திருச்சி சிறுகனூரில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு திராவிடர் கழக மாநில மாநாடு சமூக நீதி மாநாடு

பிப்ரவரி 16-28

2016 மார்ச் 19&20 சனி&ஞாயிறு

திருப்புமுனை மாநாட்டிற்கு திரண்டு வாரீர்

பேரன்புடையீர், வணக்கம்.

வரும் மார்ச் மாதம் (2016) 19, 20 (சனி, ஞாயிறு) இரு நாட்களிலும்  முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாடும் (ஜாதி – தீண்டாமை ஒழிப்பு மாநாடு), இரண்டாம் நாள் சமூகநீதி மாநாடும் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையிலுள்ள சிறுகனூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளன.
தேநீர் கடைகளிலும் 2 கிளாஸ், சுடுகாட்டிலும் கூட ஜாதி வேறுபாடு. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டால் படுகொலை என்ற  கொடுமைகள் நாளும் வளர்ந்து வருகின்றன.

தந்தை பெரியார் பிறந்து பெரும் தொண்டாற்றி, ஜாதி ஒழிப்புக்காக  பிரச்சாரம் செய்தும், போராட்டங்கள் நடத்தியும் பக்குவப்படுத்தப்பட்ட  இம்மண்ணில் இவற்றை நாம் அனுமதிக்கலாமா?
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்துக் களங்கண்ட – அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் நீதிமன்றத் தீர்ப்பு இருந்தும், அதனை செயல்படுத்தத் தயங்கும் தமிழ்நாடு  அரசுக்கு அழுத்தம் கொடுத்து செயல்படுத்த வைத்திட இம்மாநாடு உரிமைக் குரல் கொடுக்கும்.   
இரண்டாம் நாள் சமூகநீதி மாநாடு (20.03.2016) மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு 22.5 சதவிகித இட ஒதுக்கீடு (15+7.5 சதவிகிதம்) இருந்தும்,

பிற்படுத்தப்பட்டவருக்கு 27 சதவிகிதம் சட்டப்படி இருந்தும் பாதி அளவுக்குக் கூட வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை _- பறிக்கப்படுகின்றன!

இடஒதுக்கீட்டில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும்.

சமூகநீதியில் நாம் பெற்றுத் தீரவேண்டிய உரிமைகளை ஈட்டுவதில் நாம் நடத்தவிருக்கும் சமூகநீதி மாநாடு புது திருப்பம் தருவதாக அமையும்.

மாநாட்டில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர், அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சமூகநீதியை முன்னிறுத்தி பீகாரில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த மாண்புமிகு நிதிஷ்குமார், இதற்குப் பின்புலமாக _- பலமாக இருந்த ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலுபிரசாத் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்கள். சமூகநீதியில் அக்கறை கொண்ட தமிழ்நாட்டுத் தலைவர்களும் பங்கேற்பர்.

தமிழின வரலாற்றில் திருப்புமுனையாக அமையவிருக்கும் இந்த இருபெரும் மாநாடுகள் வெற்றிபெற, நிதி உதவி அளிப்பதுடன் மாநாட்டிற்குப் பெருந்திரளாக திரண்டு வருமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!

திருப்புமுனை மாநாடு -_ தமிழ் நாட்டு வரலாற்றில் ஒரு செப்பேடு.

கழகக் குடும்பத்தவர்களே, கருஞ்சட்டை கடமை வீரர் – வீராங்கனைகளே
திருச்சிக்குத் திரண்டு வாரீர்!

மாநில மாநாடுகளில் நமது குடும்பங்களான கொள்கை உறவுகள் கூடிக் குலவி மகிழ்ந்து கொண்டாடிடும் விழா நடத்தி ஏறத்தாழ 3,4 ஆண்டுகள் ஆகி விட்டனவே என்ற உங்கள் குறைபாடு நீக்க ஏற்பாடு செய்யப்பட்டதுதான் திருச்சி மாநாடுகள் – அடுத்த மாதம் (மார்ச்) 19,20 ஆகிய நாட்களில்!

‘பெரியார் உலகம்’ அமையப் போகும் சிறுகனூரில் (திருச்சி – சென்னை நெடுஞ்சாலை திருச்சியிலிருந்து 40 மணித் துளிகளுக்குள் சென்றடையலாம்; 30 கி.மீ. தொலைவில் உள்ள வளாகத்தில்தான் மாநாடுகள்) மிக பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்-படுகின்றன!

மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ள தலைவர்களை, கடல் இல்லாத திருச்சி பகுதியில் கருஞ்சட்டைக் கடல் பொங்கி எழுந்து, பூரித்து, புன்னகைத்து வரவேற்றது என்ற புதிய வரலாறு உருவாகப் போகிறது!
நம் அறிவு ஆசான் மறையவில்லை; வாழுகிறார்; வாழ்ந்து கொண்டே இருக்கிறார்; அவர்தம் லட்சியங்களும் கொள்கைக் கோட்பாடுகளும் இன்று அனைத்திந்திய அளவிலும், அகில உலக அளவிலும் பரந்து பரவிய நிலையில், தாய்மண் வழிகாட்ட வாகை சூடிடும் வரலாற்றை உருவாக்கப் போகிறது. – தியாகப் படைகளான திராவிடர் தீரர்கள் ஒன்று திரளும் காட்சியின் மாட்சியை எளிதில் வர்ணிக்கவோ முடியும்?

சமூகநீதிக் கொடி ஓங்கி உயர்ந்து பறக்கவும், ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கான போர் முரசு கொட்டி, புதிய புறநானூற்றைப் படைக்குவுமான பொலிவான, வலிவான திட்டங்களை அறிவித்து, செய் அல்லது செத்து மடி என்ற வைராக்கியத்தைக் கொண்ட வைர நெஞ்சங்கள்-கூடி வகுக்க இருக்கும் போராட்டத் திட்ட அறிவிப்பு வெளியாகும் மாநாடுகளாக அம்மாநாடுகள் அமையப் போகின்றன!
வரலாற்றுக் குறிப்பின்படி, உடலால் மறைந்த நம் அறிவு ஆசான், உணர்வாய்க் கலந்து உலகெல்லாம் பரவி, தத்துவமாக தன்னேரில்லாதவராக தரணி எங்கும் பேசப்படுகிறார்கள்!

42 ஆண்டுகளுக்குப் பிறகு முன்பு பரவாத இடமெல்லாம் அய்யாவின் கொள்கைகளும் கொண்ட லட்சியங்களும் பரவி, நம்மை முதுகெலும்புள்ளவர்களாக, மானமிகு மக்கள் கூட்டமாக மாற்றிடும் நம் பணி, ஓயாத பணி – ஓய்வில்லாப் பெரும் பணி!

நம் மாநாடுகளின் திட்டங்கள், வருங்கால, நிகழ்கால அரசுகளின் சட்டங்கள் என்ற வரலாறு மீண்டும் ஒரு முறை அகிலத்தால் அறியப்படும் அரியதோர் முத்திரையாகத்தான் மார்ச் மாநாடுகள் அமையப் போகின்றன!

நீங்கள் மட்டும் மாநாடுகளுக்கு வரக்கூடாது.  ஒவ்வொரு புது நண்பர் – உறவுக்காரரை அழைத்து வாருங்கள்!

சந்திப்போமோ? சந்திப்போமோ? குடும்பங்களின் சங்கமத்தில் சந்திப்போமா?
வாரீர்! வரவேற்கக் காத்திருப்போம். வாரீர்!
ஆசிரியர்,
கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *