அய்யாவின் அடிச்சுவட்டில்… 149 – கி.வீரமணி

மார்ச் 01-15

நெஞ்சுரத்தின் உருவகம் என்.ஆர்.சாமி!

நஞ்சையா மறைவு

நீதிமன்றம் பெரியார் நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் 2.5.1979 அன்று தருமபுரி மாவட்டத் தலைவராக இருந்த பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் எம்.என்.நஞ்சையா மறைந்தார் எனும் தகவல் கிடைத்தது.

இவர் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தின் தளபதியாக விளங்கியவர். தருமபுரி தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழுவின் தலைவராக இருந்தவர். தருமபுரி ஜில்லா போர்டு துணைத் தலைவராகவும் விளங்கினார். நெருக்கடி நிலையில் சிறைச்சாலையில் இருந்தவர்.

தகவல் அறிந்ததும் வேன்மூலம் பென்னாகரம் சென்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதையை செலுத்தினேன்.

மாட்டிறைச்சி உண்ணும் விரதம்

வினோபாவே அவர்கள் மத்திய அரசு பசுவதை தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்து நாடு முழுவதும் ஒரு விரும்பத்தகாத கிளர்ச்சியை ஏற்படுத்திட முயன்றார். இதையொட்டி பசுவதை தடுப்பை குறிப்பாக மேற்கு வங்கம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்த நிலையில் மத்திய அரசு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்பதற்காக கால்நடை வளர்ச்சி தொடர்பான சட்டமியற்றும் அதிகாரத்தை மாநில அரசு பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு (Concurrent List) மாற்ற முயற்சி செய்தது. இது மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதுடன் இந்து மத சனாதனத்திற்கு புத்துயிர் ஊட்டும் முயற்சி என்று கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கழகத்தின் சார்பில் ஒரு கண்டனக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்து சென்னை பெரியார் திடலில் நடத்தினோம்.
இதில் தி.மு.க. தலைவர் கலைஞர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.கல்யாண-சுந்தரம், இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வி.பி.சித்தன், குடியரசுக் கட்சியைச் சார்ந்த சக்திதாசன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

பின்னர் 06.05.1979 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியதுடன், தனி மனித உணவு உரிமையில் பிறர் தலையிடுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 13.05.1979 அன்று உண்ணும் விரதம் என்னும் நிகழ்ச்சியினை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாட்டுக்கறி துண்டுகளையும், ரொட்டியையும் இணைத்து வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதுபோல் தமிழ்நாடு முழுவதும் உண்ணும் விரதம் நடத்தப்பட்டது. நான் காஞ்சிபுரத்தில் கலந்து கொண்டேன். பின்னர் தொடர்ந்து இது தொடர்பான கருத்துகளை தமிழகம் எங்கும் விளக்கிடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றேன்.

பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்கள் இல்லத்தில் 20.05.1975 அன்று நடைபெற்ற அவரது மகள் ஈ.வெ.ரா.மணியம்மை _ மணிவண்ணன் மற்றும் இளையமகன் சாமி.திராவிடச் செல்வன் _ தமிழ்ச்செல்வி ஆகியோரின் திருமணத்தில்  பங்கேற்றேன்.

நெற்றியிலே நாமம் இட்டு, பழுத்த வைதிகராக மலேசியாவுக்குக் கப்பலேறிய காவனூர் என்.இராமசாமி அங்கே போய், “குடிஅரசு’’, “ரிவோல்ட்’’, “பகுத்தறிவு’’ ஏடுகள் மூலம் புது உலகைக் காண _- துடித்துப் புறப்பட்ட அந்தப் பயணத்தில் அவற்றால் அவர் பக்குவப்படுத்தப்பட்டு, அந்தப் பாடங்களை தான் சென்ற  மலேயா நாட்டிலும் பரப்பிடத் தவறவில்லை.

உழைப்பினால் உயர்ந்த இந்த உன்னத, லட்சிய வீரர், தனது தந்தையின் _- குடும்பத்தினரின் வெறுப்பில் துவங்கி, “ஊர் உலகத்தின்’’ எதிர்ப்பு, ஏளனம் வரை எல்லாவற்றையும் எதிர்கொண்டு நின்றார்; இறுதியில் வென்றார். தன் தந்தையே திருமணத்தைப் புறக்கணித்தார் என்றாலும் கலங்கவில்லை இந்த லட்சிய வீரர்!

இதுதான் சுயமரியாதைக்காரனின் மனதிடம்!

கொண்ட கொள்கைதான் அவர்களுக்கு தங்கள் உயிரை விட மேலானது; உறவுகூடப் பிறகுதான். இப்படிப்பட்ட நெஞ்சுரத்தின் உருவகமாகவே விளங்கிய பெரியார் பெருந் தொண்டர் மானமிகு என்.ஆர்.சாமி _- இராமனை மறையச் செய்த அமைதிப் புரட்சியாக என்.இராமசாமி மறைந்து என்.ஆர்.சாமியாக உருவாகியது!

இன்றும்கூட இல்லாத அந்த இராமன், சேது கால்வாய்த் திட்டம் போன்றவற்றைக் கூட தடுத்துநிறுத்த முயலும் பொல்லாத வேலையைச் செய்வான் என்பதை அவரின் தலைவரும் அவர் அடியொற்றிய தொண்டரும் தோழரும் அன்றே உணர்ந்தனர் போலும்!
பேராண்டாள் என்றும் கொள்கை விளக்கு!

அவரது வாழ்விணையரான திருமதி பேராண்டாள் அம்மையார் அவர்கள் _- அவரது கொள்கை வயப்பட்ட வாழ்க்கைக்கு ஓர் அருந்துணையாக வாழ்ந்து காட்டினார். அவரது பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் உட்பட இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு ஆசிரியையாக விளங்கி வந்த கொள்கைக் குடும்ப விளக்காகவே அவர் மறையும் வரை வாழ்ந்தார்கள்!

நூற்றாண்டு நாயகரான அருமை மானமிகு என்.ஆர்.எஸ். அவர்களை நான் 10 வயதுச் சிறுவனாக இருந்த காலம் முதற்கொண்டு அறிந்தவன்.

கொள்கைத் திரிசூலங்கள்!

காரைக்குடியில் திரு.இராமசுப்பையா_ விசாலாட்சி அம்மையார் குடும்பம், அன்பிற் குரிய ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் எல்லாம் அக்காலக் ‘கொள்கைத் திரிசூலங்களாக’ விளங்கினர்.
என்றாலும், என்.ஆர்.சாமி மட்டும் இறுதி வரை, ஒரே தலைவர், ஒரே கொடி, ஒரே கொள்கை என்ற இராணுவக் கட்டுப்பாட்டை ஏற்ற கருஞ்சட்டை இராணுவத் தளபதியாக அப்பகுதியில் வளர்ந்தார்; வாழ்ந்தார்; கழகத்தை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்!

சிவகங்கை – சுயமரியாதைக் குடும்பம்

சிவகங்கை (அப்போது இராமநாதபுர மாவட்டம் _ பிரியாத மாவட்டம்) சுயமரியாதைக் குடும்பம் சுயமரியாதை வீரர் இராமச்சந்திரனார் தொடங்கி, வழக்குரைஞர்கள் இராஜசேகரன், சத்தியேந்திரன், இராமசுப்ரமணியம், வழக்குரைஞர் இரா. சண்முகநாதன், பொறியாளர் பாலசுப்ரமணியன், இராமலக்குமி சண்முகநாதன், வழக்குரைஞர் இன்பலாதன் என்ற பல தலைமுறைகள் _- ஆலமரத்தின் விழுதுகள் போல், அவர்களுடன் கொள்கை உறவாளர்களாக மானமிகு என்.ஆர்.சாமி குடும்பமும் நெருக்கமான நட்புறவு கொண்டு அன்றுமுதல் இன்று வரை இயங்கி வருகிறது.

தி.மு.க. பிரிந்த பிறகு…

திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த பிறகு _- 1949க்கு பிறகு இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் (பின்னாளில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமான) வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்கள், மாவட்டச் செயலாளர், செயல்வீரர் என்.ஆர்.எஸ். ஆகியோர் தொடர்ந்து பணியாற்றினர்.

இருவரும் இணைபிரியா ‘ஒரு மனதான இரட்டையர்’ போன்ற தோழர்கள்! செயல்வீரர்கள்! ‘வக்கீல் அய்யா’ என்பார் அவரை இவர்; ‘சாமி அண்ணன் என்ன சொல்றாங்க? என்பார் வக்கீல் அய்யா!’ நான் கண்டு கேட்டு வியந்ததுண்டு!

காரைக்குடி ஒரு வைதிகபுரி _ காங்கிரஸ் கோட்டை _ நகரத்தார்கள் அதை அக்கால பழமைப்புரியாக வைத்த காலத்தில், ஈரோட்டுப் பூகம்பத்தால் அது அதிர்ந்தது கண்டு அவர்கள் வெகுண்டெழுந்து, கூட்டங்களில் கலவரங்கள் செய்தது உண்டு!

மெய்க்காவலராக…

என்.ஆர்.எஸ். போன்ற தொண்டர்கள் அய்யாவின் மெய்க்காவலர்களாக ஆயுதங்கள் தாங்கி ‘இரண்டில் ஒன்று’ பார்த்துவிடுவது என்ற முறையில், உயிருக்குத் துணிந்த தற்கொலைப் படை வீரர்களாக இருந்ததின் விளைவே, இன்று அந்நகரம் பண்பட்ட கல்விநகரம், பக்குவப்பட்ட திராவிடச் சிந்தனைகளை செரிமானம் செய்த செம்மைக்குடியாக காரைக்குடி -_ கம்பன் புகழ் பாடினாலும் _- கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து கழகப் புகழ்பாடி, பரவசப்படுத்துகின்றன!

அந்நாளில் அத்தகையோரின் துணிவும் தியாகமும் உழைப்பும்தான் அதற்கு இட்ட உரம் ஆகும்!

‘கார்ல்மார்க்ஸ் மார்ட்’ கருப்பையா அவர்களும், மரக்கடை திரு.ஆர்.சுப்ரமணியம் அவர்களும், வீரப்பன் செட்டியாரும், என்.ஆர்.சாமியால் பிரபலமான காரைக்குடி கல்லுக்கட்டியில் (வெளியூர்க்காரர்கள் அதனை விசாரித்தே வருவர்!) கடை எதிரே இருந்த திரு.குருசாமி அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். ஒரு கழகப் பிரச்சார நிலையமாக என்றும் திகழும் அந்த கடைக் ‘கல்லாவுக்கு’ அருகில் (நான் காரைக்குடி செல்லும்போது) அமர்ந்து அவர்தம் திண்ணைப் பிரச்சார முறையைக் கண்டு மிகவும் சுவைத்ததுண்டு!

இரண்டாம் தலைமுறை!

இன்று இரண்டாம் தலைமுறையினரான தம்பிகள் சாமி சமதர்மம், சாமி திராவிடமணி, சாமி திராவிடச் செல்வம் போன்றவர்களையும், அவர் இயக்கப் பணிகளைச் செய்ய பழக்கப் படுத்திய நேர்த்திகளையும் எப்போதும் மறக்கவே முடியாது! அதற்கு அடுத்த தலைமுறைகளும்  வளர்ந்தோங்கி உள்ளது.

அய்யாவிடம் மாவட்டச் சுற்றுப்பயணத் தேதிகளை வாங்கி அய்யாவுடன் சென்று அந்தந்த ஊர்களில் காலையில் டி.பி.யில் (பயணியர் விடுதி) அய்யாவைத் தங்க வைத்து விட்டு, வக்கீல் அய்யாவும் என்.ஆர்.எஸ். அவர்களும் அவர்தம் பழைய கார் ஒன்றில் கடைவீதி முழுவதும் சுற்றி வசூலும், அய்யா கூட்டப் பிரச்சாரமும் அழைப்பும் (முக்கியப் பிரமுகர் களுக்கு) விடுத்துவரும் ஆற்றல்மிகு செயல் திறன் _- மானம் பாராத பொதுத் தொண்டின் எடுத்துக்காட்டுகள்!

இக்கால இளைஞர்கள்
கற்கவேண்டிய பாடம்

இக்கால இளைஞர்கள் கற்கவேண்டிய கொள்கைப் பாடங்கள்! இன்றைய வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் 1972 இறுதியில் மாநாடு நடத்தத் திட்டமிட்ட போது, அரசியல் விஷமிகளால் அம்மாநாட்டுக்கு முதல் நாள் இரவு பந்தல் தீயிடப்பட்டு எரிந்துவிட்டது. இது அய்யாவைக் கவலைப்பட வைத்தது; எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெறியேறி கட்டுப்பாட்டை உடைத்து, கலைஞர் ஆட்சிக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டதை தந்தை பெரியார் கண்டித்ததனால் அ.தி.மு.க.வினருக்கு _ -திராவிடர் கழகம், தந்தை பெரியார் மீது கோபம் _ அதன் விளைவே அச்செயல்!

இதை அறிந்து திடுக்குற்ற நம் தோழர்களை அய்யா (ராணிப்பேட்டை அரசு ஓய்வு விடுதி யில் தங்கியிருந்த நிலையில்) சமாதானப்படுத்-தினார்கள். மேனாள் மின்துறை அமைச்சர்
திரு. ஆர்க்காடு என்.வீராசாமி அவர்கள் அன்று வந்து உடனே உதவினார். பந்தல் மீண்டும் ஒரே நாளில் போட்டு நடத்திட ஒத்துழைப்புத் தந்தார்; முதல் நாள் காரைக்குடியிலிருந்து காரில் வந்திருந்த வக்கீல் அய்யா சண்முகநாதனும், என்.ஆர்.சாமியும் கழகத் தொண்டர்களுடன் தொண்டர்களாக நின்று, கழிகளைத் தூக்கி புதுப்பந்தல் போட உறுதுணையாக இருந்தனர். வெற்றிகரமாக மாநாட்டை நடத்த அரும்பாடு பட்ட அக்காட்சி இன்றும் என்னால் மறக்க முடியாத காட்சியாகும்; நிகழ்வாகும்!

வேறு மாவட்டம், எதிர்ப்பு என்பவை பற்றி இவ்விருவரும் கவலைப்படாது தலையில் முண்டாசுகட்டி பந்தலில் (நாங்களும் நின்று பணிபுரிந்தோம்) பணியாற்றிய துணிச்சல் சாதாரணமானதா?

கல்லுக்கட்டியில் மல்லுக்கட்டி…

கல்லுக்கட்டியில் கடை வைத்து மக்களிடம் மல்லுக்கட்டிக் கழகம் வளர்த்த அந்த அரும் பெரும் கொள்கை வீரர் _ சாமி பற்றி எவ்வளவோ எழுதலாம்!

அவர்கள் அமைத்திட்ட அடித்தளத்தில் தான் இன்று கழகக் கொள்கைக் கோட்டை கம்பீரமாக எழுந்து நிற்கின்றது!

பழைய சுயமரியாதை வீரர்கள் பலரது வாரிசுகள் ‘திசை மாறிய பறவைகளாகி விடும்’ பரிதாபத்தை நாம் காணுகிறோம்; ஆனால் என்.ஆர்.எஸ்., வக்கீல் அய்யா (இரா.ச.) குடும்பத் தினரோ இதற்கு முற்றிலும் விதிவிலக்கு.

பெயர்களிலும் புரட்சி

அவரது கொள்ளுப் பேரர்களும் கூட கொள்கை வாரிசுகளாகவே விளங்குவது மகிழ்ச்சி. அக்காரியத்தில் அவரது பிள்ளைகள் _ பெண், ஆண் எவரா யினும் பெயர் வைத்த பாங்கினைப் பாருங்கள்:

அய்யா 1932இல் ரஷ்யா போய்த் திரும்பியதை யொட்டிய பெயர்கள்: ஜனசக்தி, சமதர்மம்.
அதன் பின்னர் தமிழரசி, திராவிடமணி, ஈ.வெ.ரா.மணியம்மை, திராவிடச் செல்வம்.

இவர்களது பிள்ளைகளின் பெயர்களிலும் புரட்சி பூபாளங்களே, இதோ: பெரியார் செல்வன், நிலா அரசி, வீனஸ்ராணி, பெரியார் சாக்ரடீசு, இங்கர்சால், என்னாரெசு பிராட்லா, பெரியார் லெனின், மேடம் என்னாரெசு, பிரின்சு என்னாரெசு பெரியார், பிரின்சசு பேராண்டாள் மங்கை, புரூனோ என்னாரெசு, வாலண்டினா, பவானி என்னாரெசு மணியம்மை, நான்காம் தலைமுறை: தமிழீழம், டார்வின் தமிழ், தமிழ் இசை, நவயான், இனியன் தமிழ், சமானதா, புத்தன், சித்தார்த்தன் உட்பட.

இவர்களது அடுத்த 4ஆவது தலைமுறையும் கூட கொள்கை முழக்கமிடும் சிறந்த குட்டிகளாகவே வாழ்வதைவிட, அவருக்கு வேறென்ன கொள்கைச் செல்வம் வேண்டும்?
தொண்டறத்தில் சிறந்தார் _- என்றும் மறைந்தவர்களல்லர்; வரும் தலைமுறைகளாலும் மறைந்தவர்களாக ஆக மாட்டார்கள்.

காரைக்குடியில் தந்தை பெரியார் சிலை

அவரது அற்புதச் சாதனைகளுடன் தமிழக முதல்வர் கலைஞர், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், முத்தையவேள், அன்பில், நான் கலந்து, திறந்தது இன்று நகரின் நடுப்புறத்தில் நிற்கும் பெரியார் சிலையாகும்.

அதனைப் பார்க்கும் போதெல்லாம் ஈரோட்டுப் பெரியார் இராமசாமியும் தெரிவார். காவனூர் _ காரைக்குடி இராமசாமி (என்.ஆர்.சாமி)யும் தெரிவார்!

அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர், நடிகவேள் போன்ற அத்துணை தந்தை பெரியார் தம் தளபதிகளின் அன்பைப் பெற்று, கொள்கை வாழ்வு வாழ்ந்தவர் அவர்!

அவர் தாங்கிப் பிடித்த கொடி இன்று 4ஆவது, 5ஆவது தலைமுறையின் கையில் தவழ்கிறது! இது வாழையடி வாழையாக வந்திருக்கும் கூட்டம் என்பதைப் பறைசாற்றும் கொள்கைக் குடும்பம்.

அத்தகைய குடும்பத்தில் நடைபெற்ற “தாலியில்லாப் புரட்சித் திருமணம்”

காரைக்குடி, முகவை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் என்.ஆர்.சாமி அவர்களின் வீட்டுத் திருமணம் 20.05.1979 அன்று நடைபெற்றது. என்.ஆர்.சாமி அவர்களின் செல்வி ஈவெராமணியம்மை _  மணிவண்ணன், அவரது மகன் திராவிடச்செல்வன் _ தமிழ்ச்செல்வி ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த விழா புதுமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

காலையில் பெரியார் இல்லத்திலிருந்து கழகத் தோழர்கள் பொதுமக்கள் மணமக்களுடன் ஊர்வலமாக மேளதாளமின்றி கொடிகளுடன் தந்தை பெரியார் சிலை சென்றடைந்தது.

என்னுடைய தலைமையில் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து, உடன் மாவட்டத் தலைவர் இரா.சண்முகநாதன், மாவட்ட செயலாளர் என்.ஆர்.சாமி, மணமக்கள் நால்வர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

அங்கிருந்து நான் உடன் செல்ல வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவே மணமக்கள் இணையாக வர ஊர் நகர முக்கிய கோவில் அருகே வந்தபோது கடவுள் மறுப்பு ஒலி முழக்கமிட (மணமக்கள் உள்பட) திருமண மண்டபத்தை வந்தடைந்தது.

நான் தலைமை தாங்கி வாழ்க்கை ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன். மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறவைத்து, கணவனை இழந்த விதவைத் தாய்மார்கள் இருவர் மலர்மாலை மோதிரங்களை எடுத்துக் கொடுக்கச் செய்து தாலியின்றி சிறப்பாக நடத்திவைத்து அறிவுரையாற்றினேன்.

தொடர்ந்து புலவர் ந.இராமநாதன், இரா.சண்முகநாதன், திருப்பத்தூர் கல்வி வள்ளல் ஆறு.நாகராஜன், சித.சிதம்பரம் முன்னாள் எம்.எல்.ஏ., தேவக்கோட்டை, திருமதி கமலம் செல்லத்துரை, பொ.முருகானந்தம் (தி.மு.க.), தமிழரசன் கண்மணி ஆகியோரும் மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

விழாவில் கழக தோழியர்கள், தோழர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பெருந்திரளாக கலந்துகொண்டனர். மணமக்கள் சார்பாகவும், திருச்சி அன்னை நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.100/_ என்னிடம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *