பார்வதி மேனன் என்பதில் மேனன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டீர்களே ஏன்? என்று நடிகை பார்வதியிடம் கேட்டதற்கு,
ஆமாம்… அவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மதம், என் ஜாதி என பிரபலப்படுத்தி ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஜாதியின் பெயரை சொல்லித்தான் என்னை அடையாளப்படுத்த வேண்டி இருந்தால், அப்படியோர் அடையாளம் எனக்குத் தேவையில்லை.
நடிகையை நடிகையாக மட்டுமே பாருங்கள். அவர்களது சொந்தப் பிரச்சினையைப் பேச வேண்டாம். ஏனென்றால் நடிகை பொதுச் சொத்து அல்ல. உங்களின் தங்கை, அக்கா, மனைவி, குழந்தை போல் அவளும் ஒரு பெண். தயவு செய்து நடிகையின் தேகத்தை வன்மத்தோடு அணுகாதீர்கள்! என்று மிகத் தெளிவாகப் பதில் தந்தார்.
பரபர படப்பிடிப்பு, கால்ஷீட் குளறுபடிகள், கிசுகிசுக்கள் என்பவைதான் ஹீரோயின்களின் அடையாளங்கள்…. இந்த அம்சங்களில் எதுவுமே உங்களிடம் இல்லையே…?
நான் நடித்த படங்களை என் குடும்பத்தினருடன் நெளிவு, சுளிவு இல்லாமல் பார்க்க வேண்டும். நாளைக்கே எனக்கு குழந்தை பிறந்தால், நான் நடித்த படங்களைப் பார்த்து விட்டு “ஏம்மா இந்த மாதிரி படத்துல நடிச்சே’ என்று அது கேட்டு விடக் கூடாது.
பொருள்களை முதன்மைப்படுத்தாமல், வாழ்க்கையை முதன்மைப்படுத்துகிற வாழ்வியல் முறையை, பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் வாழ்ந்து காண்பித்து விட்டாலே போதும். ஆரோக்கியமான தலைமுறை உருவாகி விடும். இதற்குத் தேவையில்லாதத் தியாகங்கள் அவசியமில்லை என்றார்.
மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க விருப்பமில்லையா? என்ற கேள்விக்கு,
ஒரு மாஸ் ஹீரோவுக்காக என்னால் அரை குறை ஆடைகளை உடுத்தி வந்து நடனம் ஆட முடியாது. ஏதோ ஒரு படத்தில் நமக்கும் வேலை இருக்கிறது என்று என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது. என் பங்கு அந்தப் படத்துக்கு முழு அளவில் இருந்தாக வேண்டும். இல்லை-யென்றால் அந்த வாய்ப்புகளே எனக்கு வேண்டாம். பெரிய ஹீரோக்களோடு நடிக்கும் போது முன்னணி இடத்துக்கு வரலாம். ஆனால், திருப்தி இருக்காது. பசி வந்து விட்டது என்பதற்காக எதை வேண்டுமானாலும் என்னால் சாப்பிட முடியாது. எனக்கான மீனுக்காகக் காத்திருக்க நான் தயார்.