ஆண்டு பூராவும் ஓட்ட வேண்டும். அங்கேயே வாழும் குறைந்த எண்ணிக்கையுள்ளவர்களுக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற வசதிகள் ஆங்காங்கே உள்ளன. அங்கேயே பிறந்து வாழ்பவர்களும், வெளி மாநிலங்களிலிருந்து வந்து வாழ்பவர்களும் உள்ளனர்.வெளி மாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்தவர்களும், உல்லாசப்பயணதிற்காக வந்து இயற்கையின் அழகில் மயங்கி அங்கேயே வாழ நினைத்து வாழ்பவர்களும் உள்ளனர்.
கோடை காலத்தில் தான் அங்கு சென்று பார்க்க முடியும் என்பதால் எங்கு பார்த்தாலும் உல்லாசப் பயணிகள். பெரிய பேருந்துகள் நிறைய பல நாட்டினரும் வந்து குவிந்து விடுகின்றனர். ஆனால் அனைவரையும் ஒழுங்குபடுத்தி, வரிசையாக மக்கள் செல்வதும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதும் பயணத்தை இனிதாக்கி விடுகின்றது. காத்திருப்பதும் குறைவான நேரமாகப் பார்த்துக் கொள்கின்றனர்.
தங்கும் இடங்கள் நிறைய இல்லாததால் சிற்றூர்களில் முன்னரே பதிவு செய்து விட வேண்டும்.சாப்பாட்டுக் கூடங்கள் நிறைய உள்ளன. அங்கே கத்திரிக்காய் போலக் கிடைக்கும் சாலமன் மீன், பெரிய அலாஸ்கா நண்டு கிடைக்கும் இடங்களில் கும்பல் நிறைந்து காணப்படும்.
பேருந்து, படகு, மலை மேல் பறந்து பார்க்க சிறு விமானங்கள் அனைத்தையும் பார்க்க நடக்க வேண்டிய நமது கால்கள் என்று பயணம் தொடர்ச்சியாக இருந்தது. குளிரே இல்லாமல் நமது ஊர் போலவே இருந்ததால் சில இடங்களில் நம் ஊரிலே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
எங்கள் உல்லாசக் கப்பல் மூன்று இடங்களில் நின்று நான்காவது நகரிலே இறக்கி விடும் ஒரு வழிப்பயணம். பின்னர் அங்கு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு சுற்றி மிகப் பெரிய இயற்கைப் பூங்காவைப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தோம். பெரும் பனி மலைகள். மிகப் பெரிய ஏரிகள், அதிலே நீந்தும் திமிங்கலங்கள், இயற்கைச் சூழலிலே மற்ற மிருகங்கள், அமெரிக்காவின் பெயர் போன பெரிய பருந்துகள், கரடிகள் என்று பயணம் இயற்கையின் இன்ப ஊற்றாக அமைந்தது. ஏன் அனைவரும் அலாஸ்கா மீது மயங்குகின்றனர் என்ற பெரிய கேள்விக்கு விடை கண்டோம். ஆம், நாங்களும் மயங்கினோம்.
ஒவ்வொரு இடமாகப் பார்ப்போம்!