விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு! இதற்கு என்ன பொருள் தெரியுமா?

பிப்ரவரி 16-28

நலவாழ்வு

விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு! இதற்கு என்ன பொருள் தெரியுமா? இதை அறியும்முன் விளாம்பழத்தின் பயனை முதலில் தெரிந்துகொள்வோம்.

விளாமரம் என்று அழைக்கப்படும் மரத்தின் பழங்கள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டாலும். யாரும் ஆர்வமாக நட்டு வளர்க்க முன்வராத காரணத்தாலேயே அரிய வகை மரமாக மாறிவிட்டது. விளாமரங்களை வணிக ரீதியில் வளர்த்தால் நல்ல லாபம் பெறலாம். அத்தகைய ஆதாயம் நிறைந்த விளா மரம் பற்றித் தெரிந்து கொள்வோமா?

விளா மரத்துக்கும், அதன் பழத்துக்கும் தனிச்சிறப்புகள் உள்ளன. திருக்காறாயில் எனும் திருக்கோவிலின் தலவிருட்சமாக இது வணங்கப்படுகிறது.

தாயகம் இந்தியா

விளா மரத்தின் தாவர அறிவியல் பெயர் பெரோனியா எலிபண்டம் (Feronia Elephantum). ஆங்கிலத்தில் Wood Apple என்பார்கள். இதன் தாயகம் இந்தியா. பிறகு பாகிஸ்தான், இலங்கை, தைவான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் விளைவிக்கப்பட்டது.

இம்மரம் எங்கும் வளரும் வகுப்பைச் சார்ந்தது. காடுகளில் அதிகம் காணப்படும். ஆழமான மண் என்றால் நன்கு வளரும். வீடுகளிலிலும், தோட்டங்களிலும், கோயில்களிலும் வளர்க்கப்படுகிறது.
கருமை நிறமாக இருப்பதால் கருவிளாம் என்றும் சொல்லப்படுகிறது. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள், கூட்டிலைகளாக இருக்கும். நல்ல மணத்தைக் கொண்டது.
காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாகக் காணப்படும். விட்டம் 5 முதல் 9 செ.மீ. வரை உண்டு. பழத்தின் ஓடு அதிகக் கெட்டியாகவும், உள்சதை மர நிறத்திலும், விதைகள் வெள்ளையாகவும் இருக்கும்.

காயாக இருக்கும்போது அதன் சதை துவர்க்கும். பழுத்தால் துவர்ப்பும், புளிப்பும் கலந்த புது சுவையாகும். விளா ஓடுகளை, கைவினைப் பொருள்கள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
இது, முள் உள்ள உறுதியான பெரிய மரம். வளர்ந்த 5 ஆவது ஆண்டில் காய்க்கும். இதை எந்த பூச்சியும் தாக்காது. இவற்றின் கொழுந்து, இலை, காய், பட்டை, ஓடு மற்றும் பிசின் ஆகியவை பயன்தரும் பாகங்கள் ஆகும்.

தமிழ் மூலிகை மருந்துக் கடைகளில் விளாங்காய் மற்றும் விளாம் பிசின் தாராளமாகக் கிடைக்கும்.

வேறு பெயர்கள்:

இதன் வேறு பெயர்கள் கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளில் போன்றவை.

‘எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிரு மல்கபமும்,

வெப்பாருந் தாகமும்போம் மெய்ப்பசியாம்இப்புவியில்

என்றாகி லுங்கனிமேல் இச்சை வைத்துத் தினவெண்ணித்

தின்றால் விளாங்கனியைத் தின்’ என்பது அகத்தியர் குணபாடம்.

இதன் பொருள்: உடம்புக்கு இதமான விளாம்பழம் ஈளை, இருமல், கபம், தணியாதத் தாகம் போக்கும். கனிகளிலேயே முதன்மையான இதனை தின்ன ஆசை கொள்க என்பதாகும்.
இப்பழம் ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. பாம்புக் கடியின் வீரியத்தைக்கூட குறைக்க வல்லது. தசை நரம்புகளை சுருங்கச் செய்யும் சக்தி படைத்தது.

தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்துள்ள பழம். ரத்தத்தை விருத்தி படுத்துவதோடு, சுத்திகரிப்பும் செய்கிறது.

விளாம்பழத்தில் ‘வைட்டமின் பி2’ மற்றும் ‘வைட்டமின் ஏ’, சுண்ணாம்புச்சத்து (‘கால்சியம்’) அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

விளாம்பழ மரத்தின் பிசினைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

தயிருடன் விளாம் காயைப் பச்சடி போல் செய்து சாப்பிட்டால் வாய்ப்புண், குடல்புண் (அல்சர்) ஆறும்.

வெல்லத்துடன் விளாம்பழச் சதையைப் பிசறீ சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி விரைவில் நிவர்த்தியாகும்.

விளாம் பழத்துடன் பனங்கற்-கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
விளா மர இலையைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க… வாயுத் தொல்லை மறையும்.

விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க. நாள்பட்ட பேதி சரியாகும்.
விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மலம் இளக்கியாகிறது.

விளா மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இந்தக் கசாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய்க் கசப்பு போன்றவை மாறும். பிரசவித்த பெண்களின் வயிற்று உள்ளுறுப்புகளுக்கு அதிக சக்தி கிடைக்கும்.

சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிரிகரிக்கும், நன்கு பசிக்கும் ஒவ்வாமை நோய், ரத்தப்போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

பெண்களுக்கு மார்பகம், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும். பழம் நல்ல வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. ஆரோக்கியத் தின்பண்டமாகவும். பித்த நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

இதன் கொழுந்து இலையை நீரில் போட்டுக் குடித்து வர வாயுத் தொல்லை ஒழியும். பித்தத்தைத் தணிக்கவும் இதன் இலை உதவுகிறது.

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாள்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும்  குணமாகும். பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா நேரமும் வாயில் கசப்பு, அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை போன்றவற்றை விளாம் பழம் குணப்படுத்தும்.

விளாந்தளிர், நாரத்தைத் தளிர், கறிவேப்பிலை, எலுமிச்சை இலை இவற்றைச் சம அளவு எடுத்து உலர்த்திய பொடி, கடலைப் பருப்பு வறுத்து, பொடித்த பொடி தலா 100 கிராம், உப்பு 20 கிராம், மிளகு, வெந்தயம் தலா 10 கிராம் கலந்து உணவில் சேர்த்து சாப்பிட பித்தம் குணமாகும். நன்றாகப் பசி எடுக்கும். வாந்தி குணமாகும். உடலுக்கு ஊட்டமும் கிடைக்கும்.

விளாம் பிசினை உலர்த்தித் தூள் செய்து காலை  மாலை தலா ஒரு சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வயிற்றுப் போக்கு மங்கையருக்கு வெள்ளைப்படுதல், நீர் எரிச்சல், மேக நோய், உள்ளுறுப்பு ரணம், மாதவிடாய் இம்சை ஆகியவை தீரும். இதற்கு உப்பு இல்லாப் பத்தியம் தேவை.
நீரிழிவு நோய்க்கு விளா வேர், ஆவாரை வேர், பூலா வேர், காட்டு மல்லி வேர், இலவங்கம் இவற்றை சம அளவு எடுத்து, எருமை மோரில் நன்கு வேக வைத்து, குறிப்பிட்ட அளவு தயிருடன் கலந்து அருந்தி வர விரைவில் குணம் தெரியும்.

இந்த மரத்தின் பழங்களைக் குரங்குகள் விரும்பிச் சாப்பிடுவதால், வட மொழியில் கபி பிரியா என்றும் ஆங்கிலத்தில் மங்கி ட்ரீ என்றும் விளா மரத்துக்குப் பெயர்கள் உண்டு. பழத்தின் ஓட்டை உடைத்து உள்ளே இருக்கும் சதைப் பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் சர்க்கரை  தேங்காய்ப்பால்  வெல்லம் போன்ற-வற்றுடன் பானமாக்கிக் குடிப்பதும் உண்டு.
விளாம்பழத்து ஓடு விரட்டும் பெண்ணாசை

விளாம் பழத்தின் ஓட்டை அம்மியில் வைத்து விழுதாக அரைத்து, எலுமிச்சம் பழ அளவு எடுத்து காலையில் வாயில் போட்டு விழுங்கி வெந்நீர் குடிக்கவும். தொடர்ந்து 21 நாட்கள் இப்படி செய்து வந்தால் பெண்ணாசையே வெறுத்துவிடும்.

விளாம்பழ ஓட்டைச் சாப்பிட்டால் பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் உணர்வு அறவே ஆணுக்கு அற்றுப் போகும் என்ற மருத்துவ உண்மையைத்தான் ‘விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு!’ என்று சித்தர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *