கவி
இது கபி என்பதின் சிதைவானால் குரங்கு என்று பொருள்படும். அப்போது அது வடசொல் என்றால் நாம் ஏற்றுக் கொள்ளத் தடையில்லை. பா என்னும் பொருளைத் தரும் போது அது (கவி) தூய தமிழ்ச் சொல்லே யாகும்.
கவிதல் என்பது தல் இறுதி நிலை பெற்ற தொழிற்பெயர். கவிகை என்னும் போது, அது கை இறுதிநிலை பெற்ற தொழிற்பெயர். கவிதை என்பதில் அது போல தை இறுதிநிலை என்க, நடத்தை என்பதிற் போலவே. எனவே கவிதல் கவிகை. கவிதை இது தொழிற்பெயர்கள். கவி என முதனிலைத் தொழிற் பெயராக வருவது உண்டு. இது பெருவழக்கும் ஆகும். இனிக் கவி என்றால் மனம் ஒரு பொருளில் கவிவது. பா என்க. கவி என்பது பாட்டுக்குப் பொருளாயிற்று. கவிதா என்கின்றார்களே வடவர் எனில், அது வடவர் இயல்பான செயல் என விடுக!
கவிஞர் உள்ளத்தில் உருவான நிலையில் வைத்து அதைக் கவி என்றான் தமிழன். அது வெளிப்பட்டுப் பரவி நடக்கும் (பரவி) நிலையில் அதைப் பா என்றான்!
கவிப்பா அமுதம் இசையின் கறியொடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான்சட கோபன் குமரி கொண்கள்
புவிப்பா வலர்தம் பிரான்திருவாய் மொழி பூசரர் தம்
செவிப்பாய் துழைத்து புக்கு உள்ளத்திலே தின்று தித்திக்குமே
சடகோபர் அந்தாதி 7.
என்றதில் நோக்குக.
இதில் கவி என்றது என்ன பொருளில் அமைந்தது. மனம் கவிதலால் உண்டான பா எனப் படவில்லையா. எனவே, கவி தனியே நின்று ஆகுபெயராய்ப் பாவை உணர்த்துவதில் வியப்பென்ன?
கவி என்ற தூய தமிழ்ச் சொல்லும், அது பாவை உணர்த்த வேண்டியதற்கான தமிழ்ச் சட்டமும் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மிடம் உண்டு! ஆட்சியில் உண்டு! அது போல இதை வடவர் 5000 ஆண்டுகளின் முன்னே ஏற்பட்டிருந்தால் அந்தக் காரணத்தைக் காட்டி இது வடசொல்லேதான் என்று மறுக்கட்டுமே! தமிழர் தம் தமிழ் உள்ளத்தை வடவரின் நச்சில் துவைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் தமிழில் உள்ள சொற்களிலெல்லாம் அய்யப்பாடுறுவானேன்? நாவலந்தீவு தமிழருடையது. அங்கு இயற்கை முறையில் முற்காலத்திலே இருந்தது தமிழ்.
ஆரியர் வந்தவர். வந்தபின்தான் அவர்களின் மொழியைத் தமிழாற் பெருக்கினர். ஆரியர் வரும்போது அவர்கட்குச் சில சொற்களே தெரியும்? அவர்கட்கு நூற்களும் ஏற்பட்டன என்றால் தமிழாலேயே! சமஸ்கிருதம் என்பது சேர்த்துப் பொறுக்கிச் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு கூட்டுக்கறி! தமிழ் அப்படியா? கருத வேண்டும். எனவே கவி தூய தமிழ்ச் சொல் என்பதைக் கடைபிடிக்க.
(குயில்: குரல்: 1, இசை: 23, 4-11-1958)
பனாதி
இது தமிழ்ச் சொல்லே. பன்+அத்து+இ=பன்னத்தி. அத்துச் சாரியை, ‘இ’ பெயர் இறுதி நிலை. பன்_-ஒருவகைப் புல். அது பச்சென்றிருக்கையிலும் கொளுத்தினால் காய்ந்தது போல் எரியும். பசையற்றது, பள்ளத்தி என்பதே பனாதி என மருவிற்று. பனாதி_–பசையற்றவன், வளமில்லாதவன்.
ஆதலின் தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும் என்க!
வேந்தன்
அயோத்தியா காண்டம் நகர் நீங்கு படலம் 185ஆம் செய்யுளின் விரிவுரையில் வை. மு. கோ. ‘வேந்தன் தே«ந்திரன் என்பதன் சிதைவு என்பர்’ என்று எழுதியுள்ளார்.
“வேந்தன் மேய தீப் புனல் உலகமும்” எனத் தொல்காப்பியத்தில் வருகின்ற தென்றால் தொல்காப்பியர் காலத்திலேயே தேவேந்திரன் என்பது வேந்தன் என்று சிதைந்து விட்டதா? வை. மு. கோ. என்னுமிவரைப் போன்ற தீநெறியில் அஞ்சாது கால் வைத்திருப்பாரா தொல்காப்பியர்!
(குயில், குரல்: 1, இசை: 25, 18-11-58)