விஜயவாடாவில் 9ஆம் உலக நாத்திகர் மாநாடு
2018 திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் உலக நாத்திகர் மாநாட்டை நடத்தும்
உலக நாத்திகர் 9 வது மாநாட்டினை விஜயவாடாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்கள். பின்னர் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை, வெளி-நாட்டுப் பேராளர்களை திராவிடர் கழகத்தின் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செய்து பாராட்டினார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் தலைவர் திருமதி மைத்ரி, மாநாட்டுத் தலைவர் முனைவர் வோல்கர் முல்லர் (ஜெர்மனி), பேராளர்கள் நார்வே நாட்டு மனிதநேய அமைப்புத் தலைவர் ராபர்ட் ரஸ்டட், ஜெர்மன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆல்பிரட் ஹரால்ட் பெட்ஜோல்டு, டெக்சாஸ் அமெரிக்க நாத்திகர் அமைப்பினைச் சார்ந்த அரோன்ரா மற்றும் மராட்டிய மாநில பகுத்தறிவாளர் அமைப்பினைச் சார்ந்த அவினாஷ் பாட்டீல் ஆகியோரையும் பாராட்டினார்.
மாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சி
உலக நாத்திகர் மாநாட்டிற்கு வருகை தந்த இந்நாட்டு, பன்னாட்டு பேராளர்களை வரவேற்று நாத்திகர் மய்யத்தின் தலைவர் திருமதி மைத்ரி உரையாற்றினார். மாநாட்டில் ஜெர்மன் நாட்டு சுதந்திர மனித சிந்தனையாளர் அமைப்பினைச் சார்ந்த முனைவர் வோல்கர் முல்லர் தலைமை உரை ஆற்றினார். தமிழர் தலைவரின் தொடக்கவுரைக்கு முன்பாக மாநாட்டின் சிறப்பு விருந்தினர் மராட்டிய மாநில அந்தசிரத்த நிர்மூலன் சமித அமைப்பின் தலைவர் அவினாஷ் பாட்டீல் உரையாற்றினார். பின்னர் மாநாட்டின் மாண்பமை விருந்தினர்கள் ராபர்ட் ரஸ்டட் (நார்வே), ஆல்பிரட் ஹரால்ட் பெட்ஜோல்டு (ஜெர்மனி) ஆகியோர் உரையாற்றினர்.
ஒளிப்பதிவு திரையிடல்
மாநாட்டு பிற்பகல் நிகழ்ச்சியில் அண்மையில் தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரழிவின் பொழுது திராவிடர் கழகம் ஆற்றிய மீட்புப் பணி, உதவிப் பணி, நடத்திய மருத்துவ முகாம்கள் பற்றிய ஒளிப்பதிவு ஆங்கில விரிவுரைப் பின்னணியுடன் மாநாட்டுப் பேராளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. திரையிடலுக்கு முன்பாக தமிழர் தலைவர் திராவிடர் கழகம் ஆற்றிய பணி மற்றும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுரை முழக்கமான “கடவுளை மற, மனிதனை நினை’’ எனும் நடை முறையின் பிரதிபலிப்பாக திராவிடர் கழகப் பணி, மற்றும் மனிதநேயத் துளிர்வு அமைந்தது எனக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஒளிப்படக் கண்காட்சி
மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக விஜயவாடா நாத்திகர் மய்யம் ஏற்பாடு செய்திருந்த ஒளிப்படக் கண்காட்சி திறக்கப்பட்டது. நார்வே நாட்டு மனித நேய அமைப்பின் தலைவர் ராபர்ட் ரஸ்டட் கண்காட்சியினை, தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் நாத்திகர் மய்யத்தின் செயல் தலைவர் முனைவர் ஜி.விஜயம் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். நாத்திகர் மய்யத்தின் 75 ஆண்டு காலத்திற்கும் மேலான செயல்பாடுகள், நடத்திய மாநாடுகள் பற்றிய ஒளிப்படங்கள் இடம் பெற்றிருந்தன. தந்தை பெரியாருடன் கோரா கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், தமிழர் தலைவர் பங்கேற்ற நாத்திகர் மய்ய நிகழ்ச்சிகள், திருச்சியில் திராவிடர் கழகம் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டு ஒளிப் படங்கள் பல பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பிற்பகலில் மாநாட்டு நோக்கத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநாட்டு நிகழ்ச்சிகள் இரண்டாவது நாளாக ஜனவரி 7ஆம் நாளும் நடைபெற்றது. உலக நாத்திகர் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
2018 ஆம் ஆண்டில் உலக நாத்திகர் மாநாட்டை திராவிடர் கழகம் தமிழ் நாட்டில் நடத்தும் என்ற பெருமை மிகு அறிவிப்பை தமிழர் தலைவர் அவர்கள் மாநாட்டில் அறிவித்தார்கள்.