ஜான் வில்சன் எழுதிய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா

பிப்ரவரி 16-28

 

தொன்மைக்கால இந்தியாவும் தற்கால இந்தியாவும் பரப்பளவிலும் அவற்றின் உற்பத்தியிலும் பெருத்த வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றன. உலகின் பிற நாடுகளோடு அவை கொண்டிருக்கும் தொடர்புகளிலும் வேறுபாடு இருக்கின்றது. தற்கால இந்தியா, வடக்கில் இந்துகுஷ் _ இமயமலைத் தொடர்களையும் தெற்கில் ‘சிலோன்’ (இலங்கைத் தீவையும் முழுமையாக உள்ளடக்கியிருக்கிறது.

மேற்கில் சிந்து, குஜராத், கொங்கன், மலபார் கடற்கரைப் பகுதிகள் முதல், கிழக்கில் சீனா, பர்மா, ஒரிசா, கொரமண்டல் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் பிரிட்£னிய அரசுக்குச் சொந்தமானது என்றும், இதன் மொத்தப் பரப்பளவு 1,465,322 சதுர மைல்களாகும் என்றும் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்-பட்ட அறிக்கை கூறுகின்றது. (ஏறக்குறைய 1,50,5322 சதுர மைல்). உலகில் மிக உயரிய, கண்ணுக்கினிய, விழுமிய மலைத் தொடர்-களுக்கும் தொகுதிகளுக்கம் இடையே பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களும் பழங்குடி மக்களும் அடங்கிய இருபது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். வெவ்வேறுபட்ட தட்பவெப்ப நிலைகளைக் கொண்டடிருந்த அந்தப் பெரும் நிலப்பரப்பு, அளவான குளிர்காலத்தையும் வேனிற்காலத்தையும் பெற்றிருந்தது. அந்த நிலப் பரப்பைச் சுற்றியுள்ள கடற்பரப்பிலிருந்து நீர் ஆவியாகி, மண்ணை வளப்படுத்தும் வான்மழையாக _ மலைப்பகுதிகளில் பொழிந்து செழிப்பாக்குகிறது.

பருவ காலத்தில் கதிரவன் தன் ஆற்றல்மிக்க ஒளிக் கதிர்களால் பயிர்களுக்கு உயிர்ப்பூட்டி உற்பத்தியைப் பெருக்குகிறான். இருப்பினும் இதன் சில பகுதிகளில் குறிப்பாக இராஜபுதனத்தின் எல்லைப் பகுதிகளில் மழை இல்லை; ஆதலின் அவை மழையில்லா மாவட்டங்களாகி அங்கு வாழும் மக்களை அச்சுறுத்தும் மரணத்தின் நிழல்படிந்த பாலை நிலமாகக் காட்சியளிக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கே வைத்து உற்று நோக்கினால், இந்த நாடு மிகச் சிறந்த இயற்கை வளத்தையும் வல்லமையையும் பெற்றுத் திகழ்கிறது எனலாம்.

வடக்கில் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர்களிலிருந்தும் சமவெளிப் பகுதிகளி-லிருந்தும் உருவாக்தி தென்மேற்காக ஓடிவரும் சிந்து நதியும் [மிழிஞிஹிஷி] அதன் கிளை ஆறுகளும், தென்கிழக்கில் ஓடிவரும் கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளும் இணையில்லா ஆறுகளாக விளங்குகின்றன. இவை வேளாண்மைக்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கும் பெரிதும் பயன் பட்டதோடு, மிக இன்றியமையாதவையாகவும் திகழ்ந்தன. விந்தியாத்ரி, சாகியாத்ரி மலைத் தொடர்களில் உருவாகி ஓடிவரும் துணையாறுகள் மேற்கிலும் தெற்கிலும் பாய்ந்தோடி மக்களின் தொழில், வணிகத் துறைகளை வளப்படுத்துகின்றன.

மேலும் ஆங்கில அரசின் கீழ், பணியாற்றத்தக்க, தகுதியுடையவர்களாக அவர்களை அறிவியல் துறையில் வளர்த்தன. அதன் காய்கறி உற்பத்தியானது மக்களின் தேவைக்கும் ஆடம்பர வாழ்வுக்கும் எற்ற வகையில் உதவியாக இருந்தது. அது மட்டுமல்லாது இந்த மண்ணின் தொல்குடி மக்களது தேவைக்குமேல் காய்கறி உணவுப் பொருள் உற்பத்தி இருந்தமையால் அவர்கள் புலால் உணவை நாடவேண்டிய தேவை இல்லாமற் போய்விட்டது.

இந்த மண்ணில் அழியாது விளைந்து கொண்டிருந்த சில வகைத் தாவரங்களிலிருந்து தங்கள் ஆடைகளை அவர்கள் தயாரித்துக் கொண்டார்கள். தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே வளர்ந்திருந்த ஒருவகை மரத்தின் கிளைகளையும் இலைகளையும் கொண்டு தங்கள் வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். அவர்களின் உழைப்புக் கருவிகளைச் செய்வதற்கான மூலப் பொருள், அந்த நிலங்களிலேயே விளைந்து கிடந்தன. சில மாவட்டங்களில் பயன்மிக்க கனிமங்களைத் தோண்ட எடுக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். குறிப்பாக, இயந்திரங்களுக்குப் பயன்படும் நிலக்கரி முதலான கனிமங்களை அவர்கள் பண்படுத்தப்பட்ட, பண்படுத்தப்படாத நிலங்களைத் தோண்டி எடுத்தனர். அரசர்கள் (காட்டுவிலங்காண்டிகளைப் போலப்) பேராசை கொண்டவர்களாக முத்துக்களையும் தங்க அணிமணிகளையும் அணிந்திருந்தனர். வைரம், பொன், மாணிக்கம் முதலானவை நாகரிகம் படைத்த இந்த மண்ணில் செல்வர் வீடுகளிலும் அரண்மனைகளிலும் ஒளிவீசி அழகு செய்தன.

தங்களது உற்பத்திப் பொருட்களை அயல்நாட்டுப் பொருட்களோடு பண்டமாற்றுச் செய்து கொண்டு வெளிநாடுகளுடன் வணிக உறவுகளை வளர்த்துக் கொண்டார்கள். இதனைத் தங்களின் வசதிக்காகவே அவர்கள் செய்து கொண்டார்களேயொழியப் பொருளியல் முட்டுப்பாடுகளுக்காக அல்ல. தொலைதூர நாடுகளிலிருந்து பண்டங்கள் இங்கு கொண்டுவரப்பட்டன. அவற்றைக் கையிருப்பில் மிகையாக வைப்பதற்காக அல்ல; இயற்கைப் பேரழிவு நேரிடும்போது, எல்லைப் புறத்தில் வாழும் மக்களின் தேவைக்காகப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

இதன் ஆண்டு வருமானத்தில் பிரிட்டானிய அரசுக்கு 300,00000 ஸ்டெர்லிங் இந்தியா செலுத்திக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நாட்டின் மொத்தப் பொதுக்கடன், அதன் சொத்துக்களைக் கொண்டு உடனடியாக எளிதில் தீர்த்துவிடக் கூடியதாகவே இருந்தது; இதன் ஈராண்டு வருமானத்தைவிட அந்தக் கடன் குறைவாகவே இருந்தது. (1855_இல் இந்திய அரசின் ஆண்டு வருமானம் 2,91,33000 ஸ்டெர்லிங்காகவும் இந்த ஆண்டில் அதன் பொதுக் கடன் 5,55,31120 ஸ்டெர்லிங்காகவும் இருந்தது.) இந்த நாடு ஏற்றுமதி செய்த பொருட்கள் மிக அதிகமானவை; அருமைப்பாடு மிக்கவை; மதிப்புமிகக்வையாக இருந்தன. உலகின் தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியப் பொருட்களின் வாயிலாக ஏறக்குறைய 11 லட்சம் டன் பொருட்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. மேற்கத்திய நாடுகளிலிருந்து பெருமளவு செல்வம் தொடர்ந்து இங்கே வந்து குவிந்து கொண்டிருந்தது. இப்போது அது பரந்த உள்ளம் கொண்ட நற்செயலாற்றும் விருப்பமுடைய _ ஆர்வமும் அக்கறையும் கொண்ட ஓர் அரசாங்கத்தைப் பெற்றிருக்கிறது. இன்னும் அதனைப் பாராட்ட அது கற்றுக் கொள்ள-வில்லை. உலகிலேயே அறிவிற் சிறந்த, கொடைக்குணம் கொண்ட நாடு அது என்பதை இவர்கள் இன்னும் சரியானபடி உணர்ந்து கொள்ளவில்லை.

இந்த மாலை வேளையில் நாம் கலந்துரையாடப் போகும் ‘பழங்கால இந்தியா’ இன்று பெற்றுள்ளதைப் போன்ற பெருமையை _ முதன்மையை அன்று பெற்றிருக்கவில்லை. ‘இண்டஸ்’ என்னும் ஆறு பாய்ந்தோடும் நாடு என்ற அளவிலேயே அது அறியப்பட்டிருந்தது. ‘இண்டஸ்’ என்னும் இந்தச் சொல்லில் இருந்துதான் அது (இந்தியா) என்று தன் பெயரைப் பெற்றது. பின்னர் மேலே நாம் குறிப்பிட்டுள்ள எல்லைகளுக்குட்பட்ட பரந்த நிலப்பரப்பிற்கு அந்தப் பெயர் வழங்கி வருவதாயிற்று. இது முதன்மையாக ‘பஞ்ச நாடா’, கிரேக்கர்களின் ‘பென்டிபொடாமியா’ அல்லது பிற்காலத்தில் வழங்கப் பெற்றதைப் போல அய்ந்து ஆறுகள் பாயும் நிலமான ‘பஞ்சாப்’ என்று பெயர் பெற்றது. இண்டஸ் ஆற்றின் கிளையாறுகள் பாய்கின்ற மாவட்டங்களை உள்ளடக்கியதாக அது இருந்தது. தொன்மைச் சமஸ்கிருதத்தில் அது ‘சிந்து’ அல்லது ‘சிந்தஸ்’ என்று பெயரிடப்பட்டது.

இதற்கு ‘இண்டஸ்’, என்ற சொல்லே ஒப்பானதாகும். (நிகரானது). ‘உஸ்’ என்னும் ஒலிப்புடைய அந்த எழுத்து ‘லீ’ என்று உருமாற்றம் பெற்றுவிட்டது. கிரேக்கர்களைப் போல இங்கு வாழ்ந்த மக்களும் மிக எளிதில் அந்த உருமாற்றத்தைச் செய்தார்கள். நாம் மிகக் கவனமாகத் துல்லியமான _ சரியான உச்சரிப்புடன் அதனைக் கையாள வேண்டும். ‘இண்டஸ்’ நதி பாய்ந்தோடிய நிலப்பரப்பே (அது மட்டுமே) ஆதி ‘இந்தியா’வாகும்.  இப்போது இந்தியாவை விட்டுவிட்டு ‘சிந்து’ அல்லது பஞ்சாப்பைப் பற்றிப் பேசுவது என்றால், அது பிரிட்டனின் வடபகுதியிலுள்ள ‘நார்தம்பிரிய’ப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், பழைய ஆங்கிலியா மாவட்டங்களக்குச் செல்லும்போது நான் இங்கிலாந்தை விட்டு வெளியேறிவிட்டேன்’ என்று கூறும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானதாகும். பழங்கால இந்தியா, தற்கால இந்தியா உள்ளடக்கியிருக்கும் எல்லைப் பரப்பில் அல்லது வாய்ப்பு வளங்களில் இருபதில் ஒரு பகுதியைக் கூடப் பெற்றிருக்கவில்லை. இக்கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு இதன் பெருமைமிக்க செல்வச் செழிப்பைப் பற்றித் தெரியவில்லை.

அவர்களின் பின் சந்ததியின் பிற்காலத்தில் இக்கண்டத்தை விரிவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு அவர்கள் பெறப்போகும் வெற்றிகளைப் பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது. தங்கள் இனத்தவரின் திறமையும் ஆற்றலும் எந்தத் துறையில் வளரப் போகின்றன என்பதும் அவர்களுக்குத் தெரியாது. தொன்மைமிக்க இந்த நிலத்தில் அவர்களுக்கு முன்னரே வாழ்ந்து கொண்டிருந்த தொல்குடி மக்களை (இந்த மண்ணின் மைந்தர்களை) எவ்வாறு முன்னேற்றுவது அல்லது அவர்களை எவ்வாறு அடக்கி ஒடுக்கித் தாழ்நிலையில் வைத்திருப்பது என்பதில் தங்களின் பின் சந்ததியின்ர் தங்கள் திறமையைப் பயன்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும் அவர்கள் அறியவில்லை; மனிதக் குடும்பத்தின் மூலவர்களாகிய அப்பழங்குடி மக்கள், இயற்கையின் வியப்பிற்-குரிய வளங்களைத் தெரிந்து கொள்ளவும் அந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி அந்த இயற்கை வளங்களைச் சுவைக்கவும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த இயற்கை வளங்கள் இன்னும் நம்மைச் சூழ்ந்து நின்று களிப்பூட்டுகின்றன.

இந்தியக் கண்டத்தைப் பற்றிய, புவியில் விளக்கங்களோடு கூடிய இந்த முன்னுரை போதுமானதாகும். அடுத்து, காலவரிசைப்-படியும் இனப்பரப்பு வகையிலம் சிறியதொரு விளக்கத்தைக் காணலம். இந்தச் சொற்-பொழிவுக்கு, “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா’’ அல்லது, “வேதகாலத்து ஆரியர்களின், இண்டஸ் நதிக்கரையில் _ அவர்களது சமூக வாழ்க்கை நிலை’’ என்று நாம் தலைப்பிட்டிருக்கிறோம். ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின் இவ்வாறு நாம் செய்திருக்கிறோம். அதனால் நாம் இலக்கியச் சான்றாவணமாக மாறியிருக்கிறோம். முறையாக அமைந்திராத _ பண்படுத்தப்படாத பழங்கதைத் தொகுதிகளைக் கொண்ட தொன்மை வாய்ந்த இந்திய _ சிங்களப் படைப்புகளைக் (இலக்கியங்களைக்) கொண்ட தொகுதிகளின் இடையே, ஒன்றிரண்டு காலப் பகுதிகளைத் துல்லியமாக வரையறை செய்திருக்கிறோம்.

இவற்றில் மிக முக்கியமானது கி.மு.544 அல்லது 543_ஆம் ஆண்டில் புத்தவியலைத் தோற்றுவித்த சாக்கியமுனியின் மரணமாகும். புத்தவியல் என்பது எதற்கும் அஞ்சாத தவறான யூகங்களைக் கொண்ட ஒரு முறையாகும். அது உயிர் வாழ்வனவற்றையும், தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களையும் இயற்கையின் மேலும் வளர்நிலைப் போக்கின் மேலும் ஏற்றிச் சொல்லும் முறையாகும்.

அது எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த படைப்பாளனைப் பற்றி அல்லது நீடித்து நிலைத்திருக்கும் கடவுளைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லாமல் பேசுவதாகும். மேலும் அது தனி மாதிரியான ‘அவனுடைய’ ஆன்மவியல் அழிவில்தான் மனிதனின் மிகச் சிறந்த நற்பண்புகளை உணரமுடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தச் சிந்தனை சார்ந்த மனப்போக்கு _ முழுமையான வளர்ச்சியடையாத அல்லது அமைப்பாக (நிறுவனமாக) உருவாகாத _ இக்கருத்தியல் பிறருடைய எழுத்துக்களிலும் காணப்படுகிறது. குறிப்பாகச் சாங்கியத் தத்துவத்தைத்  தோற்றுவித்தவரான கபிலமுனியின் எழுத்துக்களிலும் இக்கருத்தியல் நிலவுகிறது. சாங்கியம், இந்தியத் தத்துவ முறைகளில் ஒன்றாகும். இது புத்தவியலுக்கு _ முன்பு தோன்றியதாகும்; தொன்மைசான்ற சாங்கிய_புத்தவியல் நூல்களும், காலத்தால் இவற்றிற்கு முற்பட்டவையாகக் கருதப்படும் வேறு இரண்டு தத்துவங்களும் இவற்றிற்கு முன்பாகவே இசைப்பாடல் வடிவிலான இலக்கியம் இருந்தமையை ஒப்புக் கொள்கின்றன. அவை ‘வேதங்கள்’ என்று அழை க்கப்படுகின்றன.
– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *