மலேரியா ஓர் உயிர்க்கொல்லி நோய்
உலக சுகாதார நிறுவனம் (கீபிளி) இன்றுவரை மலேரியாவை ஓர் ஆபத்தான நோயாகத்தான் வைத்துள்ளது. உலகம் முழுவதும் வருடத்துக்கு பத்து லட்சம் பேர் மலேரியாவால் இறப்பதாகக் கூறுகிறது இந்நிறுவனம்.
மலேரியா குணப்படுத்தக்கூடிய நோய்தான் என்று நகர்ப்புறவாசிகள் கருதும் வேளையில், உலகளாவிய வகையில் நூற்று அய்ம்பது கோடி மக்களுக்கு மலேரியா நோய் கண்டறியும் பரிசோதனைகள் தேவைப்படுவதாய் உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால் இவ்வசதி கிடைத்திருப்பதோ வெறும் இருபது கோடி மக்களுக்குத்தான்.
மலேரியா நோய்க்கு என அறிகுறிகள் உள்ளன. கடுமையான காய்ச்சல், குளிர் நடுக்கம், அயர்ச்சி போன்றவை அவை. இதுபோன்ற எந்த அறிகுறிகளும் காட்டாமல், ஆனால் உள்ளுக்குள்ளேயே மலேரியா நோய்க் கிருமிகளை சுமந்திருப்பவர்களும் ஆபத்தானவர்கள்தான்.
இவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், மலேரியாவை பரப்பி விட்டுக்-கொண்டே இருப்பார்கள்.
புது உபகரணத்தின் தேவை
மலேரியா கொசு பற்றிய அறிதல் நமக்குப் புதிதல்ல. கடந்த ஒரு நூற்றாண்டில் மலேரியா ஆய்வில் நல்ல முன்னேற்றங்கள் கிடைத்தாலும்கூட, பரிசோதனைகளில் அகப்படாமல் நோயாளியின் உடம்பில் பதுங்கியிருக்கும் மலேரியா நோய்க்கிருமி களை அறியக்கூடிய வழிவகைகள் கிடையாது.
மலேரியா நோய்க் கிருமியை அறியும் புது உபகரணம்
‘ஆம்ப்ளினோ’ என்பது மலேரியா நோய்க் கிருமியை அறியும் புதிய உபகரணத்தின் பெயர். இது மிக எளிமையான எந்திரமாகும். உணர்திறன் அதிகம் உள்ள தொழில் நுட்பத்தை இது பயன்படுத்துகிறது. இதனால், மிகக் குறைந்த டி.என்.ஏ. மரபணுக்களையும் உணர்ந்து கண்டுபிடித்து விடுகிறது.
உடலில் சில மர பணுக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து காணப்படுகின்றன. மலேரியா தொற்றுக் கிருமிகள் போய் ஒளிந்துகொள்ள இவற்றைத் தேர்வு செய்துவிடுகின்றன.
இதனால்தான் பல லட்சம் பேர் தங்கள் உடம்பில் மலேரியா கிருமிகளை சுமந்திருப்பதை இதுவரை நம்மால் துப்பறிந்து கண்டுபிடிக்க முடியாமலே உள்ளது.
‘ஆம்ப்ளினோ’வின் செயல்பாடு
‘ஆம்ப்ளினோ’வின் சிறப்பம்சம், இதன் செறிவூட்டப்பட்ட உணர்கருவிகள் ஆகும். ரத்தத்தில் எந்த மூலையில், எந்த உயிரணுவில், எந்த டி.என்.ஏ.வில் போய் மலேரியா தொற்றுக் கிருமி பதுங்கியிருந்தாலும், அதை இழுத்துவந்து அடையாளம் காட்டும் ஆம்ப்ளினோவின் உயர் உணர்விகள்தான் (SENSORS) இக்கருவியை தனித்துவம் மிக்கதாய் மாற்றி, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தையே வென்றுள்ளது.
விரல் நுனியில் ஊசி குத்தப்படுகிறது. வெளிப்படும் ரத்த மாதிரி ஓர் உணர்வியால் உறிஞ்சப்படுகிறது. இந்த ரத்த மாதிரியில் பலவகை மரபணுக்கள் இருக்கும். பெரியவை முதல் நுண்ணியவை வரை இருக்கும். இதுவரை உள்ள மலேரியா ரத்தப் பரிசோதனை முறைகளில் மிக நுண்ணிய மரபணுக்களில் மலேரியா கிருமிகளைத் தேடும் வழி இல்லை. ஆனால் ஆம்ப்ளினோ இக்குறையை இப்போது போக்குகிறது.
உணர்வியால் உறிஞ்சப்பட்ட ரத்தம் ஆம்ப்ளினோவுக்குள் பரிசோதனைக்காக செலுத்தப்படுகிறது. குறுகிய நேரத்துக்குள், தேவையான பரிசோதனை முடிவுகளைப் பட்டியலிட்டு விடுகிறது இது.
கூடுதல் அனுகூலங்கள்
புளூடூத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதை செல்பேசியுடன் இணைத்து விடலாம் என்பது ஒரு முக்கிய அனுகூலம்.
இந்த வசதியின் காரணமாக, பரிசோதனை முடிவுகள் அனைத்தையும் அப்படியே செல்பேசியில் பதிந்துகொள்ளலாம். பிறகு நுணுக்கமாய் ஆராய்ந்து, மலேரியா நோய்க் கிருமிகளை அடையாளம் காணலாம்.
சிலருக்கு நோய்த் தடுப்பு மண்டலம் செயல் இழந்திருக்கும். உதாரணமாய், எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டவர்களைச் சொல்லலாம். இவர்களின் ரத்தங்களை நுணுக்கமாய் பகுத்து ஆராய முடியாத நிலை நீடிக்கிறது. இப்படிப்பட்ட சிக்கலான ரத்த மாதிரிகளையும் நுணுகி ஆராயும் திறமை இந்த உபகரணத்துக்கு உள்ளது என்கிறார்கள்.
எய்ட்ஸ் போன்ற கிருமிகளால் தாக்கப்பட்ட நோயாளிகள், அல்லது கர்ப்பக் காலத்தில் வலு இழந்திருக்கும் பெண்கள் போன்றோரின் மரபணுக்களையும் நுணுக்கமாய் ஆராய்ந்து, மலேரியா நோய்த் தொற்று உள்ளதா என ஆராயும் செயல்திறனை ஆம்ப்ளினோ கொண்டுள்ளது என்கிறார்கள் கண்டு-பிடிப்பாளர்கள்.
]
புதிய உபகரணத்தின் வீச்சு
உலகளாவிய நிலையில் நடந்த செல்போன் நிறுவனம் ஒன்றின் பயன்பாட்டுப் போட்டியில் நாற்பதாயிரம் யூரோக் கள் வென்று முதலிடத்தைப் பிடித்துள்ளது இக்கண்டு பிடிப்பு. செல்பேசி வழியாக ரத்தப் பரிசோதனை முடிவுகளை பதிந்து, பிறகு அதை பகுத்து ஆராய வழிவகுத்துத் தரும் சிறந்த பங்களிப்புக்காக இப்பரிசு கிடைத்துள்ளது.
ஜாம்பியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சந்தையில் நுழையவுள்ள மலேரியா கண்டுபிடிப்பு எந்திரமான ஆம்ப்ளினோ, பிறகு உலக அளவில் வரவேற்பு பெறும்.
மலேரியா மட்டுமல்லாது, மற்ற ரத்த சம்பந்தப்பட்ட நோய்களையும் பட்டியலிடும் செல்பேசி சாத்தியமானால், அது செல்பேசி தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியாகத்-தானே அமையும்!-