வருமான வரி கட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அதை நேர்மையான வழிகளிலேயே குறைத்துக் கொள்ள முடியும். அந்த வழிகள் பற்றித் தெரியாததால் அல்லது தெரிந்தும் அக்கறையுடன் முயற்சி எடுக்காததால் பலரும் வரிவிலக்கு பெறக்கூடிய தொகைகளுக்கும் சேர்த்து வரி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு வங்கியில் போடும் டெப்பாசிட்டுக்குக் கொடுக்கப்படும் வட்டிக்கு டி.டி.எஸ். (Tax Deducted at Source) என்று பத்து சதவிகிதம் பிடிப்பதை வருமான வரி கணக்கு சமர்ப்பிப்பதன் மூலம் ரீஃபண்ட் ஆக திரும்பப் பெறலாம். இது சிலருக்கு தெரியவில்லை.
நடப்பு 2014_15 ஆண்டில், ஒருவருக்கு வருடம் ஒன்றுக்கு வரும் வருமானம் விவசாய வருமானம் தவிர்த்து ரூ.இரண்டரை லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அதிகப்படியான தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும். ஒருவருடைய வயது அறுபதுக்கும் மேல் என்றால், வருமான வரி ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ள தொகைக்கு மட்டும்தான். 80 வயதுக்கு மேல் என்றால், ரூ.5 லட்சத்துக்கு மேல்தான் வரி.
வருமான வரி என்பது அந்த கூடுதல் தொகையின் அளவைப் பொறுத்து, 10% முதல் 30% வரை இருக்கும். ஆனால், ஒருவர் முயன்றால், இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கும்கூட வருமான வரியை தவிர்க்க முடியும். அதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
முதலாவது செலவுகள் குறித்தது. இரண்டாவது வருமானம் குறித்தது. இப்படி அணுகுவதற்கு காரணம், சில குறிப்பிட்ட வருமானங்களுக்கும் குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கும் அரசு வருமான வரி விலக்கு கொடுக்கிறது.
முதல் வழி, கிடைக்கிற வருமானத்தில் ஒரு பகுதியை வருமான வரி விலக்குகள் கொடுக்கப்பட்டிருப்பனவற்றில் முதலீடு செய்வது.
தற்சமயம் வரி விலக்கு கொடுக்கப்படும் செலவுகள் அல்லது முதலீடுகள் என்றால், ஒருவர் கட்டுகிற இன்சூரன்ஸ் பிரிமியம், பி.எஃப். எனப்படும் சேமநல நிதி, வீட்டுக் கடனுக்கு கட்டும் EMI -யில் உள்ள அசலுக்கான தொகை, 5 வருடங்களுக்கு போடப்படும் வங்கி ஃபிக்செட் டெப்பாசிட், நேஷனல் பென்ஷன் திட்டத்துக்கு கட்டும் தொகை, அதிகபட்சமாக இரண்டு பிள்ளைகளின் முழுநேர கல்விக்கு கட்டும் கட்டணம் போன்றவை.
இவற்றுக்கெல்லாம் வருமான வரி கிடையாது. ஆனால், இப்படி கொடுக்கப்படும் விலக்கு அதிகபட்சமாக ஒரு வருடத்துக்கு ரூ.1.5 லட்சம்தான். இந்த செலவு/முதலீடுகளின் கூட்டுத் தொகை அதற்கு மேல் இருந்தாலும், வருமான வரி கணக்கு எண் வைத்திருக்கும் ஒருவருக்கு வருடம் ஒன்றுக்கு, அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு ‘80 சி’ பிரிவின் கீழ் முழு வருமான வரி விலக்கு கிடைக்கும்.
‘நான் நிறுவனம் எதிலும் வேலை செய்யவில்லையே. சொந்த தொழில் செய்கிறேன் அல்லது எனக்கு வட்டி, வாடகை போன்ற வேறு வருமானங்கள்தான். எனக்கு எப்படி சேம நல நிதி பொருந்தும்? யார் பி.எஃப். தருவார்கள், யார் பென்ஷன் கொடுப்பார்கள்?’ என்று சிலர் கேட்கலாம்.
சேமநல நிதியில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ஊழியர்களுக்கு நிறுவனம் கட்டும் எம்பிளாயீஸ் பிராவிடெண்ட் ஃபண்டு (E.P.F.), மற்றொரு வகையின் பெயர் பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்டு. ஆங்கிலத்தில் சுருக்கமாக P.P.F. என்பார்கள். அஞ்சலங்கள், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்றவற்றில் எந்த தனிநபரும் இந்த P.P.F. கணக்கு தொடங்கலாம். அதில் அவரே இயன்ற தொகை போட்டு சேமித்துக் கொள்ளலாம். வங்கி டெப்பாசிட்டுக்களுக்கு கொடுப்பதுபோல, இதற்கும் வட்டி தருவார்கள். போடுகிற அசலுக்கும் கிடைக்கிற வட்டிக்கும் வருமான வரி விலக்கு உண்டு.
அதேபோல, தன்னுடைய பென்ஷனுக்-காகவும் வேலைக்குப் போகாமல் சொந்த தொழில் செய்யும் ஒருவர் சேமிக்கலாம். அதற்காக அவர் கட்டும் தொகைக்கும் வரிவிலக்குப் பெறலாம். இப்படிக் கட்டப்படும் ரூபாய் ஒன்றரை லட்சம் வரையான தொகைக்கு முழு வரி விலக்கு.
ஆக, ஒருவர் அவருக்கு கொடுக்கப்-பட்டிருக்கும் உச்சவரம்புத் தொகைக்கும் மேல் ரூபாய் ஒன்றரை லட்சம் வரையிலான வருமானத்துக்கும் வரி மீதம் செய்யலாம்.
இது தவிர, வீட்டுக்கடனுக்கு கட்டும் வட்டிக்கும் வருமான வரி விலக்கு இருக்கிறது. வருடம் ஒன்றுக்கு இந்த வகையில் ரூபாய் இரண்டு லட்சம் வரை வரி இல்லை. (24B)
மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்து அதற்கு கட்டும் பிரிமியத்தையும் வரி கட்ட வேண்டிய வருமானத்தில் இருந்து கழித்துவிடலாம். இந்த வகையில் வருடம் ஒன்றுக்கு ரூ.15,000 வரை வரிவிலக்கு, 65 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு ரூ.20,000 வரை வரிவிலக்கு, இதில் தனக்கு, தன் கணவன்/மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எடுக்கும் பாலிசிகள் அடங்கும். ஒருவர் அவரது பெற்றோருக்கும் மெடிக்கல் கிளைம் பாலிசி எடுத்தால் அதற்கு கட்டும் பிரிமியம் ரூ.15,000 அல்லது 20,000 வரை பெற்றோரின் வயதை பொறுத்து கூடுதல் வரிவிலக்கு (80D) உண்டு.
பிள்ளைகளின் குறிப்பிட்ட முழுநேர முதுகலை படிப்பிற்காக வாங்கிய கடனுக்கு கட்டும் வட்டிக்கும் குறிப்பிட்ட, அளவுவரை வரிவிலக்கு உண்டு. (80E)
இவையெல்லாம் ஒருவர் செய்யும் முதலீடு மற்றும் செலவுகள் சிலவற்றுக்குக் கிடைக்கும் வரி விலக்குகள். இவைபோக, சில குறிப்பிட்ட வருமானங்களுக்கு வரி இல்லை.
சேமநல நிதிகளில் இருந்து கிடைக்கும் வட்டி, சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்திற்கு கொடுக்கப்படும் வட்டி (ஆண்டுக்கு பத்தாயிரம் வரை), ஷேர்களும், ஈக்விட்டி பரஸ்பர நிதிகளும் கொடுக்கும் டிவிடெண்ட், இன்சூரன்ஸ் முதிர்வுத் தொகை, ஷேர்களை குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்துவிட்டு விற்பதால் கிடைக்கும். ‘லாங் டர்ம் கேப்பிடல் கெயின்ஸ்’ எனப்படும் லாபம். இவைகளுக்கும் வரிவிலக்கு கிடைக்கும்.
ஆக, இப்படிப்பட்டவற்றில் முதலீடு செய்து அவற்றில் இருந்து வருமானம் ஈட்டியும் வரிவிலக்குப் பெறலாம்.
மேலே சொல்லப்பட்டவை எல்லாம் நடப்பு 2014_15ஆம் ஆண்டுக்கானவை. மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்பதால் கிடைக்கும் விலைக்கு ரூ.25,000; மெடிக்கல் இன்சூரன்ஸ் இல்லாத 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.30,000 மருத்துவ செலவுகளுக்காக வரிவிலக்கு; ஊனமுற்றோருக்கு ரூ.25,000 கூடுதல் விலக்கு. பென்ஷன் கட்டுபவர்களுக்கான விலக்கு ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சமாக உயர்வு என்று அடுத்த 2015_16ஆம் ஆண்டுக்கு சில மாறுதல்களை அரசு அறிவித்திருக்கிறது. ஸீ