கூர்மையான பொருளைக் குழந்தையிடம் கொடுக்கக் கூடாது
கூர்மையான எந்தப் பொருளையும் குழந்தையிடம் விளையாடக் கொடுக்கக் கூடாது. அதேபோல் வாயினுள் எளிதில் செல்லும் பொருட்களையும் கொடுக்கக் கூடாது. கூறிய பொருள்கள் கண்களில் குத்திவிடும். வாயினுள் செல்லும் பொருள்கள் தொண்டைக்குள் சென்று அடைத்து உயிருக்குக் கேடு தரும். சிறு பொருள்களைக் கொடுத்தால் காது அல்லது மூக்கிற்குள் போட்டுக் கொள்ளும். எனவே, கேடு தராத மென்மையான பொருள்களைக் குழந்தைகளிடம் கொடுக்க வேண்டும். இரசாயனப் பூச்சுகள் உள்ள பொருள்களை, பொம்மைகளை குழந்தைகளிடம் விளையாடக் கொடுக்கக் கூடாது.
அறியா குழந்தைகளிடம் பந்து தரக்கூடாது:
நடக்கத் தெரிந்த சிறுகுழந்தைகளிடம் பந்து கொடுத்தால் அது வீதியிலோ, குளத்திலோ சென்று விழும்போது, அதை எடுக்கும் ஆர்வத்தில் குழந்தை குளத்தில் விழுந்து இறக்கவோ, வீதியில் அடிபடவோ வாய்ப்பு ஏற்படும். எனவே, பந்தினை விளையாடக் கொடுக்கக் கூடாது. பந்து விளையாடக் கொடுத்தால் கூடவே நாம் இருந்து விளையாட வேண்டும்.
அசுத்தமான இடங்களில் குழந்தையை விடக்கூடாது
அழுக்கு, குப்பை, கிருமிகள் நிறைந்த இடங்களில் குழந்தைகளை விடக்கூடாது. அது அவற்றில் கைவைத்து உடனே வாயில் வைக்கும். இதன் மூலம் நோய்க் கிருமிகள் உடலுக்குள் சென்று பல நோய்களை உண்டாக்கும். குறிப்பாக வயிற்றுப் போக்கு ஏற்படுவது சில நேரங்களில் உயிருக்கே கேடு உண்டாக்கும். எனவே, இது போன்றவற்றில் மிகவும் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் பெரியவர்கள் இருக்க வேண்டும்.
சூடான பொருளை வாயால் ஊதி கொடுக்கக்கூடாது:
பால் சூடாக இருந்தால், அல்லது உணவு சூடாக இருந்தால் வாயால் ஊதி குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். ஊதுகின்றவர்களுக்கு உள்ள நோய்களின் கிருமிகள் அதில் சேர்ந்து குழந்தைக்கும் அந்த நோய் எளிதில் தொற்றும். எனவே, ஊதிக் கொடுப்பது கூடாது.
அதேபோல் நாம் உண்பதிலும் கடித்துக் கொடுப்பது, சுவைத்துக் கொடுப்பது கூடாது. இதன் வழியும் நோய்கள் தொற்றும். தன் பிள்ளை, பாசம், பற்று என்பதெல்லாம் இதில் இல்லை. நோய்த் தொற்று ஏற்படுமாயின் தாயும் பிள்ளையும் விலகியே இருக்க வேண்டும். உறவினர்கள் எச்சில் ஒன்றும் செய்யாது என்பது அறியாமை!
கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் தரக் கூடாது!
விளையாட்டாக, செல்லமாகத் திட்டவும், அடிக்கவும், கெட்ட வார்த்தைகள் சொல்லவும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும், அதைக் குழந்தை சொல்வதைப் பார்த்து இரசிப்பதும், மகிழ்வதும் வழக்கத்தில், குறிப்பாகக் கிராமப்புறங்களில் காணப்படுகிறது. இது மிகவும் தவறு. இப்பழக்கம் பெரியவர்களானாலும் மாறாது. குழந்தைகளுக்கு நல்ல வார்த்தைகள், நல்ல பழக்கங்களையே சொல்லித் தர வேண்டும். குழந்தைகள் பார்க்கும்படி பொடி போடுதல், சிகரெட் பிடித்தல், மது குடித்தல் கூடாது. குழந்தைகள்முன் தாவறான செயலோ, பேச்சோ அறவே கூடாது. செய்தால் குழந்தைகள் எதிர்காலத்தில் தவறாகவே செயல்படுவர். பிள்ளைகள் கெடப் பெரியவர்கள் எவ்வகையிலும் காரணமாய் இருக்கக் கூடாது.
கண்ட இடங்களில் கழிவுகளை வெளியேற்றக் கூடாது:
நினைத்த இடத்தில் எச்சில் துப்புவது, சிறுநீர், மலம் கழிப்பது, வீட்டுக்கு முன், வீதியில் குழந்தைகளைக் கழிக்கச் சொல்வது, கண்ட இடத்தில் குப்பைகள், கழிவுகளைக் கொட்டுவது அறவே கூடாது. இது சமுதாயத்திற்குச் செய்யும் மாபெரும் தீங்கு. நம்மால் எத்தனையோ பேருக்குப் பாதிப்பு ஏற்பட இவை வழிவகுக்கும். சுற்றுச்சூழலைப் பொதுநலத்திற்காக இல்லாவிட்டாலும், சுயநலத்திற்காகவாவது தூய்மையாக வைக்க வேண்டும். சுற்றுச் சுழலை நான் மாசுபடுத்தமாட்டேன் என்று ஒவ்வொருவரும் உறுதி கொண்டு செயல்பட வேண்டும். ஸீ