புது வாழ்வு
புதுவாழ்வு வந்ததுகாண் பொங்கல் நாளில்
புன்வாழ்வு தீர்ந்ததுகாண் திராவி டத்தில்!
எதுவாழ்வு? மேற்கொள்ளும் நெறிதான் என்ன?
என்பவற்றை அழகாக விளக்க மாக
இதுநாளில் எழுதவந்த அறிஞன் தன்னை
என்நாவால் மனமார வாழ்த்து கின்றேன்.
புதுவாழ்வு திராவிடர்கள் கைகள் தோறும்
பொலிக; அதுஎன்றென்றும் வாழ்க நன்றே!
திராவிடரின் நன்மைக்கே உழைப்போன்; எந்தத்
தீமைக்கும் உளம் அசையான்; அறிவு மிக்கான்;
ஒருவ(ன்)னால், தைப்பொங்கல் பொங்கும் நாளில்
ஊரெல்லாம் மகிழ்ச்சிவிழா எடுக்கும் நாளில்
வருகின்ற புதுவாழ்வை நாட்டார் எல்லாம்
வருக என வரவேற்க! ஆத ரிக்க!
திரு எய்த, அறம் ஓங்க, உரிமை எய்தித்
திராவிடர்கள் பல்லாண்டு வாழ்க நன்றே!!
– புரட்சிக்கவிஞர்
(புதுவாழ்வு, சனவரி, 1948)
பொங்குக பால்
பொங்குகபால், பொங்கல் பெருக! திராவிடநா(டு)
எங்கும் மகிழ்ச்சி இலங்கிடுக! – திங்கள்
முகமாதர், தந்துணைவர் மக்கள் முறையோர்
அகமார்ந்த அன்பால் இலையில் – மிகப்படைத்த
நன்றான பொங்கல் நனியுண்டு தாமகிழ்ந்தார்
இன்றுபோல என்றும் மகிழ்ந்திருக்க! – தென்றல்
பழகு தமிழ்நாட்டில் என்றும் தமதோர்
அழகு திராவிடத்தின் ஆட்சி முழுதும்
தமதாக்கித் தம்கலையொ ழுக்கம் அனைத்தும்
அமைவாக வாழ்புகழ் ஆர்த்து!
– புரட்சிக்கவிஞர்
(பொன்னி பொங்கல் மலர், 14.1.1950)