மருத்துவத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு!

ஜனவரி 16-31

-ஒளிமதி

தமிழர் பல்துறை அறிஞர்களாயும், வல்லுநர்களாயும் வாழ்ந்து உலகுக்கு வழிகாட்டியவர்கள். உலக நோக்கு, மனித நேயம், சமத்துவம் போன்ற உயர் பண்புகளை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்ட அவர்கள், போர், கலை, வணிகம், ஆட்சி, தொண்டு, கல்வி என்று பலவற்றில் தனித்த முத்திரைப்பதித்த தமிழர்கள் கப்பல் கட்டுதல், கட்டடங்கள் கட்டுதல், அணை கட்டுதல், நகர் அமைத்தல், ஆடை நெய்தல், அணிகலன்கள் செய்தல், வான் ஆய்வு என்று பலவற்றில் உலகில் முன்னிலையில் நின்றவர்கள், மருத்துவத்திலும் தலைசிறந்து விளங்கினர்.

உடற்கூறு ஆய்வு, உடலுக்கு வரும் நோய்கள், நோய்க்கான காரணங்கள், நோய் தடுப்பு நடவடிக்கைகள், நோய் தீர்க்கும் மருந்துகள் என்று மருத்துவக் கூறுகளில் நுட்பமான அறிவு பெற்று விளங்கினர்.

தமிழர்களின் உணவு மருத்துவ அடிப்படையிலே அமைக்கப்பட்டது. உணவே மருந்தாக அமையும் வகையில் உணவைச் செய்தனர்.

குடும்பத்தில் உள்ள முதியவர்களே மருத்துவர்களாய் விளங்கினர். பச்சிலைகள், வேர்கள், பட்டைகள், பூக்கள், காய்கள், கனிகள், விதைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் உடற்பாகங்கள், பற்பங்கள், உலோகங்கள், மண், நஞ்சு என்று பலவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தினர். சாறு எடுத்தல், பொடியாக்குதல், அரைத்து சாந்தாக்குதல், புடம் போட்டு பொடியாக்கல், மாத்திரைகள் ஆக்குதல், தைலங்கள் ஆக்குதல், களிம்புகள் செய்தல் என்று பலமுறைகளில் மருந்துகளைச் செய்தனர்.

மருத்துவத்தில் தேர்ந்தவர்கள் சித்தர்கள் எனப்பட்டனர். எனவே, தமிழ் மருத்துவம் சித்தர் மருத்துவம் என்றே அழைக்கப்பட்டது.

நாடித் துடிப்பை வைத்தே உடல்நிலையை, உடல் நோயைத் துல்லியமாகக் கண்டறிந்தனர்.

உடலை வாயு உடம்பு, பித்த உடம்பு, சளி உடம்பு என்று மூன்றாகப் பிரித்து அதற்கேற்ப மருந்துகளைத் தரும் முறையை உருவாக்கினர்.

ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு

இத்தகு சிறப்பும், நுண்மையும் பெற்று விளங்கிய தமிழர் மருத்துவத்தில் ஆரியர் நுழைந்து தமிழரின் மருத்துவச் சிந்தனைகளை தமதாக்கியதோடு, தமிழர் மூலத்தை அழித்தனர்.
தமிழரின் மருத்துவச் சிந்தனைகளை, மருந்துகளை சமஸ்கிருதத்தில் பெயர்த்து ஆயுர்வேதம் என்று உருவாக்கி அது தங்கள் மருத்துவம் என்றனர். இதனால் தமிழர் மருத்துவம் பொலிவிழக்க போலி மருத்துவமான ஆயுர்வேதம் ஆதிக்கம் செலுத்தியது.
மூடநம்பிக்கைகளைப் புகுத்தினர்:

அறிவியல் கண்ணோட்டத்தில் மருத்துவத்தை அமைத்து பின்பற்றி நோய் தீர்த்து வாழ்ந்த தமிழரிடையே மூடநம்பிக்கைகளை ஆரியர்கள் நுழைத்தனர்.

நோய் தாக்குதலை பேய் தாக்குதல் என்று கூறி, விபூதி போடுதல், தாயத்து கட்டுதல், மந்திரம் ஓதுதல், பிராத்த¬னை செய்தல், படையல் போடுதல், பலியிடுதல், நேர்த்திக்கடன் செய்தல் என்று பலவற்றைப் புகுத்தி, தமிழரின் அறிவைக் கெடுத்து மூடத்தனத்தில் மூழ்கச் செய்தனர்.

மருத்துவத்தை மறைபொருளாக்கினர்:

தங்கள் வேதத்தை பிறருக்கு மறைத்து மறையாக்கிய ஆரியர்கள், தமிழர் மருத்துவத்திலும் தலையிட்டு, ஆதிக்கம் செலுத்தி, அதையும் பிறருக்கு சொல்லக்கூடாத மறைபொருளாக்கினர். குழூக் குறிகளை உருவாக்கினர். நேரடியாகச் சொல்லாது பொருள் கொள்ளும்படியான சொற்களை, குறிப்பாலுணர்த்தும் சொற்களை உருவாக்கி மருத்துவத்தை குழப்பம் நிறைந்ததாக்கியதோடு, ஒரு குழுவுக்குள் ஒடுக்கவும் செய்தனர்.
சுயநலத்துக்காக அறிவை ஒளித்தல் என்ற ஆரியப் பண்பாடு தமிழர் மருத்துவத்தில் நுழைந்து, தமிழ் மருத்துவத்தின் தனிச்சிறப்பை, வளர்ச்சியை, பொதுப் பயன்பாட்டைக் கெடுத்தது.

சமஸ்கிருதத்தை நுழைத்தனர்:

இன்றைக்கு எப்படி ஆங்கிலத்தை மிகையாகக் கலந்து பேசுதல் நடைமுறையில் உள்ளதோ, நாகரிகமாகக் கருதப்படுகிறதோ அவ்வாறே ஆரியர்கள் நுழைத்து தமிழ்மொழியைக் கெடுத்ததன் விளைவாக, தமிழர் மருத்துவ பாடல்களிலும் சமஸ்கிருதம் மிகையாகக் கலந்து பொருள் கொள்ளும் சிக்கலை உருவாக்கி, தெளிவைக் கெடுத்தது.
தமிழ்நாட்டு மூலிகைகளையும், உலோகங்களையும் கொண்டு தமிழ் மருத்துவர் கண்டதே தமிழர் மருத்துவம். இத்தமிழ் மருத்துவம் தோன்றவும் வளரவும் காரணமாயிருந்தவர்கள் சித்தர்கள். தமிழ்நாட்டு மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்த இவர்களின் அனுபவங்களின் விளைவே தமிழ் மருத்துவ முறை எனலாம். ஆனால், தற்போது கிடைக்கும் தமிழ் மருத்துவ நூல்களில் காணப்பெறும் சொற்களில் எழுபத்தைந்து விழுக்காடு நோய்ப் பெயர்கள், மருந்துப் பெயர்கள், பொருட் பெயர்கள் _ அனைத்தும் வட சொற்களாகவே விளங்குகின்றன. வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்தபோது இவை எழுதப் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழர் கண்ட மருத்துவத் துறையில் தற்போது வழங்கிவரும் சொற்களும், இணையான தமிழ்ச் சொற்களும் சான்றுக்காகச் சில கீழே தரப் பெற்றுள்ளன.

மூலிகை வகை:

சௌந்தர்யம் -_ வெள்ளாம்பல்
ப்ருந்தா _- துளசி –
சப்ஜா – திருநீற்றுப் பச்சை
கூஷ்பாண்டம் -_ பூசணி
சாயாவிருட்சம் _ நிழல்காத்தான்
ரத்தபுஷ்பி _ செம்பரத்தை
மருந்து வகை:
ஔஷதம் _ அவிழ்தம்
லேஹியம் _ இளக்கம்
பஸ்பம் _ நீறு
கஷாயம் _ குடிநீர்
ப்ரமாணம் _ அளவு
சூரணம் _ இடிதூள்
நோய் வகை:
திருஷ்டி _ கண்ணேறு
க்ஷயம் _ என்புருக்கி
ஆஸ்துமா _ ஈளை இரைப்பு
அரோசகம் _ சுவையின்மை
அஜீர்ணம் _ செரியாமை
குஷ்டம் _ தொழுநோய்
மருந்துப் பொருள் வகை:
சொர்ணமாட்சிகம் _ பொன்னிமிளை
நேத்ரபூஷ்ணம் _ அன்னபேதி
ப்ரவளம் _ பவழம்
நவநீதம் _ வெண்ணெய்
லவணம் _ உப்பு
தசமூலம் _ பத்துவேர்
த்ரிகடுகு _ முக்கடுகு
த்ரிபலா _ முப்பலா

ஆரியர்களால் திராவிடர்களிடம் இருந்து பெறப்பட்டு மெருகேற்றப்பட்ட மருத்துவம், சித்த மருத்துவமாகவும், ஆயுள்வேதமாகவும் ஒரு தாய் வயிற்றில் உதித்த, இருவேறு மகவுகளாக வளர்ந்து மிளிர்ந்தன.

எனவே போதிய வேறுபாடுகள் ஏதும் இல்லாத இவ்விரு மருத்துவ முறைகளும் ஒன்றே என்று கூறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இரண்டிற்கும் திராவிட மருத்துவ முறையே தாய் மருத்துவமாகும்.

ஆயுர்வேத மருத்துவம் தமிழ் மருத்துவமே!

திராவிடம் என்பது வடமொழிச் சொல். இது சிந்து சமவெளியில் இருந்து துரத்தப்பட்டுத் தக்காணத் தீபகற்பத்தை நோக்கி ஓடிவந்த மக்களைக் குறிக்க, ஆரியர் பயன்படுத்திய சொல். ஓடிவந்த மக்கள் தங்களைத் தாங்களே திராவிடர் என்று ஒருபோதும் குறிப்பிட்டது கிடையாது. இவ்வாறாயின் அவர்களின் இயற்பெயர்தான் என்ன? தமிழர்கள்.
அன்றைய தமிழ் மருத்துவமே, தமிழ்மொழியில் சித்த மருத்துவமாயும், சமஸ்கிருத மொழியில் ஆயுர்வேதமாகவும் ஆகின.

சித்தர்கள் தோற்றுவித்த சித்தர் மருத்துவந்தான் சித்த மருத்துவம், அதன் மற்றொரு பெயர் தமிழ் மருத்துவம் என்று பலர் கூறுவர். சித்தர்கள் தோற்றுவித்தது சித்த மருத்துவம் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அது மட்டுமே தமிழ் மருத்துவம் என்றால் சரியல்ல.

சித்த மருத்துவத்துடன் தொடர்புள்ள அகத்தியர், திருமூலர் முதலான சித்தர்கள் காலம் கி.பி.500க்குப் பிற்பட்டது என்பதே ஆராய்ச்சியாளர்கள் கருத்து. மேலும் சித்தி, சித்தா, சித்தர் என்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லாததும் சித்த மருத்துவத்தின் தோற்றம் கி.பி.500க்குப் பிற்பட்டே இருக்க இயலும் என்பதற்கு மற்றொரு காரணம். எனவே, தமிழ் மருத்துவத்தின் மற்றொரு பெயர்தான் சித்த மருத்துவம் என்றால் தமிழ் மருத்துவத்தின் தோற்றமே காலத்தால் பிற்பட்டு உண்மைக்குப் புறம்பாகிவிடும்.

சித்த மருத்துவக் காலத்திற்கு முன் தமிழகத்தில் மருத்துவம் தழைத்திருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அந்த மருத்துவ முறைக்கு மருந்து, மருத்துவம் என்ற பொதுப்படையான பெயர்களே இருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் தவிர எல்லாச் சங்க இலக்கியங்களும் மருந்து என்ற பொதுப் பெயரையே குறிக்கின்றன. Medicine என்றால் இன்று நவீன மருத்துவத்தை மட்டுமே குறிப்பது போல மருந்து என்றால் அக்காலத்தல் தமிழ் மருத்துவத்தை மட்டுமே குறித்திருக்க வேண்டும். வள்ளுவரும் எந்தச் சிறப்புப் பெயரும் கொடுக்காமல், மருந்து என்றே ஓர் அதிகாரத்திற்குப் பெயர் சூட்டியது மற்றொரு சான்று.

இருப்பினும் ஆயுள்வேதம் என்று சிறப்புப் பெயரும் பண்டைய தமிழ் மருத்துவத்திற்கு இருந்தது. ஆயுள்வேதரும், காலக்கணிதரும் என்ற சிலப்பதிகார வரியால் தெரியலாம்.

அதர்வண வேதத்தின் ஒரு அங்கம் ஆயுள்வேதம் என்பது வடமொழிப் பண்டிதர்-களின் கணிப்பு. இருப்பினும் ஆயுள்வேதம் என்ற சொல் நான்கு வேதங்களிலும் இல்லை.

வடமொழி ஆயுள்வேதத்தின் இணையற்ற நூல்களாகக் கருதப்படும் சரகசம்கிதா, சுசுருத சம்கிதா ஆகியவை ஆயுள்வேதம் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை ஆயுள்வேதா என்ற சொல்லை வடமொழி மருத்துவ நூற்கள் பயன்படுத்தாமையும், அதற்கு முற்பட்ட சிலப்பதிகாரம், ஆயுள்வேதம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பினும், ஆயுள்வேதம் என்பது தமிழ் மருத்துவத்தையே குறிக்கும் என்பதும் பொருந்தும் என்று நிறுவுகிறார் ஜே.ஜோஸப்தாஸ், மருத்துவர். (மருந்தியல் துறை, பட்ட மேற்படிப்புப் பகுதி, அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *