– கவிஞர் கலி.பூங்குன்றன்
கோயில்கள் _ வழிபாடுகள் உலகெங்கும் நடக்கக் கூடியவைதான். வீட்டில் பெரியவர்கள் செத்தால் அவர்களின் நினைவாகப் படையல் போடுவதுண்டு. போர்க்களத்தில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டுவதுண்டு.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் வழிபாட்டு முறைகள் உண்டு. தன்னைச் சுற்றிச் சுழலும் இயற்கையின் சீற்றங்களுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் அளவுக்குப் புத்தி வளர்ச்சியில்லாத மனிதன் _ ஏதோ ஒரு சக்திதான் இதற்கெல்லாம் காரணம் என்று கற்பித்துக் கும்பிட ஆரம்பித்தான்.
காற்றுச் சுழன்றடித்ததால் காற்று வாயு பகவான் ஆனான். மழை வெள்ளம் மரணத்தைக் கொடுத்ததால் அதை வருணப் பகவான் ஆக்கினான். பாம்பைக் கண்டு பயந்து நாகராஜன் ஆக்கிக் கும்பிட்டான்.
தொடக்கத்தில் மரங்களுக்குக் கீழ்தான் உருவங்கள் உண்டாக்கப்பட்டன. ஏன், சில மரங்களே கூட கடவுளாகின. கோயில்கள் பிற்காலத்தில் அரசர்களின் போர் வெற்றியின் நீட்சியாக உருவாக்கப்பட்டவைதான்!
கோயில்களை பணம் தண்டுவதற்கான வழிமுறையாகக் கவுடில்யனின் அர்த்த சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
1. மரங்களின் அடியில் அமைக்கப்பட்ட ஆலயங்கள் தல விருஷம்.
2. மரம், செங்கல் முதலியவைகளால் கட்டப்பட்ட கோயில்கள்.
3. குகைக் கோயில்கள், குடவரைக் கோயில்கள்.
4. ஒரு பாறையில் செதுக்கப்பட்ட கல் ரதங்கள்.
5. கற்களை ஒன்றின்மேல் ஒன்று அமைத்துக் கட்டிய கற்றளிகள்.
6. கற்கள், சுண்ணாம்பு, மரம் இவைகளால் ஆன கோயில்கள்.
7. மூலஸ்தான விமானங்கள் கோபுரம்போல் அமைந்தவை.
8. வாயில் கோபுரங்கள் பெருமளவு.
9. அம்பிகைக்குத் தனிக்கோயில், பரிவார தேவதைகள்.
10. பிரகாரங்கள், மண்டபங்கள்.
இப்படியாகத்தான் கோயில்கள் படிப்படியாக உருப்பெற்றன.
சிவன் கோயில்களில் “பண்டாரம்’’ என்னும் வகுப்பாரும், திருமால் கோயில்களில் “நம்பியார்’’ என்னும் வகுப்பாரும், காளி கோயில்களில் “உவச்சர்’’ எனும் வகுப்பாரும் பூசைனயும், பொது வழிபாடும் தனித் தமிழில் நடத்தி வந்தனர். திருக்கோயிற் பணிகளைக் கவனித்தற்கு ஊரவைப் பிரிவு ஒன்று இருந்தது. பெரும் கோயில்களில் “முதுகேள்வி’’ (Supervising Officer), “இளங்கேள்வி’’ (Subordinate Supervising Officer) என்னும் அதிகாரிகள் இருந்தனர் என்கிறார் மொழி ஞாயிறு பாவாணர். (‘தமிழர் மதம்’ பக்கம் 194)
கி.பி.5ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் இங்கே வந்தபோதுதான் பரத்வாஜ கோத்திர ஆரியர்கள்தான் வடமொழியோடு வந்தார்கள். அதிகாரத்தைப் பிடித்தபின் கோயில்களை சமஸ்கிருத மயமாக்கினார்கள். தமிழ் ஆகமத்தில் நடந்த அத்தனையும் வடமொழியில் மாற்றினர் என்கிறார் பொறியாளர் சத்திவேல் முருகன். (‘நக்கீரன்’ 23.12.2015)
ராஜராஜன் கட்டிய கோயிலில் பார்ப்பனர்கள் குடிகொண்டது மட்டுமல்ல. பெருவுடையார் கோயில் என்பது சமஸ்கிருத மயமாக்கப்பட்டு பிரகதீஸ்வரர் என்று ஆரிய மயமாக்கப்பட்டது. அருண்மொழித் தேவன் என்ற தனது தனித்தமிழ்ப் பெயரையே ராஜராஜன் என்று மாற்றிக் கொண்டான் என்றால் அவனின் ஆரிய அடிமைத்தனத்துக்கு அளவு ஏது?
வருணாசிரம தர்மத்துக்கு கொடி ஏற்றினான். அதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் சென்று கும்பிட முடியாது. அதுகுறித்த சாம்பசிவ சர்மா எழுதிய ராஜராஜசோழன் எனும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டுள்ளது.
“வருணாசிரம தர்மங்களைக் கடைபிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோயிலுக்குள் பிரவேசித்து இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடுநிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பிறப்பெய்துந் திருப்பெறவே வானளாவும் கோபுரங்கள் அமைக்கப்பட்டன’’ என்பது வீராதி வீரனான ராஜராஜப் பெருவேந்தன் வேதியத்தின் வருணாசிரமப் படுகுழியில் வீழ்ந்ததைப் பறைசாற்றவில்லையா?
பரம்பரைப் பழக்கம், குறிப்பிட்ட கோயில்களில் குறிப்பிட்டவர்கள்தாம் அர்ச்சகராக முடியும் என்று அடம் பிடிக்கிறார்களே _ அரட்டையடிக்கிறார்களே _ அது உண்மைதானா?
பழனி _ முருகன் கோயிலை உருவாக்கியோர் யார்? திருமூலர் வழிவந்த போகர் என்ற சித்தர்தானே! நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட சிலையாயிற்றே! பரம்பரை பரம்பரையாக அங்குப் பூசனை செய்து வந்தவர்கள் யார்?
போகருக்குப் பிறகு புலிப்பாணியாரும், தொடர்ந்து வந்த சீடர்களாலும் _ அதாவது பண்டாரம் எனப்படுபவர்களாலும்தானே பூசை செய்யப்பட்டு வந்தது. அதனை மாற்றியமைத்தவர் யார்? 1623_1659 வரை மதுரையினை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் ஆட்சியில் தளபதியாக இருந்த ராமப்பய்யன் என்ற பார்ப்பனர் பழனி முருகன் கோயிலுக்கு வந்தபோது, அக்கோயிலில் கருப்பர்களான சூத்திரர்கள் பூசை செய்யக் கண்டு, ‘பிராமணனாகிய நான் சூத்திரர்களிடம் பிரசாதம் வாங்க மாட்டேன்’ என்று கூறி உடனடியாக அவர்களை விலக்கிவிட்டு, கொங்கு நாட்டிலிருந்து அய்ந்து பார்ப்பன அர்ச்சகர்களை வரவழைத்து, அவர்களிடம் _ தமிழர்களின் கோயிலை ஒப்படைத்தானே. பழனி கோயில் தலப்புராணமே இதனைக் கூறுகிறதே! மரபு பின்பற்றப்பட வேண்டும் என்று பசப்பும் பார்ப்பனர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா?
“முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், தமிழர்களிடையே முன்பு இருந்த சாதி வேறுபாடுகள் தொடர்ந்து வலுப் பெற்று வந்தன. வலங்கை இடங்கைப் பிரிவினர் என்ற புதிய சாதிப் பிரிவுகள் தோன்றின; மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடுகளும் தொடர்ந்தன.
சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால் சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பிராமணர்களின் செல்வாக்கு குறைந்து, புதிதாக வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வடமொழிப் பிராமணர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று. தமிழ்நாட்டில் தமிழன்கட்டிய கோயில்களின் கருவறைக்குள் செல்லும் உரிமையை தமிழன் பறி கொடுத்தான்.
சமுதாயத்தில் கோயில்களே ஆதிக்கம் செலுத்தின. ஆனால் அக்கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்க புரியாகவே காட்சி அளித்தன. அரசாங்க அதிகாரமும், சமயச் செல்வாக்கும் குவியப் பெற்றிருக்கும் கைகள் என்றுமே ஓய்ந்திருப்பதில்லை. அவ்வதிகாரத்தையும், செல்வாக்கையும் மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும், பெருகினவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அக்கைகள் பரபரத்துக் கொண்டிருப்பது இயல்பு.
எனவே, உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப் பெற்ற பிராமணர்கள் அவை யாவும், எக்காலமும் தம்மிடையே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர்.
வேந்தர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்-களுக்கும் வமிசங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதே நம் சீரிய கடமையாம் எனக் கூறும் மெய்க்கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரிய பழக்க வழக்கத்தைப் பாராட்டிக் கூறும் சாத்திரங்களும், புராணங்களும் எழுந்தன.’’
(பேராசிரியர் அ. இராமசாமி எழுதிய ‘தமிழ்ப் பேரரசுகளின் சரிவும், வீழ்ச்சியும்’ _ பக்கம் 34–_35)
சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தன் எழுதிய “வழிபாட்டில் வல்லாண்மை’’ நூல் என்ன கூறுகிறது?
“கி.பி.5ஆம் நூற்றாண்டின் பின்னரே மூவேந்தரையும் வயப்படுத்தி, ஆகமம், சங்கிதை, தந்திரம் என்னும் மூவகைத் தொழுமறைகளை இயற்றி, பிராமணர்களே திருக்கோயில்களில் வழிபாடு செய்து வருமாறு, திட்டம் செய்து விட்டனர்’’ _- மொழிஞாயிறு பாவாணர்
அடி பிறழாத முதல் ஆகமங்கள் இன்று நடைமுறையில் இல்லை. சைவாகமங்கள் 28இல் காமிகாகமம் மட்டுமே அடிக்கடி எடுத்தாளப்படுகிறது. மற்ற ஆகமங்களின் கருத்துக்களை 18 பத்ததிகளாகப் பின்னால் தொகுத்துள்ளனர். அவற்றினுள்கூட ‘சகலாகமசாரம், ‘வருணபத்ததி’ ‘நிர்வாகனப் பத்ததி’ ஆகியவைகளிலிருந்தே நெறி முறைகள் காட்டப்படுகின்றன.
முதல் ஆகமங்களில் பிற்சேர்க்கைகளும், இடைச் செருகல்களும் செய்யப்பட்டுள்ளன என்பதற்குரிய பல ஆதாரங்களும் தெரிகின்றன. குறிப்பிட்ட பிரிவினர்தான் ஆலய உள்துறைப் பணிகளைச் செய்ய வேண்டுமென்ற தனிநிலை உருவானதே வெகு பிற்காலத்தில் தான். ஏந்தான வாழ்க்கையும், வருவாய் வளர் நிலையும் கோயில் பூசகர்களுக்கு உறுதி ஆக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயன்பெறக் கருதி, வரையறைகள் செய்யப்பட்டன. அந்நிலையில்தான் பூசகப்பணிகளுக்கும், கோயில் வழிபாட்டுக்கும் தாழ் நிலைப் பிரிவினருக்கும் இடையே தடைச்சுவர் எழுப்பப்பட்டது.
மெய்ப்பொருள் மாற்றம்
வரலாற்றுப் பேராசிரியர் திரு.பி.டி.சீனுவாச அய்யங்கார் அவர்கள் தமது “தமிழர் வரலாறு’’ (பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ ஜிணீனீவீறீs) என்ற நூலில்,
“வைதீக சாத்திரங்கள், மக்களை நான்கு வருணங்களாக வகுத்து, நான்காம் வருணத்தைச் சார்ந்தவர்களை வேதம் மற்றும் வேதாந்தங்களைப் படிப்பதினின்று தள்ளி வைத்தன…. வைதீக முறைப்படி பிராமணர்கள் மட்டுமே மோட்சம் பெறலாம் என்பதாகும். ஆனால் ஆகமங்களே இந்தக் கோட்பாடுகளை எல்லாம் எதிர்த்து நிற்கின்றன: ஒரு சண்டாளனும்கூட ஆகமப்படி திருமால் அல்லது சிவனுடைய திருஉருவை பெற்று அதற்குப் பூசனைச் செய்யலாம் _ நான்கு வருணப் பாகுபாட்டை ஆகமங்கள் அங்கீகரிக்கவில்லை, ஆகமங்கள் எல்லோருக்கும் பொது, சிவதீட்சைப் பெற்ற பறையன் கூட ஒரு பார்ப்பனனுக்குத் தீட்சை கொடுத்து அவனுக்கும் குருவாகலாம்’’ என்று குறிப்பிடுகிறார். இன்று, வடமொழி ஆகமங்களை ஆலயங்களின் நடைமுறைக்குச் சான்றாகக் காட்டுவோர். அவற்றின் நால்வருண மூலத்தையே, முதன்மையாக வைத்து வாதிடுகின்றனர். ஆனால் ஆகமத்தின் மெய்ப்பொருள். அதனை முற்றும் ஏற்பதில்லை.
ஆகம மெய்ப் பொருளின் அடிப்படை, நால் வருணத்தை ஏற்கவில்லை என்றால் ‘வைகாநாச ஆகமத்தில்’ மட்டும் வருண, சாதி, அடிப்படைகளில்தான் ‘தீட்சை’ ‘சம்ப்ரோட்சணம்’ (தீட்டுக்கழியும் சடங்குகள்) ஆகியவை நடைபெற வேண்டுமென்று வரையறை செய்யப்பட்டிருப்பதேன்? முதனூலில் இடைச்சேர்க்கையா?
பார்ப்பன விதவையை மணந்து கொண்ட பிராமணர் ஒருவர் கோயில் கருவறையினுள் நின்று இறைவனைத் தொழுவதற்குத் தனக்கு உரிமை உண்டு என வழக்காடினார். ஆகமப்படி அந்த உரிமை அவருக்கு இல்லை என எதிர்தரப்பினர் மறுத்தனர். பதிதன் எனக்கூறி புகழ்பெற்ற முதலாவது இந்திய நீதிபதி என்றழைக்கப்படும் சர்.டி.முத்துச்சாமி அய்யர் அவர்கள் அவ்வழக்கை விசாரித்து,
“இந்த வழக்கில் வாதி கேட்கிற உரிமை கோயிலின் சில பகுதிகளில் நுழைய வேண்டும் என்பதாகும். ஒரு பிராமணன் என்ற நிலையிலும் ஒரு குடிமகன் என்ற நிலையிலும் இந்த உரிமையைக் கேட்க எப்பொழுதும் அவருக்கு உரிமை உண்டு’’ எனக் கூறினார். இக்கருத்தின்படி பார்த்தால் ஆகமங்களின் அடிப்படையே நிலைகுலைகிறதே!
(சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தனின் _ ‘வழிபாட்டில் வல்லாண்மை’ _ பக்கம் 26_28)
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் வெளியேற்றப்பட்டு சமஸ்கிருதம் ஆதிக்கம் பெற்றது.
தி.மு.க. ஆட்சியில் கோயில்களில் தமிழிலும் வழிபாடு என்று அறிவித்த நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றவர்கள் பார்ப்பனர்கள்.
‘எங்கே பிராமணன்?’ (அப்படி யாரும் இல்லையாம்) என்று எழுதும் திருவாளர் சோ.ராமசாமிகூட துக்ளக்கில் (18.11.1998) தலையங்கமே தீட்டினார்.
“மொழி ஆர்வமா? மத துவேஷமா?’ என்பது அத்தலையங்கத்தின் பெயராகும்.
“நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தால் அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது. ரிஷிகளும், பக்தசீலர்களும் இயற்றிய ஸமஸ்கிருத துதிகளை தமிழில் மொழிபெயர்த்தால் பொருள் இருக்கும், புனிதம் இருக்காது. அதாவது இங்கு முக்கியத்துவம் மொழிக்கு அல்ல. ஒலிக்கு’’ என்று எழுதினாரே!
‘எல்லாம் வல்ல’ கடவுளுக்குக் கூட மொழி வித்தியாசம் தேவைப்படுகிறது. கடவுளையும் பார்ப்பனிய குடுவைக்குள் அடக்குகிறார்கள். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகக் கூட திராவிடர் கழகம்தான் அதற்கான மாநாட்டை நடத்தியது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கிய அம்மாநாட்டை சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகம்தான் நடத்தியது. (25.12.1980)
கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் உள்ள மணிமுத்தீசுவரர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட்டது (9.9.2002) என்பதற்காக கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி உட்பட குமுறினார்கள். தமிழில் அர்ச்சனை நியாயமில்லாதது என்று தமிழ்நாடு அர்ச்சகர்கள் சங்கத்தினர் (பார்ப்பனர்கள்) தீர்மானம் நிறைவேற்றினர். (‘தினமணி’ _ 2.9.2002) கோயிலை இழுத்துச் சாத்தி, தீட்டுக்கழித்தனர். சிதம்பரம் நடராஜன் கோயிலில் திருவாசகம் பாடிய ஆறுமுகசாமி என்ற பெரியவரை _ ஓதுவாரை கோயில் தீட்சதர்கள் அடித்து உதைத்தார்கள். (‘கல்கி’ _ 4.6.2007) பார்ப்பனர்கள் தமிழர்களே என்று கூறுவோர் இதற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் இயற்றினால் பார்ப்பனர்கள் எடுத்த எடுப்பிலேயே உச்சநீதிமன்றம் செல்லுகிறார்கள்.
தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்பனர்கள்தான் நடத்திட வேண்டும்; சமஸ்கிருதத்தில்தான் அவை நடைபெற வேண்டும். இந்த 2016ஆம் ஆண்டிலும் இந்த மனப்பான்மையில்தான் இருக்கிறார்கள். இவற்றைப் பெரும்பாலும் மாற்றியமைத்தது தந்தை பெரியாரும் திராவிடர் கழகமுமே!
படையெடுப்பில் மிக மோசடியானது பண்பாட்டுப் படையெடுப்பு. அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், வேத இதிகாச சாஸ்திரங்களின் பெயரால், பக்தியின் பெயரால் தமிழன் மூளையில் மாட்டப்பட்ட விலங்காக இருக்கிறது.
அதனை உடைப்பதுதான் தந்தை பெரியாரியல் என்பது. திராவிடர் கழகம் இந்தத் தளத்தில்தான் தனித் தன்மையுடன் களம் அமைத்துப் போராடி வருவதுடன் வெற்றியும் பெற்று வருகிறது. முழு வெற்றியும் காண சூளுரைப்போம்!
தமிழா! இனவுணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு!!