அடுத்தவருக்குத் தொற்றும்படி இருமுதல் தும்முதல் கூடாது
இருமல் தும்மல் இயற்கையானது. தடுக்க முடியாது. ஆனால், இந்த இரண்டும் எதிரில் உள்ளவர்களுக்கு நோயைப் பரப்பும் என்பதால் அதனைத் தவிர்க்கும் வகையில் இவற்றை வெளிப்படுத்த வேண்டும். குனிந்து, துணியை வாயில் பொத்தித் தும்ம வேண்டும் அல்லது இரும வேண்டும்.
நடைப்பயிற்சிக்கு முன் டீ, காபி குடிக்கக் கூடாது
நடைப்பயிற்சி தொடங்கும் முன் சிலர் காபி அல்லது டீ குடித்துவிட்டுச் செல்வர். இது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. நடைப்பயிற்சி முடிந்த பின் 10 நிமிடங்கள் ஓய்வெடுத்த பின், இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். அதன்பின் அரைமணி நேரம் கழித்து, டீ அல்லது காபி சாப்பிடலாம்.
போக்குவரத்து மிகுந்த இடத்தில் நடைப்பயிற்சி கூடாது
புகை, தூசு, மாசு என்று ஏராளமான கேடானவை நுரையீரலுக்குள் செல்லும். இங்கு நடப்பதன் மூலம் கிடைக்கும் நலம் பாதிக்கப்படும். பூங்கா, அமைதியான சாலை, அதிகாலை கடற்கரை, விளையாட்டுத் திடல் போன்றவற்றில் நடப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் நலமும், அமைதியும் தரும். நடக்கும்போது பருத்தி ஆடைகளை அணிந்தால் வியர்வை உறிஞ்ச உதவியாய் இருக்கும். நடக்கும் இடம் மேடு பள்ளம் இல்லாத இடமாக இருக்க வேண்டும்.
தூய்மையான, உறுத்தாத இடமாக இருந்தால் வெறுங்காலோடு நடக்கலாம். இல்லையென்றால் செருப்பணிந்தே நடக்க வேண்டும். நோய் வந்தபின் நடப்பதற்கு மாறாக, நலமுடன் இருக்கும்போதே நடப்பதே நோய் தடுக்கவும் நலம் காக்கவும் உதவும். பதற்றம், அதிர்வு, கவலை தரும் செய்திகளைப் பேசிக் கொண்டு நடக்கக் கூடாது. அது நடைப்பயிற்சியின் பயனைக் கெடுத்துவிடும்.
கணினியில் தொடர்ந்து பணி செய்யக் கூடாது
கணினியில் தொடர்ந்து பணியாற்றக் கூடியவர்களின் பார்வை பாதுக்கப்பட வேண்டும் என்றால், தொடர்ந்து கணினியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 நொடி பார்க்க வேண்டும். பின் கணினியில் 20 நிமிடம் பணியாற்றிவிட்டு மீண்டும் 20 நொடிகள் 20 அடி தூரத்தில் உள்ள பொருளைப் பார்க்க வேண்டும். இது கண்ணைப் பாதுகாக்கும்.
கணினியில் பணியாற்றுபவர் கட்டாயம் 8 மணி நேரம் உறங்க வேண்டும். மதிய உணவு முடிந்ததும் 15 நிமிடங்கள் கண்ணை மூடிக் கொண்டு ஓய்வெடுக்க வேண்டும். ஒருநாளைக்கு ஏழெட்டு முறை கண்களைச் சுத்தமான தண்ணீரில் அலம்ப வேண்டும். பப்பாளி, கேரட், கீரை, மீன், பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றைத் தவறாது சாப்பிட வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கக் கூடாது
உணவு விடுதிகளில் சூடான உணவுகளைப் பாலீத்தின் தாளில் வைக்கிறார்கள். சூடான சாம்பார், குருமா போன்றவற்றைப் பாலீத்தின் பைகளில் ஊற்றுகிறார்கள். இது உடலுக்குக் கேடு தரும். பிளாஸ்டிக்கிலுள்ள மெலாமைன் அளவு கூடும். இது கிட்னியில் கல் உருவாகக் காரணமாக அமையும்.
சளியுள்ளவர்கள் இவற்றைச் சாப்பிடக் கூடாது
மார்ச்சளி, மண்டைச்சளி, தும்மல், இருமல் என்று வேதனைப்படுபவர்கள், மாவுப் பண்டங்கள், புது அரிசி, இனிப்புகள், எண்ணெய்ப் பண்டங்கள், ஐஸ் கலந்த பொருள்கள், ஐஸ்கிரீம், குளிர்ந்த பானங்கள் சாப்பிடுதல், குளிர்காற்றில் செல்லல், பகலில் உறங்குதல் கூடாது.