பெரியகுளம் ச.வே.அழகிரி
– கி.வீரமணி
மதுரை மாவட்டம் பெரியகுளம் முன்பு கழக பிரச்சாரக் களத்தில் முண்ணனியில் இருந்த ஊர்களில் ஒன்று. (தற்போது சற்று சுணக்கத்தில் உள்ளது; விரைவில் அந்நிலை மாற்றப்படும் என்று நம்புகிறோம்.)
அதில் எண்ணற்ற பெரியார் பெருந்தொண்டர்கள் அரிய கொள்கை பரப்பும் தொண்டறச் செம்மல்களாக பலர் இருந்தனர்.
நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றிய தோழர் மருதமுத்து, முதியவர்கள் காமாட்சி மா.செல்லப்பெருமாள், மீனாட்சி போட்டோ ஸ்டுடியோ முத்தய்யா அவரது குடும்பத்தினர், நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று இயக்க வீரராக இருந்தவர், (பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை) முத்துக்கருப்பையா, பரசுராமன், அப்துல் சம்பூர்; இருந்தவர்களில் மிகவும் தீவிரமாக உழைத்த ஒரு ஒப்பற்ற தோழர், பெரியார் பெருந்தொண்டர் தோழர் ச.வெ.அழகிரி அவர்கள்.
மிகவும் வசதியற்ற நடுத்தரக் குடும்பத்தவர். இரவில் பால்கடை வியாபாரம் செய்தவர். எவ்வளவு கோபமூட்டினாலும் எந்தநிலையிலும் கோபப்படாமல், ‘அப்படிங்களா அண்ணாச்சி’ என்று பொறுமை பொங்கப் பேசி, கோபப்பட்டவர்களை மாற்றி இவர்பால் அனுதாபமும் ஆழ்ந்த பிரியமும் கொள்ளும்படிச் செய்துவிடுவார்.
இவரது கடும் உழைப்பினால் இவர் மதுரை மாவட்ட அமைப்பாளராக இருந்து பிறகு மதுரை மாவட்டச் செயலாளராகவும் உயர்ந்து பல ஆண்டுகள் பணியாற்றி கழக வரலாற்றில் மறக்கப்பட முடியாத மானவீரராக என்றும் திகழ்பவர்.
பேச்சாளர்களை அழைத்து, கூட்டங்கள் ஏற்பாடு செய்வதும், எவர் ஏச்சு, பேச்சு பேசினாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாது, கழகப் பணியே கருமம்; அதையே ‘கண்ணாயினார்’ என்று உழைத்த அரிய தோழர்.
தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் ச.வெ.அழகிரியிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் அளவிடற்கரியது. என்னிடத்தில் மாணவப் பருவம் தொட்டு அவர் மிகுந்த அன்புடன் பழகியவர். புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் அழகிரிமேல் உள்ள தனிப்பற்றினால், அவரை அய்யாவின் கோபத்திற்கு இடையில் நின்று தடுப்பணையாக இருப்பார்!
வெளியில் தெரியாமல் அய்யாவே சுற்றுப்பயணம் முடித்து (மதுரை மாவட்டச் சுற்றுப்பயணம் செல்லும்போது அவர் நிலை அறிந்தவர் ஆதலால் _ ஒரு சிறு தொகை அளித்தே அவரை அனுப்புவார். அந்த அளவுக்கு அய்யாவின் உள்ளத்தில் இடம்பெற்ற அன்புத் தொண்டர் தோழர் ச.வெ.அழகிரி அவர்கள்.
எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அந்த ஊரில் கூட்டம் நடத்தாமல் திரும்பமாட்டார். செயற்கரிய செய்த லட்சியத் தொண்டர்.
அவர் ஈடுபடாத போராட்டங்களே இல்லை, ஜாதி ஒழிப்பு, அரசியல் சட்ட எரிப்பு முதல், அன்னையார் நடத்திய ‘இராவண லீலா’ உட்பட அனைத்திலும் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாத இயக்கப் பணியாற்றிய வீரர். மானம் பாராத பொதுத்தொண்டர் என்ற இலக்கணத்தின் இணையற்ற இலக்கியம் அவர்!
இப்படிப்பட்ட அருந்தொண்டர்களின் கடும் வியர்வைத்துளி, இரத்தத் துளிகளால்தான் இன்று தேனி மாவட்டமாக உள்ள பல ஊர்களில் கழகம் செழிப்புடன் இயங்குகிறது என்றால் அது மிகையல்ல!
அத்தகைய வீரவணக்கத்திற்குரிய அழகிரி _ அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை தளபதி அழகிரியின் பெயரைத் தாங்கியதால்தானோ என்னவோ, அவர் அரும்பெரும் தொண்டராக என்றும் கழக வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்!
ஒரு லட்சிய பொதுத்தொண்டருக்கு ‘மொட்டை மரமான’ பெரியகுளம் அழகிரி ஒரு தனி எடுத்துக்காட்டாவார்! ஸீ