பெரியார் விருதுக்கு இணையானது எதுவும் இல்லை! திராவிடர் திருநாள் விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி உரை

பிப்ரவரி 01-15

17.1.2016 அன்று சென்னை பெரியார் திடலில்  தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி அவர்கள் ஆற்றிய உரையில்,

“எல்லா விருதுகளையும் யார் யாரோ கொடுத்தார்கள்; இந்த விருதைத்தான் ஆசிரியர் கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல மாணவனுக்கு ஆசிரியர் கொடுக்கிற விருதுதான் உயர்ந்த விருது, உயரிய விருதாகும். எனவே, இந்த விருதை நான் பெருமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.

 

என்னுடைய மனைவியையும், மகளையும், தாயையும், தந்தையையும் இதுவரையில் சினிமா விருது விழாக்களுக்கு அழைத்துச் சென்றதில்லை. முதல் முறையாக ஒரு விருது விழாவிற்கு அவர்களை நான் அழைத்து வந்திருக்கிறேன்.

1996ஆம் ஆண்டு, தமிழ்த் தேச தன்னுரிமை மாநாடு என்று இந்தப் பெரியார் திடலில் நடைபெற்றது. அந்த மாநாட்டில், 14 வயது பள்ளிச் சிறுவனாக, வாய்ப்பு கேட்டு, அந்த மேடையில் நான் கவிதை வாசித்ததுதான் _- கவிதைத் துறையில் முதல்முதலாக நான் மேடை ஏறினேன் என்றால், அது பெரியார் திடலில்தான் என்பதைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

பெரியார் வளர்த்திருக்கக்கூடிய பிள்ளைகள், பெரியார் வழியில் நடந்து கொண்டிருக்கின்ற பிள்ளைகள் என்கிற பெருமை எங்களுக்கு உண்டு. 20 ஆண்டுகள் கழித்தும் நாங்கள் இங்கே வருவோம். என்னுடைய மகள் இன்றைக்கு இந்த விருது வழங்கும் விழாவிற்கு வந்திருக்கிறாள். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து அவள் இங்கே வந்து ஒரு விருதை வாங்குவாள், வாங்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எனவே, இந்த விருது என்பது சாதாரண விருதல்ல.

இந்த ஆண்டு நான் எழுதிய ‘என்னம்மா, இப்படி பண்றீங்களேமா?’ என்கிற பாடல், சூழ்நிலைக்கு மிகவும் பொருந்துகிற பாடலாகும். பெண்களை கிண்டல் செய்வதுபோல் எழுதியிருக்கிறாரே என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. என்னம்மா என்று நான் சொல்வது, இன்றைக்கு நாட்டில் எந்த அம்மாவை நாமெல்லாம் சொல்கிறோமோ -_ அதற்காக என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்பதற்காக. சினிமாவிற்கேற்ப சில சொற்களைச் சேர்த்திருக்கிறோம்.

இப்படி எல்லா பாடல் வரிகளுக்குள்ளும் என்னுடைய அரசியல் பார்வை இருக்கும் என்பதை நீங்கள் நுட்பமாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

சாட்டை என்கிற திரைப்படத்தில் ஒரு பாடல் ‘இப்பொழுது இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கைகளிலே’ என்கிற பாடல். இந்தப் பாடலில் ஒரு வரி வந்தது. பெரியார் சிந்தனை உள்ள ஒருவரால்தான் இதுபோன்று எழுதப்படும் என்கிற பெருமையோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

‘ஒருமுறை தேறினால் தலைமுறை வாழுமே, வேர்வைக் காயாதே!’ என்கிற ஒரு வரி இருக்கும்.

முதல் தலைமுறை இளைஞனாக இருக்கக்கூடிய நான் எல்லாவிதமான இடர்ப்பாடுகளையும் தாண்டித்தான் இன்றைக்குத் திரைத்துறையில் ஏறக்குறைய ஒரு ஆயிரம் பாடல்களை எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது.
எனவே, இந்தத் துறையில் இருக்கும் நான், வெகுஜன ஊடகத்தில் இருந்துகொண்டு, மக்கள் சிந்தனைகளை எந்தெந்த இடத்தில் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்கிற ஒரு உள்ளார்ந்த எண்ணத்தோடுதான் இந்தத் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

சரி, பெரியார் திடலுக்குச் சென்றால் என்ன கிடைக்கும்? என்று கேட்டார்கள்.

நான் மிக எளிமையான ஒரு பதிலைச் சொன்னேன். பெரியார் திடலுக்குச் சென்றால், உனக்கு ‘விடுதலை’ கிடைக்கும்; உனக்கு ‘உண்மை’ கிடைக்கும் என்றேன்.

என் மகள் கேட்டாள், அப்பா இது தேசிய விருதா? என்று கேட்டாள்.

ஆமாம், இது ‘தேசிய விருதுதான்; தமிழ்த் தேசிய விருது’ என்று அவளுக்கும் பதில் சொல்லிவிட்டேன்.

தலித் சுப்பையா அவர்கள் விருது வாங்கும் இந்த மேடையில் நானும் விருது வாங்குகிறேன் என்று சொல்வது எனக்கு ஒரு கவுரவமாக இருக்கிறது. ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *