“நான்கு வயதிலே தெருவுல பசங்க விளையாடும் கிரிக்கெட்ல அஞ்சு நிமிஷம், கொஞ்சம் தள்ளி நொண்டி விளையாடும் பெண்களோட அஞ்சு நிமிஷம்னு எந்த விளையாட்டா இருந்தாலும் உள்ளே புகுந்து ஒரு கை பார்த்திடுவேன். அந்தப் பழக்கம்தான் இப்போ சாதனை புரிய வைத்திருக்கிறது’’ என்கிறார் அபிநயா. மதுரை, ஸ்ரீ அரபிந்தோ மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் அபிநயா, கேரம் போட்டிகளில் தேசிய அளவில் தொடர் சாதனை படைத்து வருகிறார்.
“ஆரம்பத்துல கேரம் விளையாட்டு மேல பெரிய ஆர்வம் இல்லை. ஏன்னா, கராத்தே மற்றும் த்ரோ பால் விளையாட்டுல துறுதுறுனு ஓடிட்டு இருந்தேன். த்ரோபால்ல ஸ்டேட் லெவல் போட்டிகள்ல வின் பண்ணி இருக்கேன். அதைவிட கராத்தே மேல பயங்கர கிரேஸ். காரணம், யா… ஹூனு சவுண்டு கொடுத்துக்கிட்டு அட்டாக் பண்றது, ஓடுகளை உடைக்கிறதுனு டி.வி-யில் பார்த்ததை நாமும் செய்யணும்னு கராத்தே வகுப்புக்குப் போனேன். இப்போ நானும் ஓடுகளை உடைக்கிறேன்’’ என்கிற அபிநயா, கராத்தேயில் கிரீன் பெல்ட்.
எனது அப்பா ஒரு கார் மெக்கானிக். அங்கு வரும் பல வகை கார்களைப் பார்த்ததும், காரை கயிற்றில் கட்டி, பற்களால் இழுக்கும் ஆசை வந்தது. கராத்தே மாஸ்டர்கிட்டே சொல்லி, அதற்கும் பயிற்சி எடுத்தேன். ஸ்கூல்ல ஒவ்வொரு வருஷமும் நடக்கிற ஸ்போர்ட்ஸ் டே ஃபங்ஷன்ல நான் கார் இழுக்கிறதுக்கு டைம் ஒதுக்கிடுவாங்க.
ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்தித்தாளில் வெளியான கேரம் போட்டி ஒன்றைப் பார்த்தேன். அங்கே ஆரம்பித்தது கேரம் ஆர்வம்.
அது, சின்ன ஜோனல் மேட்ச். திடீர்னு முடிவு பண்ணிதான் அதுல கலந்துக்கிட்டேன். ஃபர்ஸ்ட் ரவுண்டு மட்டும்தான் வந்தேன். நான் விளையாடுறதைக் கவனிச்ச மாஸ்டர் ஒருத்தர், உனக்கு ஷாட் நல்லா வருது. இன்னும் டிரெய்னிங் எடுத்தா பெருசா வரலாம்னு சொல்லிட்டார். இந்த ஒரு வார்த்தை போதாதா? கராத்தே, த்ரோபால்ல இருந்து யு டர்ன் போட்டு, கேரம் பக்கம் போனேன்.
2013-ஆம் வருடம் நடந்த அண்டர் 12 கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெற்று, தேசியப் போட்டிக்குத் தேர்வானேன். போபாலில் நடந்த, நேஷனல் போட்டிக்குப் போய் சில்வர் மெடல் வாங்கி வந்தேன். அடுத்த வருஷம் சட்டீஷ்கரில் நடந்த அண்டர் 14 நேஷனல் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தனிநபர் பிரிவில் சில்வர் மெடல் வாங்கினேன். குழுப் போட்டியில் தங்கம் ஜெயிச்சோம். இதுதான் என்னோட ஃபிளாஷ்பேக். இப்போ என் உலகமே சதுரம் ஆகிடுச்சு என்றார். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்திருக்கிறார்.
இப்படி பல்வேறு செயல்களில் பங்கேற்றாலும் படிப்பிலும் சிறந்து விளங்குகிறார் இந்த சகலகலா அபிநயா..
படிப்பில் யுவஸ்ரீ கலா பாரதி விருது வாங்கி இருக்கிறார். ராமநாதபுரத்தில் நடக்கும் நேஷனல் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் செலக்ட் ஆகியிருக்கிறார். “வெளி ஸ்டேட்லயே ஷார்ட் அடிச்சிருக்கோம்… இது நம்ம ஏரியா, சும்மா விட்ருவோமா? தனிநபர் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன்’’ என்கிறார் கண்களில் நம்பிக்கை ஒளிவீச. ஸீ