தந்தை பெரியார்
கும்பகோணம் என்னும் நகரில் மாமாங்கம் என்னும் ஒரு திருவிழா (உற்சவம்) தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.
கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்கு ஒரு கதை மாத்திரமல்லாமல் பல கதைகள் ஆதாரங்களில் இருக்கின்றன! அவைகள் ‘மித்திரன்’, ‘தினமணி’ முதலிய பார்ப்பனர்களின் தினசரிகளிலும் ‘கல்கி’ முதலிய வாரப் பத்திரிகைகளிலும் சமீபகாலமாக பிரசுரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
அவைகளில் பண்டிகைக்கு பல விஷயங்கள் காரணமாகக் காட்டப்பட்டிருந்தாலும் எல்லா காரணங்களுக்கும் ஒரே மாதிரியான பலன் சொல்லப்பட்டிருக்கிறது.
அதென்னவென்றால், அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்தக் குறிப்பிட்ட (மகாமக)க் குளத்தில் மூழ்கி எழுந்தால் (குளித்தால்) குளிக்கும் எல்லா மக்களுடையவும், எல்லா பாவமும் நீங்கிவிடும். குளிக்கும் மனிதன் எப்படிப்பட்ட பாதகனாக – பாவியாக இருந்தாலும் சாபமற்றவனாவான். அவன் பாவங்கள் ஒழிவதோடு புண்ணியமும் செய்தவனாவான். அதாவது, குளித்தவன் மோட்சம் அடைவான். கைலாயம் செல்வான். வைகுந்தப் பதவி, பிராப்தி அடைவான். சுவர்க்கலோகம் செல்வான் என்றெல்லாம் பலன்கள் குறிப்பிடப்-பட்டிருக்கின்றன.
ஒரு முழுக்கினால் பாபம் தொலைந்து போகுமா?
கதைகள் ஒருபுறம் இருக்கட்டும்; மனிதன் செய்யும் அக்கிரமமான அயோக்கியத்தனமான மற்ற மக்களுக்கு கேடும், தொல்லையும் வேதனையும் தரும்படியான காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஏற்பட்ட பாவம் – (பாவத்திற்குரிய தண்டனை) ஒரு குளத்தில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டு குளித்து-விட்டால் தீர்ந்துவிடும்! பிறகு செய்யும் பாவத்திற்கும் புதுக்கணக்கு போட்டுவைத்து அடுத்த மாமாங்கத்தில் சரிசெய்து கொள்ளலாம் என்றால் மனிதன் எப்படி யோக்கியனாய் இருக்க முடியும்? எதற்காக யோக்கியனாய் இருக்க வேண்டும்? என்று தானே ஒவ்வொருவருக்கும் தோன்றும். அப்படி தோன்றியதால்தானே மனிதனிடம் யோக்கியதை காண்பது அரிதாய் இருக்க வேண்டியதாகிவிட்டது. மதங்கள் எல்லாம் மக்களை அயோக்கியர்களாக்கி வந்திருக்கிறது -_ வருகிறது என்பதற்கு இதுதானே காரணமாக இருக்கிறது.
பிரார்த்தனையும் பாவமன்னிப்புமே மதத்தின் அடிப்படை
ஏனெனில், ஒவ்வொரு மதமும் நீ இன்ன காரியம் செய்தால் உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகிவிடும்; நீ மாசற்றவனாக ஆகிவிடுவாய் என்றுதானே சொல்லி வருகிறது. ஏனென்றால், மனிதன் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் கடவுள்கள் எதற்கு? கோவில்கள் எதற்கு? உற்சவங்கள் எதற்கு? பண்டிகைகள் எதற்கு? பிரார்த்தனைகள், தொழுகைகள், கும்பிடுதல், பூசை முதலிய காரியங்கள் எதற்கு? என்று ஒரு யோக்கியன் அறிவாளி கேட்டால், பாவமன்னிப்புக்காரர்கள், என்ன பதில் சொல்ல முடியும்? மத நம்பிக்கை – கடவுள் நம்பிக்கைக்காரர்கள் பாவகாரியங்கள் எல்லாம் தங்களால்தான் செய்யப்படுகிறது. இதற்கும் கடவுள் சக்திக்கும் சம்பந்தம் இல்லை. அவனவன் செய்கையின் பலனை அவனவன் அனுபவித்தாக வேண்டும் என்று சொல்வ-தானாலும் எப்படிப்பட்ட பாவத்திற்கும் இன்னின்ன காரியங்களால் மன்னிப்பு இருக்கிறது என்று கூறிவிட்டால் மனிதன் எப்படி யோக்கியமாய் இருக்க முடியும்? என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
அரசியலில் யோக்கியரைக் காணமுடியவில்லையே
இதற்கு மற்றொரு உதாரணமாக அரசியலை எடுத்துக் கொள்ளலாம். இன்றைய தினம் அரசியலில் யோக்கியர்களைக் காண்பது ஏன் அதிசயமாக அபூர்வமாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அரசியலில் ஈடுபட்டவன் எவனும் அயோக்கியத்தனம், அக்கிரமம், நாசமான – கேடான காரியம் செய்துதான் ஆகவேண்டும். இதை செய்துதான் ஆகவேண்டும் என்பதற்குக் காரணம், செய்தால்-தான் தேசபக்தன், தியாகி, தேசியவாதியாகலாம். அப்படி ஆனால்தான் வயிற்றுப் பிழைப்பிற்கு வழி. பதவி, மந்திரி, கவர்னர், ராஷ்டிரபதி ஆவதற்கு வழி ஏற்பட முடியும். ஆனால், அந்த அயோக்கியத்தனம், அக்கிரமம், நாசம், கேடு ஆன காரியங்கள் செய்ததற்கும் பரிகாரம் என்னவென்றால் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தால் பரிகாரமாகிவிடுகிறது என்பதுதான்.
ஜெயில் பாவமன்னிப்புப் போன்றதே
ஜெயில் என்பது எப்படிப்பட்டது என்றால் இந்தப் பாவமன்னிப்பு சாதனங்கள் போன்றதுதான். மற்றும் சொல்ல வேண்டுமானால், பாவ மன்னிப்பு சாதனங்களைவிட மிகமிக எளிதானதுதான்.
ஆகவே, பாவமன்னிப்பு சாதனங்கள் எதையும் மனிதர்களை யோக்கியமாய், நேர்மையாய் நடந்துகொள்வதிலிருந்து பிறழத்தான் செய்யும் என்பது மாத்திரமல்லாமல் நல்ல மனிதர்-களையும்கூட அயோக்கியமாக நடக்கத்தான் தூண்டும். மனித சமுதாயம் சீர்பட வேண்டுமானால் எந்த உருவத்திலும் பாவமன்னிப்பு இருக்கக் கூடாது. அரசியலிலும் எந்த லட்சியத்தில் தவறு செய்தாலும் செய்தவனுக்கு மன்னிப்பே இருக்கக் கூடாது. ஏனென்றால், மூன்றாந்தர, நாலாந்தர நடத்தை உள்ளவர்கள் எல்லாம் தன்னை தேசபக்தன், தியாகி என்று காட்டி பதவிக்கு வர நேர்ந்ததாலே எனது 40 ஆண்டு அனுபவத்தில் அரசியல் என்பது போராட்டம், அக்கிரமம், அயோக்கியத்தனம், நாசம், கேடு, பலாத்காரம், மோட்சம், புரட்டு, போட்டி, ஒருவரையொருவர் வசை கூறுவது, பழி கூறுவது, கவிழ்க்கச் சூழ்ச்சி, அரசாங்கத்தை அதிகாரிகளை அலட்சியப்-படுத்துதல் முதலிய காரியங்களாகத்தானே இருந்து வருவதாகத்தானே பார்க்கிறேன்.
மத இயல், அரசியல் இரண்டிலுமே நேர்மையாளர் காணவில்லையே?
அதுபோலவேதான் எனது 70 – 75 வருஷ அனுபவத்தில் எந்த பக்திமானிடத்திலும், நாமக்காரன் விபூதிக்காரனிடமும், நாணயம், நேர்மை பார்க்க முடியவில்லையே! எனக்கு அரசர்களைத் தவிர்த்து அவர்களுக்கு அடுத்து எல்லா பெரிய மனிதர்களையும், அரசியல் தலைவர்களையும், பதவியாளர்களையும் தெரியும். என் அனுபவத்தைத்தான் சொல்-கிறேன். எதனால் இந்தத் தவறு செய்யும் நிலை ஏற்பட்டதோ, அதையே பின்பற்றும்படி நமது பின் சந்ததியை தூண்டும்படியான காரியங்-களையே நாம் கடவுள், மதம், சாஸ்திரங்கள், புராணங்கள், இலக்கியங்கள், முன்னோர்கள் முதலியவற்றின் பெயரால் செய்து வருகிறோம். அப்படி செய்யப்படுபவைகளில் ஒன்றுதான் அடுத்து வரப்போகும் மாமாங்க உற்சவமாகும். ஒரு அரசியல்காரனுக்கும் இதைப்பற்றிக் கவலையில்லை. கம்யூனிஸ்ட்கள் என்பவர்-களுக்கும் இதைப்பற்றிக் கவலையில்லை. நாம்தான் பாராங்கல்லில் முட்டிக் கொள்பவர்கள்போல் ஏதோ இப்படி எல்லாம் உளறி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இளைஞர்கள், மாணவர்கள் கூட்டமாவது சிந்தித்துப் பார்க்கட்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லுகிறோம்.
(‘விடுதலை’ – தலையங்கம் – 09-02-1968)