அக்கிரகார மயமக்கபட்ட அரசுபணீயாளர் தேர்வாணையம்
கேள்வி : மகாமகத்தில் காட்டும் அக்கறையை, அரசு, கல்வித் துறையில் காட்டத் துணியாதது ஏன்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : மகாமகம்தானே, பாவங்களையெல்லாம் கழுவும், அரசு கல்வித் துறையாலா அது முடியும்.
கேள்வி : சமூகநீதித் தலைவர் தந்தை பெரியார் மண்ணில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் தற்கொலை, கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறதே?
– எஸ்.கே.அகமது, தக்கலை
பதில் : தற்போதுள்ள கல்வி முறையும், நடத்தைகளும் மாணவர்களுக்குத் தன்மானத்தையும் தன்னம்பிக்கையையும், ஏற்படுத்திடப் போதுமானத் திட்டங்களுடன் செயல்படாததே முக்கிய காரணமாகும்!
கேள்வி : நடிகர் சத்யராஜ் அவர்கள் பகுத்தறிவுக் கருத்துகள் கூறி நடித்து வந்தார்கள். இப்பொழுது பேய்ப் படத்தில் நடிக்கிறார்கள். இது உண்மையான கொள்கைதானா?
– அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி
பதில் : தொழில் திரைப்படம் – நடிப்பு அவ்வளவுதான். அடிப்படையில் அவர் என்றும் மாறாத பகுத்தறிவுவாதியே ஆவார்!
கேள்வி : ஜப்பான் நாட்டில் ஒரே ஒரு மாணவருக்காக இரயில் இயக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பள்ளிக்கூடம் செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படியில் தொங்கும் அவலம் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– இல.சீத்தாபதி, தாம்பரம்
பதில் : இந்தியா இன்னும் ஜப்பானாக மாறவில்லையே என் செய்வது?
கேள்வி : டெல்டா விவசாயிகள் தண்ணீருக்குத் தவிக்கும்போது, கும்பகோணம் மகாமகக் குளத்திற்குத் தண்ணீர் திறந்துவிட தீவிரமுயற்சி எதைக் காட்டுகிறது?
– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்
பதில் : அதனால்தான் டெல்டா விவசாயிகள் அதனைக் கடுமையாக எதிர்த்துள்ளார்கள்! அவர்களது துணிவு, தெளிவுக்காக நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும்.
கேள்வி : அரசுப் பணியாளர் தேர்வாணையம் அ.தி.மு.க. கிளை அமைப்பாக ஆக்கப்பட்டுள்ளது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– க.இ.சங்கத்தமிழன், செங்கை
பதில் : அ.தி.மு.க. கிளை அமைப்பாக மட்டும் மாற்றப்படவில்லை, வரலாறு காணாத வகையில் ‘அக்கிரகாரமாக’வும் ஆக்கப்பட்டுள்ளதே!
கேள்வி : சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரமே இல்லாமல் மாணவர்களைச் சேர்த்து பல லட்சங்களை வாங்கிக் கொண்டு, பின் அவர்களை நடுத்தெருவில் விடுவதைத் தடுக்க என்ன தீர்வு?
– கி.சாரதா, திண்டிவனம்
பதில் : அங்கீகாரம் கொடுப்பது சும்மாவா? உரிய வகையில் கவனிக்கப்பட்ட பிறகுதானே! அந்நிலை நீடிக்கும்வரை இப்படித்தான் நிலைமை நீடிக்கும்!
கேள்வி : ஜெர்மன் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் விருது பெற்ற மனித உரிமைப் போராளி ஹென்றி டிபேன் பற்றித் தங்கள் கருத்து?
– சோ.கன்னியப்பன், அரக்கோணம்
பதில் : நல்ல பணி, தொண்டு செய்யும் மனித உரிமைப் போராளி. நமது பாராட்டுக்கள்!
கேள்வி : பழ.கருப்பையா அரசியலைப் புறந்தள்ளி தந்தை பெரியார் இலட்சியங்களை அடைய பாடுபடுவதே அவர் தகுதிக்கு அழகு என்று எண்ணுகிறேன். என்ன நினைக்கிறீர்கள்?
-ச.செம்பருத்தி, திருச்சி
பதில் : உங்கள் ஆசையை அவருக்கே நேரில் தெரியப்படுத்துங்கள். கடிதங்கள் மூலமாகவும் செய்யலாமே!