-சிகரம்
பெரியார் என்றால் மனிதநேயம் என்று பொருள் என்று எவரும் சொல்வர். காரணம், அவர் உலகம் தழுவி மனித நலத்தை விரும்பியவர். யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற தமிழரின் உயர் சிந்தனையின் செயல் வடிவம்.
தன் கொள்கையின் ஒட்டுமொத்த சாரமாக, சுயமரியாதை என்ற தத்துவ உணர்வை தன் இயக்கத்தின் அடையாளமாகக் காட்டினார். சுயமரியாதை உணர்வே புரட்சிக்கு அடிப்படை; புரட்சியே சமத்துவத்தின் வழித்தடம்.
சுயமரியாதை உணர்வு ஊட்டிய தந்தை பெரியார் அவர்கள், சிக்கனத்தையும் வாழ்வில் வலியுறுத்தி, வாழ்ந்தும் காட்டினார். சிக்கனமாய் தான் சேர்த்த பொருட்களை முழுவதும், தன்குடும்பத்து சொத்துக்களையும் சேர்த்து மக்கள் நலனுக்கே அளித்தார்.
சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனம் அவரிடம் இல்லை. அண்ணா அவர்கள் கொடும் நோயால் பாதிக்கப்பட்டபோது பெருந்தொகையை பாசம் பொங்க அள்ளிக் கொடுத்தார்.
அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் சரியான வாரிசாய் இருந்து, இயக்கத்தை தலைமையேற்று நடத்தும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், அய்யாவை அப்படியே அடியொற்றி நடப்பவர் என்றாலும், கடமையாற்றுவதில் அய்யாவின் வீச்சுக்கு வெளியிலும் வந்து தொண்டற எல்லையை விரிவு படுத்திவருகிறார்கள். அதன் விளைவுதான் அய்யா காலத்தில் இல்லாத இத்தனை கல்வி நிறுவனங்கள், கழகப்பணிகள், பெரியார் திடலில் செய்யப்பட்டுள்ள பெரிய வளர்ச்சி எல்லாம்.
தொண்டறம் என்ற சொல்லை உருவாக்கி தொண்டின் அடையாளமாய் 83 வயதிலும் எத்தனையோ உடல் பாதிப்புகளுக்கும் இடையே செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பில், அவர்கள் தொண்டர்கள் துணையோடு மேற் கொண்ட தொண்டறப்பணி தூய்மை, வாய்மை, நேர்மை, நம்பிக்கை, நாணயம் இவற்றின் கட்டுறுதியுடன் நடைபெற்றதை நாடும் ஏடும் போற்றின. பெரியார் திடலையே வெள்ள நிவாரணப் பணிகளின் தலைமையிடமாக மாற்றி 10 நாள்களுக்கும் மேல் பல்வேறு இடங்களிலும் தொண்டு செய்ததோடு, மழையால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களிலும் மருத்துவமும் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளைச் செய்தார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது போல, பெரியார் திடல் பணியாளர்-களுக்கு ஏதாவது நிவாரணம் தரவேண்டும் என்று தமிழர் தலைவர் முடிவு செய்து, அதை அளிக்கும் நிகழ்வு 13.01.2016 நடந்தது.
எந்தப் பணியாளரும் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. எந்தப்-பணியாளருக்கும் இப்படியொரு நிவாரண உதவி அளிக்கப் போகிறார்கள் என்று தெரியாது. எதிர்பாராத அழைப்பு, எல்லோரும் சென்று அமர்ந்த போது பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நெகிழ்ச்சியோடு நிவாரண உதவி பற்றி அறிவித்தார்கள். பணியாளர்கள் அனைவரும் தமிழர் தலைவரின் தாய்மை உள்ளத்தை எண்ணி நெகிழ்ந்தனர்.
ஆம், தமிழர் தலைவரின் உள்ளம் தாய்மை உள்ளந்தான். தம்மிடம் பணியாற்றிடும் பணியாளர்களுக்கு பணியாளர்கள் வேண்டுகோளை ஏற்று உதவிகளை வழக்கமாக நிர்வாகம் செய்யும். ஆனால், எந்தக் கோரிக்கையும் பணியாளர்கள் வைக்காமல், தேவையறிந்து செய்வது தாயுள்ளம்.
தன் குழந்தைக்குத் தாயானவள் குழந்தை கேட்டுக் கொடுப்பதில்லை; பொறுப்புள்ள தாய் குழந்தை அழுதபின் பால் கொடுக்க மாட்டாள், குழந்தையின் பசி உணர்ந்து அவளாகவே கொடுப்பாள். அதனால் தான், பால் நினைந்தூட்டும் தாய் என்றனர்.
ஆம். தமிழர் தலைவர் பெரியார் திடல் பணியாளர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கு எது தேவையோ அவற்றை அவரே உணர்ந்து செய்யக்கூடியவர்; செய்து வருபவர். தமிழர் தலைவர் அவர்கள் பால் நினைந்தூட்டும் தாய் எனில் அது மிகையன்று.