சூரிய ஆற்றலால் விதைக்கும் கருவி!
நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் விருது!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, பழந்தினாபட்டி கிராமத்தில் உள்ள செயின்ட் செபஸ்தியார் மெட்ரிக் பள்ளியில் 8ஆ-ம் வகுப்பு படிக்கும் சுபாஷ், சோலார் மூலம் விதை விதைக்கும் கருவி உருவாக்கி யுள்ளார். நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா வழங்கும் சிறந்த கண்டுபிடிப்பு விருதை இவர் பெற்றுள்ளார்.
சிறு வயது முதலே, பள்ளிகளுக்கு இடையே நடக்கும் பல்வேறு அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளார் சுபாஷ். “விவசாயம் செய்றது இன்றைக்குப் பெரிய போராட்டமா இருக்கு. பருவ மழை சரியா பெய்றது இல்ல. வேலை செய்ய ஆட்கள் கிடைக்கிறது இல்ல. இது எல்லாம் அமைஞ்சுட்டாலும், மாடு பூட்டி விவசாயம் செய்த காலம் போச்சு. உழுவது, விதைப்பது, அறுவடை எல்லாத்துக்கும் கருவி வந்திருச்சு. சிறிய விவசாயிகள், இந்தக் கருவிகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த அதிகச் செலவு பிடிக்குது. தவிர, டீசல்ல இயங்கும் இந்தக் கருவிகள், விவசாய நிலத்தில் புகையை வெளியிட்டு மண்ணைப் பாதிக்குது. இதையெல்லாம் என் தாத்தா அடிக்கடி சொல்வார். அவருக்கு இயற்கை விவசாயத்த்தில் ஆர்வம். இந்தக் கண்டு பிடிப்புக்கு அவர் அளித்த ஊக்கம் முதன்மைக் காரணம்.
டிராக்டரை முன்மாதிரியாகக் கொண்டதுதான் இது. நான்கு சக்கரங்கள், 12 வோல்ட் பேட்டரி, 12 வோல்ட் சோலார் தகடு, 12 வோல்ட்டை 240 வோல்ட் ஆக மாற்றும் ஒரு இன்வெர்டர், 1200 ஆர்.பி.எம் திறன்கொண்ட ஒரு மோட்டார், கலப்பை, விதைகளை விதைக்கும் மரத்தால் ஆன துளையிடப்பட்ட மர உருளையும் மரப்பலகையும் உள்ளடக்கியது. சுமார் 200 கிலோ எடைதான் இருக்கும்.
சூரிய ஒளி எப்போதும் சீராகக் கிடைக்காது. கிடைக்கிற சூரிய ஒளியைச் சேமித்து வைக்கத்தான், 12 வோல்ட் பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை இணைச்சிருக்கேன். விதை விதைக்க, 2 அடி நீளத்தில் உருளை வடிவ மரக்கட்டையில், சீரான இடைவெளியில் துளைகள் இருக்கும். அதன் மேல 2 அடி நீள மரப்பலகைகளை ‘V’’ வடிவத்தில் பொருத்தி இருக்கிறேன். குழாய் வழியாக விதைகள் மண்ணில் விழும். குழாய்க்கு முன்னும் பின்னும் கலப்பைகள் இருக்கும். முன்புறம் உள்ள கலப்பை உழுதுக்கிட்டே செல்ல, விதை குழாயின் வழியா விழும். பின்புறம் உள்ள கலப்பை மண்ணை மூடிக்கிட்டே போகும். இந்தக் கருவி சூரிய ஒளியில் இயங்குவதால், சுற்றுச்சூழல் மாசுபடாது, எடை குறைவு என்பதால், மண் இறுகாது. மண்ணுக்கு நன்மை செய்யும் மண்புழு மற்றும் நுண்ணுயிர்களும் காக்கப்படும் என்று இக்கருவியைப்பற்றி விளக்குகிறார் சுபாஷ்.
மகனின் கண்டுபிடிப்பைச் சொந்த நிலத்தில் ஒன்றரை வருடமாகப் பயன்படுத்தி வரும் அவரது அப்பா முத்துக்கருப்பையா, இதன் மூலமா நிறைய நேரத்தையும் ஆட்களின் வேலைப் பளுவையும் குறைக்க முடிஞ்சது. பணமும் மிச்சம். இந்தக் கண்டுபிடிப்பு, நமக்கு மட்டும் இல்லாம நாடு முழுவதும் பயன்படணும் என்று பெருமையோடு சொல்கிறார் இவரது தந்தை.
இந்தப் போட்டிக்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து 31 கண்டுபிடிப்புகள் இந்திய அளவில் தேர்வானது. அதில், சுபாஷின் சோலார் விதை விதைக்கும் கருவியும் ஒன்று.
அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில், குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் விழா நடந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருதை வாங்கியது பெருமையாக இருக்கிறது என்கிறார் சுபாஷ். குஜராத் மாநில முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல், இந்தக் கருவியை குஜராத் விவசாயிகள் பயன்படுத்த எங்கள் அரசு ஆவன செய்யும் என்று தெரிவித்திருப்பது கூடுதல் பெருமைக்குரியது. “வருங்காலத்தில், இந்தியா முழுவதும் இயற்கை விவசாயம்தான் நடக்க வேண்டும். அதற்கான தூண்டு கோலாக எனது ஒவ்வொரு கண்டுபிடிப்பும் இருக்கும் என்கிற சுபாஷ் சந்திரபோஸின் குரலில் சாதனைக்கான எழுச்சி மேலோங்கி நிற்கிறது!