“…பிற்காலத்துத் தோன்றிய பொருட்டொடர் நிலைகளிற் பெரும்பாலன உண்மையில் நடவாப் பொய்க் கதைகண்மேல் எழுந்தனவாயினும், அவையிற்றிற் காணப்படும் இலக்கியச்சுவை பயில்வார்க்கு இன்பம் பயத்தலின், அதுபற்றி அவை பாராட்டற்பாலனவல்லவோ வெனின்; அல்ல. அந்நூல்களை ஆக்கிய புலவர்கள், தாம்பாடுதற் கெடுத்துக்கொண்ட கதைகளில் மெய்இவை பொய்இவை யென்று ஆராய்ந்துரைத்தவரல்லர்; கதை பொய்-யேயாயினும் அவற்றால் அறியப்படும் உறுதிப்பொருள்கள் இவையென்பது தேற்றிப் பாடினவருமல்லர். பொய்யான கதைகளை ஆராயாது மெய்யெனக்கொண்டு தாம் நம்பியதல்லாமலும், அவற்றைப் பயில்வார் கேட்பாரெல்லாரும் அங்ஙனமே நம்புமாறு செய்து உலகத்திற் பொய்யைப்பரப்பி மெய்யே விளங்கவொட்டாமலுந் திரிபுபடுத்தினர். அவ்வாறு பொய்யை மெய்யாக நம்புவதிலும் அதனைப் பிறரும் நம்புமாறு செய்வதிலுமே பிற்காலத்துப் புலவரிற் பெரும்பாலார் அழுந்திப் பழகிவிட்டமையால், அவர் கதையைவிட்டு இலக்கியச் சுவை தோன்றக் கூறுமிடங்களிலும் மெய்யுரை பகரமாட்டாராய்ப் பொய்யே கூறுவராயினர். மற்றுப், பண்டைத் தமிழாசிரியர்களும், அவர்வழி பேணிய இடைக்காலத்தாசிரியர் சிலரும் யாண்டுந் தாம் மெய்யே காண்பதொடு, தாங்கண்ட மெய்யையே பிறர்க்குங் காட்டுவாராய்த் திகழ்ந்தமையின், அவர் இலக்கியச் சுவை தோன்றக் கூறுவனவும் இயற்கை நிகழ்ச்சியொடு முழுதொத்து மெய்யாகவே மிளிர்கின்றன. இவ்வேறு-பாட்டினை இரண்டு எடுத்துக்-காட்டுகளான் விளக்குதும்: கொல்லிமலையாண்ட வல்வில் ஓரி என்னுந் தலைவனைப் பாடிய பழந்தமிழ்ப் புலவர் பெருமானான வன்பரணர் அவனது விற்றொழிலாண்மையினைச் சிறந்தெடுத்துக் கூறுதற்குப்புகுந்து,
“வேழம்வீழ்த்த விழுத்தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரற்றலைக்
கேழற் பன்றி வீழ அயலது
ஆழற் புற்றத்து உடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத்திருந்தோன்’’
– (புறம் 152)
என்று அதனை வியந்து பாடியிருக்கின்றார்; இதன் பொருள் வருமாறு:_ ‘யானையைக் கொன்று கீழே விழச்செய்த, சிறந்த நாணினின்றும் விடுக்கப்பட்ட அம்பானது பெரிய வாயினையுடைய ஒரு புலியை ஊடுருவி இறக்கப் பண்ணித், துளையுள்ள கொம்புகளைத் தலையில் உடைய ஒரு புள்ளிமான் கலையைக் கீழே உருளப்படுத்தி, உரல்போலுந் தலையினையுடைய காட்டுப் பன்றி யொன்று நிலத்தே வீழுமாறு சென்று, பக்கத்தே உளதாகிய ஆழ்ந்த புற்றின்கட் கிடக்கும் உடும்பின் உடம்பிலே பட்டுநிற்கும். அத்துணை வலிய வில்லாண்மை வேட்டத்தில் வெற்றியையுண்டாக்கி யிருந்தவனான ஓரி!’ என்பது. இங்ஙனம் ஓரியென்னும் மலையரசன் ஓர் யானையை நோக்கி எய்த அம்பானது அவ்வியானையைக் கொன்று கீழே வீழ்த்திய தல்லாமலும், அது தான் சென்ற கடுவிசையினால் தான்சென்ற வரியின்கண் ணிருந்த ஒரு புலியின் திறந்த வாயினுள் நுழைந்து அதனை ஊடுருவிப் போய்ப் போகும் நெறியில் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானையும் உருட்டிவிட்டு, அதன்பின் ஒரு காட்டுப் பன்றியையுங் கீழ்விழச் செய்து, அவ்வளவிற் றன்விசை குறைதலின், அப்பன்றி வீழ்ந்த பக்கத்தேயுளதான ஒரு புற்றின்கட் கிடந்த ஓர் உடும்பின் உடம்பிலே பட்டு நின்றது என, அவ்வம்பை ஏவிய அவனது விற்றொழில் வல்லமையினையும், அதனைப் புலப்படக் காட்டும் அவ்வம்பினது விசையினையும் ஆசிரியர் வன்பரணர் நன்கெடுத்துக் காட்டினார். இதன்கண் இயற்கைக்கு மாறாகக் கருதற்பாலது ஏதுமேயில்லை. ஏவப்பட்ட மிகக் கூரிய அம்பு, ஏவியவனது பேராற்றலாற் கடுவிசையிற் சென்று ஓர் யானையை யூடுருவிப் போய்ப், பின் அவ்வியானையை நோக்கித் திறந்தவாயுடன் வந்த ஒரு புலியின்வாயினுள்ளே நுழைந்து அப்புலியினையுங் கீண்டுசென்று, அவ்வளவிற் றனது விரைவு சிறிது சிறிது குறைதலின் எதிர்ப்பட்ட ஒரு புள்ளிமானைக் கீழே உருளச் செய்து, அதன்பின் ஒரு காட்டுப் பன்றியைக் கீழ்விழமோதிக், கடைசியாக அதன் பக்கத்தேயிருந்த ஒரு புற்றினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த ஓருடும்பின் மேற்றைத்து நின்றுபோதல் நிகழக்கூடியதேயாம்.
மற்றுப், பிற்காலத்துப் புலவரான கம்பர் அங்ஙனமே இராமனது விற்றொழிலாண்மை-யினைப் புலப்படுத்துதற்குப் பாடிய இரண்டு செய்யுட்களையும் அவற்றின் பொய்ம்மை-யினையும் ஈண்டெடுத்துக் காட்டுதும்:-_
“அலையுருவக் கடலுருவத்து ஆண்டகைதன் நீண்டுயர்ந்த
நிலையுருவப் புயவலியை நீயுருவ நோக்கு ஐயா!
உலையுருவக் கனல்உமிழ்கண் தாடகைதன் உரம்உருவி
மலையுருவி மரம் உருவி மண்உருவிற்று ஒருவாளி’’
“ஏழுமாமரம் உருவிக் கீழ்உலகமென்று இசைக்கும்
ஏழும் ஊடுபுக்கு உருவிப் பின்உடன் அடுத்துஇயன்ற
ஏழு இலாமையின் மீண்டது அவ்விராகவன் வாளி.’’
இவ்விரண்டனுள் முதற்செய்யுள் இராமனது வில்லாண்மையினை அவனை யுடனழைத்துச் சென்ற விசுவாமித்திரர் சனக மன்னனுக்கு எடுத்துரைக்கும் நிலையில் வைத்துக் கம்பராற் பாடப்பட்டிருக்கின்றது. அதன்பொருள் வருமாறு:_
‘அலைகளையே தனக்கு உருவமாய்க் கொண்ட கடலைப் போலும் நீலநிறத்தினனனும் ஆண்மைக் குணத்தினனுமான இராமனுடைய நீண்டு நிமிர்ந்த நிலையினையே வடிவாக வுடைய தோள்களின் வலிமையை நீ ஊடுருவப் பார்த்தல் வேண்டும் ஐயனே! கொல்லனது உலைக்களத்திலே செக்கச்சிவந்து தோன்றுங் கனலையொப்பத் தீயைக் கக்குங் கண்களையுடைய தாடகையென்னும் அரக்கியின் மார்பைத் துளைத்துச் சென்று, அதன்மேலும் மலையினையுந் துளைத்துப்போய், அதனுலுந் தன்விசை அடங்காமையின் மரத்தினையுந் துளைத்து ஏகிப், பின்னும் அது குறையாமையின் நிலத்தினையுந் துளைத்தோடியது அவன் ஏவிய ஒருகணை.’
இப்பொருளைச் சிறிதறிவுடையாரும் உற்றுநோக்குவராயின், இஃது எத்துணைப் பொய்ம்மை நிறைந்ததாயிருக்கின்ற தென்பதனை யுணர்ந்து அதன்கண் அருவருப்பு எய்துவர். இராமன் ஏவிய ஓர் அம்பு தாடகைதன் மார்பைத் துளைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அஃது அதன்பின் ஒரு மலையினைத் துளைத்துச் சென்ற தென்றதும், அதன் பின்னும் ஒரு மரத்தையோ பல மரங்களையோ துளைத்துப்போய தென்றதும், அதனானும் அதன்விரைவு குன்றாமல் இந்நிலத்தையே ஊடுருவி ஏகிய தென்றதும் இயற்கை நிகழ்ச்சியிற் காணப்படாத, கருதுதற்குங் கூடாத பெரும் பொய்யா யிருக்கின்றனவல்லவோ! இருப்புக் கோலிற்செய்த ஒருகணை மலையைத் துளைத்துச் செல்லுதல் கூடுமோ! அதனைத் துளைத்தபின்னுந் தன்விரைவுங் கூர்மையும் மழுங்காமல் மரங்களையுந் துளைத்துப், பின்னர் இந்நிலவுலகத் தையுந் துளைத்து அப்பாற்போகியதென்றது எத்துணைப் பெரும் புளுகாயிருக்கின்றது! இதனை நன்குணர்ந்து பார்மின்கள் அறிவுடையீர்! ஒருவனது வலிவை, ஒரு பொருணிகழ்ச்சியைச் சிறப்பிக்க ‘உயர்வுநவிற்சி’ சொல்லுங்கால் இங்ஙனம் இயற்கைக்கு முழுமாறுபாடுண்டாகச் சொல்லுவது நல்லிசைப் புலமையாகுமா? கூர்ந்து பாருங்கள்!
மற்று, மேலெடுத்துக் காட்டிய பழந்தமிழாசிரியரான வன்பரணர் ஓரியினது வில்லாண்மையை வியந்து பாடிய அரிய செய்யுளிற் காணப்படும் ‘உயர்வுநவிற்சி’ உலக இயற்கைக்கு எத்துணைப் பொருத்தமுள்ளதாய் விளங்கி நமக்குத் தேருந்தொறும் ஆரா மகிழ்ச்சியினைத் தருகின்றதோ, அத்துணைக்கு இயற்கையொடு பொருந்துவதிலதாய்க் கம்பர் கூறும் இவ்வுயர்வுநவிற்சி நினைக்குந்தொறும் நமக்குப் பேரா வெறுப்பினையே விளைக்கின்றது!
இன்னும், ஆசிரியர் வன்பரணரது செய்யுளில் மற்றுஞ் சில நுட்பங்களுந் தோற்றங்களும் ஓவியத்தில் வரைந்து காட்டினாலென நமதுளக் கண்ணெதிரே தோன்றி நம்மை இன்புறுத்தலும் அறியற்பாற்று. ஓரி மன்னன் ஒரு வேழத்தை நோக்கி யெய்த கடுங்கணை அவ்வேழத்தை ஊடுருவிப் போய், அதனைக் கொல்லுதற்கு அங்காந்தவாயுடன் வந்த ஒரு புலியை யுங்கொன்ற நிகழ்ச்சியும்; அதன்பின் துளையுள்ள கொம்புகளை யுடைய புள்ளிமான் ஒன்றையும் உருட்டி, அதன்பின் உரல் போலுந் தலையினையுடைய ஒரு காட்டுப் பன்றியையும் வீழ்த்திய நிகழ்ச்சியுங்; கடைசியாக அப்பன்றியின் பக்கத்தே ஒரு புற்றினுள்ளே அடங்கிக் கிடந்த ஓர் உடும்பின் உடம்பிற்சென்று தைத்து அவ்வளவில் நின்றுபோன நிகழ்ச்சியும்; இயற்கையில் உள்ளவைகளை உள்ளவாறே கைவல்லான் ஒருவன் வரைந்து காட்டும் ஓவியங்கள்போல் நம்மகக் கண்ணெதிரே தோன்று கின்றமையுங் காண்மின்கள்! இத்தகைய இயற்கைத் தோற்ற வனப்பு மேற்காட்டிய கம்பரது செய்யுளிற் சிறிதும் இல்லாமையும் நோக்குமின்கள்!
இனி, இராமன் ஏழு மராமரங்களைத் துளைத்தற்கு ஏவிய ஓர் அம்பு அவை தம்மைத் துளைத்துச் சென்றதாகக் கம்பர் கூறும் இரண்டாவது செய்யுட்பொருள் வருமாறு:_
‘அவ்விராமன் தனது வில்லினின்றுந் தொடுத்துவிட்ட ஒரு கணையானது ஏழு பெரிய மராமரங்களையுந் துளைத்துச் சென்று, அதன் பின்னுந் தனது கடுவிசை சிறிதுங் குறையாமையின், கீழுலகம் என்று சொல்லப்படும் ஏழினையும் நடுவே புகுந்து துளைத்துப் போய்ப், பின் அக்கீழ் ஏழ் உலகங்களை உடன் அடுத்துத் தொடர்பாக உள்ள வேறு ஏழ் உலகங்கள் இல்லாமையினாலே திரும்பி வந்தது’
என்னும் இப்பொருளை நோக்குங்காற், கம்பர் மேலேடுத்துக் காட்டிய முதற் செய்யுளிற் புளுகியதினும் பன்மடங்கு மிகுதியாக இச்செய்யுளிற் புளுகிவிட்டனரென்பது நன்கு புலப்படுகின்றதன்றோ? மராமரங்களேழனைத் துளைத்தற்கு ஏவிய ஒரு வாளி, அம்மராமரங்கள் ஏழனையுந் துளைத்துச் சென்றதல்லாமலுங் கீழ் ஏழ் உலகங்களையுந் துளைத்துப் போய்ப், பின்னர்த் துளைத்துச் செல்லுதற்கு ஏதும் இல்லாமையின் திரும்பி இராமனிடமே வந்து சேர்ந்ததென்பது உலகிலுள்ள புளுகுகட்கெல்லாம் முதற்பெரும்புளுகாய் முன்நிற்கின்றது. மேலே வன்பரணர் பாடிய செய்யுளில் ஓரி மன்னன் ஏவியவாளி, யானை புலி மான் உடும்பு முதலான உயிர்களின் ஊன் உடம்பைத் துளைத்துச் சென்றடங்கிய தென்று சொல்லப்பட்டதே யல்லாமல், மரத்தை மலையை நிலத்தைத் துளைத்துச் சென்றதெனச் சொல்லப்பட்டதில்லை. ஏனெனில், இரும்பிற் செய்த கூர்ங்கணை விலங்குகளைக் கொல்லுதற்பொருட்டும், மக்களைக் கொல்லுதற் பொருட்டும் அக்காலத்திற் செய்யப்பட்டன-வேயல்லமல், மரங்களை மலையை நிலத்தைத் துளைத்தற்காகச் செய்யப்பட்டன அல்ல.
இவ்வாறு கம்பர் நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் செய்தமையால், வடமொழிப் பொய் வழக்கிற் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச் சுவை தோன்றக் கூறவேண்டும் இடங்களிலும் பொய் யாவனவே புனைந்துகூறி இழுக்கினார். இங்ஙனமே, கம்பர்க்குப் பின்வந்த தமிழ்ப் புலவர்களெல்லாரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண் மாரும் வடமொழியில் வரைந்துவைத்த பொய்யான புராணங்களையுந் தலபுராணங்களையுமே பெரும்பாலுந் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய்வழக்கினை அடியோடழித்து விட்டார். இப்பிற்கால மொழிபெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங்களில் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவு வரையில் அவற்றின்கட் பொய்யாவனவே தொடுக்கப்பட்டிருத்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந் தராது.
அற்றேல், ஆங்கிலம் முதலான இஞ்ஞான்றை நாகரிக மொழிகளிற் பொய்யாகப் புனைந்த கட்டுக் கதைகளுங், கட்டுக் கதைகண்மேற் பாடப்பட்ட செய்யுள் நூல்களுஞ் சாலப் பெருகி வருதலும், அவற்றின் பயிற்சியைச் சிறந்த அறிவுடையாரும் பாராட்டிப் பேசுதலும் என்னையெனின்; அப்பிற மொழிக் கட்டுக்கதைகளை ஆக்கிய புலவர்கள் அவற்றைக் கட்டுக்கதைகளென்றே கூறுதலோடு, அவற்றைப் பயில்வாரும் அவை பொய்யெனவே யுணர்ந்து அவையிற்றை அயர்வு தீர்ந்து இன்புறுதற் கருவியாகவே கைக்கொண்டு பயில்கின்றனர். அதனால் அந்நூல்களைப் பயிறலிற் றீங்கேதும் விளைவதில்லை.
மற்றுப், பிற்காலத்துத் தமிழ்ப் புலவர்களோ வடமொழிக் கட்டுக் கதைகளை ஆராய்ந்து அவற்றுட் பொய்யாவன இவை, மெய்யாவன இவையென்று தெளியும் பகுத்தறிவு இல்லாதவர்களாய்ப், பொய்யை மெய்யாக நம்பித் தாம் அறிவு மழுங்குவதோடு, அப்பொய்யை மெய்யாகப் பிறரும் நம்புமாறு காட்டி அவரதறிவையும் மழுக்குவதால், இவரால் தமிழ்க்குந் தமிழ் மக்கட்கும் உண்டாங் கேடு அந்தோ! பெரிது! பெரிது! ஸீ