செய்ய்க்கூடாதவை

பிப்ரவரி 16-28

குழப்பத்தில், கோபத்தில், அவசரத்தில் முடிவெடுக்கக்கூடாது:

நாம் ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. மன உளைச்சலில் முடிவெடுக்கக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டுச் செயல்படக்கூடாது. இது போன்ற மனநிலையில் எதையும் செய்யாது தனிமையில் அமைதியாய் இருந்து, முடிந்தால் தூங்கி எழுந்து, தெளிந்த மனநிலையில் முடிவுகள் மேற்கொண்டால், பல இழப்புகள், கேடுகள், தப்புகள், பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.  பதற்றமான மனநிலை, உணர்ச்சிவயப்பட்ட நிலை, கோபம் கோலோச்சும் நிலை, தூக்கக் கலக்கம், குழப்ப நிலை, உடல் நிலை சரியில்லாத நிலைகளில் முடிவெடுக்காமல் தள்ளிப் போடுவதே நல்ல முடிவு ஆகும்.

தலைச்சுற்றல் உள்ளவர்கள் காபி சாப்பிடக் கூடாது:

காபி சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும். பித்தம் கூடினால் தலைச்சுற்றல் ஏற்படும். எலுமிச்சைச் சாற்றில் சீரகப் பொடிகலந்து சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகினால் நலம் கிடைக்கும். மது, புகை அறவே நீக்கப்பட வேண்டும். இறுக்கமான ஆடைகாளால் இரத்தவோட்டம் பாதித்து, உடலுக்குத் தேவையான உயிர்வளி (ஆக்ஸிஜன்) கிடைக்காமல் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, உடை தளர்வாக இருப்பது நல்லது. காலையில் இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி, எலுமிச்சை இவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். நெல்லிக்காய் இருவேளை சாப்பிடுவது தலைச்சுற்றலை நீக்கும்.

தலைச்சுற்றலுக்குச் சரியான காரணத்தை ஆராய்ந்து, மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து சாப்பிட வேண்டும். தனக்குத்தானே மருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. தலைச்சுற்றல் பல காரணங்களால் ஏற்படும். காது பாதிப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு அடைப்பு, நீர் சரியாகக் குடிக்காமை, சத்துக் குறைவு, சரியாக உண்ணாமை போன்ற பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படும்.

எனவே, மருத்துவரிடம் காட்டாயம் ஆலோசனை பெற்றே மருந்து சாப்பிட வேண்டும். மருத்துவரை சந்திக்க காலம் கடத்தக் கூடாது.

பாலைத் தவிர வேறு எதையும் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது:

பிறந்த குழந்தைக்கு 7 மாதங்கள் வரை பாலைத் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. பால் தாய்ப்பாலாக இருப்பதே சிறந்தது. பசும்பால் சுத்தமாக இயற்கையாகக் கிடைப்பதாயின் தாய்ப்பால் கிடைக்காதபோது கொடுக்கலாம்.

மார்பகத்தைச் சுத்தம் செய்யாது பால் கொடுக்கக் கூடாது

பெண்ணின் மார்பகம் இரண்டு மூன்று துணிகளால் இறுக்க மூடப்படுவது வழக்கம். எனவே, வியர்வை அதிகம் இருக்கும். அழுக்கும் அதிகம் சேரும். அந்த நிலையில் அப்படியே குழந்தைக்குப் பால் கொடுத்தால் குழந்தைக்கு நோய் தொற்றும். குழந்தைக்கும் வாய் வைக்கப் பிடிக்காது வெறுத்து ஒதுக்கும். எனவே, ஒருநாளைக்கு மூன்று முறையாவது மார்பகத்தைச் சுத்தம் செய்து பால் கொடுப்பது தாய்க்கும் நல்லது, குழந்தைக்கும் நல்லது.

கம்பளி உடை குழந்தைக்குக் கூடாது

குழந்தையின் உடல் மிகவும் மென்மையானது. எனவே, மென்மையான பருத்தி ஆடைகளையே உடுத்த வேண்டும். வெய்யிற் காலங்களில் எந்த அளவிற்கு ஆடையைக் குறைக்க முடியுமோ அந்த அளவிற்குக் குறைக்க வேண்டும். குழந்தையின் ஆடைகளைக் காரமான சோப்புகளைக் கொண்டு துவைக்கக் கூடாது. அது குழந்தையின் தோலைப் பாதிக்கும். குழந்தையைக் குளிப்பாட்டும் சோப்பால் அதன் துணிகளைத் துவைத்து, கொதிக்கும் வெந்நீரில் அலசி வெய்யிலில் நன்றாக உலர்த்தி அணிவிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *